ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பெங்களூர் கம்பராமாயணம்

மூன்றாண்டுகளுக்கு முன் சென்னையிலிருக்கும் போது திடீரென்று ஒரு முறை திங்கட்கிழமை ஆபீஸ் லீவு கிடைத்தது. இரண்டாம் சனி, ஞாயிறையும் சேர்த்தால் மூன்று நாட்கள் லீவு... கோயமுத்தூர் பப்பி வீட்டுக்கு போகலாமா என்று பார்த்தால் டிக்கெட் ஐ.ஆர்.சி.டி.சி சதியால் முடியவில்லை. பாண்டிச்சேரி பாவாவுக்கு போன் செய்தால் இங்க வாயேன்-பா என்றார். சரியென்று கிளம்பி விட்டேன். இரண்டு நாள் ஊர் சுற்றிப்பார்த்துவிட்டு மூன்றாம் நாள் வீட்டிலேயே ரெஸ்ட்டு. "அபியும் நானும்" கூட அங்கே தான் பார்த்தேன்.

அப்போது அக்கா வந்து, ஸ்ருதி-க்கு ஏதோ டவுட்டாம் கொஸ்டின் டேக்ஸ் (Question tags) ல. கொஞ்சம் சொல்லிக்கொடுக்குறியா என்றார். ஆஹா... ஒரு அடிமை சிக்கிருச்சேய்-னு களம் இறங்கினேன். pronoun, positive, negative என்று விளக்கோ விளக்கென்று சபீனா போட்டு விளக்கியதில் நல்லா புரிஞ்சுது மாமா என்றாள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து. இப்படி விளக்கமா எங்க டீச்சர் சொல்லித்தர மாட்டேங்கிறாங்களே, அவங்க சீக்கிரம் சீக்கிரமா எழுதிப்போட்டு போர்டு-ல சொல்லிக்கொடுத்துட்டு போயிடுறாங்க பாதிகூட புரியலை.. என்றாள்.

அடியேய், ரெண்டு மார்க் கொஸ்டினுக்கு முழு கிளாஸ்ல இருக்கிற நாப்பது பேருக்கும் ஒரே பீரியட்ல சொல்லிக்கொடுக்கணும்னா அப்படித்தான் சொல்லிக்கொடுக்க முடியும், எல்லாருக்கும் ஒரே மாதிரி புரிய வைக்கறது எவ்ளோ கஷ்டம் என்றான் என்னுள் இருந்த டீச்சர் டொபுக்கென்று வெளியே வந்து. இப்போ புரிஞ்சுதுல்ல.. சந்தோஷமா? என்றேன்.. "ம்" என்றாள்.

அப்போது ஸ்ருதி-க்கு வந்த அதே எண்ணம் தான் நேற்று எனக்கு வந்தது அய்யா ஹரிகிஜி (ஹரிகிருஷ்ணன்) அவர்கள் தலைமையிலும், அன்பர் ஜடாயு-வின் active participation னுடனும் எழுத்தாளர் திரு.சொக்கன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பெங்களூருவில் நடைபெற்ற கம்பராமாயணம் பாடல்கள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சியின் முதல் வகுப்பில் கலந்து கொண்ட போது. இப்படியெல்லாம் நிறுத்தி நிதானமாய் புரியும்படி தமிழ் பாடம் சொல்லிக்கொடுத்திருந்தால் நான் இப்போது தமிழாசிரியராகவே ஆகியிருப்பேன்.. (நல்ல வேளை ஆகலை). என்று தான் தோன்றியது..

திரு.சொக்கன் அவர்களின் முழு முயற்சியால் திடீரென்று கம்பராமாயணம் பயிற்சி வகுப்பு ஒன்று அறிவிக்கப்பட்டு பெங்களூரில் அவர் பணிபுரியும் CRMIT அலுவலகத்தில் நடைபெறுவதாக ட்விட்டர் மற்றும் அவரது ப்ளாக் மூலம் தெரிந்தது.. நம்பரும் கொடுத்திருந்தார். நமக்கு கம்பன் பற்றி ஓரளவே தெரிந்திருந்தாலும் போய் கலந்து கொள்ளலாம் என்று ஆசை. தங்கமணியிடம் கேட்டேன். பர்மிஷன் கிராண்டட். கிளம்பி விட்டேன். ஓசூரில் இருந்து பஸ் ஏறும் போதே கால் செய்து விட்டேன். வழி சொன்னார். சில்க் போர்ட் இறங்கி மறுபடி கூப்பிடுங்க வழி சொல்றேன், ரெண்டு நிமிஷ நடைதான் என்றார். 

அங்கே போய் அவரிடமே வழிகேட்டு நான் போய் வாசல் சேரவும் அவரும் ஹரிகி அவர்களும் வந்து சேரவும் சரியாக இருந்தது. ஆனால், ஒரு விஷயம் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நடையாளிக்கு பெங்களூருவில் ரோடு கிராஸ் செய்வது மிக மிக கடினம். நான் இடது பக்கம் நிற்கும் போது அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவர்கள் நேராக சென்று ஒரு சிக்னலில் நின்று ரைட் டர்ன் எடுத்து திரும்ப வந்து சேர எடுத்துக்கொண்ட நான்கு நிமிடம் எனக்கு வெறுமனே நடந்து சாலையைக்கடக்க மட்டுமே ஆனது..

இரு ஆண்டுகளுக்கு முன் சேலம் அண்ணா பூங்காவில் நண்பன் சேலம் தேவா-வின் புண்ணியத்தில் சொக்கன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அவருக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. நிறைய பேரை அடிக்கடி சந்திக்கிறாரல்லவா? அந்த சந்திப்பு பற்றிய தேவாவின் பதிவு இது எழுத்தாளருடன் நான்...

உள்ளே செல்ல ரிசப்ஷன் என்ட்ரி புக்-கில் பெயர் எழுதி விவரங்கள் எழுதும் போது to meet whom? என்ற இடத்தில் சொக்கன் என்று எழுதி விட்டேன், அவர் வந்து சொக்கன்-னு எழுதாதீங்க, நாகா-ன்னு எழுதுங்க என்றார். ஓ, மை காட் அப்போது தான் அவரது உண்மையான பெயர் அதுவல்ல என்று தெரிந்தது.. நேற்று சரியாக 15 பேர் இணைந்திருந்தோம், அவர்கள் மூவரையும் சேர்த்து.

அங்கு இருந்தவர்களிலேயே அவர்கள் மூவர் (சொக்கன், ஹரிகி, ஜடாயு) மட்டுமே கம்பராமாயணத்தை நேரடியாக முழுமையாகப்படித்தவர்கள். எங்கள் பலரிடம் புத்தகங்கள் இல்லை. இருந்த ஐந்தாறு புத்தகங்களை கம்பைன் ஸ்டடி போல உபயோகப்படுத்திக் கொண்டோம். ஜடாயு அவர்கள் கம்பன் கழகம் வெளியிட்ட வார்த்தைக்கு வார்த்தை பதம் பிரித்து punctuation னுடன் கூடிய எளிதில் புரியும் வார்த்தைப்பிரிப்பைக் கொண்ட புத்தகம் வைத்திருந்தார். மற்ற புத்தகங்கள் அனைத்தும் நாம் பள்ளியில் மனப்பாடப்பகுதியில் படிப்பது போல இணைந்த வார்த்தைகள் கொண்டவை. ஒரு ஆசிரியரின் உதவியோடே அவைகளை பொருள் பிரித்துப்படிக்க இயலும்.

வகுப்பு கார்ப்பரேட் ஒழுங்குடன் சரியாக 6 மணிக்கு துவக்கப் பட்டது. நூறு பாடல்கள் என்று சொக்கன் சொல்லியிருந்தாலும் முதல் வகுப்பல்லவா, goal setting, action plan போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டு சாற்றுப்படலங்கள் பற்றிய முதல் 20 பாடல்கள் மட்டும் நேற்று படிக்கப்பட்டன. வார்த்தை வார்த்தையாகப் பிரித்துப் படிக்கத் துவங்கி லேசான கலந்துரையாடலாக மாறியது.. ஜடாயு அவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

அத்தனையும் ரசிக்க வைத்த பாடல்கள். இன்னும் கம்பனுக்குள்ளேயே போகவில்லை.  ஆனால் கம்பன் எப்படிப்பட்டவன், அவன் கவி எப்படிப்பட்டது, ராமகாதை, ராம ஆயணம் எவ்வாறானது என்றெல்லாம் கொடுக்கப்பட்ட பில்ட் அப்-புகள் மட்டுமே அவை. பக்கா உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பாட்ஷா படத்தில் ஹீரோ எப்படிப்பட்டவன் என்பதை விளக்க மூன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மருத்துவமனை, திருமண மண்டபம் என்று உதவிகள் வழங்கப்படும். அது அக் கதாநாயகனின் உயரத்தை இன்னும் அதிகரிக்கும். அதுபோல் கம்பனின் உயரத்தை அதிகரிக்கும் பில்ட் அப் பாடல்கள் அவை. அவையே இவ்வளவு சுவையென்றால் கம்பனின் வரிகள் எங்கே போகுமோ?

இடையே, சொக்கன் அவர்களை ஆச்சரியமாகப்பார்த்துக் கொண்டிருந்தேன் நான், நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் ஒரு பெரிய எழுத்தாளரா இவர் என்று. கேமராவை செட் செய்வதில் இருந்து, அனைவருக்கும் பழரசம் ஊற்றித் தருவது வரை எல்லா வேலைகளையும் மிகக் கேஷூவலாக செய்து கொண்டிருந்தார். புதிதாக பார்க்கும் எவருக்கும் அவர் 15-ல் ஒருவர் என்று தான் நினைக்க வைக்கும். அவர்தான் இந்த கூட்டத்திற்கே காரியகர்த்தா என்று தோன்றாது.

மற்ற அனைவரும் எனக்குப்புதியவர்கள். ஆனால் பலரும் அவர்களுக்குள் அறிமுகம் ஆகியவர்களாகவும் ஏதேனும் ஒரு வாசகர் வட்டத்தில் இருப்பவர்களாகவும் இருந்தனர். அறிமுகப்படலமும் தனித் தனியாக இருந்தது. ஆனால் இன்னும் சில வாரங்கள் ஆகும் ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்து கொள்ள. அனைவரும் இணைந்த மையப்புள்ளி கம்பராமாயணம், இணைத்தவர் சொக்கன் அவர்கள்.

செவிக்குணவு உண்டு என்று தெரியும்.. வயிற்றுக்கும் உண்டு என்று கடைசியில் தெரிந்தது. கடைசியில் அந்த விருந்தோம்பல். அடாடாடாடா... அந்த சர்க்கரைப்பொங்கலும் சுண்டலும்... அருமை. எல்லோரும் ரசித்து இரண்டாம் முறை எடுத்துக்கொண்டார்கள். உண்ணா விரதத்தை முடிக்கப் பயன்படும் பழரசம் நேற்று கம்ப விரதத்தை ஆரம்பிக்க உதவி செய்தது...

முடிவில் இடம் பற்றி அனைவரிடமும் கலந்தாலோசித்து இரு மாதங்களுக்கு CRMIT அலுவலகத்திலேயும் பிறகு இரு மாதங்களுக்கு ஜடாயு அவர்களின் வீட்டிலும், அதன் பிறகு மற்றொரு அன்பர் வீட்டிலும் என்று முடிவானது.. வெகு தூரத்தில் இருந்து வரும் ஒரே ஆள் மட்டுமே. ஓசூர் சுமார் 35 கிலோமீட்டர். அடுத்தது ஹரிஜி அவர்கள் சுமார் 25 கிலோ மீட்டர்.

என்ன ஒன்று? இப்போ கம்பராமாயணம் புத்தகம் வாங்க பட்ஜெட்டுக்கு தங்கமணி-கிட்ட பர்மிஷன் வாங்கணும். திடீர்னு 3000 செலவுன்னு சொன்னா அடிதான் விழும்.. பாடல்களை மெயில் செய்வதாகவும் பிரிண்ட் அவுட் எடுத்து வரலாம் என்றும் சொக்கன் அவர்கள் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.. அது கொஞ்சம் ஈஸியாய் இருக்கும் நமக்கு..

அடுத்த வாரம் முதல் வகுப்பு 5 மணிக்கே ஆரம்பிக்கும்..