சனி, 8 ஆகஸ்ட், 2009

கிச்சுமுச்சு சிஹாமணியின் "கார்"காலக் கனவுகள்

பாக்கியம் ராமசாமி ஸ்டைலில் ஒரு ஸாஃப்ட் காமெடி கட்டுரை எழுத முயற்சித்து எழுதிய கட்டுரை இது.

இதுவும் யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது.


அதை அங்கே படிக்க இங்கே கிளிக்குங்க... http://youthful.vikatan.com/youth/yeskhastory25062009.asp

எப்படியேனும் சொந்தமாக ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது கிச்சுமுச்சு சிஹாமணியின் நீண்ட நாள் அவா. அந்த அவாவுக்கு கற்பனையிலேயே தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு, வேலிகட்டி பெரு மரமாக வளர்த்தும் வருகிறார் அவர். அவா அவா அலுங்காமல் குலுங்காமல் காரில் ஹாயாகப் போகும்போது நாம மட்டும் ஏன் பஸ்ஸிலேயும், ஷேர் வேனிலேயும் ஆபீஸ் போவதற்காக நசுங்கி, பிதுங்கி அல்லோல கல்லோலப்பட வேண்டும் என்று அவ்வப்போது உக்காந்து யோசிப்பார். வேறெங்கே? ஆபீஸில்தான். வீட்டில்தான் வேலை கழுத்தைப் பிடிக்குமே. ஆனால் அவரிடம் ஒரு டூ வீலர் கூடக் கிடையாது என்பதை இங்கே வாசகக் கண்மணிகள் நினைவிலிறுத்திக்கொள்ள வேண்டும். (சைக்கிளும் டூ வீலர்தான் என்பதும் அடிக்குறிப்போடு நினைவுறுத்தப்படுகிறது).


எவ்வளவு நாளைக்குத்தான் ததக்கா புதக்கா என்று தாறுமாறாக ஆபீஸ் பையோடும், சாப்பாட்டுப் பையோடும் சந்தில் நாய் துரத்த ஓடி, மெயின் ரோடுக்கு வந்து பஸ் ஸ்டாப்புக்குப் பறந்து, பஸ்ஸைப் பிடித்து அல்லது ஷேர் வேனில் போக ஆசைப்பட்டு நாலு மடங்கு கட்டணத்தை அழுது கணக்குப் போட்டுக்கொண்டே ஆபீஸ் போவதை நினைத்தால் அவருக்கே ஆயாசமாக இருக்கும். (ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்பா...)


ஆபீஸ் போகும்போதும் சரி, ஊருக்குப் போகும்போதும் சரி சாலையில், நெடுஞ்சாலையில் போகும் கார்களை வண்டிக்கு வெளியே கழுத்தை நீட்டி எட்டி வேடிக்கை பார்த்தபடியே வருவது அவரது ப்ரியமான பொழுதுபோக்கு. "சாவுகிராக்கி உள்ளே இழுய்யா தலையை. தல (அஜீத் அல்ல) தனியாப் போயிடும். செத்து கித்துத் தொலைச்சிட்டியானா நானில்ல ஸ்டேஷன்ல போயி பஞ்சாயத்துக்கு நிக்கணும்" என்று அர்ச்சிக்கும் டிரைவரிடம் ஒரு சாரியை நல்கிவிட்டு மீண்டும் அதையே தொடர்வார்.


தெரிந்தவர்களோ, ஆபீஸிலோ யாராவது புது கார் வாங்கி விட்டால் பெயிண்ட் முதல், டயர், கியர் வரை சகல விபரமும் கேட்டுக் கேட்டு நச்சி விடுவார். ஊரில் எங்கேனும் செகண்ட் ஹாண்ட் யூஸ்டு கார் மேளா நடந்தால் ஓடி ஓடிப் போய்ப் பார்ப்பார். பேப்பர்களில் கார் விளம்பரங்கள் எவை வந்தாலும் அவை புது கார்களோ, பழைய கார்களோ, பாரபட்சம் பார்க்காமல் முழு விளம்பரத்தையும் படித்துப் பார்ப்பார். டாடா நேனோ வேறு வரப்போகிறது. எப்படியாகிலும் ஒரு கார் வாங்கி தன் தர்ம பத்தினி பிந்து மணியை அமர வைத்து ஊர் சுற்றி அழகுபார்க்க வேண்டுமென்பது அவரது (உண்மையில், அவளது) நெடுநாளைய, தீரா அவா. அவளை நினைக்கும் போது அது தீராப் பெருங்கனவாகவே போய்விடுமோ என்பது அவரது பயம்.


சும்மா சொல்லக்கூடாது அவரது தர்மபத்தினியைப் பற்றி. இவரை நன்றாகப் பார்த்துக் கொல்கிறாள்தான் அந்தப் பதிவ்ரதாரத்னம் (பதிவிரதை + ரத்தினம்) நிற்க. கொல்கிறாள் என்றா சொன்னேன். மன்னிக்கவும். நாக்கு பிசகி விட்டது. கொள்கிறாள் என்று மாற்றி வைத்துப் படித்துக் கொள்ளவும். சும்மா சொல்லக்கூடாது. காலையில் சிஹாமணி என்ன சமைத்து வைத்தாலும் எந்தக்குறையும் சொல்லாமல் சாப்பிட்டு விடுவாள். குறிப்பிட்டு இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்று நச்சரிப்பதில்லை. காபியில் கொஞ்சம் அஸ்கா முன்னே பின்னே இருந்தால் கூட சமாளித்துக் குடித்து விடுவாள்.
காலையில் சீக்கிரம் எழுந்து விட்டால் சிஹாமணிக்கு இடைஞ்சலாயிருக்குமென்பதையும் புரிந்து வைத்திருக்கிறாள். சிஹாமணி ஆபீஸூக்குக் கடமையாற்றச் செல்வதால் காலையிலேயே மதியத்துக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டியிருக்குமாதலால் அவரை அதிகத் தொந்தரவு படுத்திக் கொண்டிருக்கவும் மாட்டாள். அவள் பாட்டுக்கு பாட்டு கேட்டுக் கொண்டு, அதாவது மியூஸிக் சேனல்களுக்கு போன் செய்து பாட்டு கேட்டுக்கொண்டு, அவர்கள் போடும் பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பாள்.


டிவியில் என்னோட ராசி நல்ல ராசி பாடலைப் பார்க்கும் போதெல்லாம் அது தனக்காவே புனையப்பட்டது போல சிஹாமணிக்குத் தோன்றும். அப்பேர்ப்பட்ட (ஆர்டர் கொடுத்துச் செய்த) ஸ்பெஷல் ராசி அவருக்கு. தவிட்டுக்கு பிள்ளை வாங்கிய கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா? தெரியாதா? நானும்தான் கேள்விப்பட்டதில்லை. எனக்கும்தான் தெரியாது. நானெல்லாம் வெளியே சொல்லிக்கொண்டா இருக்கிறேன்? சரி அதை விடுங்கள். தலைப்பை வைத்து ஓரளவு அனுமானித்துக் கொண்டு தொடர்ந்து வாருங்கள். தவிட்டுக்குப் பிள்ளை வாங்கிய கதை போல தர்மத்துக்கு பத்தினி (மனைவி) வாங்கி வந்தவர் தான் நம்ம சிஹாமணி. எல்லாம் வடகறிக்கு ஆசைப்பட்டதால் வந்த வினைப்பயன்.


அந்தக் கல்யாணத்தில் வடகறி போடுகிறார்கள் என்று எவனோ கொளுத்திப் போட்டுவிட்டான். பத்திரிகையே வைக்காவிட்டாலும் பரவாயில்லை பலரும் தெரிந்தவர்களே, சிலர் உறவினர்கள் வேறு, எப்படியும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற குருட்டுத் தைரியத்தில் கல்யாண வீட்டில் போய் நின்றார். பையில் இருந்த இருபத்தைந்து பைசாவுக்கு மொய் கவர் மட்டும் வாங்கி பாக்கெட்டில் வெளியே கொஞ்சமாய்த் தெரிவது போல் செருகிக் கொண்டாயிற்று. யாரேனும் வந்து அந்த வெற்றுக் கவரை எடுத்துப் பார்த்து விடவா போகிறார்கள் என்ற அசட்டுத் தைரியம் அவருடன் கூடவே இருந்தது.


அந்தக் கல்யாணத்திற்கென ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு லாங்ஷாட்டில் எடுக்கப் பட்ட பிந்து மணியின் போட்டோதான் முதலில் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் நலுங்கு, ஜானவாச வைபவங்களின் போதும் பூக்கள் மறைத்த பிந்து மணியின் முகத்தை அவனால் முழுதாகப் பார்க்க இயலவில்லை. அவ்வளவு ஏன்? அருகில் அமர்ந்திருந்த அவளது பரந்த தேகத்தையே அவனால் முழுதாகப் பார்க்க இயலவில்லை. ஆனால் சரியாக கல்யாணத்திற்கு முதல்நாள் இரவு பிந்து மணியின் க்ளோசப் போட்டோ அவனது கையில் கிடைக்கும் படி யாரோ செய்த உள்நாட்டுச் சதியின் காரணமாக பஸ் கிடைக்காத, நடுநிசி நாய்கள் துரத்திய அகால நேரத்திலும் அந்தக் கல்யாண மண்டபத்தை விட்டு அவன் ஓடிவிட நேர்ந்தது.


விடிந்தும் விடியாத காலைக் கருக்கலில் பந்தியில் அமர்ந்து கொண்டு, வடகறி இன்னும் வரவில்லையே என்று "மாமா, மாமா இங்கே வடகறி வைங்கோ" என்று கத்திக் கொண்டிருந்த கிச்சுமுச்சு சிஹாமணியின் கீச்சுக்குரல் முக்கியமான மாமா ஒருவரின், அவ்வளவு ஜன சந்தடியிலும், டமாரக் காதில் விழுந்து தொலைத்து விட்டது. அவரது வேட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் மணவறையில் நிறுத்தி விட்டார். அதுகாறும் வடகறியின் மேலிருந்த சிஹாமணியின் கவனம் பிந்து மணியின்பால் திருப்பப்பட்டது.


சிஹாமணியின் அப்பாவையும் கூட்டி வர, சம்மதம் கேட்க ஆள் அனுப்பப்பட்டது. தண்ணீருக்காக வெயிலில் அலைந்து திரியும் பசு மாட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிக்கும் போது விதிர்த்துப் போய் சிலிர்ப்பது போல லேசாக சிஹாமணியின் தலை அசைந்ததுதான் தாமதம், என்னமோ சந்திராயன் டூ விடுவதைப் போல, நிறுத்தப்பட்டிருந்த கல்யாணக் காரியங்கள் சடுதியில் நடந்தேறின. இப்படியாக நல் அணங்கு நாரீமணியான பிந்து மணி கிச்சுமுச்சு சிஹாமணியின் இல்வாழ்க்கைத் துணைவியானாள். சிஹாமணிக்கேனும் மஞ்சள் நீர். அவளுக்கு அதுவும் இல்லை.


இப்படியாகப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்யாணம் நம்மவருடையது. காலுக்குப் பொருந்தாமல் சைஸ் சற்று பெரியதாக இருந்தாலும், கல்யாணத்திற்காக அவருக்கு சீர் அளிக்கப்பட்ட ஷூவைத்தான், கல்யாணத்திற்காக அளிக்கப்பட்டது என்ற ஒரே பெருங்காரணத்திற்காக, இன்றைக்கும் அணிந்தபடி அலுவல் அகம் செல்கிறார் சிஹாமணி. அதிலிருந்து வரும் கிச்சுமுச்சு சத்தம் தான் நம்மவரருக்கு விழாக்கள் ஏதுமன்றி வழங்கப்பட்ட சிறப்பு அடைமொழியாகிப் போனது.


அடைமொழியைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கவலைப்படவில்லை சிஹாமணி. அவருக்கிருந்த கவலையெல்லாம், தம் பாதியின் நிறை வேறா ஆசை ஏதும் இருந்தால் அதை முடித்து வைக்க வேண்டுமென்று மேலோங்கியிருந்த எண்ணமே. அவளுடைய ஒரே ஆசை கார் வாங்க வேண்டுமென்பது. அவளது பாட்டனார் ராவ் பகதூர் ரங்கபாஷ்யம் (போன்ற ஒரு பெயர் உடையவர், உண்மையான பெயர் மறந்து போய் விட்டது, எல்லோருக்கும்) ஒரு கார் வைத்திருந்தாராம். ஊரே அவரை அதற்காகப் பெருமையாகப் பேசுமாம். ஆகவே அதுபோல் (!) ஒரு கார் வாங்கியாக வேண்டுமென்பது மட்டுமே அவள் அவருக்கிட்ட கட்டளை. அதை சிரமேற்கொண்டு செய்து முடிக்கவே பிரம்மப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார் சிஹாமணி.


இப்படியாகப்பட்ட சிறப்பு வாய்ந்த, பிளாஷ் பேக்குகள் நிறைந்த, கார் வாங்கும் விஷயம் திடீரென்று ஒருநாள் சிஹாமணியால் கைவிடப்பட்டது. விஷயம் என்னவென்றால் போன வாரம் அலுவல் அகத்திற்கு ஷேர் டாக்ஸியில் பிதுங்கியபடி செல்கையில் தன் மடியில் உட்கார்ந்தபடி பயணித்த ஸ்பிக் ராமசாமியின் ஓசிப் பேப்பரை (அது அவருக்கு சொந்தப் பேப்பர்தான், நம்மவருக்கு அது ஓசி) கழுத்தை நீட்டி படித்தபடியே வந்தபோது பார்த்த ஒரு முக்கியச் செய்தியின் விளைவு. "கார் விபத்தில் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் உள்பட இருவர் நசுங்கி சாவு" என்ற செய்தியைப் பார்த்தவுடன் கார் வாங்குகிற அல்லது குறைந்த பட்சம் டெஸ்ட் டிரைவ் போகிற ஐடியாவைக் கூடத்தள்ளிப் போட்டு விட்டார் சிஹாமணி.

அந்த ஹாலிவுட் நகைச்சுவை நடிகரை தமிழ் படத்தில் பார்த்திருக்கிறார். அதாவது டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் சூப்பர் ஹிட் காமெடி படம். அந்த நடிகை சிஹாமணிக்கு அவ்வளவாகப்பிடிக்கும்/க்காது என்பதைப் பற்றி இங்கே பேசத் தேவையில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது சதி, அந்தப் பதிவ்ரதாரத்னம், ஒரு ஜாடையில், ஓவர் மேக்கப் போட்ட அந்த ஹாலிவுட் நடிகரின் முக சாயலில் (கலர் அல்ல) தான் இருப்பாள். அதை நினைக்கையில் அன்று முழுக்க கனவில் அதுபோலவே சம்பவம் வந்து கொண்டே இருந்தது.


ஆபீஸில் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை. ஒருவேளை நமது பத்தினிக்கும் இதே மாதிரி ஏதேனும் பேராபத்து நிகழ்ந்து விட்டால்? என்ற சிந்தனை. அந்தக் காட்சி அரை வினாடி குஷியாக சிஹாமணியின் மனக்கண்ணின் முன்னால் வந்து போனாலும், நமக்கும் அவளை விட்டால் யார் இருக்கிறார்? என்ற மாற்றுச் சிந்தனை அவரை இந்த முடிவை எடுக்கும் படி செய்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக