ஞாயிறு, 11 டிசம்பர், 2016

#செயின்_ரியாக்ஷன் - பீப் சாங்கை முன் வைத்து

சென்ற வருடம் இதே நாளில் ஃபேஸ்புக்கில் போட்ட போஸ்ட் இது.

நகரம், மாநகரம், பெரு நகரம் இவை மூன்று மட்டுமே உலகில் இல்லை.

அங்குள்ள இளைஞர், இளைஞிகளை மட்டுமே பார்த்து விட்டு, இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இவர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என முடிவெடுப்பதும், அவர்களைக் குறி வைக்கும் சினிமாக்கள், பாடல்களை தயார் செய்து வெளியிடுவதும் மிகத் தவறு. அவர்களுக்காக உருவாக்கப்படும் படைப்புகளைத் தான் எல்லோரும் பார்த்தாக வேண்டும்.

சிறு நகரம், கிராமம், குக்கிராமம் போன்றவையும் இங்கே உள்ளன. அவர்களின் உலகம் வேறு. அங்குள்ளவர்களின் கலாச்சாரம் வேறு, வாழ்க்கை முறை வேறு, வருமானம் வேறு. மேற்சொன்ன பிரிவினரைக் குறிவைத்து எடுக்கப் பட்டுள்ள பீப் சாங், ஒரு கிராமத்தில் என்ன ஒரு விளைவைக் கொடுக்கும் என்பதைக் கொஞ்சம் கூட யோசிக்க முடியாதா? பொறுப்புணர்ச்சி கொஞ்சம் கூடக் கிடையாதா இவர்களுக்கு?

மாதர் சங்கங்கள் கண்ணில் இதெல்லாம் படாதா?

முதலில் சினிமாக்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலே வரிவிலக்கு என்ற விதியை நீக்குங்கள். அப்படி ஒரு விதி இருப்பதால் யாருக்குப் பயன்? தயாரிப்பாளர் என்ற ஒற்றை மனிதருக்கு மட்டுமே. பெயரை மட்டும் தமிழில் வைத்து விட்டு மிகக் கேவலமான கதைகளையும், காட்சிகளையும், படம் முழுக்க ஆங்கில வசனங்கள், ஆபாச வசனங்கள் போன்றவற்றை நிறைத்து வரும் படங்களுக்கு எதற்கு வரி விலக்கு?

சரி, அப்படி வரிவிலக்கு வாங்கி வெளிவந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றதா என்றால், இல்லை, இந்த வருடம் வந்த படங்களிலேயே மொத்தமே 15 அல்லது 18 படங்கள் தான் வெற்றி பெற்றவை என்கிறது இன்னோர் கணக்கு. ஆனால் வரி விலக்கு பெற்றவை எத்தனை படங்கள்? 60 க்கும் மேல். ஸோ, படம் ஓடாமல், மக்களுக்குப் பிடிக்காமல், அந்தத்தயாரிப்பாளர் நஷ்டப் பட்டுத்தான் போயிருக்கிறார்.

இதனால் மட்டும் 300 கோடி ரூபாய் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. கேவலமான படத்தை எடுத்து விட்டு தமிழில் பெயர் வைத்து விட்டு பல கோடிகளை வரி விலக்கு என்ற பெயரில் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது ஒரு தயாரிப்பு நிறுவனத்தால். ஆனால் மாதச் சம்பளத்திற்குச் செல்பவனை மட்டும் கழுத்தில் துண்டு போட்டு, வரியைக் கழித்து விட்டுத்தான் சம்பளத்தையே தருகிறது அரசு? இது என்ன முரண்?

அத்தியாவசியத் தேவைகளுக்காக, விவசாயத்திற்காக, கல்விக்கடனுக்காக வாங்கப் படும் லோன்களுக்கு எந்த உதவியும் கிடையாது. விலக்கு கிடையாது. (முந்தைய ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே ஒரு கடன் தவிர) தயவு தாட்சண்யம் கிடையாது.

ஒரு விவசாயி டிராக்டர் வாங்க லோன் கேட்டால் 13.5 முதல் 16.80 சதம் வரை வட்டி விகிதம் இருக்கிறது. ஆனால் 9.45 சதவீதத்தில் கார் லோன் கிடைக்கிறது. எந்த ஊர் நியாயம் இது?

#செயின்_ரியாக்ஷன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக