சனி, 9 ஆகஸ்ட், 2014

ஹெர்குலிஸ் எனும் டெமி காட்




உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். ராக் என்று பரவலாக அறியப்படும் ட்வெய்ன் ஜான்சன் இந்தப் படத்திற்காக உடம்பை ஏற்றி ஒர்க் அவுட் செய்து வந்த புகைப்படங்களை நிஜ ராக் (கல்)-குடன் ஒப்பிட்டு கிண்டலடித்த புகைப்படங்கள் ஃபேஸ்புக்கெங்கும் சுற்றிக் கொண்டிருந்தன. "ஹெர்குலிஸ்"-க்காக ராக் 120 கிலோவுக்கு உடம்பை ஏற்றி இருப்பதாகச் சொல்கிறார்கள். (பை தி வே, "ஐ" படத்திற்காக விக்ரமும் 120 ஆக்கியிருப்பதாகச் சொன்னார்கள். பார்க்கலாம் எப்படி இருக்கிறார் என்று). உடம்புக்கேற்ற கதை, உடம்புக்கேற்ற படம். அட்டகாசமான ஆக்ஷன். போர்க்களத்தில் ஹெர்குலிஸ், தன்னை நோக்கி குதிரையில் பாய்ந்து வரும் எதிரியான "ரீஸஸ்" ஐ குதிரையுடன் (குதிரையின் அடிவயிற்றில் கை வைத்து நிஜமாகவே) தூக்கி எறியும் காட்சியில் விசில் பறக்கிறது.

ஹெர்குலிஸ்-ன் 12 சாகசங்கள் கதைகளாக விவரிக்கப் படும் போது அதில் ஒன்றாக ஹெர்குலிஸ் தன் மேல் பாயும் சிங்கத்துடன் தனியாகப் போராடி வெல்லும் காட்சியிலும் ஆரவாரம் தான். இது படத்தின் டைட்டில் கார்டு போடும் போதே வரும் காட்சி. ஆனால் கை தட்டும் எல்லாருக்கும் அது சி.ஜி தான் என்று தெரிந்திருக்கிறது. மேலும், அதே காட்சியை கார்ட்டூன் ஸ்டைலில், ஹெர்குலிஸ் தன் நண்பர்கள் உதவியுடன் சிங்கத்தை வெல்வது போல படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சியிலும் என்ட் டைட்டில்ஸ் ஓடும் போது காட்டுகிறார்கள்.

படத்தின் நீளம் 90 நிமிடங்கள் அதாகப் பட்டது வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே. நான்கு நாட்கள் முன்பு மூணே கால் மணி நேரம் ஜிகர்தண்டா சாப்பிட்ட வயித்துக்கு இதன் குறைவான நீளம் ஒத்துக்கொள்ளவில்லை. குடுத்த காசுக்கு செரிமானம் ஆகணுமில்ல. அட்லீஸ்ட் 120 நிமிஷத்துக்காவது எடுங்கப்பா... என்று தான் சொல்லத் தோன்றியது. நீளம் குறைவு என்பதால் கதை என்ற வஸ்துவும் வத்திப் போனது போல் இருந்தது. போகிறார்கள், வருகிறார்கள், சண்டை போடுகிறார்கள் என்று இருந்தது.

ஹெர்குலிஸ் என்ற தலைப்பில் அதே கதையை வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ஒன்றைக் கூட இது வரை நான் பார்த்ததில்லை. சேலம் லைப்ரரியில் கிரேக்கப் புராணங்கள் ரேக்-கில் எங்கோ ஒரு முறை கொஞ்சமாக கதையை மட்டும் படித்திருக்கிறேன். ஒரு முக்கிய விஷயம். கிரேக்க புராணம் கொஞ்சம் கூடத் தெரியாமல் சென்றால் கதை புரிவது ரொம்பக் கஷ்டம். அட் லீஸ்ட் ஹெர்குலிஸ் என்பது ஒரு புராணக் கதாபாத்திரம் என்பதை மட்டுமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவன் கிரேக்கக் கடவுள் ஸீயஸ்-ன் மகன். ஆனால் ஒரு மனுஷிக்குப் பிறந்ததால் ஒரு டெமி காட் என்று அறியப்படுகிறான். இதே மாதிரி டெமி காட் என்ற சொல் பிரயோகத்துடன் ஸீயஸ்-ன் மற்றொரு மகன் என்று அறியப்படும் பெர்சியஸ்-ஐ ஹீரோவாக வைத்து நான்கு வருடங்கள் முன்பு "க்ளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ்" இரண்டு வருடங்கள் முன்பு "ரேத் ஆஃப் தி டைட்டன்ஸ்" படங்கள் வெளிவந்தததை இந்த படத்துடன் கம்பேர் செய்து குழம்ப வேண்டாம்.



தியேட்டரில், அட்லஸ் சைக்கிள் லோகோவையும் ஹெர்குலிஸ் சைக்கிள் லோகோவையும் மாற்றிக் குழப்பிக் கொண்டு, அதில் உள்ள உலகத்தை தூக்கும் மாவீரன் தான் ஹெர்குலிஸ் என்று கதை சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு ரசிகர். அதே போல் வில்லன் "ரீஸஸ்" என்ற பெயரை "உச்சா" வுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்து கொண்டிருந்தது ஒரு காலேஜ் கோஷ்டி. சண்டைக்காட்சியில் கெக்கே பிக்கே-வென்று கமெண்ட் அடித்து போர்க்காட்சிகளுக்கு சந்தானம் கொடுக்கும் ஜெர்க்குகளுக்கு கொடுக்கும் ரியாக்ஷனை வேறு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். "அம்மா" புண்ணியத்தில் தன்னிலை மறந்த ஒரு குடிமகன் ஒவ்வொரு வசனத்திற்கும் புரோட்டா வாயோடு கவுன்டர் கொடுத்துக் கொண்டிருந்தார்.


ஆக கிரேக்கப் புராணத்தில் ஒரு அரைக் கடவுள் (சரியா?) ஆக அறியப்படும் ஹெர்குலிஸ்-ன் கதையில் பல மாற்றங்கள் செய்து ரீபூட் ஸ்டைலில் ஹெர்குலிஸ் ஒரு சாதாரண மனிதன், ஆனால் மாவீரன் என்று கதை செய்தால் எப்படி இருக்கும்? கதையில் வரும் எல்லா ட்விஸ்ட்-களும் முடிந்தவரை கடவுள் தன்மை இல்லாமல் உடல் பலத்தை மட்டும் துணையாகக் கொண்டு தீர்க்கப்பட்டால் எப்படி இருக்கும்? ஹெர்குலிஸ் ஒரு பக்கா ஆக்ஷன் பேக்-ட் ஹிஸ்டாரிகல் ட்ராமா.. கண்டிப்பாகப் பார்க்கலாம். லாஜிக் பார்க்காமல் 90-களில் இருந்து ஆக்ஷன் படங்கள் பார்க்கும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.


தொடரும்....