திங்கள், 20 செப்டம்பர், 2010

மதிப்பெண் பட்டியல் – ஏன் டீமேட் ஆக்கக் கூடாது?

இக்கட்டுரை நேற்றைய (செப்டம்பர் 20-ம் தேதி) உயிரோசை டாட் காமில் வெளியானது. அதை இன்று இங்கே பதிவேற்றுகிறேன்.
-----------------------------------------------------
டீமேட் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸிலும், உயிரோசை டாட் காமிலும், தமிழ்வணிகம் டாட் காமிலும் வெளியான "டீமேட். ஏன்? எதற்கு?" என்ற எனது கட்டுரையை இந்த இணைப்பில் http://yeskha.blogspot.com/2010/06/blog-post_9606.html படித்துப் பாருங்கள். படித்து விட்டு வாருங்கள் அய்யா. காத்திருக்கிறேன். டீமேட் என்றால் என்னவென்று தெரியாமல் இந்த விஷயத்தின் சீரியஸ்னெஸ்ஸைப் புரிந்துகொள்ள முடியாது.

முடிந்ததா? படித்து விட்டு வந்து விட்டீர்களா? சிம்பிளாகச் சொன்னால் "இருக்கு, ஆனா இல்ல" என்று சொல்லலாம். இன்றைய தேதி வரை மாணவர்களின் மதிப்பெண் பட்டியலும் மற்ற அனைத்து சர்ட்டிபிகேட்டுகளும் அச்சடித்துத்தான் தரப்படுகின்றன. அவற்றை ஏன் டீமேட் ஆக்கக்கூடாது? என்பது என்னுடைய கேள்வி. டீமேட் ஆக்கப்பட்டால் அவற்றைக் காகிதத்தில் பிரிண்ட் அடித்துத் தரத் தேவையில்லை. அந்தந்த மாணவனுக்கு உரிய எண்ணை அவர்களிடம் குறித்துக் கொடுத்து விட்டால் போதும். அவர்கள் வெளியே ஏதாவது ஒரு நெட் சென்டருக்குப்போய் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

இவற்றை டீமேட் ஆக்குவதன் மூலம் நாம் தவிர்க்கும் முதல் மற்றும் அதிமுக்கியப் பிரச்சினை போலிச் சான்றிதழ்கள்.. சில மாதங்களுக்கு முன் மீடியாவில் அடிபட்ட பெரிய விஷயம் இது. போலி மதிப்பெண் பட்டியல் பிரச்சினை. தமிழகத்தின் பல இடங்களில் போலி மதிப்பெண் பட்டியல் அச்சடிக்கும் பணி அழகாக நடைபெற்றுக்கொண்டிருந்திருக்கிறது. (இன்னமும் நடந்து கொண்டிருக்காது என்பது என்ன நிச்சயம்?)

மாட்டிய கும்பல் சொல்லிய தகவல்படி மட்டும் ஒன்றில்லை, இரண்டில்லை, கடந்த ஆறு வருடங்களாக இந்தக் காமெடி நடந்து கொண்டிருக்கிறதாமே.. இதில் எத்தனை ஆயிரம் பேருக்கு போலிச் சான்றிதழ்கள் அச்சடித்துக் கொடுக்கப்பட்டனவோ? விஷயம் தெரிந்ததும் சில நாட்களுக்கு (மட்டும்) மீடியாக்கள் குமுறு குமுறு என்று குமுறின. இதனால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று விகடன் தலையங்கம் எழுதுகிறது.

யார் கண்டது? இதைப் படிக்கும் உங்களுக்கும் எழுதிய எனக்கும் கூட இப்படியான போலிகள் எவனாலாவது நல்ல வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? எல்லாம் 12பி மாதிரிதானே. ஒரு வினாடியில் வாழ்க்கையே மாறிப்போகலாம். மிஷ்கின் தான் ஞாபகத்திற்கு வருகிறார். ‘அஞ்சாதே’ கதை ஞாபகம் இருக்கிறதா? போர்ஜரி செய்து பரீட்சையில் பாஸாகும் நரேன் கதாபாத்திரத்தால் நேரடியாக பாதிக்கப்படும் அஜ்மல் கதாபாத்திரம் எதிர்மறையான குணாதிசயத்தை வளர்த்துக் கொண்டு அதன் வாழ்க்கையே மாறிப்போய் நிற்கும் கதை.

அந்த அளவுக்கு இல்லையெனினும் நாமும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டல்லவா? இப்போது தான் சர்ட்டிபிகேட்டுகளில் புகைப்படமும் இருக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பல பள்ளிகளில் புகைப்படத்துடன்தான் சான்றிதழ்கள் தரப்படுகின்றன என்கிறார்கள். நான் படித்த போதெல்லாம் சான்றிதழ்களில் போட்டோ எதுவும் கிடையாது. யாரும் அதை வைத்துக்கொண்டு என்னுடையது என்று சொல்லி வேலை வாங்கலாம்.

கொஞ்சம் கோணலாய் யோசித்துப் பாருங்களேன்.. என் பெயர் கார்த்திக். நான் இன்று இரவே என்னுடைய அடையாளங்களான சர்டிபிகேட், பேன் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றை எல்லாம் அழித்து விட்டு செத்துப்போன (படிக்கும் போதெல்லாம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிய) என் நண்பன் ரமேஷ், (அல்லது சுரேஷ் அல்லது தினேஷ் அல்லது கணேஷ் அல்லது மகேஷ்) உடைய சர்ட்டிபிகேட்டுகளை எடுத்துக் கொண்டு ரயிலேறி ஆந்திரா போய் ஒரு புதிய கம்பெனியில் நான்தான் ரமேஷ் என்று சொல்லி வேலைக்குச் சேர்ந்தால் என்னை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்?

ஆறே மாதம் போதும். நன்றாக வெஜ் தின்று கொழுத்து எடை ஏற்றி வைத்திருந்தால்? மீசை, தாடி ஷேப்பையெல்லாம் மாற்றி அடையாளம் மாற்றுவதும் ஆறே மாதத்தில் சாத்தியம். மொபைல் நம்பர் இருக்கிறதே என்கிறீர்களா? அதை நான் மாற்றி விட்டால்? சரி, ஈ.மெயில் ஐ.டி? ஆள் மாறாட்டம் என்று முடிவு செய்தாகி விட்டது. அப்புறம் எப்படி? ஈ.மெயில் ஐ.டி.யைத்தான் நான் தலையே போனாலும் உபயோகிக்க மாட்டேனே. கைரேகை மாறாதே என்கிறீர்களா? ஹா, ஹா, எனக்கேதும் சொத்து பத்து இருக்கிறதா என்ன? அந்த வீணாய்ப் போன கைரேகையைத்தான் நான் இதுவரை எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லையே அய்யா? அப்புறம் எப்படி என் கைரேகை என்னுடையது தான் என்று உங்களுக்குத் தெரியும்? சரி கண் பாப்பா? அதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

ஆக ஒரிஜினல் சர்ட்டிபிகேட்டில் போட்டோ இல்லையென்றாலே ஏமாற்றுவது மிகச்சுலபம், சாத்தியம். போலிச்சான்றிதழ் என்றால்? சொல்லவே தேவையில்லை. ஆனால் சான்றிதழ்கள் டீமேட் ஆக்கப்படும் பட்சத்தில் அவற்றில் போட்டோவை அப்லோட் செய்வது சாத்தியம், சுலபம். போர்ஜரிக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

இன்னோர் உதாரணம்.. சென்ற வாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு தனியார் பள்ளியில் படித்த ஒரு மாணவன் அதே பள்ளியின் பஸ் மோதி இறந்த சம்பவத்தில் அப்பள்ளி பொதுமக்களால் (?) எரிக்கப்பட்டதில் சுமார் எண்பது ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சர்டிபிகேட்டுகள் எரிந்து போயின. இவற்றை சீக்கிரம் புதிதாக ஏற்பாடு செய்து தரச்சொல்லி கலெக்டரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் அவர்கள். இங்கே இதுவே டீமேட் சர்ட்டிபிகேட்டாக இருந்திருந்தால்? கவலைப்படத் தேவையில்லை. நேராக இன்டர்நெட் சென்டருக்குப்போய் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைக்கு பள்ளிகள், கல்லூரிகள், இன்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும் கல்வித் தந்தைகள் அனைவருமே அரசியல்வாதிகள் தான். அரசியல் வாதிகளின் பூர்வ கதை நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஒரு கற்பனைக்கு அவர்கள் ஆதரவுடன் போலி சர்ட்டிபிகேட்டுகள் அடிக்கப்படுவதாக வைத்துக்கொண்டால்....??? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... தொழில் ஏகபோகமாக நடக்கும். செழிப்பாக நடக்கும்.

கடந்த வருடத் துவக்கத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்த இன்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 420. இப்போது 465க்கும் மேல். அடுத்த வருடம்? அதன் பிறகு பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கலைக் கல்லூரிகள், எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா. இத்தனை இலட்சம் சான்றிதழ்கள் டீமேட் ஆக்கப்பட்டால்? எவ்வளவு காகிதம் மிச்சம்? பேப்பர்லெஸ் வேர்ல்டு என்ற வாசகத்தின் உண்மையான ருசியையும் நாம் உணரலாம். எத்தனை ஆயிரம் மரங்கள் மிச்சம்?

சமீபமாக பெரிதாகப் பேசப்பட்ட உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பிரச்சினை? அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில் மீண்டும் டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். பின்னணிக் காரணம் என்னவாக இருந்தாலும், அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன் பொய்யான சாதிச் சான்றிதழ் கொடுத்தார் என்ற ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அது தொடர்பான குற்றப்பத்திரிகை இறுதியாக்கப்பட்டு, அவருக்கு எதிரான இலாகா பூர்வமான விசாரணை தொடங்க இருப்பதனால் உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கம் திரும்பப் பெறப்படுவதாக கூறியிருக்கிறது அரசின் உத்தரவு. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்,3). இதில் உள்ள அரசியலை விட்டு விடுவோம்.. நான் பரிந்துரைக்கும் டீமேட் சர்ட்டிபிகேட் என்ற விஷயம் அமலானால் சிம்பிளாக ஒரே நாளில் இந்த விஷயத்தை முடித்து விடலாம். யார் மீது தவறு என்பது அறுதியிட்டுக் கூறப்படும்..

சமீபத்தில் நமது எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் கூட ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது. இனிமேல் நமது சர்ட்டிபிகேட்டுகளை ஸ்கேன் செய்து அனுப்பினால் போதும், பதிவு செய்து கொள்வார்களாம். இதனால் எத்தனை மாணவர்களின் நேரம் மிச்சம். ஏன்? ரினீவல் வேலைக்காக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பார்க்கின்ற வேலையை விட்டு விட்டுப் போய் கியூவில் நிற்கும் நேரம் மிச்சம். எத்தனை ஆயிரம் ஏன் இலட்சம் பேருடைய நேர விரயம் மிச்சம், பயணம் மிச்சம், பெட்ரோல் மிச்சம், மிச்சம், மிச்சம்.

இப்போது இன்ஃபோஸிஸ் நந்தன் நிலேகனி தலைமையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பதினாறு டிஜிட் ஐ.டி. நம்பர் கொடுக்கும் வேலை துவங்கியிருக்கிறது. வேலை முடிய எப்படியும் குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும். ஆனாலும் பரவாயில்லை. செய்து முடிக்கப்படும் பட்சத்தில் எத்தனை வேலைகள் சுலபமாகும்? மேற்கு நாடுகளை எல்லா விஷயத்திலும் தான் காப்பியடித்துத் தொலைக்கிறோம். பேன்ட், ஷர்ட்டில் இருந்து பீட்ஸா, கோக் வரையில். இது மாதிரி விஷயங்களையும் செய்து தொலைக்கத்தான் போகிறோம். என்ன? கொஞ்சம் சீக்கிரம் செய்யலாமே...

இப்படிப்பட்ட விஷயங்கள் சாத்தியமானால் இங்கே இருக்கிற நூத்தியிருபது கோடிப்பேருக்கு என்னென்ன வேலை கொடுக்கலாம், என்னென்ன நன்மைகள் செய்யலாம்? அவ்வளவு ஏன்? மக்கள் தொகை கணக்கெடுக்கும் வேலை கூட மிகச் சுலபமாகிப்போகும். இப்படிப்பட்ட வேலையுடன் சான்றிதழ்களை கணினி மயமாக்கும் வேலையும் ஆரம்பிக்கப்படலாமே.

என்ன ஒன்று? இதற்காக தனியாக ஒரு டிபார்ட்மெண்ட் உருவாக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் செலவாகத்தான் செய்யும். இலவச டி.வி. கொடுத்து மக்களைச் சோம்பேறி ஆக்குவதற்கு செலவு செய்யப்படும் ஐநூறு, ஆயிரம் கோடிகளை இந்த மாதிரி உருப்படியான வேலைகளுக்குச் செலவிடலாம். ஃபோர்ஜரி எல்லாம் நடந்து முடிந்த பிறகு போலீஸ், கேஸ், பஞ்சாயத்து என்று எவ்வளவோ செலவாவதை ஒப்பிட்டுப் பார்த்தால் இதற்காக ஆகும் செலவு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். எங்கே போனாலும் நம்பரை மட்டும் சொல்லி ஒரு பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாமே? கணினிமயமாக்கல் என்ற விஷயத்தின சாத்தியக்கூறுகளை அதிகபட்சமாகப் பயன் படுத்திக்கொள்ளலாம்.

என்ன? படிக்காமல் வீட்டை ஏமாற்றும் மாணவர்கள் இனி மார்க் திருத்துவது போன்ற வேலைகளைச் செய்ய முடியாது. அரியர் வைத்துவிட்டு, டிகிரி முடித்து விட்டேன் என்று சொல்லி ஊர் சுற்ற முடியாது. அதே போல் ஒரிஜினல் சர்ட்டிபிகேட் கண்டிப்பாகத் தேவைப்படும் சில இடங்களிலும், டிபார்ட்மெண்ட்களிலும் சில பிரச்சினைகள் எழலாம். பணியாளர்களிடம் சான்றிதழ்களை வாங்கி வைத்து ப்ளாக்மெயில் செய்யும் நிறுவனங்களின் பப்பு வேகாது. ஆனால் இவையெல்லாம் சிறு பிரச்சினைகள் தான். அவற்றைச் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. முதல் அடி எடுத்து வைக்கலாமே..

10 கருத்துகள்:

 1. நல்ல யோசனை.. இதை செயல்படுத்தினால் பெரிய பெரிய பெட்டிகள் வருவதற்கு வாய்ப்புண்டா..? அப்படியானால் நடக்கும் உடனே..

  பதிலளிநீக்கு
 2. வித்யாசமான கண்ணோட்டம்.இதுபோல் இன்னும் நிறைய எழுதுங்கள்.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. மற்றவருடைய DEMATE கணக்கை தன்னுடையது என்று அலுவலகத்தில் காட்ட முடியாதா?

  பதிலளிநீக்கு
 4. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  பதிலளிநீக்கு
 5. dear yeshka,
  very good thought and view. paper less world will come one day.

  keep on wirting.
  suresh(kuwait)

  பதிலளிநீக்கு
 6. @ கந்தசாமி--
  கண்டிப்பா தேறும் சார். அதுக்கு கம்ப்யூட்டர் வாங்குறதுல ஆரம்பிச்சு, வேலைக்கு ஆள் சேர்ப்பது, டென்டர் விடுவது வரை பல ஆயிரம் கோடிகள் அடிக்கலாம் (சம்பந்தப் பட்டவர்கள் கவனத்திற்கு)

  பதிலளிநீக்கு
 7. @ small ஆப்பு --
  சத்தியமா அடுத்தவன் டீமேட் கணக்கை நம்ம கணக்கு என்று காட்ட முடியாது. ஏனென்றால் டீமேட் கணக்கு துவங்க பான் கார்டு கட்டாயம். ஸோ, அங்கேயே மேட்டர் ஓவர். மேலும் ஒரு ஆளுக்கு ஒரு பான் கார்டு தான் இருக்க வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால் கண்டுபிடிக்கப்பட்டு மற்ற கார்டுகள் கேன்சல் செய்யப்படுகின்றன - இன்கம் டாக்ஸ் துறையால்.

  பதிலளிநீக்கு
 8. @ ers -- நீங்க சொன்ன இடத்துலயும் என் பேர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு பதிவை இணைச்சாச்சு.

  பதிலளிநீக்கு
 9. @ kuwait suresh --
  அன்புக்கு நன்றி. தொடர்வோம்...

  பதிலளிநீக்கு