திங்கள், 23 நவம்பர், 2015

தூங்காவனம் - அச்சுப் பார்வையில் ஒரு விமர்சனம்

வாட்ஸ் அப்பில் கொஞ்சம் உருப்படியாக ஒரு நல்ல குரூப் இயங்கி வருகிறது. அதில் பல கோமான்கள் இருக்கிறார்கள். பல புரவலர்களும் உண்டு. அவ்வப்போது ஏதாவது போட்டி வைப்பார்கள். சென்ற மாதம் ஒரு கதைப் போட்டி வைத்தார்கள். இந்த மாதம் "தூங்காவனம்" விமர்சனப் போட்டி. அதற்காக அனுப்பிய விமர்சனம் இது. சில விதிமுறைகளும் உண்டு.


என் ப்ளாக் என் உரிமை என்று சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல், படத்தை ஒரு சார்பாக கழுவி ஊற்றாமல், ஸ்பாய்லர்கள் இல்லாமல், கதையை சொல்லியும் சொல்லாமல், 500 சொச்சம் வார்த்தைகளில், அச்சில் வரும் விமர்சனம் போல நிறை குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று சில நல்ல நிபந்தனைகள். அவற்றை அனுசரித்து எழுதப் பட்ட விமர்சனம் இது.


தூங்காவனம் விமர்சனம் - எஸ்கா

"ஸ்லீப்பிங் டிஸ் ஆர்டர்" எனப்படும், சரிவரத் தூங்க இயலாத வியாதியின் பெயர் "இன்ஸோம்னியா". அதை, மாடர்ன் இளசுகள் தூங்காமல் விடிய விடிய ஆட்டம் போடும் ஒரு "நைட் கிளப்"பின் பெயராக வைத்து, அதைத் "தூங்கா வனம்" என இலக்கியத் தரத்துடன் மொழி பெயர்த்து அதனைக் கொடிய மிருகங்கள் உலவும் இடமாக உருவகிக்க வைத்து, மூலப்படத்தின் "ஸ்லீப்லெஸ் நைட்" என்ற பெயருடனும் இணைத்து "ஒரு கோர்வையா வருதா?" என கேட்காமல் கேட்கும் கமல் டச்சே தூங்காவனத்தின் முதல் வெற்றி.

தன் போலீஸ் வேலையால் மனைவியைப் பிரிந்து, ஒரு போதை மாஃபியாவைப் பிடிக்க அண்டர்கவர் ஆபரேஷனில் வேலை செய்யும் ஒரு அதிகாரி, அதே வேலையால் தன் மகனும் கடத்தப்பட, பிடிபட்ட போதை மருந்தைத் திருப்பித் தந்தேனும் மகனை மீட்கக் கிளம்ப, அவரைத் துரத்தும் நேர்மையான பெண் அதிகாரி, ப்ளாக் ஷீப் அதிகாரி, டபுள் கிராஸ் நண்பன் ஆகியோரைச் சமாளித்தாரா? ஆபத்தில் சிக்கினாரா? மகனை மீட்டாரா? என்பதே "தூங்காவனம்". சிம்பிள் லைன் தான். ஆனால் ஒரிஜினல் பிரெஞ்சுப் படத்தைத் தழுவிய திரைக்கதையால் போரடிக்காத தீபாவளி ராக்கெட்டாகச் சீறிப் பாய்கிறது படம்.

இரண்டே மணி நேரம். ஷார்ப்பான திரைக்கதையில் படம் முழுக்க போலீஸ் அதிகாரி திவாகராக மனதில் நிற்கிறார் கமல். கத்திக்குத்து காயம் மெள்ள மெள்ள வலியேற்ற, நேரம் ஆக ஆக ஏறும் வலியின் டெஸிபலை முகத்திலும், உடல்மொழியிலும் அதற்கேற்றவாறு காட்ட அவரால் மட்டுமே முடியும். த்ரிஷா முதல் முறையாக போலீஸ் வேடம். காக்கிசட்டை இல்லாமல் நார்காடிக்ஸ் இன்வெஸ்டிகேஷன் பீரோவோ என்னமோ சொல்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். கமலுடன் ஒரு ஃபைட் வேறு. உமா ரியாஸூக்கும் அவருக்கும் அப்படி ஒரு முகப் பொருத்தம், கமலா காமேஷ் என்று த்ரிஷாவை மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்வதற்கு வாகாக.

சிங்கீதம் சீனிவாசராவ், சந்தான பாரதி, சக்ரி டோலேட்டி, ரமேஷ் அர்விந்த் ஆகிய கைப்பாவை டைரக்டர்கள் வரிசையில் ராஜேஷ் ம சில்வா. "சந்தோஷ் சுப்ரமண்யம்" அப்பா போல ராஜேஷை முன்னால் நிற்க வைத்து பின்னாலிருந்து எல்லா வேலையும் கமலே பார்த்திருப்பது நன்றாகத் தெரிகிறது. டிஸ்கோ க்ளப்பின் தொம், தொம்மென அதிர வைக்கும் டி.ஜே மியூசிக்குக்கு இடையில் தன் திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஜிப்ரானுக்கு. கமலுடன் தொடர்ந்து நான்காவது படம். வாழ்த்துக்கள் ஜிப்ரான்.

வ - குவாட்டர் கட்டிங், சரோஜா, ஹவுஸ்புல் போன்ற படங்களின் வரிசையில் ஒரே லொக்கேஷனில், ஒரே இரவில் நடக்கும் கதை. "சின்ன கல்லு, பெத்த லாபம்" என்ற ரெட்டி ஐடியாவை வெற்றிகரமாக இந்த வருடமே இரண்டாவது முறையாக முயற்சித்திருக்கிறார் கமல். சின்ன பட்ஜெட் படம் என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரே லொக்கேஷனாக "இன்ஸோம்னியா" நைட் க்ளப் பின் டிஸ்கொதே ஹால், பில்லியர்ட்ஸ் கோர்ட், டைனிங் ஹால், மினி பார், கிச்சன், ஸ்டோர் ரூம், பார்க்கிங் லாட், அண்டர்கிரவுண்ட் பார்க்கிங், ஆண் பெண் டாய்லெட் என சுற்றிச் சுற்றி வருகிறது கதை.

முதல் ஆக்ஷன் பிளாக் நடக்கும் பாலம், கமலின் வீடு, ஆபீஸ் அறை, அவர் அனுமதிக்கப்படும் ஆஸ்பத்திரி என மிக மிகச் சொற்ப சீன்களே வேறு இடங்களில். மற்றபடி க்ளப்-பே கதியென நகர்கிறது வர்கீஸின் கேமரா.

க்ளப்-பின் வராண்டாவிலேயே முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இரண்டு பெண்கள், இருட்டில் ஆங்காங்கு முகம் தேய்த்தபடி அமர்ந்திருக்கும் ஜோடிகள், டாய்லெட்டில் வைத்து கேர்ள் ஃபிரண்டை அனுபவிக்க நினைக்கும் இளைஞன், லேசாக மேலே மோதினாலே முஷ்டியை உயர்த்தும் இளைஞர்கள் என இன்றைய மேல்தட்டு இளைஞர்களைக் காட்சிப்படுத்தியிருந்தாலும், அவர்கள் மேல் விமர்சனமும் இல்லாமல், இது சரி, தவறு என எந்த மாரல் போலிஸிங்கும் செய்யாமல் கடந்து போகிறார் திரைக்கதையாசிரியர் கமல்.

ஒரிஜினிலில் எப்படியோ? மூலப்படமான "ஸ்லீப்லெஸ் நைட்" டுக்கான டைட்டில் கிரெடிட் கூட அரை வினாடியில் கடந்து போகிறது. வெகு வேகமாகக் கடக்கும் முன்பாதி அளவுக்குப் பின்பாதி இல்லாமல் லேசாகத் தடுமாறி ஸ்லோ ஆவதைக் கொஞ்சம் இறுக்கியிருக்கலாம்.

சம்பத், ஆஷா சரத் ஆகியோர் ஒன்றிரண்டு சீன்களோடு வீணடிக்கப்பட்டிருந்தாலும், எல்லா கேரக்டர்களையும் கதைக்குத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தியிருப்பது திரைக்கதையாசிரியரான கமலின் வெற்றி. சின்ன வெண்ணிற ஆடை மூர்த்தியான நண்டு ஜெகன் வாயைக் கட்டியிருப்பதே ஒரு சோறு பதம். உத்தம வில்லனின் ஹேங் ஓவரில் இதிலும் அப்பா மேல் பாசம் குறைந்த, சற்றே கேர்லஸ் ஆன மகன் கதாபாத்திரமும் உண்டு.

உலக நாயகனுக்கு இந்த வருடத்தில் ரிலீசாகும் மூன்றாவது படம் இது.  ஆளவந்தானை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தீபாவளி ரிலீஸ் வேறு. முழுக்க முழுக்க ஒரு புல்லட் வேகத் த்ரில்லர் ஒன்றைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தாலும் "பாபநாசம்" படத்தில் கஷ்டப்பட்டுத் தியேட்டருக்கு இழுத்து வந்த ஃபேமிலி ஆடியன்ஸை த்ரில்லர் என்ற காரணத்தாலேயே இந்தப் படத்தில் தக்க வைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமே ஒரு சின்ன மைனஸ்.

அதே போல், க்ளப் ஓனர் பிரகாஷ் ராஜ் சி.சி.டி.வியில் பார்ப்பதெல்லாம் தன் கதவு என்ட்ரன்ஸில் உள்ள கேமரா மட்டுமே. அவ்ளோ பெரிய பப்புக்குள் வேறு எங்குமே கேமரா இருக்காதா? கிச்சனுக்குள் அவ்வளவு சண்டை நடக்கிறது. அங்கே கேமரா இல்லையா? என்னா பாஸ்?

படம் முடிந்ததும் கதாபாத்திரங்கள் எல்லாரும் வந்து ஆடும் அந்த ஜாலியான  க்ளைமாக்ஸ் டான்ஸைத் தவிர்த்திருக்கலாம் - சரோஜா படம் போல ஷூட்டிங் ப்ளூப்பர்ஸூடன் ட்ரை செய்திருக்கிறார்கள். ஆனா ஒரு நல்ல த்ரில்லர் பாத்துட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்பற ஃபீல் போச்சே பாஸ்.

ஏ சென்டர் மூவி. கமலுக்காக வேண்டுமானால் மற்ற சென்டர்களிலும் கல்லா கட்டலாம். அடுத்த படத்தை ஃபேமிலியா வந்து பார்க்கிற மாதிரி கொடுங்க கமல்ஜி. கொஞ்சம் தெலுங்குப் படம் போல இருந்தாலும், குழந்தை குட்டிகளோட வர்றவங்க, பக்கத்து தியேட்டர்ல "வேதாளம்" பார்க்க நுழையுறாங்க. கவனம். 


புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - ன் "இதயக்கனி"

மோசர் பேர்-ன் 3 இன் 1 கலெக்ஷனில் சில பழைய எம்.ஜி.ஆர் பட டி.வி.டி-க்கள் சிக்கின. மிகப் பழைய படங்கள் என்பதால் தரம் பார்க்க இரண்டு டி.வி.டிக்கள் மட்டும் வாங்கினேன். நல்ல குவாலிட்டிதான். குறையொன்றுமில்லை. ஐந்து நாட்கள் முன்பு தான் "இதயக்கனி" பார்த்தேன்.

சின்ன வயதில் படம் பார்த்த ஞாபகத்தில், படப் பெயரையும் வைத்து இது ஒரு அரசியல் படம் என்றே நினைத்திருந்தேன். அல்ல. 97 சதம் இது ஒரு க்ரைம் த்ரில்லர். பாக்கெட் நாவல் வகையில் வைக்கக் கூடிய, கதாநாயகியைச் சுற்றி நிகழும் ஒரு த்ரில்லர் கதையை தன் பாணியில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். கதை திரைக்கதை ஆர்.எம்.வீரப்பன். தயாரிப்பு சத்யா மூவிஸ்.

தன் ஏழைத் தாயார் திடீரென இறக்கவே, எஸ்டேட் ஓனரான நாயகனிடம் தஞ்சம் புகும் நாயகி, தொடர்ந்து நிகழும் சில சம்பவங்களால் அவனது மனைவியாகிறாள். அங்கிருந்து வேகம் எடுக்கும் கதை, கதாநாயகன் ஒரு போலீஸ், நாயகி ஒரு கொலையாளி என இருபது நிமிடத்துக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தபடி நகர்கிறது. கொலைக்குற்றத்திற்காக அவளைக் கைது செய்யும் நாயகன் அவள் ஒரு அம்னீஷியா பேஷண்ட் என்பதையும், அவளைக் கொல்ல நடக்கும் சதியையும் கண்டு அந்தக் கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறான். சதி செய்யும் கொள்ளைக்கூட்டத்தை நாயகன் பிடித்தாரா? நாயகியைக் காப்பாற்றும் அவனது முயற்சி வென்றதா? இருவரும் இணைந்தார்களா என்பதை வெள்ளித் திரையில் ஸாரி, டி.வி.டி வாங்கி வந்து உங்கள் வீட்டு சின்னத் திரையில் காண்க.

இன்றைய காலகட்டத்தில் வைத்துப் பார்த்தால் கூட பெரிய குறையேதும் சொல்ல முடியாத நல்ல படம். அங்கங்கு வரும் கட்சி சார்புப் பிரச்சார வசனங்கள், தேவையா என்று யோசிக்க வைக்கும் இன்ட்ரோ பாடல் போன்றவற்றைத் தவிர ரசிக்கும் படியான படமே. யுரேனியம், ஆள் மாறாட்டம் என்றெல்லாம் போகும் கதையில் எம்.ஜி.ஆர் இன் ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் அட்டகாசம். பளபளவென ஜொலிக்கும் அவரது முகத்தை க்ளோசப் பில் அடிக்கடி காட்டுகிறார்கள். கண்டிப்பாக அந்தக் கால ரசிகர்களை வாய் வலிக்க விசிலடிக்க வைத்திருப்பார்.

கலர் படத்தின் சாத்தியங்களை அதிக பட்சம் உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் எம்.ஜி.ஆர் உடைகளில் ஆரம்பித்து போலீஸ் ஸ்டேஷன் செட்கள் வரை கண்ணைப் பறிக்கும் ஜெம்ஸ் மிட்டாய் கலர்களை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.

உறவினர் மாமா ஒருவர் எம்.ஜி.ஆர் வெறியர். வீட்டில் அவர் இருக்கையில் ஜெயா டி.வி மட்டுமே ஓடும். முகம் பார்க்கும் கண்ணாடியில் விக், தொப்பி இல்லாத ஜிப்பா போட்ட பழைய எம்.ஜி.ஆர் படம் ஒன்றை இன்றும் ஒட்டி வைத்திருக்கிறார். அதே போல் சேலத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குதிரை வண்டிக்காரர். எம்.ஜி.ஆர் செத்துட்டாராம் என்று சொன்னதற்காக அவரது மகனை ரோட்டில் புரட்டிப் புரட்டி அடித்தவர். அது போன்ற அவரது ரசிகர்களோடு தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் இது.

கஸ்டமர் சர்வீஸ் னா எப்புடி இருக்கணும் தெரியுமா?

"ரிலையன்ஸ் வைபாட்" என்ற பெயரில் ஒரு வைஃபை டிவைஸ் வருகிறது. 3 எம்பிபிஸ் முதல் 14 எம்பிபிஸ் வரை ஸ்பீடு இருக்கும் என்று. நம்பி வாங்கி விடாதீர்கள். ஸ்பீடு 40, 75, 150 என 350 கே.பி.பிஎஸ் ஸைத் தாண்ட மாட்டேன் என்கிறது. மூவி டவுன்லோட் சுத்தம். 15 முதல் 45 கே.பி.பிஸ் தான் வருகிறது. ஒரு படம் டவுன்லோட் செய்ய எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என்று ஆகிறது. இது என் அனுபவம் மட்டுமல்ல. இன்னும் இரண்டு நண்பர்களும் வைபாட் ஸ்பீடு இல்லை என்று சொன்ன பிறகே இதை டைப்புகிறேன். தயவு செய்து வாங்கி விடாதீர்கள். (யுஎஸ்பி வைஃபை, பிராட் பேண்ட் அல்ல)

கேட்டால் அவர்கள் அவுட்லெட் டுக்கு வர வைத்து அங்கே "ஸ்பீட் இருக்கே" என்பார்கள். உங்க இடத்துல ஸ்பீடு இருக்கு. அதுக்காக நான் தினமும் உங்க இடத்துக்கா வந்து பிரவுஸ் பண்ண முடியும்? எங்க வீட்ல ஸ்பீட் இல்லையேடா (அ) நான் போகிற இடத்திலெல்லாம் உபயோகிக்கத் தானே இதை வாங்கினேன்) என்றால், ரெண்டு நாள்ல பாக்குறோம் சார் என்கிறான்கள். வாங்கிய இடத்தில் (பூர்விகா)கேட்டால், சார் நாங்க விக்கிறது மட்டும் தான், மீதியெல்லாம் ரிலையன்ஸ் ஆபீஸ்ல கேட்டுக்கோங்க என்கிறார்கள். கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் மீண்டும் இரண்டு நாள் என்கிறார்கள். பதில் வரவில்லையே, ஸ்பீடும் ஏறவில்லையே என்று கஸ்டமர் கேரிடமே கேட்டு மெயில் ஐடி வாங்கி ஸ்கிரீன் ஷாட்டுடன் கம்ப்ளெயிண்ட் மெயில் அனுப்பினால், நாலு நாள் கழித்து அந்த மெயில் ஐடி தப்பு, இந்த ஐடிக்கு அனுப்புங்கள் என்று ஒரு புது ஐடியை ரிப்ளை மெயில் மூலம்
கொடுக்கிறார்கள். புது ஐடிக்கு அனுப்பினால் ரிப்ளையே இல்லை.

கேப் விட்டு, கேப் விட்டு மூன்று முறை அனுப்பினால் நான்காவது முறை ரிப்ளை அனுப்புகிறார்கள், "நாங்க உங்களுக்குக் கால் பண்ணோம், நீங்க நாட் ரீச்சபிள்" என்று ஒரு பச்சைப் பொய். வாரத்துக்கு நூறு கால் வருது எனக்கு. அது எப்படி கரெக்டா நீங்க பண்ணும்போது நான் நாட் ரீச்சபிள் போகிறேன்? சரி அப்படியே போகிறேன் என்று வைத்துக் கொண்டால் கூட, நான் ரெண்டு போனிலும் "மிஸ்டு கால் அலெர்ட்" சர்வீஸ் போட்டு வைத்திருக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே கூப்பிட்டு நான் நாட் ரீச்சபிள்-ல் இருந்திருந்தால் எனக்கு "மிஸ்டு கால் அலெர்ட்" மெஸேஜ் வந்திருக்க வேண்டுமே, ஏன் வரலை?

அதுவும் இந்த கஸ்டமர் கேர்கள் அனுப்பும் ரிப்ளை மெயில் சரியாக "ஜங்க் மெயிலில்" போய் உட்கார்ந்து விடுகிறது. நம் கண்ணில் படுவதில்லை. ஒருவேளை வேண்டுமென்றே ஜங்க் மெயிலுக்குப் போவது போல ஏதாவது சாப்ட்வேர் டெக்னிக் கண்டுபிடித்து வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. இந்த மாதிரி வில்லங்க ஐடியா கொடுக்கத்தானே இந்த ஐ.டி பசங்க பல பேர் இலட்சக் கணக்குல வாங்குறாங்க சம்பளம்?

நாட் ரீச்சபிள் என்று இவர்கள் சொல்லும் அதே சமயம் சில அன்நோன் நம்பர் மிஸ்டு கால்கள் வந்தன. எப்படி என்றால், நாம் அட்டெண்ட் செய்ய முடியாமல் கேர்ள் பிரண்டு கொடுப்பாளே அந்த மாதிரி ஒரு மிஸ்டு கால். போனை கையில் வைத்திருந்து அட்டெண்ட் செய்ய முயற்சித்தால் கூட முடியாது, அது ஒரு ரிங் கூட இல்லை, அரை ரிங்கில் மிஸ்டு கால் கொடுத்தார்கள். திரும்பிக் கூப்பிட்டால் இன்கமிங் வசதி இந்த எண்ணுக்கு இல்லை என்று வருகிறது. ட்ரூ காலரில் போட்டு செக் செய்தால் ரிலையன்ஸ் என்று வருகிறது. எவ்வளவு டெக்னிக்காக வேலை செய்கிறான்கள் பாருங்கள். அதாவது, அவர்கள் ரெக்கார்டு படி, இரண்டு முறை கஸ்டமரைக் கூப்பிட்டோம், அவர்தான் எடுக்கலை என்று "கால் க்ளோஸ்" செய்து விட்டுப் போய் விடலாமே.

நீங்க நாட் ரீச்சபிள்-ல இருந்தீங்க, ஆனா உங்கள் பின்னூட்டம் ஏற்கப்பட்டது, மேற்கொண்டு பேலன்ஸ் செக் செய்ய இதை அமுக்குங்க, அதை அமுக்குங்க, எஸ்.எம்.எஸ் மூலம் பேலன்ஸ் பாக்க இப்படி செய்யுங்க, அப்படி செய்யுங்க, இல்லாட்டி எங்க எழவெடுத்த கஸ்டமர் கேருக்கு போன் பண்ணுங்க (மறுபடி சுத்த விடவா?) உங்க டிவைஸை ரீசார்ஜ் செய்ய (நான் ஏண்டா செய்யப் போறேன்?) இதைப் பண்ணுங்க, அதைப் பண்ணுங்க (நல்ல வேளை இந்த தபா ப்ரீபெய்டு வாங்கித் தொலைச்சேன், முதல் தபா காசோட போச்சு, போஸ்ட் பெய்டா இருந்திருந்தா?) என்று முழ நீளத்துக்கு ஒரு மெயில் வந்தது. டேய், நான் நாட் ரீச்சபிள்-லயே இருந்துட்டுப் போறேன். ஆனா நீங்க அனுப்புன ரிப்ளை மெயில்ல, நான் கேட்ட "ஸ்பீட் இஷ்யூ" பத்தி ஒரு வார்த்தை இல்லையே? ஏன்? பேலன்ஸ் செக் பண்றது, ரீசார்ஜ் பண்றது எப்படின்னு கிளாஸ் எடுக்குறீங்க? கேட்ட கேள்விக்கு பதில் எங்கடா? இது இரண்டு மாத ஃபாலோ அப் அனுபவம். சர்வீஸ் அப்புறம், இது வரை தெளிவான பதில் கூட கிடைத்த பாடில்லை.

இவங்க நாட் ரீச்சபிள் கதை சொல்ற அதே நேரத்தில், இதே ரிலையன்ஸின் சென்னை அல்லது கோவை லேண்ட் லைன் நம்பர்களில் இருந்து கால் வருகிறது. சார் ரீசார்ஜ் பண்லையா? ரீசார்ஜ் பண்லையா? என்று கேட்டு. அவங்களுக்கு நான் நாட் ரீச்சபிளாம். ஆனால் இவர்களால் என்னிடம் நான்கு முறை பேச முடிகிறதாம். எப்படி? (அவர்களுக்கு நான் பழைய கஸ்டமர், இவர்களுக்கு புது பிஸினஸாச்சே)

ஒவ்வொரு முறையும் என்னுடைய பிரச்சினையை (கத்தாமல்) அவர்களிடம் சொன்னால், சார் நாங்க வேற டிபார்ட்மெண்டு என்கிறார்கள். அல்லது "உங்க பிரச்சினையை நாங்க மேல அனுப்பி வைக்கிறோம்" என்கிறார்கள். மூன்றாவது முறை இந்த மாதிரி கால் வந்த போது நிறுத்தி நிதானமாக ஸ்டெப் பை ஸ்டெப் ஆக பிரச்சினையைச் சொன்னால் மறுபடி அதே பதில், கூடவே, "இன்னும் ரெண்டு நாள்ல கால் வரும் சார்" அந்த ரெண்டாவது நாள் எப்ப வருமோ?