வெள்ளி, 19 ஜூன், 2020

தலையைச் சுத்தி காதைத்தொடு

3 நவம்பர் 2013 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கும்பகோணம் திருமஞ்சன வீதி ஆரம்பப் பள்ளி
பெரிய வாத்தியார் என்று ஒருத்தர் இருப்பார். அவர்தான் எல்லாம். அவர் முடிவு தான் கடைசி. அவரிடம் ஒண்ணாப்பு அட்மிஷனுக்கு போய் நின்றால் நம் காதைத் தொடச்சொல்வார்.
அதாவது, வலது கையை தூக்கி முழு தலையையும் சுற்றிய மாதிரி வளைத்து, இடது காதை தொட வேண்டும். எட்டவில்லை, தொட முடியவில்லை என்றால் அட்மிஷன் கிடையாது. அடுத்த வருடம் தான் அட்மிஷன். பய வளரட்டும் என்று திருப்பி அனுப்பி விடுவார்.
அம்மாவும், மாமாவும் அந்தப்பள்ளியில் படித்ததால் ஒரு வருடம் போனாலும் பரவாயில்லை அங்கேதான் அட்மிஷன் போடுவேன் என்று விடாப்பிடியாக நின்றார்கள். அதற்கு முந்திய வருடம் அப்பா கூட்டிக்கொண்டு போய் ஷங்கர வித்யாலயா என்றொரு பள்ளியில் எல்.கே.ஜி அட்மிஷன் போட்டிருந்தார். யு.கே.ஜி வரும்போது ஐந்து வயதாகி விட்டதால் கும்பகோணம் திருமஞ்சன வீதி பள்ளி-க்கு கூட்டிப்போனார் ஒண்ணாப்பு அட்மிஷன் போட.
ஆனால் மேற்கண்ட சம்பவம் நடந்து தொலைத்தது என் வாழ்விலும். எனவே நான் (யு.கே.ஜி படித்தேனா என்று ஞாபகமே இல்லை. இருங்க, அப்பாகிட்ட கேட்டு சொல்கிறேன்) அதற்கு அடுத்த வருடம் அங்கே ஒண்ணாப்பு சேர்ந்து பெரிய வாத்தியாரை பார்த்து ரசித்து வளர்ந்தேன். என் வாழ்வில் ஒரு வருடம் ஜாலியாகக் காலி. அந்தச் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் 12 B மாதிரி என் வாழ்வில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கும். வேறு பள்ளி, வேறு நண்பர்கள், வேறு விதமான கட் ஆஃப் மார்க்குகள், வேறு இன்டர்வியூக்கள், வேறு வேலை என ஏதேதோ மாறியிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக