சனி, 29 ஜூன், 2013

Man of Steel (சாதாரணமா எப்படா படம் எடுப்பீங்க?)






சாதா மேனுக்கும் சூப்பர்மேனுக்கும் என்ன வித்தியாசம்? சாதா மேன் ஜட்டியை பேன்ட்டுக்கு உள்ள போடுவான். சூப்பர்மேன் ஜட்டியை பேன்ட்டுக்கு வெளிய போடுவான் என்ற பழைய ஜோக் உங்களுக்கும் தெரிந்திருக்கும். "மேன் ஆஃப் ஸ்டீல்" படத்தில் சாமானிய ரசிகனின் கண்ணுக்குத் தெரியும் முதல் மாற்றம் சூப்பர் மேனின் சூப்பரான புதிய உடை (கொஞ்சம் டார்க் கலர் அதிகமாக இருந்தாலும்). முழுக்க முழுக்க கிராபிக்ஸ். அரதப் பழைய, ஆனால் நம்மை அசத்திய கிறிஸ்டோபர் ரீவ்-ன் பளிச் சூப்பர்மேனை மறக்கடிக்கும் டார்க் கலர் பின்னணி படம் முழுக்க. போஸ்டர்களில் கையில் விலங்குடன் சூப்பர் மேன்.

கதை என்று டைட்டிலில் க்ரிஸ்டோஃபர் நோலனின் (மற்றும் டேவிட் கோயர்) பெயர் வரும்போதே சரி, இது முழுக்க முழுக்க பேட்மேன் ஸ்டைல் ரீபூட் (Re boot) ஆக இருக்கப்போகிறது என்ற தோன்றிய எண்ணத்தை அவர் ஏமாற்றவில்லை.

இதற்கு முன் பார்த்த பேட்மேனின் (பேட்மேன் அன்டு ராபின்-லாம் மகா கொடுமை. பள்ளியில் படிக்கும் போது அந்தப்படத்தை பார்த்துவிட்டு பசங்கள் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவார்கள்) காமெடி கொடுமைகளை மறக்க வைத்து அவனை இரவில் சுற்றும் காவல்காரனாக ஒரு டார்க் நைட்டாக பேட்மேன் ரீபூட் ஸீரிஸில் பட்டையைக் கிளப்பிய க்ரிஸ்டோஃபர் நோலன் இதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.கதை சுத்தமாகப்புரியவில்லை என்றாலும் அவரது "இன்ஸெப்ஷன்"-ல் பார்வையாளனை படத்தினுள்ளே இழுத்த சுவாரசியம் இருந்தது. மூன்று பேட்மேன் படங்களும் அப்படியே. ஆனால் சூப்பர் மேனில் அது மிஸ்ஸிங். திரைக்கதையும் மிகவும் வேகம். கொஞ்சம் லேட்டாகப்போனாலோ, பாப்கார்ன் வாங்கிவிட்டு ஆரம்பத்தில் வரப்போனாலோ தொலைந்தது. அப்புறம் வீட்டுக்கு வந்து விக்கிபீடியாவில் தான் கதையை படிக்க வேண்டும்.

குமுதம் "இந்த மாதிரி சயின்ஸ் பிக்ஷன் படங்கள் நம்மூரில் வர மாட்டேனென்கிறதே என்ற ஏக்கத்தை உண்டாக்குகிறது" என்று தன் விமர்சனத்தில் கடைசி பஞ்ச் லைன் சேர்த்திருந்தார்கள். அடாடாடாடா. ஒரு சூப்பர் ஹீரோ படத்தை சயின்ஸ் பிக்ஷன் படமாக மாற்றி நம்மை நம்ப வைத்ததே க்ரிஸ்டோஃபர் நோலனின் மாபெரும் வெற்றி (?????). படத்தின் ஆரம்ப கட்ட "நாட்" களை கோயர் கொடுத்திருந்தாலும் டெவலப்மெண்டில் நோலனின் பங்கே அதிகம்.

என்னைப்பொறுத்த வரை இந்த "மேன் ஆஃப் ஸ்டீல்" சூப்பர் மேனின் முதல் சறுக்கல் அந்த மிகவும் டார்க்கான பின்னணி. பழைய வான நிற நீல உடை எங்கே? பளிச்சென்ற பகல் காட்சிகள் ஏன் இல்லை? உலகின் முதல் சிம்பிள் சூப்பர் ஹீரோவுக்கு இத்தனை காம்ப்ளிகேட்டட்- ஆன ஒரு கதை தேவையா? மேலும் மிகவும் அழுத்தமான, பழைய மணிரத்னம் பாணியிலான இருட்டுக்காட்சிகள் வேறு. சாதாரண மக்களை காப்பாற்றுபவன் என்ற இமேஜை உடைத்திருக்கிறான் இந்த சூப்பர்மேன். இவன் வெறும் வாய்ச்சொல் வீரன். "மக்களை எதுவும் செய்யாதே" என்று இரண்டு முறை டயலாக்கில் மட்டும் சொல்லிவிட்டு வில்லன்களை விட அதிகமான சேதாரத்தை உருவாக்குவது சாட்சாத் சூப்பர்மேன்தான்.

படம் ஓடிய வேகத்தில் கதை எனக்கு முழுதாகப்புரியவில்லை. அப்படி இப்படி என்று ஓரளவு புரிந்து கொண்டு சிம்பிளாகச் சொன்னால் - அழியப்போகும் நிலையில் உள்ள க்ரிப்டன் என்ற கிரகத்தில் உள்ள ஒரு ஜோடி (மனிதர்கள் மாதிரியான) க்ரிப்டோனியன்களுக்கு செயற்கையான முறையில் அல்லாமல் இயற்கையான முறையில் உடல் உறவின் மூலம் பிறந்த "கால்-எல்" என்ற குழந்தையின் உடலுக்குள் கிட்டத்தட்ட ஒரு போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ் போல க்ரிப்டன் கிரகத்தின் ஜீவராசிகளின் டி.என்.ஏ போன்ற உயிர் ரகசியத்தை டவுன்லோடு செய்து அதை பத்திரமாக பேக் செய்து ஒரு பெரிய விண்கலம் மூலம் பூமி என்ற கிரகத்திற்கு அனுப்பி விடுகிறார் அதன் தந்தை.

எப்படி "ஐ ஆம் லெஜன்ட்"-டில் வில் ஸ்மித் ரத்தத்தையே மருந்தாக எடுத்து அனுப்புவாரோ, டிரான்ஸ்போர்ட்டர் படத்தில் வில்லன் தன் உடம்பில் ஆன்டிபயாடிக்கை செலுத்தி தானே ஒரு நடமாடும் மருந்து பாட்டிலாக மாறுவானோ அப்படி. ஸோ, க்ரிப்டன் கிரக ஜீவராசிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமானால் அந்தப்பையன் உயிரோடு வேண்டும். அந்தப்பையன் பூமியில் ஒரு சாதாரணப்பெற்றோருக்கு சாதாரண மகனாக க்ளார்க் கென்ட் என்ற பெயரில் தான் யாரென்றே தெரியாமல் வளர்ந்து வருகிறான். அவனைத்தேடி பூமிக்கு வருகிறது க்ரிப்டனில் தப்பிப் பிழைத்த ஒரு புரட்சிக் கும்பல். அவர்களுக்கும் க்ளார்க்குக்கும் பறந்தபடியே நடக்கும் டமால் டுமீல் கிராபிக்ஸ் சண்டைகளை லாஜிக்கே இல்லாமல் படத்துடன் ஒன்ற முடியாமல் ஆவ்வ்வ்வ்வ் என்று கொட்டாவி விட்டபடி பார்த்து விட்டு வரவேண்டும். இதுதான் கதை. ஸ்பாய்லர்.

தன் உடம்பில் ஏதோ வித்தியாசமான மாற்றங்கள் உண்டு என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். அதை வைத்து அவ்வப்போது மற்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்கிறான். உதா-எரிந்து கொண்டிருக்கும் ஒரு பெட்ரோல் கிணறில் உடலில் எரியும் நெருப்புப்பிழம்புகளுடன் பறந்து போய் தொழிலாளர்களை காப்பாற்றும் காட்சி. படத்தில் அதிக கைதட்டலை வாங்கிய முதல் காட்சி இது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் க்ரிப்டானுக்கும் பூமிக்கும் மாறி மாறி இருக்கக்கூடிய பூகோள, கால நிலை, பருவநிலை, புவியீர்ப்பு சக்தி, உள்ளிட்ட ப்ளா, ப்ளா, ப்ளா காரணிகளே. அதாவது க்ரிப்டனில் இருக்கும் ஒரு சாதாரண மனிதன் (அதாவது க்ரிப்டோனியன்) நம்ம பூமிக்கு வந்தால் ஒரு சூப்பர் மேன். அவன் ஒரு ஏலியன். அப்போ, க்ரிப்டோனியன்கள் ஒரு பத்துப்பதினைந்து பேர் நம்மூருக்கு வந்து இறங்கினால் அவர்கள் அனைவரும் சூப்பர் மேன்களே...

உண்மையான காமிக்ஸ் சூப்பர்மேன் அறிமுகமான கடந்த காலமும் நம்முடைய நிகழ்காலமும் ஒன்றிணைவது போன்ற திரைக்கதை. பென் டிரைவ் மாதிரி ஒன்று படத்தில் வருகிறது. பெரிய பெரிய மாடர்ன் விண்கலங்கள் வருகின்றன. சூப்பர் மேனின் உடை பளபளவென்று அர்ஜூன் தார்ப்பாலின்-ல் செய்தது போல் இருக்கிறது. அந்த உடையில் உள்ள என்ற “S” குறியீட்டுக்கு வேறொரு அர்த்தம் இருப்பது போலவும் அது அடுத்த பாகத்தில் உடைக்கப்படும் என்பது போலவும் காட்டுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கதாநாயகியே “S” என்றால் சூப்ப(ர்மேனா?) என கேட்க ஆரம்பித்து நிறுத்தி விடுகிறாள். ஆக இங்கே அவசர அவசரமாக சூப்பர்மேனின் பூர்வகதையை சொன்னதன் மூலம் அவனுக்கு ஒரு அடித்தளம் மட்டும் அமைத்தாகி விட்டது. எந்த ஒரு சூப்பர் ஹீரோவுக்கும் ஒரு லாஜிக் வேண்டுமே... இனிவரும் காலங்களில் படத்துக்கு ஒன்று என வில்லன்களை அறிமுகப்படுத்தி சூப்பர் மேன் ஸீரீஸ் களை வரிசையாக களம் இறக்கி வசூல் பார்க்கலாம்.. இதுதான் கான்செப்ட்.

ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸ் தேமே என்று தான் படத்தை பார்க்கிறார்கள். நோலனின் டார்க் நைட்டின் திரைக்கதையில் இருந்த பரபரப்போ விறுவிறுப்போ இங்கே எதுவும் இல்லை. அய்யய்யோ ஜோக்கர் அவ்வளவு பணத்தையும் எரிக்கிறானே, கமிஷனரின் ஸ்காட்ச் பாட்டிலில் ஆஸிட்-டை மாற்றி வைத்துவிட்டானே என்று நமக்கு எழும் பதைபதைப்பு "மேன் ஆஃப் ஸ்டீல்"லில் இல்லை. வில்லன்னா ஒரு கெத்து வேணும். அப்போதான் அவனுக்கும் மரியாதை. அவனை ஜெயிக்கிற ஹீரோவுக்கும் மரியாதை. அன்டர்ப்ளே செய்யும் "சிவாஜி" பட ஆதி, அதையெல்லாம் முறியடிக்கும் ரஜினி காம்போ எப்படி இருந்தது..?

ஆனால் என்னவோ ஜெனரல் (zod) ஸோட்-ம் க்ளார்க்கும் டொங்கு டொங்கென்று அடித்துக்கொள்வதையும் பறந்து பறந்து கட்டிடங்களை உடைப்பதையும், பெட்ரோல் பங்குகளை எரிப்பதையும், பாலங்களை உடைப்பதையும் பார்த்தால் லூஸாடா இவனுங்க என்று தான் தோன்றுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என்று நமக்கு எழும் எண்ணம் திரைக்கதையை எழுதியவர்களுக்கு இல்லை. இந்தக் காட்சியமைப்புகள் "ஹேன்காக்" மற்றும் "2012" படத்தை பார்த்ததைப்போலிருந்தன. போதாக்குறைக்கு க்ளார்க் தரையிலிருந்து எழும்பிப்பறக்கையில் கான்கிரீட் துகள்கள் தரையிலிருந்து உடைந்து பறப்பதெல்லாம் அப்படியே "ஹேன்காக்".

சூப்பர்ஹீரோக்களை வெறித்தனமாக நேசிக்கும் பிரியர்களுக்காக ஒரு ஃபேஸ்புக் பக்கம் இது. superheros ஒரு லைக்கை போட்டு வையுங்கள்.

இயக்குனர் ஸாக் ஸ்னைடர் - சொல்லவே வேண்டாம். தலைவர் எடுத்ததிலேயே உருப்படியான ஒரே படம் 300 மட்டுமே. (அதையும் meet the spartens ல் ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருந்தார்கள்). watchmen ம் அறுவை sucker punch ம் மொக்கை. அட்லீஸ்ட் அவற்றிலாவது திரைக்கதையில் பங்கெடுத்திருந்தார். ஆனால் "மேன் ஆஃப் ஸ்டீல்"-ல் வெறும் டைரக்டர் மட்டுமே. அடுத்த வருடம் வரப்போகும் 300: Rise of an Empire எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

படம் முடிந்ததும் ஹாலிவுட்ல சாதாரண மனுசங்களை வச்சி சாதாரணமா எப்படா படம் எடுப்பீங்க? என்ற கேள்வியுடனே எழுந்து வருகிறோம் நாம். என்னதான் நொட்டை சொன்னாலும் நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது உதவி செய்ய யாரேனும் வருவார்களா? என்ற சாமானிய ரசிகனின் ஒரு அடிப்படை எண்ணம் இந்தப்படத்தை சூப்பர் ஹிட்டாக்குகிறது. மில்லியன்கள் வசூல் சாதனையைத் தாண்டி பில்லியன் டாலர்களைத் தொட முயற்சிக்கிறது.