புதன், 12 மார்ச், 2014

மீண்டும் கற்காலத்திற்கு





நீண்ட நாட்களாக உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போய் விட்டது என்னுடைய ஸாம்ஸங் ஸ்மார்ட் போன். சுமார் இரண்டு வருடங்கள். இரண்டு நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்து விட்டு இன்று ஒரேயடியாய் படுத்து விட்டது. நோ வாட்ஸ் ஆப், நோ இன்டர்நெட், நோ பழைய பேக் அப். எல்லாம் போச்.

ஸ்கிரீனில் குட்டிக் குட்டியாய் பாப் அப் மெனுக்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. இது ஃபெயிலியர், அது ஃபெயிலியர், என்றெல்லாம் அறிவிக்கத் துவங்கின. ஓக்கே கொடுத்த அடுத்த வினாடி அடுத்த பாப் அப். வேறெந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஓக்கே.. பாப் அப்.. மறுபடி ஓக்கே... மறுபடி வேறொரு பாப் அப். மறுபடி ஓக்கே... மறுபடி வேறொரு பாப் அப். போராடி களைத்து விட்டேன். மெமரி ஃபுல் என்று காண்பித்தது. மெமரி கார்டை கழட்டி சிஸ்டத்தில் போட்டு தேவையில்லாத எல்லாவற்றையும் டெலிட் செய்து பார்த்தேன். போனில் உள்ள எஸ்.எம்.எஸ் பேக் அப் பில் பல்க் பல்க்காக டெலிட் செய்து பார்த்தேன். வேலைக்காகவில்லை.

இரண்டு முறை சர்வீஸ் சென்டருக்கு அலைந்தாயிற்று. முதலில் ஏதோ சாப்ஃட் வேர் கரப்ட் ஆகி இருக்கிறது. சாஃப்ட்வேர் அப்டேட் செய்தால் சரி செய்து விடலாம். 220 ஓவா ஆவும். ஆனால் டேட்டா பேஸ், போன் மெமரி, மெஸேஜ் பேக் அப், போட்டோஸ், வாட்ஸ் ஆப் சாட் மெமரி எல்லாம் போய் விடும், புது போன் போல் ஆகி விடும் என்றார்கள். அதற்கே வருத்தப்பட்டேன். பிறகு வருவதாகத் திரும்பி விட்டேன்.

சாயங்காலம் மறுபடி போய் கேட்டால் என் பேஸ்த் அடித்த மூஞ்சியை பார்த்து விட்டு பேக் அப் காலி ஆகப் போவது கன்ஃபர்ம். அதுபோக மற்றொரு ரிஸ்க்கும் உண்டு. சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது ஐ.எம்.ஈ.ஐ நம்பர் அழிந்து போக வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆனால் ஒரேயடியாக ஃபோன் படுத்து விடும். போர்டு மாற்ற வேண்டும். 6500 ரூபாய் ஆகலாம். அதற்கு நீங்கள் புது போனே வாங்கி விடலாம் என்றான் சிப்பந்தி. ஏதாவது காசு தேறும் என்று பிட்டு போட்டுப் பார்க்கிறானோ அல்லது உண்மையாகவே பயமுறுத்துகிறானோ? போடா நான் வேறெங்காவது பார்த்துக் கொள்கிறேன் என்று வந்து விட்டேன்.

சிம்மைக் கழட்டி என் பழைய அண்ணன் கல் மண்டை நோக்கியாவுக்குள் போட்டிருக்கிறேன். கற்காலத்துக்குப் போனது போல் இருக்கிறது. நம்பர்களை அழுத்தி அழுத்தி கட்டை விரல் வலிக்கிறது. மற்றொரு ஃபோனில் இருந்து சில பல அலுவலக அதி முக்கிய எண்களை மட்டும் இதில் ஸ்டோர் செய்திருக்கிறேன். மெமரி குறைவு, மெஸேஜ் கெபாஸிட்டி குறைவு. ஆனால் வேறென்ன செய்ய? மற்றவர்கள் மன்னிக்க. இரண்டு மூன்று நாட்களில் ஸாம்ஸங்கிற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். மெள்ள மெள்ள தான் பழைய நம்பர்களை, நண்பர்களை, அவர்கள் எண்களை கொஞ்சம் கொஞ்சமாய் கண்டுபிடித்து சேர்க்க வேண்டும்.

நண்பர்காள்.... ஏற்கனவே தொடர்பில் இருப்பவர்கள் பலரின் எண்களும் அழிந்து போய் விட்டன. இதைப்படிக்கும் அன்பர்காள், தங்கள் எண்ணை அனுப்பி உதவிட வேண்டுகிறேன்.

சனி, 8 மார்ச், 2014

உஷார், நீங்கள் பின் தொடரப் படுகிறீர்கள்.



தமிழ் ஹிந்து-வில் வலைஞர் பக்கம் என்ற ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் அனுப்பிய கட்டுரை. ஒன்றரை மாதங்கள் ஆகியும் பிரசுரிக்கப் படவில்லை. இப்போது வலைஞர் பக்கம் தூக்கப்பட்டு விட்டது. ஆகவே கட்டுரையை என் ப்ளாக்-கில் பதிவு செய்கிறேன்.




டோமினோஸ் பீட்ஸா கடைக்குச் சென்றிருந்தேன். சிப்பந்தியிடம் "முன்பு ஒரு முறை சிக்கன் சாஸேஜ் மாதிரி ஏதோ ஒரு சுவையுள்ள பீட்ஸா சாப்பிட்டேன்.  இம்முறை எனக்கு அது சிக்கன் வேண்டாம், வேறு ஏதாவது சுவையில் கொடுங்களேன்" என்றதற்கு, "உங்கள் தொலை பேசி எண் சொல்லுங்கள்" என்றார் சிப்பந்தி. சொன்னதும் "வருகைக்கு நன்றி திருவாளர் கார்த்திக் அவர்களே, கடந்த மாதம் 20-ம் தேதி வௌ்ளிக்கிழமை நீங்கள் "டபுள் சீஸ் மார்கரீட்டா வித் சிக்கன் சாஸேஜ்" டாப்பிங்கும், ஒரு வெஜ் ரோலும் சாப்பிட்டிருக்கிறீர்கள் என ஆரம்பித்து அதற்கு முன்பு நான் என்றைக்கு என்ன சுவையில் என்ன உணவு சாப்பிட்டேன் என்று இன்றைய தேதி வரை வரிசையாக சொல்லத் துவங்கினார்.

"அடேய், இதற்கு முன்பு என் தாய் தாண்டா இப்படி தன் மகன் என்னென்ன சாப்பிடுவான்? எப்போது சாப்பிடுவான் என்றெல்லாம் மனதோடு வைத்திருந்து ஒப்பிப்பாள், அதுவும் அவளது மனக்கணக்கில் கூட சிறு தவறுகள் இருக்கும். நீ என்ன இப்படி வரிசை விடாமல் சொல்கிறாயே" என்று புலம்பியது இந்தப் பாமர மனது. மேலும் "நான் என்ன சாப்பிடுகிறேன் என்று நீ ஏன் கவனிக்கிறாய்? அதையும் ஏனடா குறித்து வேறு வைக்கிறாய்?" எனக் குதித்தான் என்னுள் இருந்த நாட்டான். டெக்னிக்கலாக அது சாத்தியம் தான் என்று என் மூளைக்கு தெரிந்தாலும் என்னுடைய சின்ன இதயம் அதை ஒப்புக்கொள்ள மறுத்தது, நன்றி நவின்று விட்டு அடுத்த உணவு ஆர்டரையும் சொல்லிவிட்டு அமைதியாக உணவு மேஜைக்கு நகர்ந்தேன்.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் உளவாளி ஜேம்ஸ்பாண்ட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை அவரது துறை அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்டுபிடிக்க அவரது உடலில் மைக்ரோ சிப் ஒன்று பொருத்தப்படும். அவரது தலைமையக அலுவல் அறையில் இருந்து கொண்டே அவர் எங்கெங்கே செல்கிறார் என்பது டிராக் செய்யப்படும். அதுபோல் நம்மையும் அறியாமல் நாம் யாராலோ பின்தொடரப்படுகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தவிர ஹாலிவுட்டில் இருந்து மேலும் சில உதாரணங்கள் - வில் ஸ்மித்-ன் "எனிமி ஆஃப் தி ஸ்டேட்", மாட் டேமன் நடித்த "தி போர்ன் ஐடென்டிடி" உள்ளிட்ட மூன்று படங்கள், ஸ்பீல் பெர்க்கின் "மைனாரிட்டி ரிப்போர்ட்" பேட்மேன் வரிசையின் "தி டார்க் நைட்" திரைப்படம், "தி ட்ரூமேன் ஷோ", "கட்டாகா", "ஃபையர் வால்" போன்ற படங்கள் (கருந்தேளுக்கு நன்றி) இந்த டிராக்கின் சிஸ்டத்தின் அதிக பட்ச சாத்தியக் கூறுகளை நமக்கு எடுத்துக்காட்டியவை.

அதிலும் மைனாரிட்டி ரிப்போர்ட் திரைப்படம் எதிர்காலத்தில் நிகழும் கதையை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு பொது இடத்திலும் வைக்கப் பட்டிருக்கும் சென்ஸார் கருவிகள் அந்த இடத்தை கடக்கும் மனிதர்களின் கண்ணை தானாகவே ஸ்கேன் செய்து எவர் கடக்கிறார் என்பதை தௌ்ளத் தெளிவாக பதிவு செய்யும். கதாநாயகன் டாம் குரூஸ் அதில் இருந்து தப்பிக்க தனது கண்ணையே அகற்றி, வேறொரு இறந்து போன மனிதனின் கண்ணை பொருத்திக் கொள்வான்.

நம்மூருக்கு ஏற்றார்போல் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஆதார் கார்டுக்காக உங்கள் கைவிரல் ரேகைகள், கண் பாப்பா, புகைப்படம் என எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே, ஒருவேளை அவை தவறாக உபயோகப் படுத்தப்பட்டால்? ஜேம்ஸ்பாண்டுக்காவது மைக்ரோ சிப். டாம் குரூஸூக்கு கண் மாற்று. ஆனால் நமக்கு நம் கையில் உள்ள மொபைல் எண் ஒன்று போதும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எல்லா தகவல்களுமே எண்களாக மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. எண்கள். எண்கள். எண்கள். (சுதாகர் கஸ்தூரி-யின் சமீபத்திய "6174" என்ற நாவல் எண்களின் மகிமையை ஒரு த்ரில்லர் போல விவரித்தது)

ஆன்டிராய்டு தளம், கூகிள் மேப் போன்ற விஷயங்கள் மூலம் இரு நண்பர்கள் ஒருவரையொருவர் தம்மை மற்றவர் எண்ணுக்கு இணைத்துக் கொண்டால் ஒருவர், மற்றவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்து விடலாம்.  (தேவை - உங்கள் எண்) ஃபேஸ்புக் புதியதாக (உங்களிடம் கேட்காமலே) அறிமுகப் படுத்தியிருக்கும் மெஸேஞ்சர் நீங்கள் எந்த ஊரில் இருந்து கொண்டு நண்பர்களிடம் அளவளாவுகிறீர்கள் என்று காட்டிக்கொடுத்து விடும். (தேவை - உங்கள் எண்)

நீங்கள் என்று? எங்கு? எப்போது? சென்று வந்தீர்கள் என்பதை ஜி.பி.எஸ் (குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்) என்ற ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்து விடலாம் (தேவை - உங்கள் எண்) சிங்கம் டூ திரைப்படத்தில் கதாநாயகியின் காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ் கருவியின் மூலம் அவள் எங்கெல்லாம் சென்று வந்தாள் என்பதை கண்டுபிடிப்பார்கள். (தேவை - அவளது எண்). இதே ஜி.பி.எஸ் வசதி மூலம் பள்ளி வாகனங்கள் எங்கே சென்று கொண்டு இருக்கின்றன என்று டிராக் செய்து அதனை பெற்றோரின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதியை சில நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன. (தேவை - பெற்றோரின் எண்)

இப்படிப்பட்ட டிராக்கிங் சிஸ்டம் சில சமயம் விரும்பத் தகாததாய் இருந்தாலும், சிலமுறை உபயோகமாக இருந்தாலும் இம்முறைகளால் சில அபத்தங்களும் நடப்பதுண்டு. இந்த டிராக்கிங் தேடல் வசதியை வைத்துக்கொண்டு தன் வாடிக்கையாளர் மனம் விரும்பும் சேவையை அளிக்க பல நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. வாடிக்கையாளர் தேடிய விஷயம் சுலபமாய் அவருக்கு கிடைப்பது போன்ற செய்திகள், விளம்பரங்கள் அவரது கணிணியில் பளிச்சிடும். ஆனால் அபத்தம் என்னவென்றால், நான் மேற்கண்ட பீட்ஸா சம்பவத்துக்கு முன்பாக இன்டர்நெட் மூலம் "பீட்ஸா" என்று ஒருமுறை தேடினேன். அவ்வளவுதான். என்னுடைய இன்டர்நெட் உபயோக எண் அவர்களிடம் பதிவாகி விட்டது.

அதன்பிறகு அந்த எண்ணின் மூலம் எங்கிருந்தேனும் நான் இணையத்தை உபயோகிக்கும் போது கிட்டத் தட்ட இரு வாரங்களுக்கு நான் செல்லும் வலைப்பக்கங்களில் எல்லாம் பீட்ஸா தொடர்பான விளம்பரங்களே வந்து குவிந்தன. எந்த பக்கம், எந்த கட்டுரை படித்துக்கொண்டிருந்தாலும் மேலேயோ கீழேயோ பளபளவென்ற பீட்ஸா விளம்பரம் மின்னும். அய்யா, அறிவுஜீவிகளே, நான் ஒருமுறை பீட்ஸா தேடினால் இரு வாரங்களுக்கு பீட்ஸாவே வரவேண்டுமா? அதைத்தான் மறுநாளே சாப்பிட்டுத் தொலைத்து விட்டேனே. தினந்தோறும் பீட்ஸா சாப்பிட எனக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?

மற்றொரு முறை "ஹார்ட் டிரைவ்" என்ற வார்த்தைகளைப் போட்டு தேடி இரு நாட்களில் ஒரு ஹார்ட் டிரைவ் வாங்கி விட்டேன். அப்போதும் அதே கதை. நான் சென்று வாசிக்கும் பல்வேறு வலைதள பக்கங்களிலும் விதவிதமாக ஹார்ட் டிரைவ்கள் பற்றிய விளம்பரங்கள். அட அதையும் தான் வாங்கித் தொலைத்துவிட்டேனே அய்யா. மீண்டும் மீண்டும் வாங்க நானென்ன ஹார்ட் டிரைவ் சேல்ஸ் சர்வீஸா செய்கிறேன்?

இவற்றிற்கெல்லாம் சிகரம் இது.

நேற்றைக்கு நான் உபயோகிக்கும் டெலிபோன் கம்பெனியில் இருந்து ஒரு விளம்பரக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.. "Now you can follow & get the location details of your loved ones without calling them. Dial ----------------- (tollfree) from a-------l mobile" அதன் தமிழாக்கம் இதோ.. "இப்போது நீங்கள் விரும்பும் ஒருவரை (நண்பர் ? அன்பர்) நீங்கள் பின் தொடரலாம். அவரது இருப்பிடத்தை (அ) இருக்கும் இடத்தை அவரை அழைக்காமலே தெரிந்து கொள்ளுங்கள்" கொஞ்சூண்டு பணம் கட்டுங்கள் போதும்.

அருமை ஐயா அருமை. எனக்கே தெரியாமல், என்னைப்பற்றி தெரிந்து கொள்ள அந்த வசதியை பயன் படுத்திக் கொள்ளும் ஒரு அன்பருக்கு நான் அவருக்கு வேண்டப்பட்டவனா? விரோதியா? என்று என் டெலிபோன் கம்பெனிக்கு எப்படித் தெரியும்? நான் ஒரு வி.ஐ.பி ஆக இருக்கும் பட்சத்தில் என்னை கொலை செய்வதற்காக ஒரு கொலையாளி தேடிக்கொண்டிருக்கும் போது இந்த டெலிபோன் கம்பேனி முப்பதே முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு நான் எங்கே இருக்கிறேன் என்று கொலையாளிக்கு ரூட்டு போட்டு காட்டிக்கொடுக்கும் எட்டப்பன் வேலையை செய்து தருமாம். (தேவை - எனது எண்)

எப்படி இருக்கிறது?

செவ்வாய், 4 மார்ச், 2014

ஹெல்மெட்

தமிழ் ஹிந்து-வில் வலைஞர் பக்கம் என்ற ஒரு பகுதி ஆரம்பிக்கப்பட்டு நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் அனுப்பிய கட்டுரை. ஒன்றரை மாதங்கள் ஆகியும் பிரசுரிக்கப் படவில்லை. இப்போது வலைஞர் பக்கம் தூக்கப்பட்டு விட்டது. ஆகவே கட்டுரையை என் ப்ளாக்-கில் பதிவு செய்கிறேன்.



கிராமத்துச்சாலை.. அதிசயமாய் நல்ல ரோடு. "ஓடாது பறக்கும்" என்ற பைக் .. பறந்தது.. ஓட்டியவன் என்னமோ நல்ல அனுபவசாலி தான். ஆனால் விதியும் கேயாஸ் தியரியும் சேர்கையில்? நானோ பின்னால் அமர்ந்திருந்தேன். இருவருமே ஹெல்மெட் இன்றி. நல்ல ரோடு. ஆகவே நல்ல வேகம்.

நாய் மோதி இரு சக்கர வாகனம் நிலைகுலைந்து போன விபத்துக்களை ஏற்கனவே நண்பர்கள் சொன்னதுண்டு. நமக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ரோட்டின் குறுக்கே ஓட யத்தனித்த நாய் டக்-கென்று ஸ்விங்க் ஆகி வந்த வழியே திரும்பி ஓட முயற்சித்தது. எங்கள் கணித்த எதிர்பார்ப்பு தவறி படுவேகத்தில் முன் சக்கரமும் நாயும் மோதிய போது சொழக் என்று ஒரு அதிர்வு தெரிந்தது, உடலில் உணரப்பட்டது.

"தட்"-டென்று வலது புறமாக சரிந்தது வண்டி. வீடியோ கேம்களில் வருகிறார்போல் அதி வேகத்தில் உலகம் எங்களை நோக்கி நகர்ந்து வந்தது. ஓ, ஒருவேளை நாங்கள் முன்னோக்கி இழுத்துச் செல்லப் பட்டோம் போலும். திரைப்படங்களில் உராய்வைக் குறைக்க சண்டைக் கலைஞர்களுக்கு ரோட்டில் மண் கொட்டப்பட்டிருக்கும். ஆனால் எங்களுக்கு அமைந்ததோ சுத்தமான தார் ரோடு.

அவன் 80 கிலோவுக்கு மேல் இருப்பான். ஜங்-கென்று அவனது தாடை தார் ரோட்டில் மோதியது. வண்டியின் ஹேண்டில் பார் தலையைத் தட்டியதில் சாலையைத் தொடாமல் தலை தப்பித்தது. முன் பல் ஒன்று துண்டாகி தெறித்து எங்கோ விழுந்திருந்தது. முழு உடலும் சரிந்து சாலையைத் தொட்டது. எனதும் தான். அவனது ஆஜானுபாகுவான உடல் ரோட்டில் மோத விடாமல் என் தலையைக் காப்பாற்றியது. நாய் எகிறிப்போய் எதிர்புறப் புதரில் விழுந்தது. சுமார் எண்பதடி தூரம் படுத்தபடி பயணித்திருப்போம்.

அவசர அவசரமாக எல்லாரும் ஓடி வந்தார்கள். ஓரிருவர் வந்து தூக்கி விட்டார்கள். யார் வீட்டுப் பையன்பா நீ? நீங்க எந்த ஊரு சார்? என்ற விசாரணைகளைத் தாண்டி என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. 108-க்கு போன் பண்ணுங்க என்றேன். கால் சென்டர் காரர்கள் அந்த இடம் எங்கே இருக்கிறது என்றார்கள். விவாதித்துக் கொண்டார்கள். விபரம் தெரிந்ததும் ஒரு வண்டி அனுப்ப முடிவெடுத்தார்கள்.

தடுமாறி எழுந்து நின்றேன். நடுக்கமாய் இருந்தது. உதறலாய் இருந்தது அவன் உடம்பு. என்னால் தூக்கி விட முடியவில்லை. கர்சீஃப்பை எடுத்து அவனது தாடையை அழுத்தினேன். நான்கே வினாடிகளில் கர்சீஃப் முழுக்க நனைந்தது. தாடையில் இருந்து அவ்வளவு அப்படி ரத்தம் வழிவதை நான் சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். எனக்கு முழு வலது பக்கம் முழுக்க ரத்தத்தீற்றல்கள். சட்டை கிழிந்து தொங்கியது. பெல்ட், ஷூ, பேன்ட், அண்ட டாயர் உட்பட அத்தனையும். உடல் முழுக்க சிராய்ப்புகள்.

பைக் ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட்டது. வண்டி சாவி, பேனா, தெறித்து விழுந்த செல்ஃபோன் பாகங்கள், சேகரித்து குவியலாய்த் தரப்பட்டன. நல்ல வேளை, லேப்டாப்புக்கு ஒன்றும் ஆகவில்லை. தண்ணீர் தெளிக்கப்பட்டது. குடிக்க வைக்கப்பட்டோம். கிராம மக்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்? (ம்...... இதே வண்டி ஒரு கிராமத்து சிறுவன் மேல் மோதியிருக்க வேண்டும். அப்போ இருக்குடி கச்சேரி உனக்கு). ஆம்புலன்ஸ் வந்தது. டக்-கென்று ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள் ஒரு கிராமத்துப்பெண்மணி. ஜி.ஹெச்-சில் இறங்கிக் கொண்டு "உன் கூட அவசரமா வந்ததுல பஸ்ஸூக்கு காசு எடுக்காம வந்துட்டோம் தம்பி" ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். 108-ல் நானும் ஏறுவேன் என்று கனவிலும் நினைத்துப்பார்த்ததே இல்லை. ஆம்புலன்ஸில் செல்லும் போது தலைவர் சுஜாதா சொன்ன கேயாஸ் தியரி ஞாபகம் வந்தது. அவனது தாடையில் கர்சீஃப் வைத்து அழுத்தியபடி அருகில் அமர்ந்திருந்த போது "ரன் லோலா ரன்" திரைப்படமும் நினைவுக்கு வந்தது.

காலையில் இருந்து நடந்த சம்பவங்களை பின் கோர்வையாய் அசைபோட்டேன். விபத்து நடந்த வினாடியில் இருந்து பின்னோக்கி. இதை எந்த இடத்தில் நேரக் கணக்கு மாறியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம் என்று.

திரும்பி வரும்போது லேட் ஆகியிருந்தது. ஏன் லேட் ஆனது? இன்று பார்க்கப்போன பெரிய மனிதர் சாப்பாட்டுக்கு போய் விட்டார். ஏன் போனார்? நாங்கள் லேட். ஏன் லேட்? வழியில் வண்டியை பஞ்சர் போட்டிருந்தோம், முக்கால் மணி நேரம் டிலே. ஏன் பஞ்சர்? ஒரு டாடா ஏஸை பின் தொடர்ந்ததால்? ஏன் பின் தொடர்ந்தோம்? ஒருவன் எங்களிடம் லிஃப்ட் கேட்டிருந்ததால்? ஏன் லிஃப்ட் கேட்டான்? அவன் கோவிலில் அமர்ந்திருந்தான். ஏன் கோவிலுக்கு போனோம்? டப்பாவிலிருந்த ஜவ்வரிசி உப்மா சாப்பிட.

ஏன் ஜவ்வரிசி உப்மா? அவல் உப்மா கேன்சல் ஆனதால். அவல் உப்மாவாய் இருந்திருந்தால் கொண்டு வந்திருக்க மாட்டேன். ஏன் அவல் உப்மா கேன்சல்? நேற்று கடைக்காரன் அவல் கேட்கையில் ஜவ்வரிசி தான் கொடுத்தான். ஏன் கொடுத்தான்? அவனுக்கு ஜவ்வரிசி தெரியாது. தமிழ் ஜவ்வரிசி. தமிழே தெரியாது. ஏன் தெரியாது? அவன் மாலுர் காரன். தமிழ்நாடு அல்ல. ஏன் மாலூரில் தமிழ் பேசுவதில்லை. ஏனென்றால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கையில் மாலூர் கர்நாடகாவுடன் போய் விட்டது. பிரித்தது யார்? சுதந்திரத்திற்கு முன் இருந்த தலைவர்கள். ஆகவே கேயாஸ் தியரிப்படி அந்த தலைவர்கள் தான் இந்த விபத்துக்கு காரணம்.

அந்த தலைவர்களின் மேல் எனக்கு கொஞ்சமாய் கோபம் வந்தது.

புத்தாண்டுப் பரிசாய் எனக்கு நானே ஒரு புதிய ஹெல்மெட் வாங்கிக் கொண்டு விட்டேன்.

சனி, 1 மார்ச், 2014

சம்பவம்ஸ்



(நார்த் இண்டியாவில் நடந்த ஒரு சம்பவம் இது. எனக்கு நடந்தது போல் மாற்றி எழுதுகிறேன்)

பள்ளிகளிடம் கான்ட்ராக்ட் போட்டு சில சேவைகளை கொடுத்து அதற்கான பணத்தை .எம். மூலம் வாங்கும் நிறுவனம் அது.

அதன் நின்றுபோன நான்கைந்து .எம். களை வசூலிக்க செய்ய பள்ளிக்கு மேனேஜராகிய நான் போனேன்.. கரஸ்பான்டன்ட்- இடம் ஒரே வாக்குவாதம்.

கொஞ்சம் இருங்க என்றபடி உள் டிராயரில் இருந்து கரஸ்பான்டன்ட் எதையோ எடுத்து மேஜை மேல வைத்தார்.

அது பளபளக்கும் மெட்டாலிக் ப்ளாக்கில் நைன் எம்.எம் பிஸ்டல். சினிமாவில் வருவது போல் அதன் வாய் என்னை பார்த்தபடி நின்றது.

அப்புறம் என்னமோ கேட்டீங்க போலவே? என்றார் கரஸ்.

ஒண்ணும் இல்ல சார், சும்மா பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று எழுந்து வந்தவன் தான்..

அதுக்கப்புறம்............. அந்தப் பக்கம் போவேன்???
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம ஊரில் நடந்த ஒரு சம்பவம் இது.

ஒரு பள்ளியில் ஒரு வருடத்திற்கான .எம். பென்டிங். பணம் கேட்கப் போயிருந்தேன்.

அந்தப் பள்ளியின் கரஸ்பான்டன்ட் சிட்டிங் எம். எல். .. வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார் எம்மெல்லே.
"தம்பி இங்க வாங்க"
தோளில் கைபோட்டார்.

"தம்பி, பஸ் ஸ்டாப் தாண்டி ஒரு பெட்ரோல் பங்க் இருக்கே பாத்துருக்கீங்களா?"
"ஆமாம் சார். அந்த ஸ்பீடு பிரேக்கர் கூட இருக்கே"
"ஆமாம் தம்பி"
"அங்க தான் சார் பஸ்ல வரும்போது ரன்னிங்ல குதிச்சு இறங்கி வருவோம்"
"அது நம்மள்து தான்" என்றார்
அங்கே தான் ஒருமுறை ஏதோ கட்டப்பஞ்சாயத்து விஷயமாக ஒரு ஆளை நான்கைந்து பேர் மரண ஊனு ஊனிக் கொண்டிருந்ததை பார்த்தேன். கருக்கென்றது.

"எதிர்ல பாருங்க. அதோ தெரியுதே ரயில் வே டிராக்கு"
"ஆமா சார்"
"அது வரைக்கும் நம்ம இடம் தேன். இஸ்கோலுக்கு பசங்க வெளையாட கிரவுண்டு கட்டணும். ஆனா சர்வேயர் இடம் பத்ததாதுங்கிறான்"
அந்த டிராக்கில் அடிபட்டு இறந்ததாக ஆறு மாதம் முன்பு கைமைவான ஒரு ஆளின் போட்டோவை நியூஸ் பேப்பரில் பார்த்திருந்தேன்.

"இடது பக்கம் பாருங்க தென்னந்தோப்பு தெரியுதா?"
"எங்க சார்?"
"அட அங்க பாருங்க தம்பி"
கண்ணைக் குறுக்கி கிழவி போல் நெத்திக்கு சன் ஷேடு வைத்துப்பார்த்தேன். அது இருக்கும் முக்கா கிலோ மீட்டர். தூரத்தில் லேசாக தென்னை மரங்கள் தெரிந்தன. அடேங்கப்பா. அவ்ளோ தூரமும் இவர் இடம் தானா?

அப்படியே வலது பக்கமும் குத்து மதிப்பாக ஒரு தூரத்தை காண்பித்தார். இதையெல்லாம் எதுக்கு நம்ம கிட்ட சொல்றாரு. நாம பணம் வாங்கிட்டுப் போகத்தானே வந்தோம்-னு நெனச்சேன். சொல்லிவிட்டு ஏதோ போன் வரவும் தலைவர் உள்ளே போய்விட்டார்.

வெள்ளை வேட்டி, கக்கத்தில் கந்து வட்டி பை சகிதம் அந்தப் பக்கமாக ஒரு அல்லக்கை வந்தது. "ஏண்ணே, இதையெல்லாம் என் கிட்ட சொல்றாரு?"ன்னேன்.

அவன் "வெள்ளந்தியா இருக்கியே தம்பி. தேவையில்லாம வாயக் கொடுத்துடாத. மறுபடி பணம் கேட்டு வந்தியின்னா இவ்ளோ இடம் இருக்கு, எங்கியாவது ஒரு இடத்துல உன்னை புதைச்சுடுவேன்னு அர்த்தம்"

அண்ணாந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். குடித்த தண்ணீர் அப்படியே நீலகண்டன் போல தொண்டையில் நின்றது.

"சர்ண்ணே... சா... சாரிண்ணே.."