செவ்வாய், 25 அக்டோபர், 2011

எந்திரனுக்குப்பிறகு.... ஏழாம் அறிவு

எந்த விதத்தில்? கலெக்ஷனிலா? எதிர்பார்ப்பிலா? என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்.. என்னுடைய முதல் நாள் முதல் ஷோ என்ற லிஸ்டில் எந்திரனுக்குப்பிறகு.... ஏழாம் அறிவு. புரியாதவர்களுக்கு என்னுடைய முந்தைய பதிவு இதோ..

வீட்டில் அமைதியாக நான் பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டு தீபாவளியைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களில் இருக்கும் போது ஏழாம் அறிவுக்கு ரசிகர் மன்ற ஸ்பெஷல் ஷோ திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.. டீம் பையன் ஒருவர் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார். உடனே என் பாசமலரிடம் (தீபாவளிக்கு வந்திருக்கிறாள்) பர்மிஷன் வாங்கிக்கொண்டு பக்கத்து ஊருக்கு பஸ் ஏறியாயிற்று. பஸ் சார்ஜ் இருபது, ஆட்டோவுக்கு ஒரு முப்பது, டிக்கட் நூறு ரூபாய், உள்ளே நொறுக்கல்ஸ் நாற்பது, ரிட்டர்ன் பஸ் ஒரு இருபது... ஆக மொத்தம் இருநூற்றுப்பத்து ரூபாய் ஏழாம் அறிவுக்கு மொய்யி..........சொல்லலாமோ கூடாதோ... ஆனால் இதுதான் கதை.. சொல்லிவிட்டேன்..

கி.பி 6-ம் நூற்றாண்டில், சைனாவில் தற்காப்புக் கலைகளை போதித்த, புத்தருக்கு அடுத்த இடத்தில் இன்றைக்கும் வைத்துப் போற்றப்படுகிற போதி தர்மன் என்று புத்தத்துறவி தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஓர் அரசகுமாரன் என்று தற்செயலாகக் கண்டுபிடிக்கும் ஜெனடிக் இன்ஜினியரிங் மாணவி ஸ்ருதி தன்னுடைய ஜெனடிக் ஆராய்ச்சிக்காக, போதிதர்மனின் ஜீன் அமைப்பு சுமார் 80% அளவு ஒத்துப்போகிற, அதே பரம்பரையின் வம்சாவளியில் வந்த அரவிந்த் எனும் ஓர் இளைஞனின் ஜீன்களைத்தூண்டி போதிதர்மனின் குணாதிசயங்களையும், திறமைகளையும் மீட்டெடுக்க முயற்சிக்கும் அதே வேளையில் சைனா இன்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட் "ஆபரேஷன் ரெட்" என்ற பெயரில் இந்தியாவின் மேல் பயோ வார் தொடுக்கத் தீர்மானித்து, கிருமிகளைக்கையில் கொடுத்து, கூடவே ஸ்ருதியையும், அரவிந்தையும் கொல்லுமாறு அடிஷனல் அஸைன்மெண்டுடன் அனுப்பி வைக்கும், (தற்காப்புக்கலை, குங் பூ, கராத்தே, மேலும் நோக்கு வர்மம் என்கின்ற ஹிப்னாடிஸம் என்ற எல்லா கருமாந்திரங்களும் தெரிந்த) டோங் லீ என்ற கூலிப்படை ஆசாமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும்?

ஏழாம் அறிவு உங்கள் பார்வைக்கு.

படம் துவங்கியதுமே ஆரம்பிக்கும் சைனா எபிசோட் முதல் 25 நிமிடங்களுக்கு நகர்ந்தாலும் சட்டென்று முடிந்து விடுகிறாற் போன்ற ஒரு ஃபீலிங்.. படம் ஓட ஓட கொஞ்சம் எதிர்பார்க்க வைத்து பிறகு வந்திருந்தால் இன்னமும் இன்ட்ரஸ்டிங்காக இருந்திருக்குமோ என்னவோ.. சைனா மொழியில் காட்டுவதா, மணிரத்னம் பாணியில் முழு விஷூவல்ஸ் காண்பிப்பதா, விஜய் பாணியில் கீழே வெள்ளை வெள்ளையாக தமிழ் சப் டைட்டில்ஸ் போட்டு ஓட்டுவதா என முருகதாஸ் ரொம்பவும் குழம்பியிருக்கிறார் போலிருக்கிறது.. முழுக்கவும் பின்னணி வாய்ஸ் ஓவரிலேயே நகர்கிறது அந்த எபிஸோட் முழுக்க.

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை எடுத்தால் அதன் கான்செப்டை விட்டு விலகாமல் அவற்றின் சின்னச்சின்ன டீட்டெயில்ஸோடு நுணுக்கமாகத் தருவார்கள்.. அந்த அளவு காஞ்சிபுரம், சைனா எபிஸோடுக்கான முருகதாஸ் டீமின் உழைப்பு சல்யூட் அடிக்கவும், இன்னும் கொஞ்ச நேரம் வராதா என்று எதிர்பார்க்கவும் வைக்கிறது... லொக்கேஷன், காஸ்டிங், காஸ்ட்யூம், கேமரா, டைரக்ஷன், மார்ஷியல் ஆர்ட்ஸ், சூர்யா என அசுர உழைப்பு.. ஹாட்ஸ் ஆஃப் டீம்.. (அந்த சைனீஸ் பாடலை ரொம்பப்பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.. சொல்லிக்கொள்ளலாம்.. நமக்குப்புரிந்தால்தானே... ஏதோ ஹம்மிங் மாதிரி இருக்கிறது..)

ஏழாம் அறிவு படத்தின் கதையை Assassin's Creed வீடியோ கேமில் இருந்து சுட்டுள்ளார்கள் என்று பதிவுலகத்தில் காட்டுத்தனமாகப்பரவும் வதந்தி முழுக்க உண்மையல்ல.. Assassin's Creed வீடியோ கேமின் படி, போதி தர்மாவின் நினைவுகளோடு அரவிந்த் (நிகழ்கால சூர்யா) தன்னை இணைத்துக்கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்படவில்லை.. ஸ்ருதி ஹாசனின் ஆராய்ச்சிப்படி போதி தர்மாவின் பரம்பரையில் வந்த அரவிந்தின் ஜீன்கள் போதி தர்மாவின் ஜீன்களோடு 80 சதவீதம் ஒத்துப்போவதால் அரவிந்தின் ஜீன்களில் மறைந்திருக்கும் போதி தர்மாவின் கலை மற்றும் திறமைகளை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறார் சூர்யா. ஆனால் ஆராய்ச்சி நாட்கள் நகர நகர படம் பார்க்கும் சாதாரண ரசிகன் போதி தர்மாவே எழுந்து வரப்போகிறார் என்று எண்ணுமாறு தூண்டப்படுகிறான் (சந்திரமுகி-யில் ஜோதிகாவின் உடலில் ஆவி புகுந்ததா அல்லது மனோதத்துவ ரீதியில் மனமாற்றம் அடைகிறாரா என்று ரசிகன் வித்தியாசப்படுத்த முடியாததைப்போல..) திடீரென்று எழும் சூர்யா போதி தர்மாவைப்போல சண்டையிடுகிறார், சைனாவின் ஸ்பெஷல் கலைகளுக்கான உத்திகளுடன்... பார்க்கும் ரசிகனுக்கு வெறியேறுகிறது "தமிழன்டா... அந்த சைனாக்காரனை சாவடிடா" எனுமளவுக்கு..

காட்சிப்படுத்தல்களில் அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் இன்னும் கொஞ்சம் சொந்த சரக்கை யோசித்திருக்கலாம்.. ஒவ்வொரு காட்சியும் ஹாலிவுட் தழுவல்... ஹாலோ மேன், ஹெல் பாய் மற்றும் அவதார் (சூர்யா மேலான ஆராய்ச்சிக் கூடக்காட்சிகள்), க்ரௌவ்ச்சிங் டைகர் ஹிட்டன் டிராகன் (க்ளைமாக்ஸ் சண்டை) ஐ ஆம் லெஜண்ட் மற்றும் ஸோம்பி (வில்லனால் ஹிப்னடைஸ் செய்யப்பட்டு சூர்யாவையும், ஸ்ருதியையும் வெறித்தனமாகத் தாக்கும் பொதுமக்கள்) போன்ற படங்களின் பல காட்சி அமைப்புகள் கண்ணெதிரே வந்து போகின்றன. காட்சி அமைப்புகள் சத்தியமாக ஹாலிவுட் படங்களின் உருவல்கள் தான். அதை மட்டும் கொஞ்சம் இந்தியத்தனமாக அமைத்திருக்கலாம்..

நோக்கு வர்மம் என்று ஸ்ருதி கூறும் ஹிப்னாடிஸம் மேட்டர் தான் ரொம்பவும் ஓவர் டோஸ். படம் முழுக்க வில்லன் ஜானி, பார்க்கும் எல்லாரையும் ஹிப்னடைஸ் செய்து அவர்கள் தனக்குத்தானே தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார், அல்லது மற்றவர்களை கொல்ல வைக்கிறார். லாஜிக் இல்லாமல் இருந்தாலும் காட்சிகள் பகீர் திகீரென்று இருக்கின்றன. ஆனால் வரிசையாக அதே போன்ற காட்சிகள் தொடர்வது போங்கப்பா என்று சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் சூர்யாவை ஹிப்னடைஸ் செய்ய முயலும் வில்லன் ஸ்ருதியை ஏன் செய்ய முயற்சிக்கவில்லை? சிம்பிளாக முடித்திருக்கலாமே..

சர்க்கஸ் கலைஞராக வரும் சூர்யா சர்க்கஸில் என்னவாக இருக்கிறார் என்றோ சர்க்கஸில் அவர் வேலை என்னவென்றோ தெளிவான காட்சிகள் இல்லை. ஆனால் பாடல்களிலும், மான்டேஜ்களிலும் வரும் சூர்யாவின் சர்க்கஸ் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. ஆனால் முழு படத்தில் சூர்யாவின் உழைப்பு அபாரம்.. காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம் சூர்யா நிற்கிறார்.
கமல் வாரிசு என்று ஸ்ருதி பெருமைக்குரிய அறிமுகம். ஆனால் அச்சு அசல் அம்மா சரிகாவே தான். நன்றாக நடித்திருக்கிறார், தமிழ்ப்பெண் என்பதால் தெளிவாக வசனம் பேசியிருக்கிறார். ஆனால் ஸ்ருதியின் முகத்தில் எக்ஸ்பிரஷன்கள் மிகக்குறைவு.. இறுகிய முகத்தோடே படம் நெடுகத் திரிகிறார் அவர்.. கொஞ்சம் பவுடர் அதிகமாக வெள்ளையாக இருப்பது போல் இருக்கிறது அவரது முகம். அவ்வப்போது சூர்யாவுக்கும், தன் டீமுக்கும் வரிசையாக ஆர்டர்கள் போடும் போது கமல் மேனரிஸம் தெரிகிறது.

ஆபரேஷன் ரெட் - ஈ படத்தில் அலசப்பட்ட பயோ வார் சமாச்சாரம். ஈ படத்தின் காட்சிகளைப்பார்ப்பது போலவே ஒரு எண்ணம். சைனா உளவுத்துறை இன்டலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் பேசும் மொக்கை இங்கிலீஷ் சகிக்க முடியவில்லை.. தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் பேசிய (வசனமெழுதியரின் கைங்கர்யம்) டயலாக்குகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என யோசியுங்கள்..

ஒரே காட்சியில் அபிநயா. அமைதியாக.. டும் டும் டும் டைரக்டர் அழகம் பெருமாள், கஜினி புரொஃபஸர் செகண்ட் வில்லனாக...

பொறிபறக்கும் சண்டைக்காட்சிகளில் பறக்கும் கார்களும், வேன்களும், பீட்டர் ஹெய்ன் பெயரைச்சொல்கின்றன. கிளைமாக்ஸ் சண்டை மட்டும் கொஞ்சம் நீளம்.. கொடுத்த பில்டப்புக்கு கொஞ்சம் குறைவுதான்.. வெறும் ஒண்டிக்கு ஒண்டி சண்டையாக..

84 கோடி செலவு என்பது கொஞ்சம் ஓவர்தான். போட்ட காசுக்கு மேல் எடுப்பது கொஞ்சம் திணறலான விஷயம். 4 மாநிலங்களில் பேசும் ஹிந்திப்படங்களே 50 கோடி ரேஞ்சில் தான் எடுக்கப்படுகின்றன. ஏழாம் அறிவு காஞ்சிபுரம் மேட்டர் என்பதால் டப்பிங்கும் கொஞ்சம் கஷ்டம். 40 கோடியிலே முடித்திருக்கலாம் போலக்காட்சிகள் இருக்கின்றன. பெரும்பகுதி பட்ஜெட் கால்ஷீட்டிலேயே போயிருக்கும். சூர்யா, முருகதாஸ், ஹாரிஸ், ஸ்ருதி, எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா. கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் தான்.. ஆனால் ஸ்டண்ட் சீக்வன்ஸ்களில் பறக்கும் கார்களில் சி.ஜி நன்றாகத் தெரிகிறது..

படம் ஹிட்டாகும்.. ஆனால் கொடுத்த ஆஹா, ஓஹோ பில்டப்புக்கு மிகக் குறைவு.. நிறைய நிறைய எதிர்பார்த்துப்போகும் ரசிகனுக்கு 60 சதவீதம் திருப்தி கிடைக்கலாம்.. சாமானிய ரசிகனுக்கு இது ஒரு ஹிட் படம்.. கொஞ்சம் அறிவாளி ரசிகன் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் படி இருப்பது ஒரு மைனஸ்.. 84 கோடி பட்ஜெட்டாம்.. அதனால் எவ்வளவு வசூலானாலும் அசலைத்தொடலாம்.. அவ்வளவுதான்...

ஹாரிஸ் ஜெயராஜின் இசை பாடல்களில் நன்றாக இருக்கிறது ஆனால் எங்கோ கேட்ட ஃபீலிங் இந்தப்படத்திலும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை..

ஸ்ருதி, சூர்யா லவ் எபிஸோட் ஒன்றிரண்டு சுவாரசியமான ஐடியாக்களுடன் நகர்ந்தாலும், ஸ்ருதி பர்ப்பஸாக ஒன்றரை வருடமாக சூர்யாவை குறி வைத்திருக்கிறார் என்று தெரியும் போது அடிபட்டுப்போகிறது.

முதல் பாதியில் போதி தர்மா எபிஸோடோடு சுவாரசியம் போய்விடுகிறது. படம் சாதாரணமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஏதோ பெரிய திருப்பம் அல்லது பிளாஷ் பேக் வரும் என்ற எதிர்பார்ப்பைக்கிளப்பிய படி நகரும் முதல் பாதி மிகவும் சாதாரண வேகம். இரண்டாம் பாதி டோங் லீ-யின் சேஸிங்கில் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், முருகதாஸ் கொடுத்த எதிர்பார்ப்புக்கு மிகக்குறைவே...

கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தமிழ், தமிழன், தமிழினம் என்று அழுந்த வரும் டயலாக்குகள் ரசிகர்களை வெறியேற்றுகின்றன. சைனாவை நமக்கு நிரந்த எதிரியாக்கிவிடும் ஸ்டோரிலைன்.. ஏழம் அறிவு என்ற டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்???
மொத்தத்தில் ஏழாம் அறிவு, ஆக்ஷன், ரொமான்ஸ், மிஸ்டரி, தேசப்பற்று, கலாச்சாரம், கொஞ்சம் காமெடி, விறுவிறுப்பு, எல்லாம் கலந்த ஒரு கலவை.. ஆனால் எதிர்பார்ப்புக்கும் குறைவு..

10 கருத்துகள்:

 1. ரொம்பநாளா பதிவு போடாம ஹாட் டாபிக்க நல்லா எழுதி ஹிட்ஸ் வாங்கிட்ட...தமிழண்டா...

  பதிலளிநீக்கு
 2. நண்பா ஒரு சிம்பிள் calculation
  ஒரு வாரத்துக்கு ஏழாம் அறிவு டிக்கெட் புல். தோராயமா ஒரு மாவட்டத்துக்கு ரெண்டு கோடி வருமானம் (ஒரு வாரம் மட்டும். ஒரு வாரத்துக்கு 150 ரூபாய் மொக்கை தியேட்டரிலேயே வசூலிப்பார்கள் ) வருது என்றால் தமிழ்நாட்டில் 32. மாவட்டம்
  32X2 கோடி = 64 கோடி
  ஒரு வாரமே தமிழ்நாட்டில் இவ்வளவு. அதுக்கு மேல ஆந்திராவில் சூர்யா மார்க்கெட் இருக்கு. இன்டர்நேஷனல் மார்க்கெட் இருக்கு. சாட்டிலைட் உரிமை காசு இருக்கு. இந்திய தொலைக்கட்சிகளில் முதல்முறையாக விளம்பர வருவாய் இருக்கு. எப்எம் வானொலியில் இருந்து பாட்டை ஒளிபரப்பும் காசு இருக்கு. நிறைய தெரிஞ்சிக்கணும் நீங்க. மும்பையில் தமிழ் படங்களை எல்லாரும் விரும்பி பாக்குறாங்க. இந்திக்கு அடுத்து. தமிழ் படம் தலைவலியா இருக்கு என்பதால் தான் கர்நாடகாவில் ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்ய வேண்டும் ஏற்றார்கள். தமிழனை ஒரு படி கீழே நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா ? உலகின் மூன்றாவது மிகப்பெரிய சினிமா மார்க்கெட் கோடம்பாக்கம். ஹாலிவூட் பாலிவுடை அடுத்து. அதனால் தான் முருகதாசை இயக்குனரா போட்டு. த்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் ஹாலிவுட் நிறுவனம் தமிழில் படம் எடுக்குறான். அவனின் முதல் படம் எங்கேயும் எப்போதும். நம்மள நெனச்சு பெருமபடுங்க பாஸ். நம்மள பாது உலகமே பயப்படுது. தமிழன்டா !!!!

  பதிலளிநீக்கு
 3. \\பஸ் சார்ஜ் இருபது, ஆட்டோவுக்கு ஒரு முப்பது, டிக்கட் நூறு ரூபாய், உள்ளே நொறுக்கல்ஸ் நாற்பது, ரிட்டர்ன் பஸ் ஒரு இருபது... ஆக மொத்தம் இருநூற்றுப்பத்து ரூபாய் ஏழாம் அறிவுக்கு மொய்யி..........\\ அப்ப 84 ரூபாய் செலவு பண்ணியவன் எவ்வளவு புலம்புவானோ தெரியலையே!

  பதிலளிநீக்கு
 4. \\பஸ் சார்ஜ் இருபது, ஆட்டோவுக்கு ஒரு முப்பது, டிக்கட் நூறு ரூபாய், உள்ளே நொறுக்கல்ஸ் நாற்பது, ரிட்டர்ன் பஸ் ஒரு இருபது... ஆக மொத்தம் இருநூற்றுப்பத்து ரூபாய் ஏழாம் அறிவுக்கு மொய்யி..........\\ அப்ப 84 கோடி ரூபாய் செலவு பண்ணியவன் எவ்வளவு புலம்புவானோ தெரியலையே!

  பதிலளிநீக்கு
 5. \\ஏழாம் அறிவு படத்தின் கதையை Assassin's Creed வீடியோ கேமில் இருந்து சுட்டுள்ளார்கள் என்று பதிவுலகத்தில் காட்டுத்தனமாகப்பரவும் வதந்தி முழுக்க உண்மையல்ல.. \\ ஓரளவுக்கு உண்மை என எடுத்துக் கொள்ளலாமா?

  பதிலளிநீக்கு
 6. \\(சந்திரமுகி-யில் ஜோதிகாவின் உடலில் ஆவி புகுந்ததா அல்லது மனோதத்துவ ரீதியில் மனமாற்றம் அடைகிறாரா என்று ரசிகன் வித்தியாசப்படுத்த முடியாததைப்போல..)\\ Same Blood, கடைசி வரைக்கும் ரசிகனை வித்தியாசப் படுத்த விடவில்லை. மலையாளத்தில் இதை மனோதத்துவப் பிரச்சினையாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இங்கே சூப்பர் ஸ்டார் இமேஜுக்காக இப்படிச் செய்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. \\84 கோடி செலவு என்பது கொஞ்சம் ஓவர்தான். போட்ட காசுக்கு மேல் எடுப்பது கொஞ்சம் திணறலான விஷயம். 4 மாநிலங்களில் பேசும் ஹிந்திப்படங்களே 50 கோடி ரேஞ்சில் தான் எடுக்கப்படுகின்றன. \\ இப்போ ரா-ஒன் படம் 160 கோடியில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே?
  \\40 கோடியிலே முடித்திருக்கலாம் போலக்காட்சிகள் இருக்கின்றன.\\ படம் எடுப்பதற்கான பட்ஜெட் பற்றி இவ்வளவு துல்லியமா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. :))

  பதிலளிநீக்கு
 8. \\சைனாவை நமக்கு நிரந்த எதிரியாக்கிவிடும் ஸ்டோரிலைன்.. \\ No!! China is already the number one enemy to India, where is the question of becoming one!!

  பதிலளிநீக்கு
 9. கருந்தேளனின் வாசகர்களே ,சினிமாவில் நடக்கும் காப்பியடிக்கும் துரோகத்தைக்கண்டு பொருக்காமல் ,INTERNATIONAL CRIMINAL கருந்தேளனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களே. குற்றமே செய்யாமல் இருக்கும் அவதார புருசனா இந்த கருந்தேலன். இவன் திருட்டு டிவிடில் படம் பார்க்காதவனா, நெட்டில் டவுன்லோடு செய்து படம் பார்க்காதவனா. இவன். தன்னை எவனாவது திட்டி எழுதிவிடுவான் என்று பயந்து சைபர் கிரைம் ,பாப்பா கிரைம் என்று புருடாவிட்டும் இவர் பல படங்கள் மீது கேசு போட்டு விட்டேன் என்று காமடி புருடாவுட்டுக்கொண்டும் திரியிறாண். எவன் எது சொன்னாலும் நம்பிவிடும் ஆட்டு மந்தைக்கூட்டம் போல் இல்லாமல்.சுயமாக சிந்திக்கவும் .தமிழக நீதிமன்றங்களில் இன்னும் விசாரிக்காத கேசுகள் ஓரு கோடிக்கு மேல். போலிஸ் ஸ்டசனில் கமிசன் வெட்டாமல் எந்த கேசையும் தொட்டுக்கூடபார்க் மாட்டார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களூக்கு இந்த கருந்தேள்ன் போன்ற காமடி பீஸ்சுக்கு பதி சோல்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிறாமல்.நாட்டின் முக்கிய பிரச்சனகளுக்கு உங்களது ஆதரவை நீட்டுங்கள். சினிமாவ உங்களுக்கு முக்கியாம். அது நல்லா இருந்தால் ஓடும் நல்லா இல்லை என்றால் ஓடாது. சினிமா என்பது ஆர்ட் அல்ல சினிமாவில் புதுசு என்று எதுவும் கிடையாது .சினிமா என்பது கிராப்ட். வெட்டி ஒட்டறரது தா.அதைப்பத்தி ஆராய்ச்சி தேவையில்லை. பொலப்ப் பாருங்க

  பதிலளிநீக்கு
 10. மிஸ்டர் mcckrishna, மற்ற பதிவர்களின் கட்டுரைகளுக்கான விமர்சனங்கள் இங்கே வேண்டாம்.. உங்களுக்கு கருந்தேள் பதிவுகளின் மீது விமர்சனங்களோ, கோபமோ இருந்தால் அதை அங்கே போய் கொட்டுங்கள்.. அவருடைய மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள்.. அல்லது அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுங்கள்... இங்கே வந்து வாந்தியெடுக்காதீர்கள்..

  பதிலளிநீக்கு