ஞாயிறு, 3 நவம்பர், 2019

சிறப்புக் கட்டுரை: உஷார்- ஆன்லைன் தளங்களின் தந்திரங்கள்

மின்னம்பலம் இணைய இதழில் 30.10.19 அன்று வெளியான கட்டுரை.
-------------------------------------------------------------------------------------------------------------

-எஸ்கா

நேற்று அமேஸான் ஆன்லைன் புத்தகக் கடையில் உலாத்திக் கொண்டிருந்தேன். அதில் முன்பே "கின்டில் அன்லிமிடெட்" சந்தா கட்டியிருக்கிறேன். அது ஒரு வாடகைத் திட்டம். அந்தத் திட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களை சந்தா காலத்தில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படித்துக் கொள்ளமுடியும்.

புதிதாக ஏதாவது வாங்க வேண்டும் என புத்தகங்கள் தேடும்போது வாடகைத் திட்டத்தில் உள்ள புத்தகங்களுக்கு மேலே kindle unlimited என்றொரு லேபிள் காண்பிக்கும். வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம். மற்ற புத்தகங்களுக்கு அப்படி இருக்காது. ஆனால் சில சமயம் புத்தகத்துக்கு மேலே அந்த லேபிளுக்கு பதிலாக அதே போல "lookinside" என்று வேறொரு லேபிளைக் காண்பித்து சட்டென தோற்ற மாயையை உருவாக்குகிறது.

பொதுவாக "kindleunlimited" என்றுள்ள புத்தகத்தை வாங்க வேண்டி க்ளிக்செய்தால் "send to device" என்பது போலக் காண்பிக்கும். க்ளிக் செய்தால் நீங்கள் வைத்துள்ள கின்டில் கருவிக்கோ, கின்டில்ஆப்-புக்கோ சென்றுவிடும். ஆனால் சிலசமயம் "read for free" என்றுவரும். வேறு சில சமயங்களில் "buy now" அல்லது சில சமயம் "add to kart" என்று எதையேனும் மாற்றிக் காண்பித்துக் குழப்பிவிட்டு விடுகிறது.

நேற்று ஒரு புத்தகத்தை "buy with one click" னு காண்பித்தது. உற்றுக் கவனியாமல் "kindle unlimited" புத்தகம் என்று நினைத்து க்ளிக் செய்துவிட்டேன். ஒரே நொடிதான். அவர்களின் உள் கணக்கான "amazon pay" அக்கவுண்டில் கொஞ்சம் பணம் வைத்திருந்தேன். அதில் இருந்து 151 ரூபாய் போச்சு. உடனடியாக ஆர்டர் ஆகிவிட்டது.

பிறகு சுதாரித்து தேடிப் பார்த்தால் பணம் குறைந்திருந்தது. அப்புத்தகம் கின்டில் வெர்ஷன் புத்தகம் என்பதால் ஆர்டரை கேன்சல் செய்யவும் முடியவில்லை. எல்லா ஆப்ஷன்களையும் சுற்றிசுற்றிப் பார்த்துவிட்டேன். போனது போனதுதான்.

இது போன்ற தோற்ற மாயைகளை அமேஸான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல்,பிக்பாஸ்கெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் வேண்டுமென்றே வலிந்து உருவாக்குகிறார்கள் என்பது ஒரு மிக முக்கிய தகவல். இவற்றை "Dark patterns" என்கிறார்கள். உதாரணத்திற்கு சில.

தந்திரமான கேள்விகள்

"உங்களுக்கு வேண்டாமா?" என்ற கேள்வியும் "உங்களுக்கு வேண்டாம் என்று நான் சொன்னால் நீங்கள் உறுதியாக மறுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்பதன் அர்த்தமும் வேறுவேறு. ஆனால் இரண்டாவது உங்களைக் குழப்புகிறதா? "வேண்டும்" என்ற வார்த்தையை நம்பி அதை நீங்கள் க்ளிக் செய்து விடுவீர்கள்.

தூண்டில்கள் மற்றும் சொடுக்குகள்

தீர்ந்து போன பொருட்களின் புகைப்படங்களை முன் பக்கத்தில் காண்பித்து நீங்கள் உள்ளே சென்றதும் "உப்புலேது பப்புஉந்தி" என்பது போல அதுஇல்ல, ஆனா அதுக்குப் பதிலா இது இருக்கு என முந்தைய பொருளை ஒத்த , பலவித வேறு பொருட்களைக் காண்பித்து உங்களை வாங்கத் தூண்டுவது.

தவறாக திசை திருப்புதல்

சில வடிவமைப்புகள் உங்களைக் கவர்வதற்காகவே உங்கள் வயதுக்கேற்ற வண்ணங்கள், வடிவங்கள் கொண்டு உருவாக்கப்பட்டு அவர்கள் விரும்பிய, ஆனால் உங்களுக்குத் தேவையே இல்லாத ஒரு பொருளை நோக்கி உங்களைத் திசை திருப்புவது.

தள்ளுபடிகள் மற்றும் பேக்கிங் கட்டணங்கள்

ஒரு பொருளின் விலையில்– உதாரணமாக 400 ரூபாய் பொருளுக்கு 70 ரூபாய் தள்ளுபடி தருதல். ஆனால் பணம் கட்டும் பேஜில் 80 ரூபாய் பேக்கேஜிங் மற்றும் கூரியர் கட்டணமாக வைத்தல். மொத்தவிலை 410. அதே பொருளை அதே தளத்தில் வேறு விற்பனையாளரிடம் தேடினால் 390 ரூபாய்க்கு கிடைக்கும்.

மறைவான விளம்பரங்கள்

நீங்கள் உலாவும் தளத்தில் உள்ள அதே போன்ற வண்ணங்கள், வடிவமைப்புகள், வாக்கியங்கள் மற்றும் உள்ளடக்கத்துடன் விளம்பரங்கள் என்றே தெரியாத விளம்பரங்களை வைத்தல். மிகப்பொடி எழுத்துக்களில் ad என்று சில தளங்கள் வைத்திருக்கும். கவனிக்காமல் பொருளை க்ளிக் செய்து வாங்கிவிட்டு, அது நன்றாயிருந்தால் தப்பித்தீர்கள். ஆனால் பிரச்சினை என திரும்பிச் சென்றால் "அவை விளம்பரதாரர் பொறுப்பு. அது வேறு வெப்சைட். நான் பொறுப்பல்ல" என்று கைவிரித்தல்.

பதுக்கி வைத்தல்

நீங்கள் பல பொருட்கள் வாங்கும் போது, அதே போன்ற வேறொரு பொருளையும் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் பதுக்கி வைத்தல். ஏழெட்டு வாங்கும்போது, இன்னோர் பொருள் சேர்ந்து வருவது சட்டென நம் புலனுக்குப் புலப்படாது.

Roach motel

ஒரு குறிப்பிட்ட சந்தா கட்டவோ, தொடர் டொனேஷன்கள் தரவோ, ஒரு சேவையை உபயோகப்படுத்தவோ, ஆன்லைனில் ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும். ஆனால் அதனை கேன்சல் செய்ய ஆன்லைனில் வழியிருக்காது. ஒருபடிவத்தை டவுன்லோட் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து, அதை நிரப்பி, கையெழுத்திட்டு ஏதேனும் முகவரிக்கு அனுப்பவோ அல்லது ஆபீஸில் கொண்டு போய்க் கொடுத்தால் தான் அது கேன்சல் ஆகும் என்று தலைசுற்றும் வழிமுறைகளை வைத்தல். இதனை Roach motel என்கிறார்கள். உள்ளே நுழைவது எளிது. வெளியே வருவது கஷ்டம்.

இதேபோல இன்னும் வாடிக்கையாளர்களை மயக்கும் பல தந்திரமான வழிமுறைகளை நிறுவனங்கள் வைத்துள்ளன. செல்ஃபோன் நிறுவனங்கள் "காலர்டியூன்" என்ற பெயரில் உங்கள் அக்கவுண்டில் மாதம் 30 ரூபாய் கழித்த கதையெல்லாம் நினைவிருக்கிறதா? மக்கள் உஷாராகி ஒரு குறிப்பிட்ட பொறியில் இருந்து தப்பினால், அதைத் தாண்டி மேலும் மேலும் புதிய வழிமுறைகளைக் கண்டு பிடித்துக் கொண்டும் உள்ளன. ஆகவே வாடிக்கையாளர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

ஆனால் அதே நேரம் ஆன்லைன் வழி முறைகளும் வர்த்தகங்களும் எத்தனையோ பரிமாற்றங்களை எளிதாக்கி விட்டன, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. சாலையில் இறங்கினால் விபத்து ஏற்படுகிறது என்று சாலையில் இறங்காமல் இருக்கமுடியுமா? விபத்து ஏற்படாமல் இருக்கத் தேவையான வழிமுறைகளை நாம் தான் உஷாராகக் கைக்கொள்ள வேண்டும். அது ஆன் லைனுக்கும் பொருந்தும்.