புதன், 19 மே, 2021

கொரேனா சாவ கிராம்பு சாப்டுங்கோ

"என் பெயர் டாக்டர் வி.சம்பத்குமார், விமல் ஜோதி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்று துவங்கி ஒரு பெரும் அறிவாளி பேசும் ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக வயதான பெரியவர்கள் உள்ள குரூப்புகளில். அவர்கள் தான் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்" என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்களே. போதாக்குறைக்கு லாக் டவுன் வேறு. வேறு வேலை இல்லை. எல்லா குரூப்புக்கும் ஃபார்வர்டு செய்வோம் என்று அனுப்பி வைக்கிறார்கள்.

அந்த வீடியோவில் திரு. சம்பத் சாரி, டாக்டர். சம்பத் முதலில் ஒரு ஆக்ஸி மீட்டர் பயன்படுத்தி தன் ஆக்ஸிஜன் லெவலை செக் செய்கிறார். பிறகு இரண்டு கிராம்பு எடுத்து மென்று விட்டு அதன் பிறகு மறுபடி ஆக்ஸி மீட்டரைப் பயன்படுத்தி தன் ஆக்ஸிஜன் லெவல் ஏறிவிட்டது என்று காண்பிக்கிறார். எனக்குப் புல்லரித்து விட்டது. மேலும் கிராம்பு தின்றால் அது கொரோனா வைரஸைக் கட்டாயம் கொன்று விடும் என்றும், ஒவ்வொரு முறை மாஸ்க் அணிவதற்கு முன்பு இரண்டு கிராம்பு தின்னும் படியும் பரிந்துரைக்கிறார். கொரோனா வராதாம்.
(ஒரு டாக்டருக்கு, என்ஜினியரிங் கல்லூரியில் என்ன வேலை? அவர் பிஹெச்டி டாக்டரா? அலோபதி டாக்டரா? அதெல்லாம் கேட்கக் கூடாது. எந்த வயதுக் காரர்கள் இரண்டு கிராம்பை திங்க வேண்டும்? 3 வயது குழந்தை? 75 வயதுப் பெரியவர்? இவர்கள் தின்னா பேதியாகுமே? என்றெல்லாம் கேட்கக் கூடாது)
இவ்வளவு பெரிய அறிவாளியை ஏன் இந்திய மருத்துவத்துறை இன்னும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறது என்று தெரியவில்லை? இவரை உடனடியாக அங்கீகாரம் செய்து தமிழக அரசு அவார்டு கொடுத்து, இவரது பரிந்துரையின் பேரில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் அஞ்சஞ்சு மூட்டை கிராம்பு சப்ளை செய்ய ஆவன செய்யவேண்டும்.
மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்க வேண்டி வேதாந்தா போன்ற நிறுவனங்களைக் கெஞ்ச வேண்டியதில்லை. கிராம்பு தின்றால் ஆக்ஸிஜன் ஏறி விடுகிறதே. எதற்கு ஆக்ஸிஜன் சிலிண்டரும், சிகிச்சையும்?. முடிந்தால் ரேசன் கடைகளில் அந்த 4000 ஓவா கொடுக்கும் போது கூடவே ஒரு 400 கிராம் கிராம்பு பாக்கெட் கொடுக்கச் சொல்லவும்.
டாக்டர். சம்பத்குமாருக்கும், அந்த வீடியோவை ஃபார்வர்டு செய்பவர்களுக்கும் ஒரு கோரிக்கை. உங்களுக்கு கொரோனா வரும்போது இதே போல இரண்டு கிராம்பு வேண்டாம். 200 கிராம்பு எடுத்து வாயில் போட்டு மெல்லவும். ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள்.
இப்படிக்கு
வேக்ஸின் போட ஸ்லாட் கிடைக்காமல் தடுமாறும் தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக