வியாழன், 15 ஆகஸ்ட், 2013

‘ஒருநாள் சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?’ ஓர் செயல்முறை விளக்கம்


சமீபத்தில் "ஒரு குடும்பத்துக்கான ஒரு முழு நாள் உணவுச் செலவு ரூபாய் 33 (நகர்ப்புறம்) 27 (ஊர்ப்புறம்)" மட்டுமே என்ற பொருளாதார அறிவு ஜீவிகள் அளித்த ஓர் அறிக்கையை படிக்க நேர்ந்தது. அது பற்றி பலரும் பல விதமாக கருத்து சொல்லி வந்த வேளையில் நாமும் ஏன் கருத்து சொல்வானேன் என்று நினைத்தேன். பதிலாக ஒரு முறை செயல்படுத்திப்பார்க்கலாமே என்று தோன்றியது. தங்கமணியிடம் கேட்டேன். அவரும் .கே சொன்னார்.

அப்படி செயல்படுத்திப்பார்த்ததில் இன்றைக்கு எங்கள் வீட்டு சாப்பாட்டுக்கான செலவு பத்து ரூபாய் மட்டுமே.. நீங்களும் இந்த மாதிரி செய்து பார்க்கலாம். இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றலாம். இதனால் அந்த அறிக்கையை கண்மூடித்தனமாக (?) வெறித்தனமாக (?)  நான் ஆதரிக்கிறேன்.

இன்றைக்கு சுதந்திர தினம் ஆனதால் நாங்கள் இருவரும் சுதந்திரமாக தூங்கி காலை சுமார் ஒன்பதரை மணிக்கு தான் எழுந்திருத்தோம். ஆக பல் விளக்கி, காலைக்கடன்களை முடித்து காபி ஹார்லிக்ஸ் வகையறாக்கள் சாப்பிட்டு விட்டு துணிகளை துவைக்கப்போட்டு முடித்து காயப்போட்டு குளித்து வீடு கூட்டித் துடைத்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்து விட்டு டிவி பார்த்து விட்டு கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தால் மணி பனிரெண்டு ஆகி இருந்தது. ஆக காலை உணவு சாப்பிடவே இல்லை.

அதனால் அந்த செலவு மிச்சம்.

மதிய உணவை லைட்டாக சாப்பிடலாம் இரவு உணவை ஹெவியாக்கலாம் என்று முடிவு செய்து விட்டு மதிய உணவுக்காக நேற்று நைட்டு மீதமிருந்த வெள்ளை சோறை எடுத்துக்கொண்டு பிரிட்ஜில் இருந்த பழைய ரசத்தை சூடாக்கி சாப்பிட்டோம். பக்கத்து கடையில் ஒரே ஒரு தயிர் பாக்கெட் வாங்கிக்கொண்டோம்.

ஆக மதிய உணவுக்கான செலவு பத்து ரூபாய்.

நன்றாக சாப்பிட்டு விட்டு மல்லாக்கப்படுத்துக் கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து டி.விக்களிலும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் (?) நடித்த படங்கள், தியாகிகள் (?) செய்த மொக்கை காமெடி ஷோக்கள், தியாகிகள் (?) நடித்த சீரியல்கள் எல்லாவற்றையும் ரிமோட் தேயத்தேய மாற்றி மாற்றிப் பார்த்தோம். பிறகு, மிக விரைவில் என் வயதில் ஒன்று கூடும் விதமாக எனது வாழ்க்கையில் இன்னோரு வருடம் கழிந்து விட்டதால் இன்றைய இரவு உணவை வெளியே ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடலாம் என்று ஏக மனதாக முடிவானது. அதே போல் செய்து விட்டு உணவகத்தில் செலவான தொகையை டெபிட் கார்டு மூலமாக கொடுத்து விட்டோம்.

ஆக இரவு உணவுக்கு செலவே இல்லை...

ஸோ, இப்போது கூட்டிக் கழித்துப்பாருங்கள். இன்று முழுவதும் இரண்டு பேர் கொண்ட எங்கள் பெரிய (?) குடும்பத்திற்கு உணவுக்காக செலவான தொகை வெறும் ரூபாய் பத்து மட்டுமே.. இந்த மாதிரி நீங்களும் செய்தால் அந்த பொருளாதார அறிவு ஜீவிகள் சொன்ன மாதிரி 27 ரூபாய்க்குள் செலவை முடித்துக்கொள்ளலாம்.

கடுப்பாவுதுல்ல... அப்போ அந்த அறிவு ஜீவிகள் கொடுத்த அறிக்கையை படிச்சுட்டு எங்களுக்கு எவ்வளவு கடுப்பாவும்? கொய்யால..
--------------------------------------------------------------------------------------------------------------- 
படித்துப்பார்க்கவும்
 
சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா? யுவகிருஷ்ணாவின் பதிவு இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக