திங்கள், 10 ஆகஸ்ட், 2015

மழலைஸ் (2)


மழலைஸ் (1) படிக்க 


28 ஜூலை 2014 ல் எழுதியது
.
மேல் வீட்டில் பதினைந்து நாள் முன்பு ஒரு பாப்பா பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை. அதற்கு ஒரு அக்கா, நான்கு வயதில். அவள் கொஞ்சம் வாய்த் துடுக்கு. குட்டிச் சுட்டீஸூக்கு அனுப்பி வைக்க வேண்டிய கேஸ். அடிக்கடி கீழே விளையாட வருவாள். நம்மாளுக்கும் அவளைக் கண்டால் குஷி தான். பொக்கை வாயுடன் இளிப்பான்.
.
நாங்கள் இவனை அதர்வா, அதர்வா, என்று கொஞ்சும் போது அவள் பார்த்துக் கொண்டே இருப்பாள். போன வாரம் அவர்கள் வீட்டில், அந்த குட்டிப்பாப்பாவுக்கு அதர்வன் என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று இவள் ஒரே அடமாம். ஏண்டி? என்றால் கீழ் விட்டு தம்பிக்கு அதர்வன்-னு தான் பேர் வச்சிருக்காங்க. அவன் ஸ்மார்ட்டா இருக்கான். அதனால இவனுக்கும் அதர்வன்-னு தான் பெயர் வைக்க வேண்டும் என்றிருக்கிறாள்.
.
அவளை சமாதானப் படுத்துவது கஷ்டம் என்பதால் சரி விடு அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். நான்கே நாள்தான். நம்ம பாப்பாவுக்கு லட்டு குட்டி-ன்னு தான் பேர் வைக்க வேண்டும் என்று கச்சேரி. ஏண்டி என்றால் கீழ் வீட்டு அதர்வன்- லட்டு குட்டி-ன்னு தான் கொஞ்சுறாங்க. அதனால நம்ம பாப்பாவுக்கும் அதே பேர் தான் வைக்கணும்-னு புது பதில்.
.
நேற்று, அப்புலு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னாளென்று அவர்கள் வீட்டிலிருந்து அப்டேட். வொய் பிளட்? ஸேம் பிளட்.
.
நல்ல வேளை நான் இவனை குஞ்சுமணி என்று கொஞ்சும் போது அவள் இங்கில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------  
எழுதியது - ஆகஸ்ட் 6, 2015 
அதர்வனிடம் புதியதாக ஒரு பழக்கத்தைப் பார்க்க முடிகிறது. என்னுடைய புத்தக அலமாரியில் இருந்து ஏதேனும் ஒரு புத்தகம் எடுத்து, ஆச்சரியமாக, கிழிக்காமல், எடுத்து படிக்கத் (விளையாடத்) துவங்கியிருக்கிறான். முன்பெல்லாம் ஒரு பக்கத்தையேனும் கிழிக்கத் தலைப்பட்டவன், சமீபகாலமாக நான் தினமும் (உறுதிமொழியாக்கும்) ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொஞ்ச நேரம் படித்து விட்டுத் திரும்ப வைப்பதை கவனித்திருப்பான் போல
.
எதேச்சையோ என்னவோ மூன்றாம் தட்டில் கைக்கடக்கமான குட்டிப் புத்தகங்கள் தான் வைத்திருப்பேன், மேலிரண்டு தட்டுக்களில் இரண்டிரண்டு வரிசையாக எல்லா புத்தகங்களையும் திணித்து விட்டு
.
கீழிருந்து மூன்றாவது தட்டுவரை அவனுக்கு எட்டும். அதுவே தான் மேலிருந்து மூன்றாவது தட்டும். அவன் உயரத்திற்குத் தகுந்தாற்போல மூன்றாவது தட்டிலிருந்து அவனுக்கு எட்டியவைரை கை வைத்து ஒரு குட்டிப் புத்தகத்தை எடுத்துக் கொள்வான். ஹாலில் எங்கேனும் அவனுக்கு வாட்டமான இடத்தில் அமர்ந்து கொண்டு பிரித்து வைத்துக் கொள்வான்
.
" , ங்கு ங்கு ங்கு ங்கு, நா, நா, நா, நா, ஃபூ, ஃபூ, ஃபூ, ஃபூ" என்று சத்தம் போட்டுப் படிப்பான். குத்துமதிப்பாக பக்கங்கள் புரட்டுகிறான். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அவனே அதை மூடி எடுத்துப் போய் அதே இடத்தில் வைத்து விடுகிறான். பெற்றோர் செய்வதைக் குழந்தைகள் அப்படியே உள்வாங்குகிறார்கள் என்பதற்கான சான்று இது
.
ஒரே கண்டிஷன் - சமீபமாக பேனா எடுத்து எழுதிக் கிறுக்கவும் பழகுவதால் புத்தகம் எடுக்கும் நேரம், பேனா கைக்குச் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேனா எடுத்தால் நியூஸ் பேப்பரில் மட்டும் தான் கிறுக்க வேண்டும் எனப் பழக்க முயற்சித்து வருகிறோம்
.
குறிப்பு - படிக்கும் போது மட்டும் புத்தகம் நேராக இருக்கிறதா? தலைகீழா? என்பதில் அவனுக்குக் கவலையில்லை, படிக்கிற ஆர்வத்துல அதையெல்லாமா பாப்பாங்க
.

 ---------------------------------------------------------------------------------------------------------------------------- 

புதன், 5 ஆகஸ்ட், 2015

மழலைஸ் (1)

குழந்தைகள் இலக்கியத்தில் எழுதிப் பழக்கம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஃபேஸ்புக்கில் சர்வேஷ் (மாப்ளை) அதர்வன் (மகன்) பற்றி எழுதிய பதிவுகளைத் தொகுக்கலாம் என்று யோசித்தேன். அது இதோ 
-----------------------------------------------------------------------  
நம் வீட்டில் உயிருடன் ஒரு ஜந்து அரையடி யில் தன் வாழ்வை ஆரம்பித்து, நம்மைப் பார்த்துச் சிரித்து, நம்மைப் பார்த்துக் கற்று, நாம் செய்வதையே செய்து, நம்முடன் சேர்ந்து வாழ்ந்து வார்த்தை வார்த்தையாய்ப் பழகி மில்லி மீட்டர் மில்லி மீட்டராக வளர்வதைக் காணுவது பேரானந்தம். 

நாம் நம் வாழ்நாள் முழுதும் அக்கம் பக்கம், தெருக்குழந்தைகள், சினிமாக்கள், தெரிந்தவர் குழந்தைகள் என எத்தனையோ குழந்தைகளைக் கடந்து வந்திருந்தாலும் நம் வீட்டில் நம்முடனே 24 மணி நேரமும் ஒட்டி வளரும் ஒன்றைக் கவனிப்பது ஒருபெரும் பிரமிப்பு. 

மாப்பிளை சர்வேஷிடம் துவங்கிய அந்தப் பிரமிப்பு மகன் அதர்வனிடம் வந்து நிற்கிறது. அழுகை, ஆய், உச்சா, வாந்தி, மயக்கம், தூக்கம், முதல் தவழல், முதல் வார்த்தை, முதல் சிணுங்கல், முதல் சிரிப்பு, முதல் காயம், முதல் ஹேர்கட், ராத்திரி விழிப்புகள், தோளில் அழுகை, பிஞ்சு விரலின் நகம், பால் பாட்டில், போலியோ மருந்து, டயப்பர் பேரம், குட்டி ஜட்டி, கோவண வரிசை, அம்மை ஊசி, ஸ்பெஷல் தடுப்பூசி, பொம்மைகளுடனான உலகம், சின்ன வளையல், கொலுசுச் சத்தம், சத்துக் கஞ்சி, பசும் பால், எருமைப்பால், ஹனி நிப்பிள், இருமல் டானிக், ஜூர மருந்து, காமிக்ஸ் கதைகள், சைஸ் மாறும் செருப்புகள், பொம்மை ஓடும் விளம்பரங்கள், குட்டி சைக்கிள், மினி கார், பக்கத்து வீட்டுக் குழந்தை நட்பு, பூச்சி அடித்தல், கன்றுக் குட்டி தொடுதல், பறவை பார்த்தல் என விரியும் கொடுத்து வைத்த அந்த உலகத்தை அடைந்த பாக்கியசாலிகளுக்கு வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------  
நானும் அதர்வனும் இன்றைக்கு பால்கனியில் (L வடிவம்) ஓளிந்து விளையாடிக் கொண்டிருந்தோம். நான் L வளைவில் திரும்பும் இடத்தில் ஒளிந்து கொள்ள வேண்டியது. அவன் ஒரு பக்கம் பூரா ஓடி, திரும்ப வந்து என்னை கண்டுபிடிக்க வேண்டியது. இதான் ஆட்டம். சுமார் 20 நிமிடம் மூச்சிரைக்க இரைக்க ஓடிக்கொண்டிருந்தான், ஒவ்வொரு முறையும் என்னைக் கண்டுபிடித்துக்கொண்டேடேடேடேடேடேடேடே இருந்தான்.
நானும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை காத்திருந்து எழுந்து பயமுறுத்துவது. ஒரு முறை சட் - டென்று எழுந்து நேரெதிரே ஓடி வருவது. ஒரு முறை அவன் ஓடித் திரும்பி வருமுன் வழியில் உள்ள கதவுக்குள் நுழைந்து கொண்டு அவன் பின்னாலேயே திரும்பி வந்து அவன் என்னைத் தேடுகையில் அவன் பின் நின்று நானும் என்னைத் தேடுவது என்று விளையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி உடலை வளைத்து நெளித்து விழுந்து சிரிப்பான். விழுமுன் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஆட்ட சுவாரசியத்தில் இப்போது ஓடி வந்து என்னைப் பார்த்தவன் என் பின்னால் வந்து அவனும் ஒளிந்து கொண்டான். "ரெண்டு பேரும் ஒளிஞ்சுகிட்டா யாருடா கண்டுபிடிக்கிறது?" என்று இருவரும் விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
அதர்வன் - 21 மாதங்கள் - ஒண்ணேமுக்கால் வயது
-----------------------------------------------------------------------  

மழலைஸ் (2) 

-----------------------------------------------------------------------