புதன், 15 ஜூலை, 2015

கஸ்டமர் கன்வீனியன்ஸ்

பெரு (கி வரும்) நகரங்களில் ஒரு மாபெரும் பிரச்சினை பார்க்கிங். விலை மலிவு என்பதற்காக டவுனுக்குச் சென்று காய்கறியும், ஹோல்சேல் கடைகளில் மளிகை சாமான்களும், சேட்டுக் கடைகளில் சோப், ஷாம்பூ, டயப்பர் வகையறாவும் வாங்கலாம் என்று ப்ளான் செய்யும் (நான் உள்ளிட்ட) குடும்பஸ்தன்களின் பெருங் கவலை பார்க்கிங். அடுத்தது நிம்மதி. 
.
வண்டி நிறுத்த இடம் தேடுவது முதல் பிரச்சினை, கிடைத்தாலும் (கோவையில் இடது புறம் ஒரு வாரம், வலது புறம் ஒரு வாரம் என்ற குழப்பம் வேறு) சைடு ஸ்டாண்டா, நேர் ஸ்டாண்டா என்று பார்த்து அட்ஜஸ்ட் செய்து நிறுத்தி, ஹெல்மெட்டை லாக் போட்டு விட்டு, நிறுத்திய இடத்திலிருந்து கொஞ்ச தூரம் படு நெரிசலான, லாரிகள், கைவண்டிகள், குட்டி யானைகளின் இடையில் புகுந்து நடந்து போய் அடைசலான ஹோல்சேல் கடைகளில் சாமான் சொல்லி, வாங்கி, மீண்டும் அந்த நெரிசலில் நீந்தி பார்க்கிங் வந்து வண்டியை விடுவித்து, ஹெல்மெட்டை மண்டையில் மாட்டி, மளிகைப் பையை வண்டியில் சைடில் மாட்டி அது எவர் மேலும் இடிக்காமல் சைடு பார்த்தவாறே வண்டியோட்டி, அடுத்ததாக காய்கறி மார்க்கெட் பகுதிக்குப் போய், மீண்டும் பார்க்கிங் தேடி, ப்ளா, ப்ளா, ப்ளா முடித்து முதுகில் ஆபீஸ் பை, கையில் மளிகைப் பை என்று தூக்கி, மார்க்கெட்டுக்குள் ஒரு ஆள் நடக்கும் இட நெரிசலில் எதிரெதிர் இருவர் நடந்து, விலைகேட்டு அளவு சொல்லி, அதற்கொரு பை வைத்து வாங்கி, காய், கனி, கிழங்கு, ரெண்டுங்கெட்டான் (தக்காளி வகையறா), கீரை என வாங்கி அதற்கொரு பை போட்டு, நசுங்கி, பிசுங்கி வெளிவந்து, மீண்டும் பார்க்கிங். மீண்டும் A- வில் இருந்து துவங்கி சேட்டுக்கடை போய் அங்குள்ள சாமான்கள் வாங்கி இருபக்கமும் பைகள் தொங்க ஒவ்வொரு டிராஃபிக் சிக்னலிலும் தடுமாறி, சிக்னல்கள் கடந்து வீடு சேர, பத்து ரூபாய் காசை மிச்சம் பிடிக்கச் செய்யும் இந்த சர்க்கஸ் செய்கையில் மண்டை காய்ந்து போகும். எவ்வளவு டென்ஷன்?
.
இதற்குப் பதில் வீட்டருகில் உள்ள ஏதோ ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஏஸி காற்றில், குழந்தையை அமர வைத்து அழகாய் வண்டி தள்ளி வேடிக்கை பார்த்து, வேண்டியதை அள்ளிப்போட்டு ஒற்றை பில் போட்டு விட்டு "டோர் டெலிவரிண்ணே" என்று சொல்லி விட்டு காற்றாட வீடு வந்து சேர்ந்தால் அடுத்த கால் மணி நேரத்தில் குட்டியானை மூலம் ஒரு பெட்டியில் வந்து இறங்குகின்றன சாமான்கள்.
.
பார்க்கிங் டென்ஷனையும், டிராஃபிக்கில் தொலைத்த பெட்ரோலையும், அங்கே வீணாகும் நேரத்தையும் கணக்குப்போட்டு கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு பத்து ரூபாய் மட்டுமே வித்தியாசம் இருக்கும். ஆயிரம் ரூபாய்க்கு சாமான் வாங்குகையில் பத்து ரூபாய் என்பது 1 சதவீதமே. மிடில் கிளாஸாய் இருந்தாலும் "நிம்மதியாய் சாமான் வாங்கினோமே, சனியன் பத்து ரூபாய் போய்த் தொலையுது" என்று அழுது தொலைத்து விட்டு வரலாம் போலிருக்கும்.
.
பிஸினஸ் சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் விவாதிக்கப்படும் பாயிண்ட்களில் மிக முக்கிய பாயிண்ட் Customer Convenience. ஒரு கஸ்டமர் தன்னுடைய Convenience க்காக ஒரு விலை கொடுக்கத் தயாராயிருப்பார் என்பது ஒரு பாடம். இன்னும் பழைய காலம் போல கடையைத் திறந்து வைத்துக் கொண்டு வர்றவன் வரட்டும், அவனுக்குத் தான் விப்பேன், நானா போய் எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லும் வியாபாரிகளின் அழிவு வெகு வேகமாகவே நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக