சனி, 12 ஜூன், 2010

மியூச்சுவல் பண்டுகளும் ஃபண்ட் மேனேஜர்களும்.

- எஸ்கா

பணமின்றி அமையாது உலகு. எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். ஆனால் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?. இல்லையே. கஷ்டப்பட்டு உழைத்துத்தானே சம்பாதிக்க வேண்டும். சரி.. உழைத்து உழைத்து சம்பாதித்து பெட்டியில் போட்டு வைத்தால் என்னதான் ஆகும்? நாளாக நாளாக உளுத்துத்தான் போகும். அதை வங்கியில் போட்டு சேமித்து வைத்தால்? பத்திரமாக இருக்கும் தான். ஆனால் வட்டியே கிடைத்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விலைவாசியில் அதன் மதிப்பு அரோகரா தான். அப்போது என்ன செய்யலாம்? எப்படி அதை வளர்க்கலாம்? அல்லது குறைந்த பட்சம் மதிப்பு குறையாமல் பாதுகாக்கலாம்? அதற்கு அந்தப் பணத்தை முதலீடு செய்வது தான் ஒரே வழி. அதை நாமே செய்யலாமா? செய்யலாமே.

நம்மிடம் காசு கொடுத்தால் எங்கெல்லாம் முதலீடு செய்வோம்? வங்கி? போஸ்ட் ஆபீஸ்? தங்கம்? நிலம்? பத்திரங்கள்? வண்டி வாகனம் (நியாமமாகப் பார்த்தால் இது முதலீடே அல்ல), இதையெல்லாம் மீறிய ஒன்றுதான் பங்குகள் (ஷேர் மார்க்கெட்). அதிலும் ரிஸ்க் அதிகம் ஆயிற்றே, என்ன செய்ய? ரிஸ்க் அதிகம் தான், ரிட்டனும் (திரும்பக் கிடைப்பது) அதிகமாயிற்றே. அப்போ அதிலே முதலீடு செய்யலாமா? செய்யலாம். நாமே செய்யலாம். தரகர்கள், தரகு நிறுவனங்கள் உதவியுடன்...

இல்லை.. எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி கொஞ்சம் தான் தெரியும், முதலீடு செய்யவும் ஆசைதான். ஆனால் பயமாக இருக்கிறது, நேரமும் இல்லை. நான் என் தொழிலை, என் வேலையைத் தான் பார்க்க முடியும், ஷேர் மார்க்கெட்டைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் என் வேலை கெட்டுப் போய்விடும், எனக்கு உதவி செய்ய யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்கிறீர்களா? உஙகளைப் போன்றவர்களுக்குத் தான் மியூச்சுவல் பண்டுகள் இருக்கின்றன.

மியூச்சுவல் பண்டுகள் என்பவர்கள் நம்மைப்போல பலரிடம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டி ஒன்றாகக் குமித்து நூறு கோடி, இரு நூறு கோடி என்று சேர்த்து பிரபலமான அல்லது வளரும் வாய்ப்புகள் கொண்ட பங்குகளில் முதலீடு செய்வார்கள். செய்து விட்டு சரியான நேரம் வரும் வரை காத்திருந்து விற்று காசாக்குவார்கள். (ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை முதலீடு செய்து விட்டு, தன் ஆள் ஒருவரை அந்தக் கம்பெனியில் உள்ளே நுழைத்து வேலைக்கு அனுப்பி வேவு பார்க்கும் ஃபண்டுகள் எல்லாம் உண்டு)

நம்மைப்போலவே மியூச்சுவல் பண்டுகளும் ஷேர் மார்க்கெட்டில் தான் முதலீடு செய்கின்றன. நாம் முதலீடு செய்தாலும் அவர்கள் செய்தாலும் வரும் பிரச்சினையும், பலனும் கிட்டத் தட்ட ஒன்றுதான். ரிஸ்க்கும் உண்டுதான். ஆனால் அவர்கள் அனுபவமிக்க ஆட்களை வைத்துச் செய்வதால் ரிஸ்க்கை குறைப்பார்கள் அல்லது குறைக்க முயற்சி செய்வார்கள். ஷேர் மார்க்கெட் மற்றும் நிறுவனங்கள் பற்றி செய்தித்தாள்கள், டி.வி, இன்டர்நெட் மூலம் நமக்கு வரும் செய்திகள் எல்லாம் முக்கியமான சோர்ஸ்கள் மூலம் அவர்களுக்கு முன்னமேயே தெரிந்து விடும். மேலும் தான் நிர்வகிக்கும் பண்டுகளை உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்காக, கண்கொத்தி எடுக்கும் பாம்பாக கவனித்த படியே இருப்பது தான் அவர்களது வேலை. நமக்கு ஆயிரத்தெட்டு வேலை. அவர்களுக்கு இதுதானே வேலை?

நாமாக ஷேர் வாங்கினால் எவ்வளவு ரூபாய்க்கு வாங்க முடியும்? நம்மிடம் இருக்கும் காசுக்கு கொஞ்சமாகத்தான் வாங்க முடியும். அதிலும் எவ்வளவு பெரிய நிறுவன ஷேர்களை வாங்க முடியும்? ரொம்பக்கஷடம். மேலும், ஒரு வேளை நாம் வாங்கிய ஷேர்களின் விலைகள் விழுந்து விட்டால்? போச்சா? ஆனால் மியூச்சுவல் பண்டுகள்? அவர்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்வதால் (அதில் நம் பணமும் இருக்கும்) அனைத்து பிரபல நிறுவனப் பங்குகளிலும் பரவலாக முதலிடுவார்கள். நாம் போட்ட சொற்ப பணத்தில் எல்லா பெரிய நிறுவனப் பங்குகளின் துளித்துளி பங்கு இருக்கும்.

மாமரத்தை அதோ பாரு மாமரம் என்று காண்பித்தால் எப்படி இருக்கும்? அல்லது மாம்பழத்தை பறித்துக் கையில் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதையும் தோலுரித்துக் கொடுத்தால்? அதையும் வெட்டி துண்டு போட்டுக் கொடுத்தால்? அதையும் ஜூஸாக்கி ஊற்றிக் கொடுத்தால்? அதையும் எடுத்துச் செல்ல வசதியாக பாட்டிலில் போட்டுக் கொடுத்தால்? இன்னும் கொஞ்சம் ருசிக்காக கொஞ்சம் ஜில்லென்று ஐஸ் போட்டுக் கொடுத்தால்?? அருமையாக இருக்கும் அல்லவா?

மாம்பழ ஜூஸைப் போல இன்றைக்கிருக்கும் சூழ்நிலையில் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் விதம் மிகவும் சுலபமாகிக் கொண்டே வருகின்றது. ஒரேயடியாக ஐயாயிரம் ரூபாய் முதலீடு என்றிருந்ததை மாற்றி மாதா மாதம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என மாற்றி அதிலும் ஆயிரம் ரூபாய் கூட போட்டால் போதும் என்றாக்கி பிறகு ஐநூறு என இறங்கி இன்று ரிலையன்ஸ் புரோக்கிங் நிறுவனம் போன்றவர்கள் மாதம் நூறு ரூபாய்க்குக் கூட மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் வழியைக் காண்பிக்கிறார்கள். மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு எஸ.ஐ.பி (சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறான மியூச்சுவல் ஃபண்டுகள் தனக்கான மேனேஜர்களை தேடிக்கண்டுபிடித்து நியமிக்கும். அவற்றிற்கான டிமாண்ட் அதிகம். அமெரிக்காவிலெல்லாம் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீட்டு ஆலோசகர் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார்கள். தனிமனிதனாக இருக்கும் ஒருவரது விருப்பப் பங்குகளின் லிஸ்டை போர்ட்ஃபோலியோ என்பார்கள். அதே போல ஒரு மியூச்சுவல் ஃபண்டுக்கும் போர்ட்ஃபோலியோ உண்டு.

அந்த போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பவர் தான் ஃபண்ட் மேனேஜர். அவரது தலைமையில் ஒரு பெரிய நிபுணர் குழுவே இயங்கும். அக்குழுவில் அனலிஸ்டுகள் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் பங்குகளையும், பங்குச் சந்தையையும், அதன் போக்கினையும் ஆராய்ச்சி செய்து அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால் கடைசியாக ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் பண்டின் முதலீட்டு முடிவுகளை எடுப்பவர் அந்த மியூச்சுவல் பண்டின் மேனேஜரே ஆவார். மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமின்றி பென்ஷன் பண்டுகள், டிரஸ்ட் (அறக்கட்டளை) பண்டுகள், ஹெட்ஜ் பண்டுகள் போன்றவையும் இதே லிஸ்டில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேனேஜர்கள் உண்டு.

இன்றைக்கு செய்தித்தாள்கள் மூலம் மியூச்சுவல் பண்ட் மேனேஜர்கள் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் பற்றி துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதே மாதிரி நாமும் முதலீடு செய்யலாம் (ஆனால் அதே விகிதாசாரம், அதே நேரம், அதே பங்குகள், அதே காலகட்டம் போன்றவற்றை பின்தொடர்வது கடினம்). மேலும் மணிகன்ட்ரோல்.காம் உட்பட இன்றைக்கு பல்வேறு வெப்சைட்டுகள் ஃபண்ட் மேனேஜர்களின் விருப்பப் பங்குகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகின்றன.

பண்ட் மேனேஜர் என்ற பெயரில் ஷேர்களையும், ஃபண்டுகளையும் தானாகவே நிர்வகிக்கும் சாப்ட்வேர்கள் எல்லாம் கிடைக்கின்றன என்றால் அதன் வெற்றியை பார்த்துக்கொள்ளுங்களேன்.

பங்கு வர்த்தகத் துறையில் பல வருடங்கள் அனுபவமிக்கவர்கள் மட்டுமே இந்தத்துறையில் கோலோச்ச (ஆட்சி செய்ய) முடியும். அதாவது பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று சிம்பிளாகச் சொல்வோமே அப்படி. பொருளாதாரத்துறையில் உயர்ந்த பட்ச கல்வித்தகுதியும் அவர்களுக்கு அவசியம். அப்படிப்பட்ட பண்ட் மேனேஜரை வைத்தே சில குறிப்பிட்ட பண்டுகள் நல்ல பெயர் வாங்குவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட பண்டின் தரத்தை, அதன் குவாலிட்டியை அலசும் போது அதன் மேனேஜரும், அவரது அனுபவம் மற்றும் திறமையும் மிக முக்கியமான காரணிகளாக இருக்கும்.

ஷேர் மார்க்கெட்டில் நேரடி முதலீட்டைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் செல்லுவது மியூச்சுவல் ஃபண்டிடமே. சில ஆயிரம் ரூபாய் புரளும் சாதாரண கடையின் கல்லாவிலேயே ஒரு நம்பிக்கையான, திறமையான ஆள் உட்கார வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது... பல நூறு கோடிகளைத் தாண்டி நிற்கும் சொத்து மதிப்புள்ள பண்டுகளை நிர்வகிப்பவர்கள் சிறந்த அனுபவம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு தானே. வெற்றிகரமான ஃபண்ட் மேனேஜர்களின் விலை அதிகம். போட்டியாளர்கள் அவரை அதிக சம்பளம் கொடுத்து கவர்ந்து செல்ல முயற்சித்த படியே இருப்பார்கள்.

பண்ட் மேனேஜர்களாக இல்லாவிடினும், உலகம் முழுவதிலுமுள்ள பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று வாரன் பஃபெட்டும், ஜார்ஜ் சோரஸூம் மிக முக்கியமான பங்கு நிர்வாகிகளாக மதிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப் பட்ட ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவும் இந்த லிஸ்டில் உண்டு. இவர்கள் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பங்குகளை வாங்க ஆலோசிக்கிறார்கள் என்று செய்தி கசிந்தாலே அந்தப் பங்கின் விலை குதிக்க ஆரம்பித்து விடும். கொஞ்சம் நீங்களும் கவனித்துத் தான் பாருங்களேன்.

இன்றைய நிலையில் தன் கதவுகளை அகலத்திறந்து வைத்து, கேட் பாஸ் கூடப் போடாமல் உள்ளே வரும் கம்பெனிகளையெல்லாம் டீ, காபி கொடுத்து உபசரித்து வரவேற்றுக் கொண்டு இருக்கிறது இந்தியா. உலக மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் அதிகரித்து விட்ட…… முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து வரும் இந்நாட்களில் பணி வாய்ப்புகளும் இத்துறையில் அதிகம். என்ன ஒன்று? தேவையான தகுதியும் இருக்க வேண்டும். கொக்கு மாதிரி காத்திருக்கும் பொறுமையும் இருக்க வேண்டும். சந்தையில் நிலவும் காரணிகளைக் கண்டு கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் திறமையும் இருந்தால் மிகவும் நல்லது. இல்லாவிட்டால் ஒரு காலத்தில் யூடிஐ ஒரேயடியாக மூழ்கிப்போனதை வேடிக்கை பர்த்ததைப் போல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.


-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

8 கருத்துகள்:

 1. வணக்கம்,
  அற்புதமான பதிவு!
  அன்பு பதிவர்களே/நண்பர்களே,
  என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
  http://kaniporikanavugal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. A good article on mutual funds. But you were wrong in mentioning about the crisis in UTI. It was all because of the politicians UTI had to face a crisis and minsiters from all parties enjoyed the fruits of the public funds and that was the reason for the government to comeup with a rescue plan.
  You would be remembering that one Mr. Subramanian Chairman of UTI was arrested during the crisis and how many of us are concerned about what happened to that case. It was because if he starts to open his mouth thw worst affected would be politicians of all parties. Friend you would be aware of the fact that UTI was forced to buy shares of bogus companies as it had links with finance ministes and even in case of IDBI it was forced to buy heavily for a unreasonalble price which resulted heavy revenue loss.
  It was only beause of the fund managers conservative approach it handled the situation successfully and even today it stands number one in number of unit holders.
  Whenever there is political interventionscrisis will be unavoidable. Now pension funds are eing invested through mutual funds and in future this will also go into the hands of poiticians on to which mutual funds the huge sum could be allotted and like 2 G spectrum auction you can see thousands of crores will be swindled.
  Poor pensioners are going to face this problem in future.

  பதிலளிநீக்கு
 3. மிஸ்டர் ஜெயச்சந்திரன்,, ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பீங்க போலிருக்கு... கூல்....

  பதிலளிநீக்கு
 4. Software Engineer

  sukumar

  prithish

  s. jeyachandran

  அனைவரது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 5. பங்குசந்தை பற்றி தெரியாதவர்கள் வேண்டுமானால்
  மியூச்சுவல் பண்டுகளில் முதிலீடு செய்யலாம் அதுவும்கூடSIP நல்லது என்ற உங்கள் கருத்து வரவேற்க்கத்தக்கது நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அப்படியும் சொல்லலாம். ஆனால் பங்குச்சந்தை பற்றி (மிக நன்றாகத்) தெரிந்தவர்கள் மியூச்சுவல் பண்டுகளை நாடுவதுண்டு... என்னுடைய முந்தைய நிறுவத்தில் ஒரு மேனேஜர் மியூச்சுவல் பண்டுகளில் SIP மூலம் 800 சதவீத லாபம் எடுத்தார் மூன்றே வருடங்களில்....

  பதிலளிநீக்கு