புதன், 1 ஜூலை, 2015

ஹெல்மெட் அட்ராசிடீஸ்


எப்போதும் போகும் சாலையில், அதே டிராஃபிக்கில் இன்றைக்கு பெரும் மாற்றம். சுற்றி இருந்தோர் அனைவர் தலையும் பளபளத்தது. ஒரு டி.எஸ்.எல்.ஆர் இருந்திருந்தால் (கூடவே புகைப்படக்கலையில் அரிச்சுவடியும் தெரிந்திருந்தால்) வளைத்து வளைத்து விகடன் அட்டைப்படத்தில் போடும் துல்லியத்தில் ஹெல்மெட் படங்களை எடுத்துத் தள்ளியிருக்கலாம்.


"சக்சஸ், வாங்கிட்டோமுல்ல" என வெற்றிக்களிப்பில் சின்னத்தம்பி படம் பார்க்கப்போன ரஜினியைப் போல சட்டை ஊறிப்போய் ஹெல்மெட் கடையிலிருந்து வெளிவந்தான் ஒருவன்.

கிரிக்கெட் விளையாடும்போது போட்டிருக்கும் ஹெல்மெட்டைப் போட்டுப்போனது ஒரு இளசு. உத்துப்பார்த்தால், இதுவும் ஹெல்மெட் தானேண்ணே என்றான் அவன். லாஜிக், ரைட்?

முழுக்கறுப்பு வண்டியில் மேட்ச் ஆகாத பளீர் சிவப்பில் ஹெல்மெட் போட்டுப் போனார் ஒருத்தர். சிக்னலில் நிறுத்தி "என்ன பாஸ்?" என்றால், "இது கிடைச்சதே பெருசுங்க" என்றார்.

ஒரு அப்பாவி குடும்பஸ்தர். இன்று பார்த்து குடும்பத்துடன் செல்ல வேண்டிய எதோ அவசியம் போலிருக்கிறது. மூன்று பேரும் ஹெல்மெட் போட்டு, (அந்த அம்மணிக்கு தலையில் நிற்கவே இல்லை) ஒவ்வொரு கியர் மாற்றும் போதும் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டே போனார்கள்.

ஹெல்மெட் போடாத (போலீஸூக்குப் பயப்படாத) ஒரு தைரியசாலி ஹெல்மெட் போட்ட மற்றவர்களை "பயந்தாங்கொள்ளிப்பசங்களா" என்று நக்கலாக பார்த்துக்கொண்டே போனார்.

பின்சீட்டில் அமர்ந்து ஒரு வயதுக்குழந்தையை மடியில் வைத்தபடி ஹெல்மெட்டுக்குள் இருந்தே "ஜூஜ்ஜூஜ்ஜூஜ்ஜூ" என்று கொஞ்சிக்கொண்டே போனார் ஒரு இளம் தாய். குழந்தையில் கண்களில் மிரட்சி. ஹெல்மெட் வைஸரைத் திறந்து உள்ளே கைவிட்டு அம்மாதானா? என்று மூக்கைத் தேடிக்கொண்டிருந்தது குழந்தை.

எக்ஸெல் சூப்பரில் வண்டிக்குப் பொருந்தாத ஒரு ஸ்டைலான ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டு 30 கி.மீ வேகத்தில் மெள்ள உருட்டிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார் ஒரு கிராமத்துக் கறை வேட்டி.

ஒரு பப் பழைய யமாகாவில் அதைவிடப் பழைய ஹெல்மெட்டைப் போட்டபடி போனார் ஒருவர். கொஞ்சம் (ரொம்பவும்) பழசு தான் போலும். வைஸர் இல்லை. உள்ளே பஞ்சு பிரிந்து தெரிந்தது. ரப்பர் பீடிங் (பழைய மாடல்) பிய்ந்து தொங்கியது.

இன்னோரு பழைய ஹெல்மெட் தாண்டிப்போனது. லேசாக வண்டியில் ஆடியபடியே போனார் அவர். கொஞ்ச தூரத்தில் ஓரம் நின்று ஹெல்மெட்டைக் கழற்றி உதறியதில் உள்ளிருந்து எகிறி ஓடியது ஒரு கரப்பு.

"பீம் பாய்", "பீம் பாய்" சைஸில் முழு வெயிட்டையும் பைக்கில் இறக்கி டயரில் அரை இன்ஞ் காற்று இறங்க பைக் ஓடுகிறதா, வழுக்கிக் கொண்டு போகிறதா எனும்படி போனார் ஒருத்தர். அவர் மண்டை சைஸூக்கு சத்தியமாய் இன்னும் ஹெல்மெட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காது. இருப்பினும் சட்டத்தை மதித்து ஒன்றை வாங்கி மாட்டியிருந்தார், அது அரை மண்டைக்குக் கூட போதவில்லை.
".எஸ். ஸ்டிக்கர் ஒட்டியிருந்தா போலியாம். பெயிண்ட்- பிரிண்ட் அடிச்சிருந்தா தான் ஒரிஜினலாம், அது இல்லையா" என்றபடி சாலையோர அம்பானி ஒருவரிடம் ஹெல்மெட்டை திருப்பித் திருப்பி பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு விவரம். "இதான் இருக்கு, வேணும்னா எடு, இல்லாட்டி வச்சுட்டுக் கௌம்பு" என சிம்பிள் சொல்யூஷன் தந்தான் அம்பானி.


பின்னாலிருந்தவனும் சின்சியராய் ஹெல்மட் போட்டபடி "ஏண்டா ஹரீஷ் ஹெல்மெட்டையும் தூக்கிட்டமே, அவன் தேடமாட்டான்?" என்றதற்கு "மூடிட்டு வாடா" என்றபடி பைக்கை முறுக்கினான் ஒரு பைக் ஓட்டி

2 கருத்துகள்:

  1. ஹா.ஹா ஹா...
    ஒரே சிரிப்பு பாஸ்... நல்ல கவனிச்சிருக்கீங்க...
    //எகிறி ஓடியது ஒரு கரப்பு//

    பதிலளிநீக்கு