புதன், 12 மார்ச், 2014

மீண்டும் கற்காலத்திற்கு

நீண்ட நாட்களாக உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போய் விட்டது என்னுடைய ஸாம்ஸங் ஸ்மார்ட் போன். சுமார் இரண்டு வருடங்கள். இரண்டு நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்து விட்டு இன்று ஒரேயடியாய் படுத்து விட்டது. நோ வாட்ஸ் ஆப், நோ இன்டர்நெட், நோ பழைய பேக் அப். எல்லாம் போச்.

ஸ்கிரீனில் குட்டிக் குட்டியாய் பாப் அப் மெனுக்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. இது ஃபெயிலியர், அது ஃபெயிலியர், என்றெல்லாம் அறிவிக்கத் துவங்கின. ஓக்கே கொடுத்த அடுத்த வினாடி அடுத்த பாப் அப். வேறெந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஓக்கே.. பாப் அப்.. மறுபடி ஓக்கே... மறுபடி வேறொரு பாப் அப். மறுபடி ஓக்கே... மறுபடி வேறொரு பாப் அப். போராடி களைத்து விட்டேன். மெமரி ஃபுல் என்று காண்பித்தது. மெமரி கார்டை கழட்டி சிஸ்டத்தில் போட்டு தேவையில்லாத எல்லாவற்றையும் டெலிட் செய்து பார்த்தேன். போனில் உள்ள எஸ்.எம்.எஸ் பேக் அப் பில் பல்க் பல்க்காக டெலிட் செய்து பார்த்தேன். வேலைக்காகவில்லை.

இரண்டு முறை சர்வீஸ் சென்டருக்கு அலைந்தாயிற்று. முதலில் ஏதோ சாப்ஃட் வேர் கரப்ட் ஆகி இருக்கிறது. சாஃப்ட்வேர் அப்டேட் செய்தால் சரி செய்து விடலாம். 220 ஓவா ஆவும். ஆனால் டேட்டா பேஸ், போன் மெமரி, மெஸேஜ் பேக் அப், போட்டோஸ், வாட்ஸ் ஆப் சாட் மெமரி எல்லாம் போய் விடும், புது போன் போல் ஆகி விடும் என்றார்கள். அதற்கே வருத்தப்பட்டேன். பிறகு வருவதாகத் திரும்பி விட்டேன்.

சாயங்காலம் மறுபடி போய் கேட்டால் என் பேஸ்த் அடித்த மூஞ்சியை பார்த்து விட்டு பேக் அப் காலி ஆகப் போவது கன்ஃபர்ம். அதுபோக மற்றொரு ரிஸ்க்கும் உண்டு. சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது ஐ.எம்.ஈ.ஐ நம்பர் அழிந்து போக வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆனால் ஒரேயடியாக ஃபோன் படுத்து விடும். போர்டு மாற்ற வேண்டும். 6500 ரூபாய் ஆகலாம். அதற்கு நீங்கள் புது போனே வாங்கி விடலாம் என்றான் சிப்பந்தி. ஏதாவது காசு தேறும் என்று பிட்டு போட்டுப் பார்க்கிறானோ அல்லது உண்மையாகவே பயமுறுத்துகிறானோ? போடா நான் வேறெங்காவது பார்த்துக் கொள்கிறேன் என்று வந்து விட்டேன்.

சிம்மைக் கழட்டி என் பழைய அண்ணன் கல் மண்டை நோக்கியாவுக்குள் போட்டிருக்கிறேன். கற்காலத்துக்குப் போனது போல் இருக்கிறது. நம்பர்களை அழுத்தி அழுத்தி கட்டை விரல் வலிக்கிறது. மற்றொரு ஃபோனில் இருந்து சில பல அலுவலக அதி முக்கிய எண்களை மட்டும் இதில் ஸ்டோர் செய்திருக்கிறேன். மெமரி குறைவு, மெஸேஜ் கெபாஸிட்டி குறைவு. ஆனால் வேறென்ன செய்ய? மற்றவர்கள் மன்னிக்க. இரண்டு மூன்று நாட்களில் ஸாம்ஸங்கிற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். மெள்ள மெள்ள தான் பழைய நம்பர்களை, நண்பர்களை, அவர்கள் எண்களை கொஞ்சம் கொஞ்சமாய் கண்டுபிடித்து சேர்க்க வேண்டும்.

நண்பர்காள்.... ஏற்கனவே தொடர்பில் இருப்பவர்கள் பலரின் எண்களும் அழிந்து போய் விட்டன. இதைப்படிக்கும் அன்பர்காள், தங்கள் எண்ணை அனுப்பி உதவிட வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக