வெள்ளி, 29 அக்டோபர், 2021

விகடன்ல உள்ள ஆள் இருக்கா?

10 செகண்ட் கதைகள் - ஆனந்த விகடன்

ஒவ்வொரு முறையும் என் கதையோ, ஜோக்கோ பத்திரிகைகளில் வெளியாகும் போது பலரும் பாராட்டுவார்கள். சுஜாதா சொன்னது போல (அதுக்காக என்னை சுஜாதாவாகவோ, என்னிடம் பேசுபவர்களை சாதாரணமாகவோ சத்தியமாக நான் நினைக்கவில்லை, நானெல்லாம் சும்மா கொசு) பாராட்டுகளுடன் சேர்த்து "நான் கூட எழுதுவேண்டா, எழுதுவேண்ணே, எழுதுவேன் சார், எழுதுவேன் பாஸ், எழுதுவேன் தம்பி, எழுதுவேன் கார்த்திக்" என்ற பதில்களும் சேர்த்தே கிடைக்கும். இது பரவாயில்லை.
"ஆனா எனக்கு நேரமில்லை" (அப்ப, நாம சும்மா இருக்கோமோ)
"மொக்கை கதையெல்லாம் போடறாங்க" (நம்மளுதைத் தான் சொல்றாங்களோ?) "நம்ம கதையை போட மாட்டேங்கிறாங்க,
"உள்ள ஆள் இருக்கணும் சார் அப்பதான் போடுவாங்க" (ஆமாம், எங்க மச்சான் அங்கதான் எடிட்டரா இருக்காரு, போங்கய்யா யோவ்) என்றெல்லாம் சொல்வது தான் டூ மச்.

(இதே மாதிரி ஒரு போட்டோ கிராபரைப் Deva Rajan பார்த்தால் "நான் கூட நல்லா போட்டோ எடுப்பேன் என்பது)

விடுங்க சார், நீங்க வேற விஷயத்துல பெரியாளா இருக்கலாம். பேச்சுலயோ, பிஸினஸ்லயோ? நீங்க கதை எழுதலைங்கறது இங்க மேட்டரே இல்லை. பிச்சை எடுப்பவனைப் பார்த்து "நான் கூட பிச்சை நல்லா எடுப்பேன், ப்ச், நேரம் இல்லை அதான்" என்று சொல்லிப் பாருங்களேன்.
(சத்தியமாக உண்மையாகவே தன் படைப்பு வர வேண்டும் என்று எழுதுபவர்களை மேலே குறிப்பிடவில்லை, அவர்களைக் கிண்டல் செய்யும் பதிவல்ல இது. அது வேற குரூப். அவர்களைப் பாராட்டவே செய்கிறேன்)
நிஜமாக எழுதுபவர்களுக்காக ஒரு விஷயம் - நான் சொல்லும் பதில் "தொடர்ந்து அனுப்பி கிட்டே இருந்தா உங்களதும் வரும்" என்பது தான். ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல நூற்றுக்கணக்கான பேர் கதைகளை எழுதி அனுப்பிக்கொண்டேடேடேடே இருக்கிறார்கள். "நானும் ரெண்டு அனுப்பியிருக்கேன் சார், போடவே இல்லை" என்றார் சேலத்தில் நான் சந்தித்த ஒரு கல்லூரிப் பெண். "நான் ரெண்டு கதை அனுப்பினேன். இந்த வாரம் வந்திருக்கான்னு பார்க்கிறேன்" என்று உறுதியுடன் சொன்னார் ஒரு நண்பர் (ஆனால் வரவில்லை). "4 கதை அனுப்பியிருக்கேன். ஆனா போடவே மாட்டேங்கிறாங்க. ஃபெட் அப் ஆகி "எழுதறதையே" நிறுத்திட்டேன்" என்றார் இன்னொருத்தர். முடியலைண்ணே. சத்தியமா முடியலை...
ஒரு சின்ன கணக்கு. விகடனுக்கு ஐம்பது பேர் (இதுவே கம்மிதான்) எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். லீடிங் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஐந்து கதைகளாவது (10 செகண்ட் கதை) அனுப்புகிறார்களாம். ஸோ, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், 200 கதைகள் வரும். வாரத்துக்கு 1400 கதைகள். 1400 ல் இருந்து 10 கதைகளை எடுக்க வேண்டும் என்றால் (நான் அறிந்த வரை, அவர்கள் ஸ்கிப் செய்வதில்லை) அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? மேலும் இந்த மூட்டை மூட்டையான கதைகளில் உங்கள் கதை நான்காவது வார்த்தையிலேயே அவர்களைக் கவர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கதை தான். நாம் எழுதியது நமக்கு நன்றாகத்தான் தோன்றும். ஆனால் எடிட்டர் தான் வாசகர் மனநிலை அறிந்து, எது நன்றாக ரீச் ஆகும் என்று படித்துத் தேர்ந்தெடுப்பார். நீங்க ஒரு போட்டிக்கு நடுவரா இருந்தா எப்படித் திணறுவீங்க, யோசிங்களேன்.
இந்த வார விகடனில் வெளியான இரண்டு கதைகளுடன் சேர்த்து இதுவரை எனது 5 கதைகள் வெளியாகி உள்ளன. (ஐந்தே ஐந்து தான், இதுக்கே இவ்ளோ பெரிய பதிவு போடறியா? என்று சொல்கிறீர்களா? ஒரே ஒரு கதை கூட வராத ஒருத்தன், என்னை நேத்து, ரோமிங்கில், 15 நிமிடம் வறுத்தான், எனக்கு எவ்ளோ கோபம் வரும்?) ஆனால் நான் இதுவரை எழுதி அனுப்பியது எத்தனை தெரியுமா? 104 கதைகள். 104 ல் 5 கதைகள் அவர்களுக்குப் பிடித்துப் போய் வெளியாகியுள்ளன. அப்போ மீதி? அவ்ளோ தான் (பாட்ஷா, விஜயகுமார் ஸ்டைலில் படிக்கவும்)
இன்னோரு பொதுவான சோகம் என்னவென்றால், இந்த வாரம் நம்ம படைப்பு ஒன்று வந்து விட்டால் அவற்றுடன் அனுப்பிய மற்ற எல்லாம் ரிஜக்டட் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஸோ, 104 எழுதிப் பிரயோஜனமில்லை. எல்லாம் போச்சு, "எல்லாக் கோட்டையும், அழி. நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்" கதைதான். எனவே, நான் மீண்டும் நாளையில் இருந்து புதிதாக அனுப்பத் துவங்க வேண்டும்.
கே.லக்ஷ்மணன், ரிஷிவந்தியா பாஸ்கர், கே.ஆனந்தன், பர்வீன் யூனுஸ், சகிதா முருகன், இந்தியா வாசன், அஜித், மினிமீன்ஸ் என்று விகடனில் அடிக்கடி வரும் பெயர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களைப் போன்றோர் எழுதித்தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரது உறவினர்களும் விகடனில் வேலை பார்க்கிறார்களா?
ஸோ, இப்போ நான் அனுப்பிய மத்த கதையெல்லாம் இன்வேலிட். இனிமே புதுசா எழுதணும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக