ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சர்க்கஸ்-ன் எதிர்காலம்?சினிமாவுக்குப்போகலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். ஒரு பழைய படம். தமிழ்நாட்டில் தமிழில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் ஆன படம். அதே படம் ஹிந்தியில் அமிதாப் நடித்து சூப்பர் ஹிட். ஹைதராபாதோ, விஜயவாடாவோ போகிறீர்கள். அதே படம். மறுபடி சிரஞ்சீவி நடித்து அங்கேயும் சூப்பர் ஹிட். பெங்களூருக்கு போகிறீர்கள். அங்கேயும் அதே படம். விஷ்ணுவர்தன் நடித்து பட்டாஸ் ஹிட். எங்கே எந்த ஊருக்குப்போனாலும் அதே படம் தான் ஓடுகிறது. பாஷை வேறு, இடம் வேறு, ஆட்கள் வேறு. ஆனால் அதே படம்.

இன்றல்ல, நேற்றல்ல, உங்களுக்குத் தெரிந்து உங்கள் அப்பாவுக்குத் தெரிந்து சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் ஓடத்துவங்கிய அந்தப்படத்தைத்தான் நீங்கள் எங்கே போனாலும் பார்க்க முடியும். கூட்டம் வராவிட்டாலும், பிலிம் கிழிந்து தொங்கினாலும். ஒன்றிரண்டு சீன்கள் குறைந்திருக்கலாம். சில காட்சிகள் புரியாமல் கூடப்போகலாம். ஆனால் நீங்கள் படத்திற்குப்போக வேண்டும் என்று முடிவு செய்தால் வேறு வழியின்றி அந்தப் படத்துக்கே தான் போக வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உங்களைச் சுற்றி உள்ள உலகத்தில் பொழுது போக்கு அம்சங்கள் எவ்வளவோ மாறியிருக்கும். அப்டேட் ஆகியிருக்கும். இப்படி ஒரு நிலை இருந்தால் எப்படி இருக்கும்? கடுப்பாகாது உங்களுக்கு?

மேலே அப்படிப் படமாகக் கற்பனை செய்யப்பட்டு சொல்லப்பட்ட ஒரு அம்சம் "சர்க்கஸ்"

ஓசூரில் "தி கிரேட் பிரபாத் சர்க்கஸ்" நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன் ஈரோட்டில் வேலை பார்க்கும் போது சர்க்கஸ் பார்த்தேன். அதற்கு பத்து வருடங்களுக்கு முன் சேலம் வந்த புதிதில் அம்மா, அப்பா கூட்டிப்போனார்கள். இருபது வருடங்கள் ஆயிற்றே. இப்போது என்னதான் நடக்கிறது என்று சும்மா பார்க்கலாமே என்று எட்டிப்பார்த்தேன். மூன்று மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல் பாராவில் கண்ட மனநிலைதான் எனக்கு முழு சர்க்கஸ் பார்க்கும் போதும் இருந்தது. அதே சர்க்கஸ், அதே நிகழ்ச்சிகள். கொஞ்சம் கூட மாற்றமில்லாத விளையாட்டுக்கள். 1970 களில் இருந்த தலைமுறை ரசித்த விளையாட்டுக்களை 2013-ன் ஆன்டிராய்டு தலைமுறையும் அப்படியே ரசிக்கும் என்று எந்த நம்பிக்கையில் இவர்கள் சர்க்கஸ் நடத்துகிறார்கள்?

எம்.ஜி.ஆர்-ன் பறக்கும் பாவை-யில் பார்த்த அதே பார் விளையாட்டுக்கள், கமலின் அபூர்வ சகோதரர்களில் வந்த அதே சித்திரக்குள்ளர்கள், ஆனால் சிங்கம், புலி விளையாட்டுக்கள் மிஸ்ஸிங். இரண்டு கலரில் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து இரண்டையும் தனித்தனியாக எடுப்பவனையும் காணோம். ஐந்து ஆப்பிரிக்க இளைஞர்கள் வந்தார்கள். நான்கைந்து முறை வந்து போனார்கள். வரும்போதெல்லாம் ஒரே மாதிரி ஆடினார்கள். காற்றைப்புணர்வது போல ஆடிக்காண்பித்தார்கள். என் பக்கத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு பாப்பா தலையில் அடித்துக்கொண்டாள். அவளுக்கும் புரிகிறது.. நாய் இரண்டு காலில் நடந்து காண்பித்தது. கிளி சைக்கிள் ஓட்டிக் காண்பித்தது. அழகிகள் தம் உடலில் வளையம் சுற்றினார்கள். ஜோக்கர் என்ற பெயரில் மூவர் மரண மொக்கை போட்டார்கள். நேபாள், பூட்டான், சைனா இளைஞர்களும், இளைஞிகளும் (பலர் வயதான பெண்கள், கலரும் தோலும் மட்டும் ஆடியன்ஸைக்கவர) வந்து கம்பி சுற்றினார்கள். கயிறு ஏறினார்கள். ஒரே சைக்கிளில் ஆறு பேர் பயணித்துக் காண்பித்தார்கள்.

பால்கனி கட்டி அமர்ந்த ஆர்க்கெஸ்ட்ரா 80-களில் வந்த  (தங்கமணி சொன்னார்) ஹிந்திப்பட பீஜியம்-களை கொய்ங்க், கொய்ங்க் என்று இசைத்தார்கள். அவர்கள் இசைத்ததில் லேட்டஸ்ட் என்றால் டைட்டானிக்கில் வந்த இரு பாடல்கள் (அதுவும் 97-ல் வந்தது. அதுவே 16 வருடப்பழசு) டரட், டரட், டரட், என்று சைலன்ஸர் கழட்டிய இரு மோட்டார் சைக்கிள்கள் உலக உருண்டைக்குள் சுற்றின. மூன்று டொக்கு விழுந்த யானைகள் சிவபூஜை செய்தன. எனக்கு டஜன், டஜனாக கொசுக்கள் கடித்துத் தள்ளின. குர்பானி போடக் கூட்டி வந்த ஒட்டகம் போலும், தளர்வாக ஒரு நடை நடந்து சுற்றி வந்தது. எனக்கு 27 முறை கொட்டாவி வந்தது.

காலம் எவ்வளவோ மாறிப்போன பிறகு 1970-ல் செய்த அதை வித்தையைத் தான் இன்றைக்கும் திரும்ப செய்வேன், நீ வந்து பார், காசு கொடு என்றால் எப்படி? அந்த தொழிலாளர்கள் பாவம்தான், கஷ்டப்படுகிறார்கள் தான், உயிரைப்பணயம் வைத்து சாகசம் செய்கிறார்கள் தான். ஆனால் அதற்காக போய் எல்லாரும் சர்க்கஸ் பார்க்க முடியுமா? (மீண்டும் முதல் பாராவை படிக்கவும்) நான் என் தாத்தாவின் பிஸினஸையே இன்றைக்கு செய்ய முடியுமா? புழக்கத்தில் இருந்தே அழிந்து போன பேஜரை விற்கிறேன் என்று கடை போட்டால் போணி ஆகுமா? தோள் பட்டி வைத்த பெல்பாட்டம் பேன்ட்-டை மட்டுமே இன்றைக்கும் தைத்துத் தரும் டெய்லராக வேலை செய்ய முடியுமா? 2013 -ல் ஊருக்கு ஊர் டென்ட் அடித்து ஹரிதாஸ் நாடகம் போட முடியுமா?
தயவு செய்து மாறுங்கள் சர்க்கஸ் தொழிலாளர்களே.. மக்களிடம் வெறும் இரக்கத்தையும், அனுதாபத்தையும் மட்டும் வைத்து இனிமேலும் ஷோ-க்கள் நடத்த முடியாது. சம்பாதிக்க முடியாது. உங்கள் ஒட்டுமொத்த டீமுக்கும் சோற்றுக்கு மட்டுமே பல ஆயிரங்கள் ஒரு நாள் தேவை. காலத்திற்கேற்ப மாறுங்கள். ஏதேனும் செய்யுங்கள்

1 கருத்து:

  1. இதே போன்ற அனுதாப மனநிலையில் எழுதப்பட்ட என்னுடைய சர்க்கஸ் பற்றிய பதிவு. http://salemdeva.blogspot.com/2012/01/blog-post_18.html

    பதிலளிநீக்கு