சனி, 8 ஆகஸ்ட், 2009

வீரப்பன் அவுட்டு

இந்தக் கட்டுரை விகடனால், ஐ மீன், யூத்ஃபுல் விகடனால் நிராகரிக்கப்பட்டது. ஏன்? யோசியுங்களேன். படித்து முடித்தவுடன் புரிந்து கொள்வீர்கள். (ஆனால் சில மாதங்கள் கழித்து உயிர்மையுடைய உயிரோசை.காமிற்கு அனுப்பிய போது எந்த ஒரு முகச்சுளிப்பும் இன்றி உடனடியாக வெளியிடப்பட்டது.)

வீரப்பன் அவுட்டு

முன்னொரு காலத்தில்....

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர்...

மாதம் மும்மாரி பொழிந்தது...

மண் வளம் செழித்திருந்தது...

விவசாயம் நன்றாய் நடந்தது...

காடுகள் செழிப்பாய் வளர்ந்திருந்தன...

மரங்கள் வெட்டி, கடத்தி விற்கப் பட்டுக் கொண்டிருந்தன..

அப்போ நாம …?

நாம நாடறிஞ்ச ஒரு தினசரில மாச சம்பளத்துக்கு வேல பாத்துட்டு இருந்தோம். கிட்டத்தட்ட மூணு வருஷம். லைஃப்ல முதல் வேலை.. சின்ன வயசு வேறயா, ஜாலியா இருக்கும். நைட் ஷிஃப்டு. சாயங்காலம் ஆறு மணிக்கு ஆபீஸூக்குப் போனா நடுராத்திரி பேப்பர் பிரிண்டிங் ஆரம்பிச்சு பர்ஸ்ட் ப்ரூஃப் பாத்துட்டு கெளம்ப ரெண்டு மணியாவும். எல்லாரும் சின்னப் பசங்க. பன்னண்டு மணிக்குள்ள சடசடன்னு வேலய முடிச்சுட்டு உக்காந்து பேப்பர் படிப்போம், புக் படிப்போம், ரெண்டு மணி வரைக்கும் டி.வி பாப்போம். எடிட்டரும் எதும் சொல்ல மாட்டாரு.. சரி விடு, சின்னப் பசங்க தான. வேலய முடிச்சுட்டா என்ன வேணா பண்ணட்டும்னுடுவாரு..

நம்ம டிபார்ட்மெண்டுல மட்டும் ஆள் கம்மிங்கறதால பகல்லயும் அப்பப்ப வந்து எட்டிப் பாக்க வேண்டியிருக்கும். அப்படியே மத்த டிபார்ட்மெண்டுகளுக்கும் போறது. அதனால பல டிபார்ட்மெண்ட் வேலைகளையும் கத்துக்கற வாய்ப்பும் கிடைச்சது. கொஞ்ச நாள் எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஆனா அங்க நமக்கு கொஞ்சம் பவர் ஏற ஆரம்பிக்கும் போது நமக்கும் ஏ.ஓவுக்கும் முட்டிகிச்சு. பனிப்போராவும் மாறிடுச்சு. ஏ.ஓ சொன்ன பல விஷயங்கள் பிராக்டிகலாகவும் சரி, ரூல்ஸ் படியும் சரி, ஒத்துப்போகாத விஷயங்களா இருந்தது. அதனால மக்கள் பல பேரு நம்ம சைடுல.

அந்த பனிப்போர் கிட்டத்தட்ட ஆறு மாசம் நடந்தது. அது ஒரு முடிவுக்கு வரணும்னா யார்னா ஒருத்தர்தான இருக்கணும், யார வச்சிக்கலாம்?, ஒரு உறையில ரெண்டு கத்தி, ஒரு குகையில ரெண்டு சிங்கம் எப்படி இருக்க முடியும்? தலைவருக்குத்தான் டெஸிக்னேஷன் அதிகம். அதனால.. அதனால... நம்மள அனுப்பிட்டாய்ங்க. நாம சும்மா விடுவமா? உப்பு, காரம் நெறய சாப்புடற ஆளாச்சே. நீ என்னடா என்ன அனுப்பறது.. நானே ரிஸைன் பண்றேன்னு கம்பீரமா கெளம்பியாச்சு. அய்யய்யோ, ரொம்ப தூரம் போயிட்டனா? சரி அத விடுங்க. இப்போ அது முக்கியம் இல்ல. நம்ம ஆபீஸூல ஒருநாள் (உண்மையாகவே) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. கும்பலா எல்லாரும் சேந்து பல்பு வாங்குனோம். அதப்பத்தி பேசுவோம்.

சம்பவம் நடந்த அன்னிக்கு (சம்பவமாஆஆஆஆ??????????????) நமக்கு வீக் ஆஃப்பு.. (ஆப்பு இல்லீங்க ஆஃப்பு, அதாவது வார லீவு) சரி சும்மா வீட்ல படுத்துத்தூங்கறதுக்கு நைட்டு செகண்ட் ஷோ போயிட்டு வரலாமேன்னு கெளம்பிட்டேன். இங்கிலீஷ் படம், மேட்ரிக்ஸ் செகண்ட் பார்ட்டுன்னு நினைக்கிறேன். எங்க ஊருல சும்மா ஒரே ஒரு கிலோ மீட்டர் சரவுண்டிங்குல கிட்டத்தட்ட பதினேழு சினிமா தியேட்டருங்க இருக்கும். (இப்ப இல்லை. என்னைக்கு கே டி.வி வந்துதோ அப்பயே நெறைய தியேட்டருங்கள மூடியாச்சு, சிலது காம்ப்ளக்ஸ் ஆயிடுச்சு) டிக்கெட் கிடைக்காதுங்கற பேச்சே இல்ல. எதுக்காவது டிக்கெட் கிடைக்கலன்னா இன்னோரு படத்துக்கு போகலாம்.

நம்ம ஆபீஸ் கூட மார்க்கெட் போன ஒரு பழைய நடிகை மாதிரிதான். பழைய நடிகையை ஒரு தொழிலதிபர் கல்யாணம் பண்ணிக்குவாரே… அந்த மாதிரி வீணாப் போன, அதாவது வாழ்க்கையைத்தொலைச்ச ஒரு பழைய சினிமா தியேட்டரை வாங்கி அதுக்குள்ளாற நடந்துகிட்டு இருந்தது எங்க ஆபீஸ். ஆக்சுவலி நான் உக்காந்திருந்த இடம் தரை டிக்கெட்டு. ஸ்கிரீன் இருந்த இடத்துல லே-அவுட் செக்ஷன். பேப்பர் பிரிண்டிங் நடக்குற இடம்தான் பால்கனி. இன்னமும் அந்த இடத்துல பால்கனி டிக்கெட்டு 4.50ன்னு எழுதின மார்க் இருக்கு.

அப்படி ஒரு அட்மாஸ்பியர்ல இருந்ததால லீவு விட்டா உடனே படத்துக்கு தான். அந்த மாதிரி ஒருநாள் சினிமாவுக்கு போயிட்டு, படம் முடிஞ்சு வரும் போது தான் வீரப்பன் செத்தாச்சுன்னு நியூஸூ. நம்ம குணசேகரன் சாரு (பக்கத்து ஊர் லோக்கல் ரிப்போர்ட்டரு) ஆன் தி வே ல பாத்தாரு. ஆபீஸ்ல நியூஸ் குடுத்துட்டு ரிட்டர்ன் பஸ் புடிக்கப் போற வழியில என்னைப் பாத்து இந்த நியூஸை சொல்லிட்டுப்போயிட்டாரு.

நமக்கு பரபரப்பு பத்திகிச்சு. இனிமே எங்க வீட்டுக்குப் போறது..? கிடுகிடுன்னு ஓடுனேன் ஆபீஸூக்கு. எவ்ளோ பெரிய ஸ்கூப். ஹாட் நியூஸூ.. (யப்பா.. வீரப்பன் நல்லவரா, கெட்டவனான்னு எல்லாம் பேச வரலப்பா நானு. யாரு செத்தாலும் நமக்கு நியூஸூ) போய் ஆபீஸூல என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு போனேன். போயி கேட்ல தூங்கிட்டு இருந்த செக்யூரிட்டிகிட்ட என்னய்யா மேட்டர்னு கேட்டா ஆமாங்க சார் ஒரே பரபரப்பா இருக்குன்னான்.

அவன் என்னா பரபரப்பப் பாத்தானோ தெரியல.. கேட்டு கிட்ட ஒரு ஈ, காக்கா வராது, உள்ளயும் சரி. வெளிய ரோட்லயும் சரி. ஒரு பய வரமாட்டான். கேட்டுக்கும் ஆபீஸூக்கும் ஐநூறு அடி தூரம் இருக்கும். அவன் கிட்ட டி.வி கி.வி எதும் கிடையாது. ஆனா பரபரப்பா இருக்குதாமாம் அவருக்கு. சரி போன்னு அவன்ட்ட சொல்லிட்டு உள்ள போனா ஆபீஸே பரபரன்னு இருக்கு, அங்கயும் இங்கயும் தவ்விட்டு இருந்தானுங்க பசங்க. என்னடான்னு கேட்டா " கார்த்தி, உனக்கு விஷயம் தெரியுமா? வீரப்பன சுட்டுக் கொன்னுட்டாங்க போலீஸ்" னாங்க. தெரியும்டா பையா, அதுக்கு நீங்க ஏன்டா இவ்ளோ பரபரப்பா இருக்கீங்க. என்ன நடந்தாலும் உனக்கு நியூஸூ.

எடிட்டோரியல் போனா எடிட்டர் புடிச்சிக்கிட்டாரு என்னைய.. டேய். உன்னைத்தான் காணோமேன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். நீயா வந்து மாட்டிகிட்ட. நீ வந்தது நல்லதாப்போச்சு. இவுங்களுக்கெல்லாம் போனப்போடச் சொல்லி பேசுன்னு முக்கியமான ஆளுங்க நம்பரயெல்லாம் குடுத்தாரு. அப்படியே பசங்களுக்கு காபி, டீ, ஸ்நாக்ஸ் வாங்கச்சொல்லி கொஞ்சம் ஆபீஸ் பாயை அனுப்பு, ________________ பேப்பர்காரங்கள்ட்ட பேசி ஒரு (பிரிண்டிங்) டோனர் வாங்கிக்குடு, புரூஃப்ல எவனும் டி.வி பாக்கப் போகாம பாத்துக்கோ.. ரிப்போர்ட்டர் பாலசுப்ரமணி எந்தக் கடையில விழுந்து கிடக்கான்னு பாத்து அவன இழுத்துட்டு வர ஆள் அனுப்பு.. ன்னு வரிசையா ஒரே ஆர்டர்.

யோவ் என்னாய்யா இதுன்னா.. (அவரும் நாமளும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தோம், எப்படின்னு கேக்குறீங்களா? அதெல்லாம் சொல்ல முடியாது, சீக்ரெட்) இதுக்குத்தாண்டா உன்னைய தேடிட்டிருந்தோம்னாரு அவுரு. எல்லாத்தையும் கலந்து கட்டி செய்ய அவருக்கு ஆள் வேணும். நமக்குதான் அங்க ஆல் இன் அழகுராஜான்னு பேராச்சே. எல்லாத்துலயும் கைய வப்பமே.. சரி செய்வோம்னு எல்லாத்துக்கும் ஆர்டர் போட ஆரம்பிச்சாச்சு. பிரிண்டிங்குக்கு வேற டைமாச்சு. கொஞ்சம் ஃபோர்மேன்கிட்ட சொல்லி மெஷின நிறுத்தி, ஆனா ரெடியா வைக்கச் சொல்லுன்னாரு.

பிரிண்டிங் பன்னண்டரை, ஒரு மணிக்குள்ள ஆரம்பிச்சாதான் எல்லா ரீஜனையும் கவர் பண்ண முடியும். ஆபே ஆட்டோ, லாரி, வேனெல்லாம் வரிசையா ரெடியா நிக்கும். எதாவது முக்கியமான நியூஸ் வர லேட்டாகும்னு தெரிஞ்சா பெண்டிங்குல இருக்குற வேற ஏதாவது நியூஸப் போட்டு சிட்டி அவுட்டருக்குப்போகுற அளவுக்கு மட்டும் பிரிண்டப் போட்டு முதல்ல அனுப்பிடணும். இதுல வேன், லாரி அனுப்ப முடியாத அளவுக்கு கெபாஸிட்டி இருக்குற ஊருக்கெல்லாம் கவர்மெண்டோ, பிரைவேட்டோ பஸ் கவர் போட்டு அனுப்பனும். சும்மா வெறும் நூறு, எறநூறு சர்குலேஷன் இருக்குற எடத்துக்கெல்லாம் அப்படித்தான் போகும்.

ஆனா மெஷினெல்லாம் நல்லா ஃபாரின் மெஷினு.. கடகடகடன்னு அடிச்சித்தள்ளும். மூணு ரீல் பேப்பரை மாட்டி கலர் கரெக்ஷன் பாத்து செட் பண்ணி விட்டுட்டு உக்காந்தா அதே ஆரம்பிக்கும் வேலய.. முதல் முப்பது நாப்பது பேப்பர் மட்டும் கலர் செட் ஆகாம வேஸ்டாப் போகும். பிரிண்டிங் செக் ஷ ன் பசங்க மெஷின் மேலயே நின்னுட்டு இருப்பானுங்க. கிட்டத்தட்ட ஒம்போது பேரு.. போர்மேன் கீழ நின்னுட்டு முதல்ல வர்ற பேப்பரை பாத்துட்டு கடகடன்னு கரெக்ஷன் சொல்லுவாரு. படபடன்னு அட்ஜஸ்ட் பண்ணுவானுங்க பசங்க.

(அப்பத்தான் ஒருத்தன் கைய உள்ள உட்டு ரெண்டு வெரல பலி கொடுப்பான். மெஷின நிறுத்தி கழுவி விட்டு, சரி பண்ணி, நடுப்பற அந்த கைப்புள்ளைய ஒரு டீம் (கவர்மெண்ட்) ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயி, களேபரமெல்லாம் முடிஞ்சு மறுபடியும் பிரிண்டிங் ஸ்டார்ட் ஆக முக்கா மணி நேரமாவும்) கலர் கரெக்ஷன் செட் ஆகறதுக்கு முந்தி வீரப்பன பாக்கணுமே. சூப்பரா இருக்கும், வீரப்பன் என்ன? விஜயகாந்தாவே இருந்தாலும், செவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சைன்னு கலர் கலரான மூஞ்சியோட இருப்பாங்க பிரிண்டுல...

அட... வீரப்பன் நியூஸூ என்னாச்சுங்கறீங்களா? வர்றேன், வர்றேன். இந்த மெஷின் களேபரத்தை எல்லாம் முடிச்சிட்டு அப்புறம் எடிட்டோரியலுக்குப் போகலாம் இருங்க. அங்க போனப்புறம் தான் ஃபுல் மேட்டரையும் சொன்னாங்க. வீரப்பனை ஒரு பெரிய ஆபரேஷன் நடத்தி ஒரு போலீஸ் டீமே சேர்ந்து என்கவுன்டர்ல சுட்டுப் பிடிச்சுட்டாங்களாம். தலையில குண்டு பாய்ஞ்சிருச்சாம். ஆனா ஒன்லி பாடி. அது ஒரு சின்ன ஊரு. அந்த ஊரு ஜி.ஹெச்சுல கொண்டாந்து போட்டிருக்காங்களாம் வீரப்பன் பாடிய.

நம்ம ஆளுங்க அந்த ஊருல நம்ம லோக்கல் ரிப்போர்ட்டர் எவன்னு பாத்து தேடி கண்டுபுடிச்சி (அப்போல்லாம் மொபைல் போனு அவ்வளவு பேமஸ் ஆகல, அது 2004ன்னு நெனைக்கிறேன். மெள்ள மெள்ள அப்பத்தான் பேமஸ் ஆகிட்டிருந்த காலம்) அந்த ரிப்போர்ட்டரை புடிச்சு, பயபுள்ள புதுசா கல்யாணமானவன் வேற. அப்பதான் பொண்டாட்டிய கட்டி புடிச்சிகிட்டு படுத்திருக்கான். அவன் நினைச்சு பாத்திருப்பானா நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும்னு? (யோவ்,,, கட்டிப்புடிக்கறத சொல்லலய்யா, வீரப்பன் மேட்டரை சொன்னேன்) மேட்டரை சொல்லி எழுப்பி அனுப்பி விட்டிருக்காங்க.

அங்க என்னடான்னா ஹிண்டு பேப்பர்ல இருந்தெல்லாம் தனியா காரு வச்சிகிட்டு லேப்டாப், நெட் கனெக் ஷனோட வந்து இறங்கிட்டாங்களாம். லேப்டாப்புன்னா என்னன்னே தெரியாது அப்ப எங்களுக்கு. அதெல்லாம் அதிசயம். நம்மாளு மட்டும் தான் நிராயுதபாணியா போய் நின்னது. இதுல என்னன்னா எங்க பேப்பருக்கான பிரிண்டிங் ரீஜன்லதான் அந்த சின்ன ஊரு வந்தது. ஸோ, தமிழ்நாடு புல்லா எங்க கனெக்ஷன்ல இருக்கற எல்லா எடிசனுக்கும் நாங்கதான் நியூஸூம் போட்டோவும் கலெக்ட் பண்ணி அனுப்பிச்சாகணும்.

அதனால நம்ம ரிப்போர்ட்டர் (ரிப்போர்ட்டர் ரிப்போர்ட்டர்னு சொல்றதப் பாத்துட்டு பெரிய லெவல்லல்லாம் யோசிக்காதீங்கப்பா, ஒரு நியூஸ் பேப்பர்ல லோக்கல் ரிப்போட்டருக்கெல்லாம் சம்பளமே கெடயாது. பேரு பெத்த பேரு. தாக நீலு லேதுதான். 500 ரூபா, 750 ரூபா மாசத்துக்கு, கன்வேயன்ஸ் மட்டும்தான். பேருதான் ரிப்போர்ட்டர், அப்பப்போ அவனுக்கு லோக்கல்ல கரண்ட் கட் டைமிங், கால்நடை மருத்துவ முகாம், கண்சிகிச்சை சிறப்பு முகாம், நாய்க் கண்காட்சின்னு வாரத்துக்கு ஒரு நாலு நியூஸ் வந்தாகணும். பாவம் அவனும் எதையாவது செய்யணுமில்ல) பய என்ன பண்றதுன்னு தெரியாம போய் முழிச்சிகிட்டு நிக்கிறான்.

நம்ம ஹெட் ஆபீஸ் போட்டோகிராபர் அப்பத்தான் கைல இருந்த ஒத்தை டிஜிட்டல் கேமராவைத் தூக்கிகிட்டு பஸ்ல கெளம்பியிருக்கார். அவரு ஊர் போய் சேர்றதுக்குள்ள விடிஞ்சிரும். மறுநாள் எடிஷனுக்குத்தான் அந்த போட்டோவை யூஸ் பண்ண முடியும். ஸோ.. என்ன ஆனாலும் நம்ம லோக்கல் ரிப்போர்ட்டர் அனுப்புற படத்தைத்தான் இன்னிக்கு நியூஸூக்கு யூஸ் பண்ணியாகணும். எப்படியும் காலைல நியூஸூ வந்தாகணும். அப்புறம் ஒரு வழியா அவன் போயி அங்க இருந்து பக்கத்து ஊருல இருந்த கேமராமேன் ஒருத்தனப்புடிச்சி கேமராவை வாங்கிட்டுப் போயி கூட்டத்துல தள்ளுமுள்ளுல உள்ள பூந்து வீரப்பன் பாடிய போட்டோ எடுத்து (அது பிலிம் கேமரா வேற, போட்டோ எடுத்து, ஸ்டுடியோவுக்கு வந்து, ஃபிலிமைக் கழுவி பிரிண்டப் போட்டு, ஸ்கேன் பண்ணி... இன்னும் எத்தன வேல இருக்கு) ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அங்க இருந்த ஸ்டுடியோ ஒண்ணுதான். அந்த ஸ்டுடியோக் காரனப் புடிச்சி அவன் வீட்டுக்குப் போயி (மக்களே கத நடக்கறது தவ்ளூண்டு குட்டி கிராமத்துல, ஞாபகத்துல இருக்கட்டும்) ஒரு வழியா பிரிண்டப் போட்டாச்சு. நியூஸையும் அனுப்பிச்சிட்டான் நம்மாளு, போன் மூலமாகவே.

ஒரு ரிப்போர்ட்டர் கைலருந்து நியூஸூம், போட்டோவும் எங்களுக்கு வந்து கடைசியில பிரிண்டிங் செக்ஷன் போற வரைக்கும் அது பல கை மாறும். நெட் பாக்குறவன், ஸ்கேன் பண்ணுறவன், கலர் அட்ஜஸ்ட் பண்றவன், பேஜ் பிலிம் எடுக்குறவன், மிக்ஸிங்க் என்ஜினியர், பேஜ் போடறவன், பிரிண்ட் போடறவன், புரூஃப் பாக்குறவன், எடிட்டோரியல் சப் எடிட்டர், பெரிய நியூஸா இருந்தா சீஃப் எடிட்டர் வரைக்கும் போவும். இதுல எங்கனா ஒரு எடத்துல லூஸ் விட்டா என்னாகும், யோசிங்க...

ஒருவழியா எல்லா பிரச்சினையையும் சால்வ் பண்ணி, போட்டோவை மறக்காம முதல் பக்கத்துல போட்டு, நியூஸையும் போட்டு, பேஜ் போட்டு, புரூஃப் பாத்து, பிலிம் போட்டு, பிரிண்டிங் அனுப்பி... அப்பாடான்னு உக்காந்தோம். கொஞ்ச நேரத்துல பிரிண்ட் ஆன பேப்பரையும் பாத்துட்டு, கொஞ்சம் லேட்டானாலும் திருப்தியா, சந்தோஷமா கெளம்புனோம். மூணு, மூணரை வரைக்கும் உக்காந்து வீரப்பன் கதை, வீணாப்போன கதையெல்லாம் பேசிட்டு ஜாலியா விடியக்காத்தால கெளம்பி ஊட்டுக்குப்போனோம்.

அந்த வாரத்துக்கே பர்னிங் இஷ்யூ வீரப்பன் டெத்து தான். அப்போல்லாம் 24 மணிநேர நியூஸ் சேனலும் கிடையாது. பேப்பர் நியூஸ்தான் மக்கள் பாத்தாகணும். இங்கதான் வருது கிளைமாக்ஸ். காலைல விடிஞ்சதும் பேப்பர்ல பாத்தா… டொய்ங்ங்ங்ங்ங.......... எல்லா பேப்பர்லயும் வீரப்பன் தலையில இடது பக்கம் குண்டு பாஞ்சிருந்தது. ஆனா, நம்ம பேப்பர்ல மட்டும் வலது பக்கத்துல. படத்தை ரிவர்ஸ்ல போட்டுத் தொலைச்சிருக்கானுங்க. எப்படிறா ஆச்சுன்னா.. ஸ்கேன் பண்ணின பயபுள்ள ரிவர்ஸ்ல போட்டானோ, இல்ல வேற ஏதாவது டிபார்ட்மெண்ட்காரன் மாத்தித் தொலைச்சானோ தெரியலை. ஆக மொத்தம் பேரு டேமேஜ் ஆயிடுச்சு.

மறுநாள் கலெக்டர் ஆபீஸூக்கு நியூஸ் கலெக்ட் போன எங்க ரிப்போர்ட்டருங்களைப்பாத்து எல்லாரும் வாயால மட்டும் சிரிக்கலை. அன்னைக்கு டாப் ஆஃப் தி டவுன் எங்க பேப்பர் மேட்டர்தான். (அதே போல பேஜூ புரூஃப் பாக்குறதுல, பேஜ் நம்பர் மாத்துறதுல என்னென்ன அட்டகாசம் நடக்கும் தெரியுமா? சண்டே சப்ளிமெண்ட் மொத்தம் 16 பக்கம். ஒருநாள் திடீர்னு 12 பக்கம் ஆக்கிட்டாங்க. ஒரு ரீல் பேப்பர்ல நாலு பக்கம் அடிக்க முடியும். கணக்கு 12, 16, 20ன்னு போவும். அதெல்லாம் தனியா ஒரு தபா சொல்றேன்)

க்ளைமாக்ஸ் என்னாச்சு தெரியுமா? மேட்டர் தெரிஞ்சவுடனே எங்க பாஸூ மெட்ராஸ்ல இருந்து காலைல டிரெயின்ல டிக்கெட்டப் போட்டு வந்துட்டாரு. வந்து எல்லாரையும் வரிசையா நிக்க வச்சு ரிவிட்டு.... பின்ன சாதாரண விஷயமா இது? பகல் ஷிஃப்ட்டு வேலைக்குப் போனவனுக்கெல்லாம் காதுல ரத்தம் வருது. எடிட்டர்ல ஆரம்பிச்சு சீஃப் ரிப்போர்ட்டர், புரூஃப் பாக்குறவன், ஆபீஸ் பாய், டீ குடுக்குறவன்னு கைல சிக்குனவனையெல்லாம் சகட்டு மேனிக்கு தல வெளாசிட்டு இருந்தாரு.

மேட்டர் நமக்கு மத்தியானமே தெரிஞ்சு போச்சு. ஒவ்வொருத்தனுக்கும் செம அர்ச்சனைன்னு... இவனுங்களுக்கே இப்படி விழுந்தா? நாங்கள்லாம் நைட் ஷிஃப்டுல்ல... அப்ப ஸ்டிரெயிட்டா தப்பு பண்ண எங்களுக்கு? ஐ.... போயி வாங்கிக் கட்டிக்கச் சொல்றீங்களா? நானு என்ன பண்ணேன், அழகா தங்கசாமி அண்ணணுக்கு போன் பண்ணி அண்ணே ஒரு ரெண்டு நாள்.....

ஆஸ் ஐயாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் ஐ யாம் நாட் ஏபிள் டு அட்டெண்ட் தி க்ளாஸ் ஃபார் டூ டேஸ். கைன்ட்லி கிவ் மீ லீவ் பார்.......

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்........

கைப்புள்ள……..

குதிச்சிரு.....

கருத்துக்குத்து, காது குத்து என எதுவாயிருந்தாலும் குத்துங்க.

2 கருத்துகள்:

  1. இப்படிக்கூட நடந்துதா என்ன? அது சரி, நீங்க எந்த பத்திரிகைல வேல பாத்தீங்க?

    பதிலளிநீக்கு
  2. இப்படி தான் நடக்குதா பத்திரிக்கை எல்லாம்..? quite interesting!

    பதிலளிநீக்கு