சனி, 5 ஜூன், 2010

கல்லா கட்டும் இடியட் பாக்ஸூகளும் இன்னுமோர் புது வரவும்

இடியட் பாக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக முன்னுரையில் ஒரு சிறு முன் குறிப்பு. இடியட் பாக்ஸ் என்றால் வேறொன்றும் இல்லை, நமது தொல்லைக்காட்சிப் பெட்டிதான். பெட்டி முன்னால் உட்கார்ந்து எதையாவது கொறித்தபடி வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மை விடாமல் முட்டாளடிக்கிறார்கள் அல்லவா? அதுதான் அந்தப் பெயர். தமிழ் இலக்கணப்படி சொன்னால் காரணப் பெயர் அது. சரி. சரி. விஷயத்திற்கு வருகிறேன். அதாகப் பட்டது மக்களே......


தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்பமளிக்க.. இருக்கும் டி.விக்கள் போதாதென்று இன்னுமோர் டி.வி உதயம். இந்த முறை களத்தில் இறங்கி கலக்கவிருப்பது நம்ம கேப்டன். அட.. கேப்டன் தோனி இல்லீங்கோ. அவருக்கு எதுக்கு இந்த வேலை? இது நம்ம ஊரு கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த். இந்த அதிரடித் திட்டத்தோடு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி (தமிழ்ப்புத்தாண்டு?) அன்று களம் இறங்குவதாய் அறிவித்திருக்கிறார் அவர்.

இன்னோரு டி.வியா? இருக்கறதப் பாக்கவே நேரம் பத்தலை என சலித்துக் கொள்ளும் மக்களே... வருத்தப் படாதீர்கள். இதையெல்லாம் தவிர்க்க முடியாது. இதனால் யாருக்கு இலாபம் என்கிறீர்களா? சந்தேகமே இல்லை, அவர்களுக்குத் தான். நிகழ்ச்சிகளுக்கென ரெடிமேடாக ஒரு நல்ல ரெஸிபி வைத்திருக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை சில பல சீரியல்கள். வாரம் இரண்டு புதுப்படங்கள். விடாமல் தினமும் புதுப்பாடல்கள், தினசரி இரண்டு முறை நியூஸ், கட்சி சார்பாக இருந்தால் நாலைந்து கட்சி நிகழ்ச்சிகள், பத்து மணிக்கு மேல் பலான டாக்டர்கள், விறுவிறு சுறுசுறுவென்று ஏதாவது ஹாட் டாபிக் விவாதங்கள், அவ்ளோதான் பேக்கேஜ் தயார். பைசா வசூல். நல்ல காசு.

எல்லாரும் இதே பேக்கேஜை வைத்துக்கொண்டு லோகோவையும், பெயரையும் மட்டும் மாற்றி மாற்றிப் போட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அழகாக கல்லா கட்டுகிறார்கள் அவர்கள். கம்பேனி ரகசியம் புரியாமல் ஆ-வென்று வாய் பிளந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் தமிழன்.

அது சரி, என்னதான் செய்வான் அவனும்? செய்வதற்கு வேலை இருக்கிறதோ இல்லையோ? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, உடுத்திக்கொள்ள இலவசமாய் வேட்டி, சேலை, மலிவு விலையில் மளிகை சாமான், தெரு முக்குகளிலேயே டாஸ்மாக், வருடத்திற்கொரு முறை தலைவர்கள் கையால் சீர், செனத்தியுடன் திருமணம், பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை, உடம்பு சரியில்லையா? இந்தா "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கு மருத்துவக் காப்பீடு", குழந்தைகளுக்கு பள்ளியில் சத்துணவு, எல்லாம் போக மீதி எதையும் யோசிக்காமல் பொழுதைப் போக்க வண்ணத் தொலைக்காட்சிப் பொட்டி என்று சகலமும் இலவசமாய் கிடைக்கிறது. வேறென்ன தான் செய்வது? உட்கார்ந்து காலாட்டிக்கொண்டே மானாட மயிலாட பார்க்க வேண்டியது தான்.

இதே யூத்ஃபுல் விகடனில் என்னுடைய "மிலே சுரு மேரா துமாரா" (தூர்தர்ஷன் பார்த்த அனுபவங்கள்) கட்டுரையை கொஞ்சம் நினைவுபடுத்திப்பாருங்க மக்களே. பொழுது போக்க தோப்பு, துரவுக்கும், நாலு கிலோ மீட்டர் தள்ளியிருந்த பார்க்குக்கும், பதினோரு மணி மலையாளப் படத்திற்கு தலையில் துண்டைப் போட்டு போன காலம் போய், வீட்டிலேயே பொழுது போக்க ஏதாவது (ஒரு டி.வி?) இல்லையா என்று அமெரிக்காவை பார்த்து ஏங்கிய காலம் ஒன்று இருந்தது. இப்போது அந்த ஏக்கமெல்லாம் காணாமல் போய் அடப்போங்கடா... எதைத்திருப்பினாலும் ஒரே மாதிரி இருக்கே என்று அலுத்துக்கொள்ள வைக்கும் அளவு டி.விக்களையும் அதில் ஒரே மாதிரி நிகழ்ச்சிகளையும் அளித்து அசர வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மை.

என்ன ஒன்று.. அவர்களுக்குள் போட்டி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். எப்படியாவது் காசு சம்பாதித்து விட வேண்டும் என்று பார்க்கிறார்கள். மற்ற டி.விக்களை காப்பியடித்தாவது நிகழ்ச்சிகள் செய்து ரசிகனைத் தக்க வைக்கும் முயற்சிகள் செய்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகளே. உண்மையில் முட்டாளாவது ரசிகன் தான்.

ஏற்கனவே பல வருடங்களாய் பழம் தின்று கொட்டை போட்டு மரம் வளர்த்து வைத்திருக்கும் பிரபல டி.விக்கள், மொழி புரியாவிட்டாலும் ரசிக்க வைக்கும் ஸ்டார் மூவீஸ், எச்.பி.ஓ வகையறாக்கள், கிரிக்கெட்டை மட்டுமே போட்டுத் தள்ளி பணம் பார்க்கும் சோனி பிக்ஸ், நியோ கிரிக்கெட் போன்றவை, தமிழில் தனி சேனலே ஆரம்பித்து நடத்தும் ஸ்டார் (விஜய்), ஜீ (தமிழ்) நிறுவனங்கள், தன் ஆங்கில நிகழ்ச்சிகளை அப்படியே டப்பிங் செய்து காண்பிக்கும் டிஸ்கவரி தமிழ், புடவைக்கடை தள்ளுபடி முதல் புத்தக வெளியீடு வரை லோக்கல் ஸ்பெஷலாய் நிகழ்ச்சிகளை அடித்துத் துவைக்கும் லோக்கல் டி.விக்கள், எக்ஸ்ட்ரா காசு கொடுத்தால் நமக்கு மட்டும் புதுப்படம் போட்டு விடும் டி.டி.எச்-சுகள்... என்று பலமான போட்டி இருக்கிறது அவர்களுக்குள்.

இது போக, பாலியல் கல்வியையும், கேள்வி பதில்களையும் நடுநிசியில் ரகசியமாய் தந்து வந்த செக்ஸாலஜிஸ்டுகளுக்கும், ரோட்டுக்கடை ரேஞ்சிலான கசமுசா செக்ஸ் டாக்டர்களுக்கும் போட்டியாக வீட்டு வரவேற்பறையில் 24 மணி நேர நித்யானந்தா, கல்கி வகையறா வீடியோக்கள் வேறு. (அடிங்கடா... அடிங்க... ரத்த விளாறா அடிங்க)

இவற்றையெல்லாம் மீறி ஒரு புதிய சேனல் நம் மக்களின் கவனம் கலைத்து தன் பக்கம் இழுப்பதென்பது ரொம்பக் கஷ்டம். இப்போது ஆளாளுக்கு ப்ளாக் வைத்திருப்பது மாதிரி... நானும் டி.வி வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளலாம்.

ஆனால், எந்த ஒரு நிறுவனமும், அரசியல் கட்சியும் தன் சார்பாக டி.வி ஆரம்பிக்கும் போது ஆரம்பத்தில் ரசிக்கும் மக்கள் போகப்போக சலித்துப்போய் போடா என்று சொல்லத் துவங்கி விடுகிறார்கள். ரிமோட்டைக் கையோடு வைத்துக் கொண்டு டார்ஜான் ரேஞ்சுக்கு தாவு தாவென்று தாவுகிறார்கள், என்ன மரத்துக்குப் பதில் டி.வி சேனல், அவ்வளவு தான்.

நாமும் அதே மாதிரி செய்வோம். மற்றபடி நமக்கென்ன கஷ்டம் என்கிறீர்களா? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். எது எப்படிப் போனாலும் கடைசியில் விடிவது சாமானியர்களின் தலையில் தானே. சேனல்களின் எண்ணிக்கை பெருகப் பெருக இப்போது நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கைக் கணித்துத் தரும் டி.ஆர்.பி வகையறாக்கள் எல்லாம் நாளாக நாளாக புளித்துப் போன மாவு கதையாகி விடும். ஆளாளுக்கு அடித்துக்கொண்டு அதைக் காலாவதியாக்கி விடுவார்கள். சாதாரண பாமரன் எந்த சேனலைப்பார்க்கிறான் என்று தெரியாமல் எல்லா சேனல்களிலும் விளம்பரம் தரும் பெரு நிறுவனங்கள் தன் பொருட்களின் விலையை மெள்ள மெள்ள உயர்த்தத் துவங்கும். விளம்பரச் செலவை எப்படி எடுப்பது? ஏற்கனவே (கொஞ்சம் நல்ல) அரிசியின் விலை மட்டுமே கிலோ 35ஐ தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.... மற்ற பொருட்கள்? இப்படி விளம்பரக்காசையெல்லாம் விலையில் சேர்த்தால்?? பிம்பிளிக்கி பிளேப்பி தான்...

இன்னோரு மேட்டர் தெரியுமா உங்களுக்கு? இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் புதிதாய் இரண்டு டீம்கள் உருவாக்கப் பட்டு அவை தலா 1700 கோடிக்கும் 1500 கோடிக்கும் விலை போயிருக்கின்றனவாம். இதனால் எனக்கென்ன என்கிறீர்களா? அந்தக் காசையெல்லாம் எங்கேயிருந்து எடுப்பார்கள் அய்யா? எல்லாம் டி.வி பார்த்துக் கொண்டிருக்கும், உங்கள் பாக்கெட்டிலும் என் பாக்கெட்டிலும் இருந்து தான்.

கைதட்டி, விசிலடித்து நீங்கள் வளர்த்து விட்ட சினிமா ஹீரோவும், தன் நாலைந்து வருட வெளிச்ச வாழ்க்கைக்குள் செட்டிலாகத் துடிக்கும் நடிகைகளும், எப்படியாவது மீடியாக்கள் மூலம் புகழடைந்து விடும் வி.ஐ.பிக்களும், இந்த லிஸ்டில் புதிதாய் சேர்ந்திருக்கும் விளையாட்டு வீரர்களும், பிரபல கம்பெனிகளுக்கு பிராண்ட் அம்பாஸிடர்களாகி கோடிகளில் வாங்கி செட்டிலாகிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எதைத்தொட்டாலும் காசு தான்.. வந்து விட்டுப் போவதெல்லாம் சும்மா இல்லை. பில் போடுவார்கள். நடித்தால் ஒரு ரேட்டு, ரிப்பன் வெட்டினால் ஒரு ரேட்டு, சும்மா வந்து போனாலே ஒரு ரேட்டு. அந்தக் காசெல்லாம் பொருட்களின் விலையில் தானே சேரும்? ஒற்றை ரூபாய் மதிப்புள்ள சாயத் தண்ணீரை ஒன்பது ரூபாய் கொடுத்துக் குடித்துக்கொண்டிருக்கிறோமே....போதாது இந்த ஒற்றை உதாரணம்?


கோக்கும், ரெட் புல்லும் குடித்துக்கொண்டே பாப் கார்ன் கொறித்தபடி 250 ரூபாய் டிக்கெட்டில் சினிமாவும், 5000 ரூபாய் டிக்கெட்டில் கிரிக்கெட்டும் பார்க்கும் மேட்டுக்குடி வர்க்கம் இதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. எங்கு எது நடந்தாலும் அடிவாங்கி பொட்டியைத் தூக்கிக் கொண்டு திரியப் போவது சாதாரணன்தான்.

இவற்றால் ஏதோ ஒரு விதத்தில் மட்டும் மக்களுக்கு ஒரு சிறிய நன்மை இருப்பது போலத்தான் தெரிகிறது. என்ன அது? தனக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பார்க்க ரசிகனைத் தேடி வீடு தேடி வந்து வாய்ப்புகளைத் தருகின்றன இவை. ஆனால் முடியுமா? போதை மருந்து என்றான பிறகு அதிலிருந்து வெளியேறுவது சாமானியமா என்ன? கொஞ்சம் கஷ்டம் தான்.

ஆனால், இதெல்லாம் போகட்டும். கொஞ்சம் டி.வியை அணைத்து விட்டு வெளியே வந்து சுற்றிலும் கவனியுங்கள். படிக்கிற பிள்ளைகள் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பரீட்சை ரிசல்ட்டன்று ஸ்டேட் ஃபர்ஸ்டு நியூஸ் பேப்பரும், கையில் விசா பேப்பரோடு வருபவர்களால் அமெரிக்கன் எம்பஸி வாசலும், டி.என்.பி.எஸ்.சி எழுதக் குவியும் மாணவர்களால் கன்னிமாரா, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரிகளும் இன்னும் நிரம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. ராணுவம் சேரும், அமெரிக்கா பறக்கும், பேடண்ட் வாங்குமளவு பொருள் கண்டுபிடித்து அவார்டு வாங்கும் புதிய தலைமுறை எதையேனும் மீண்டும் மீண்டும் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

என்ன செய்யலாம்? இடியட் பாக்ஸை வைத்துக் கொண்டு? யோசியுங்கள். எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

2 கருத்துகள்: