வியாழன், 17 செப்டம்பர், 2009

பார்ட் டூ - மிலே சுரு மேரா துமாரா! தோ சூரு பனே ஹமாரா

முந்தைய கட்டுரையில் விடுபட்டுப் போன என்னுடைய சொந்த அனுபவங்களோடு, அக் கட்டுரையை படித்து கருத்து தெரிவித்த நண்பர்கள், உறவினர்களது அனுபவங்களையும் சேர்த்து இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

பார்ட் டூ - மிலே சுரு மேரா துமாரா! தோ சூரு பனே ஹமாரா
-எஸ்கா

ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!

ஐ யாம் பேக்...

மக்களே! இது தூர்தர்ஷன் கட்டுரையோட பார்ட் டூ.
முதல் கட்டுரைய படிக்காதவுங்க, படிக்க ஆசைப்படுறவங்க இந்த லிங்க்-க

http://youthful.vikatan.com/youth/yeskhastory20052009.asp

க்ளிக் பண்ணி படிச்சுக்கோங்க. திரும்ப வர்ற வரைக்கும் வெயிட் பண்றேன், ஓ.கே? ...... இப்போ போலாமா? உடு ஜூட்..

இப்போ மாதிரில்லாம் செட்டாப் பாக்ஸ், கேபிள் ஒயர்லாம் அப்ப ஏது? அப்போல்லாம் ஏரியல்தானே (ஆன்ட்டெனா)... மொட்ட மாடிலயோ, இல்ல ஓட்டு மேலயோ கொண்டு போய் கட்டியிருப்போம். அது மேலதான் காக்கா, குருவி, புறால்லாம் ஒக்காரும். (ஒக்காந்து ஆய் போவும்) தூக்கணாங்குருவி கூடு கட்டி வைக்கும். எப்பயாவது பலமா காத்தடிச்சா அவ்ளோதான், ஏரியல் பொஸிஷன் மாறிடும். உள்ளதும் போச்சி நொள்ளக்கண்ணா (இந்தக் கதை யாருக்குனா முழுசாத்தெரிஞ்சா சொல்லுங்கப்பா) டிவியில பிக்சரே வராது. கொர்ர்ர்.......ருன்னு ஒரே இரைச்சலா இருக்கும்.

அப்பா தான் அதை ஓட்டு மேல ஏறி நின்னுட்டு சரி பண்ணுவாரு. அம்மா கிச்சன்ல டிபனோ, சமையலோ ரெடி பண்ணிட்டு இருப்பாங்க, தங்கச்சி (தம்பி இருந்தா தம்பி) டிவிகிட்ட உக்காந்துக்குவா, நானு ரெண்டு பேருக்கும் நடுவுல, நடுத்தெருவுல. மீடியேட்டர் வேல, மீடியேட்டர். அவ என்கிட்ட சொல்ல, நான் எங்கப்பாகிட்ட கத்திகிட்டே சிக்னல் காமிக்க... அவுரு ஆன்டெனாவ அட்ஜஸ்ட் பண்ணுவாரு.. "இப்போ பிக்சர் கிளியரா வருதா? வரலையா? இப்ப, இப்ப, மெள்ள மெள்ள, ஆ லெஃப்டு, ஆ ரைட்டு, இன்னும் கொஞ்சம்"-னு ஒரே அலப்பறையா இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மில்லி மீட்டர், மில்லி மீட்டரா தான் திருப்பணும்.

காத்துக்கே இப்பிடி.. மழை கிழை வந்துச்சு, அவ்ளோதான், இடி ஃப்ரீ, ஊர்ல எங்கனா ஒரு எடத்துல ஒரு பெரிய இடி விழும், உடனே ஊர்ல இருக்குற எல்லா டிவியும் அவுட்டு, ஆனா இதை நாமளே சரி பண்ண முடியாது. டிவி ரிப்பேர்காரன்தான் வரணும், ஊருக்கே ஒருத்தன் தான் இருப்பான். எல்லார் வீட்லயும் டிவி அவுட்டாயிருக்குமா? அவன் ரொம்ப பிஸியாயிடுவான். எப்பயாவது நம்ம வீட்டுக்கு முதல்ல வந்தா, அது நம்ம அதிர்ஷடம். ஆனா வந்துட்டா அவன் கூடவே உக்காந்து டி.வி ரிப்பேர் வேலய கத்துக்குவோம். வேற வேல..? எங்கருந்து பிக்சர் வருது, எங்கருந்து சவுண்டு வருது, எந்த பார்ட் அவுட்டுன்னு போட்டு கொடஞ்சு எடுத்துடுவோம் அவன, அப்படி முக்கியமான மேட்டரே டையோடுல தான்-ன்னு கண்டுபுடிச்சோமுல்ல.

அதே மாதிரி எப்போ டிவிய ஆன் பண்ணிணாலும் பிக்சர் வரவே மூணு நிமிஷம் ஆகும், அப்படியே திகில் படம் மாதிரி குடும்பத்தோட உக்காந்து டிவியவே பாத்துட்டு இருப்போம். ஆஃப் பண்ணும் போதும் ரவுண்ட், ரவுண்ட்டா ஆகி டொய்ங்குன்னு ஒத்தப் புள்ளில போய் முடியும். அப்பல்லாம் இத்தன டிவி ஏது? சும்மா நாலஞ்சு மாடல்தான். ஓனிடா, டயனோரா, டெலிவிஸ்டா, சாலிடேய்ர்-னு. அதுலயும் பெரிசா மரப்பொட்டி வச்சு வரும். அதுக்கு ரெண்டு கதவு வேற. என்னமோ நூறு பவுன் நகைய வச்சிப் பூட்டுற மாதிரி டெய்லி நைட்டு தூங்கப் போகும் போது அத மூடி (சில வீடுங்கள்ல பூட்டெல்லாம் போட்டாங்க), ஒயரயெல்லாம் கழட்டி விட்டுட்டுதான் படுக்கணும்.

பொதுவா டிவி இருக்குற வீடுங்கள்ல கிரைண்டர் இருக்கும், அங்கதான் மத்த எல்லா வீட்டுக்காரங்களும் இட்லிக்கு மாவு அரைக்க குடுப்பாங்க. கிலோவுக்கு முப்பது பைசா, அம்பது பைசான்னு. மாவரைக்க நான் போறேன், நான் போறேன்னு எங்களுக்குள்ள ஒரே தகராறா இருக்கும். அப்பதான அங்க போய் டிவி பாக்கலாம். ஆனா அதே அரிசி மாவு மில்லுக்குன்னா போக முடியாது. அங்க போனா கார நெடி மூக்குல ஏறும், தும்மல் வரும், க்யூவுல நிக்கணும். மூணு நாளைக்கு மொளகா நெடி மூக்குலயே நிக்கும். அதுவுமில்லாம டிவியும் பாக்க முடியாது.

டிவில கேபிள் கரண்டு போச்சின்னா அவ்ளோதான். திரும்ப எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது. எந்திருச்சு ஒரே ஓட்டம் தெருவுக்கு. இதுக்காகவே அப்பாவோட சைக்கிள் எப்படா பஞ்சர் ஆகும்னு காத்திருப்போம், டயர் வெடிச்சுது... அவ்ளோதான். அதை எடுத்துகிட்டு போயி ரிவர்ஸ்ல திருப்பி ஓடைல மீன் புடிப்போம். தண்ணிக்கு குறுக்குல, கோணலா ஒரு மாதிரி பொஸிஷன்ல டயரை போட்டு வச்சு மீன் வரும் போது ஒரே இழுப்பு. தண்ணியோட மீன்களும் சேந்து கரையில வந்து விழும். அதுவும் ஓடைல சமயத்துல பாம்பெல்லாம் வரும், பச்சப்பாம்பு, தண்ணிப்பாம்பு, ஓலைப்பாம்பு. கிடைச்சா ஒரே போடு பாம்பு காலி, மறுநாள் ஸ்கூலுக்கு எடுத்துட்டுப்போயி பசங்கள்ட்ட காமிச்சு ஒரே ரணகளம்தான். (ஆனா பெரிய வாத்தியாருக்கு தெரிஞ்சுது, அவ்ளோதான், டவுசர கிழிச்சுடுவாரு)

கும்பகோணத்துல ரெட்டிராயர் குளம்னு ஒண்ணு இருக்கு. காவிரி ஆத்துல இருந்து குளத்தோட வடகரை வரைக்கும் ஒரு வாய்க்கால் வெட்டியிருப்பாங்க, தண்ணி விடுறதுக்கு. ரெண்டு சைடுல மட்டும் சிமெண்டு பூசி. அது கரெக்டா மாமா வீட்டுக்கு அண்டர்கிரவுண்டுல போகும். அதனாலதான் மாமா வீட்டுக்கு போறது. குளத்துக்கு குளம், டிவிக்கு டிவி, ஜாலிக்கு ஜாலி. ஹால்ல உக்காந்து எவ்ளோ நேரம் டி.வி பாத்தாலும் பாட்டம் குளிர்ச்சியா இருக்கும். மொக்க ப்ரோக்ராமா இருந்தாலும் பார்ப்போம். வெளிய எவ்வளவு வெயில் இருந்தாலும் சும்மா சிலு சிலுன்னு இருக்கும்.

வெடிச்ச சைக்கிள் டியூப்பை அப்பா பஞ்சர் போடறத்துக்கு முன்னாடியே தள்ளிட்டு போய் கத்திரிக்கோல் வச்சு வெட்டி பால் ரெடி பண்றது. ஒரு பேப்பர உருண்டையா சுத்திகிட்டு அதுமேல (அப்பாவோட) சைக்கிள் டியூப ரிங் ரிங்கா கட் பண்ணி போட்டு சுத்தி சுத்தி சுத்தி சுத்தி பெரிய பால் ஆக்குவோம். டயர் பால் ரெடிபண்ணி அதுலதான் விளையாடுவோம். எப்படிதான் போகுமோ தெரியாது, ஆனா பாலை அடிச்சா அது நேரா பறந்து போயி எதாவது ஒரு டிவி பெட்டியதான் உடைக்கும். கும்பலோட எஸ்கேப். ஓடத்தெம்பில்லாத ஏதோ ஒரு கைப்புள்ள தான் டிவி உடைஞ்ச வீட்டுக்காரங்ககிட்ட மாட்டுவான்.

அதே மாதிரி புது பால் வாங்க கடைக்குப்போனா தவ்ளூண்டு பால்தான் கிடைக்கும், பின்ன ஆளுக்கு பத்து பைசா போட்டு பன்னண்டு பேரு, ஒண்ணேகால் ரூவா சேத்து பால் வாங்கப்போனா? ஒரு நல்ல பால் விலை ரெண்டரை ரூபா இருக்கும். பெட் மேட்சுல்லாம் நடக்கும். அதுக்கு ரூல்ஸூ? அதான் தூர்தர்ஷன்ல போடுவாங்களே, அஞ்சு நாள் டெஸ்ட் மேட்சு. கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கபில்தேவ், க்ரிஷ்(ணமாச்சாரி காந்த்), ராமன் லம்பா (தலைல பாலால அடிவாங்கி செத்துப்போனாரே, அவருதான்) இவங்கெல்லாம் எங்களோட சூப்பர் ஹீரோஸ், அப்புறம் குட்டியா ஒரு சின்னப்பையனும் வந்தாரு, பேரு சச்சினாம். அந்த மேட்சுகளப்பாத்து புரிஞ்ச வரைக்கும் நோட்ல எழுதி வச்சு, எங்களுக்கும், கிரவுண்டுக்கும்(?) ஏத்த மாதிரி கொஞ்சம் வளைச்சு புது ரூல்ஸ் ஃபார்ம் பண்ணுவோம்.

ஆட்டமெல்லாம் அடங்கி மறுபடி டி.வி பாக்க உக்காந்தா நைட்டு வரைக்கும் டி.விதான். சனிக்கிழமை நைட்டு அலிஃப் லைலா பாக்கணும்னா தயிர்சாதம் சாப்பிட்டாதான் பாக்க விடுவேன்ங்கும் எங்க பாட்டி. இல்லாட்டி டிவிய ஆஃப் பண்ணிடும். ஆனா சன்டேன்னா, காலைல பிரச்சினையில்லாம சந்திரகாந்தா பாத்துக்கிட்டே ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சுடும். அடுத்ததா கேப்டன் வியோம். கேப்டன் வ்யோமும், ஸ்டார் டிரெக்கும் சரியான போட்டி. ஆக்சுவலி ரெண்டுமே ஸ்டுடியோக்குள்ள ஸ்பேஸ் ஷிப் செட் போட்டு எடுத்த நாடகம்தான், அது தெரியாத மாதிரி (அந்த காலத்து) கிராபிக்ஸ்-லாம் செஞ்சு விண்வெளியில நடக்குற மாதிரி காமிப்பாங்க. வாயப்பொளந்து கிட்டு பே-ன்னு டிவி பாப்போம்.

இதுல கண்டிப்பா தூர்தர்ஷன் லோகோவைப்பத்தி சொல்லியே ஆகணும். காலைல ஓபன் பண்ணும்போதே சூப்பரா ஒரு மியூஸிக்கோட டிடி லோகோ சுத்திகிட்டே வரும் (ஆக்சுவலி... அந்த மியூஸிக்க எழுத்துல கொண்டு வரவே முடியாது). பிசிரு பிசிரா ஆரம்பிச்சு அப்படியே சுத்திகிட்டே மெள்ள முன்னாடி வந்து அழகா செட் ஆகி "தூர்தர்ஷன்(ஹிந்தி லெட்டர்ஸ்ல)" அப்டின்னு நிக்கும்.

டைரக்டர் பாலச்சந்தருக்கு தூர்தர்ஷன்னா ரொம்பப்பிடிக்கும். அவரோட அழகன் படத்துல கூட "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா, என்னமோ மயக்கம்….." அப்டிங்குற பாட்டுல நைட் பூரா மம்மூட்டியும் பானுப்ரியாவும் போன்ல பேசிட்டே இருப்பாங்க. அப்போ மம்மூட்டி வீட்ல நைட்ல ஆரம்பிச்சு விடியற்காலைல தூர்தர்ஷன் லோகோ சுத்துற வரைக்கும் டிவி ஓடிட்டே இருக்கும். அதே போல வானமே எல்லை பட கிளைமாக்ஸூல டிடி நியூஸ் ரீடர் ராமகிருஷ்ணனை நடிக்க வச்சாரு. புதுப்புது அர்த்தங்கள் படத்துல அப்போதைய ஃபேமஸ் சாலிடேய்ர் டிவி மாடலா சைடு வில்லன் கிரிக்கெட் ப்ளேயர் வர்றா மாதிரி காமிச்சாரு. அதே படத்துல சாலிடேய்ர் டிவிக்கு அமலா போஸ்டரையும் காமிச்சாரு. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தூர்தர்ஷன் ஸ்லாட்லயே "ரயில் சினேகம்" னு ஒரு நாடகம் கூட எடுத்தாரு. கே.பி டச்சோட இருக்கும்.

ஒருநாள் த்ரீ டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் டிடியில போட்ட அன்னிக்கு என்னா ஆர்ப்பாட்டம்? டிவில படம் பாக்கவும் த்ரீ டி கண்ணாடி வாங்கியாகணும்னு எவனோ ஒரு அறிவுஜீவி கொளுத்திப்போட்டுட்டான். எங்க கண்ணாடி கிடைக்கும்? எங்க கண்ணாடி கிடைக்கும்னு அலைய ஆரம்பிச்சாச்சு. அப்பா விசாரிச்சுகிட்டு இருக்கும் போதே எனக்கொண்ணு, அம்மாக்கு ஒண்ணு, பப்பிக்கு ஒண்ணுன்னு லிஸ்ட் ரெடி பண்ணிட்டோம். சாந்தா அக்கா வேலை செஞ்ச கடையில சொல்லி வேற வச்சாச்சு. அப்பறமா கண்ணாடில்லாம் தேவையில்லைன்னு தெரிஞ்ச பிறகுதான் அப்பாக்கு ரிலாக்ஸாச்சு.

பகல் நேரத்துல வீட்ல லேடீஸ் எல்லாரும் பூ கட்டிகிட்டே டிவில நாடகம் பாப்பாங்க. ஸ்கூல்ல மத்தியான நேரம் வேதவல்லி டீச்சர், வீட்டுக்குப்போய் ஒரு பெரிய (நாட்டாமைல வர்றா மாதிரி ஒரு) சொம்புல தண்ணி வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க. ஸ்கூல்ல வர்ற கிணத்துத்தண்ணி பிடிக்காது அவுங்களுக்கு. கார்த்தி, வீட்டுக்குப்போய் தண்ணி எடுத்துட்டு வான்னுவாங்க. எங்க வீடு ரொம்பப்பக்கம். மூச்சைப் பிடிச்சிட்டு ஓடுனா முப்பதே செகண்டுல போயிடலாம். வீட்டுக்குப் போய் பாத்தா எல்லாரும் உக்காந்துகிட்டு "ஒரு பெண்ணின் கதை" பாத்துகிட்டிருப்பாங்க. தண்ணி கேட்டா கூட கிடைக்காது. நீயே போய் கழுவிட்டு எடுத்துக்கடான்னுடுவாங்க.

அதே மாதிரி "வடிவேலு வாத்தியார்" னு ஒரு தொடர் (அந்த வாத்தியார் நடிகர், பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருப்பாரு, பேரு....? திருடா திருடி படத்துல கூட ஹீரோயினுக்கு அப்பாவா வருவாரே) அது ஒரு நல்லாசிரியர் கதை. அந்த கதையை எங்க ஸ்கூல் வாத்தியாருங்களோட கம்பேர் பண்ணிக்குவோம். அப்பெல்லாம் கார்ப்பரேஷன் ஸ்கூல் / கவர்மெண்ட் ஸ்கூல் / பஞ்சாயத்து ஸ்கூல் தான. கதைகள்ல வர்ற மாதிரி, வாத்தியாருங்கல்லாம் நிஜமாவே ஏழைங்க. இப்போ மாதிரி சிக்ஸ்த் பே கமிஷன் (ஆறாவது ஊதியக் குழு)-லாம் போட்டு சேலரி வாங்கல. இப்போ நான் படிச்ச காலேஜ்ல ஒரு ப்ரொபஸருக்கு அஞ்சு டீக்கடை, மூணு சொந்த வீடு இருக்கு. இன்னொருத்தர் ரெண்டு ஜூஸ் கடை வச்சிருக்காரு, லட்சக்கணக்குல பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாரு (கும்பகோணம் இல்லீங்கோ).

செவ்வாய்க்கிழமை ஸ்டூடியோ செட்ல நடக்குற ஒரு மணி நேர நாடகத்துல நடிச்ச நடிகர் ஒருத்தர் விஜயோட துள்ளாத மனமும் துள்ளும் படத்துல டவுசர் பாண்டியா நடிச்சாரு. பொதிகைல அவரு வர்ற நாடகத்துல எல்லாம் பெரும்பாலும் அவர்தான் ஹீரோ. ஆனா பாவம், சினி பீல்டுல ஒரே படம்தான், ரெண்டாவது படம் ஷூட்டிங் போயிட்டு வரும்போதே ஆக்ஸிடெண்ட்ல போயிட்டாரு. எங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தமாப் போச்சு. பழைய நடிகர் ஒரு விரல் கிருஷ்ணாராவ் (அவரு "ப்ரியா" படத்துல ரஜினிக்கு அஸிஸ்டென்டா, சுஜாதாவோட வசந்த் வேஷத்துல நடிச்சிருக்காருப்பா) வேற்றுகிரக மனுஷனா நடிச்ச ஒரு நாடகம் வந்துட்டு இருந்தது. அந்த நாடகத்துல இருந்துதான் விளம்பர இடைவேளை விட ஆரம்பிச்சாங்க. அதுக்கு முன்னாடி எந்த நிகழ்ச்சிக்குமே விளம்பர இடைவேளை கிடையாது.

நமக்கு வெள்ளிக்கிழமை ஒளியும், ஒலியும் மாதிரி மாநில மொழிப்பாடல்களுக்கு (அதாவது தென்மாநில மொழிகள் எல்லாத்துலயும்) சித்ரமாலான்னு ஒரு ப்ரோக்ராம் வியாழக்கிழமை அன்னிக்கு. இப்போ எஸ்.எஸ் மியூஸிக் பண்ணிட்டு இருக்குற வேலையை அப்பவே தூர்தர்ஷன் பண்ணிடுச்சு. கலாசாரக் கோவை மாதிரி நிகழ்ச்சி அது. அதப்பாத்துதான் மத்த மொழி நடிகர்களோட பேர்லாம் தெரிஞ்சுக்குவோம். டவுட்டு வந்தா ராஜேந்திரன் மாமா கிட்ட கேட்டா கரெக்டா சொல்லிடுவாரு, என்ன படம், யாரு டைரக்டர்? மியூஸிக் யாரு? நடிகர், நடிகை பேரு என்னன்னு... ஹிண்டு படிப்பாருல்ல...

அதே மாதிரி.......

கார்த்திக்....

கார்த்திக்....

எஸ் ஸார்...

யப்பா.. பாஸ் கூப்புட்றாரு, போயிட்டு வந்துர்றேன்.

வந்து மிச்ச கதையெல்லாம் பேசுவோம்... என்ன?

1 கருத்து:

  1. இரண்டு கட்டுரைகளும் அருமை தல.. மலரும் நினைவுகள்.. என்னுடைய 50-வது பதிவுக்கு பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி..
    http://sivakaasikaaran.blogspot.com/2009/06/22-5.html
    என்னுடைய இந்தப்பதிவை படித்துப்பாருங்கள்.. கிட்டத்தட்ட உங்கள் concept, ஆனால் ஒரு சிறுகதை போல் எழுத முயற்சிசெய்தேன்..

    பதிலளிநீக்கு