செவ்வாய், 22 ஜூன், 2010

சுஜாதாவும் மனுஷ்ய புத்திரனும்

- எஸ்கா

வழக்கம் போல் எல்லா சாதாரண புத்தக ரசிகனும் எதிர்பார்ப்புடன் படிக்கும் சுஜாதாவுக்கு நானும் ரசிகன். மெட்ராஸூக்குப் போனால் எம்.ஜி.ஆரையும், ரஜினியையும் பார்க்கலாம் என்பது மாதிரி புத்தகக் கண்காட்சிக்குப்போனால் சுஜாதாவைப் பார்க்கலாம் என்று பலரும் சொன்னார்கள். ரொம்ப நாளாக எனக்கு அவரிடம் தான் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்று ஆசை. அவருடைய படத்தையெல்லாம் பென்சில் ஸ்கெட்ச் ஆக வரைந்து வைத்திருந்தேன். அதன் மேல் ஆட்டோகிராஃப் வாங்கலாம் என்று. பாவி மனுஷன் போய்ச்சேர்ந்து விட்டார். செம ஹைட்டாய் இருப்பாராமே...


2008, 2009 என்று இரண்டு வருடங்கள் முயற்சி செய்தும் புத்தகக் கண்காட்சிக்குப் போக முடியவில்லை. இந்த வருடம் போய்ப்பார்த்தே தீருவது என்று முடிவு செய்து விட்டு, சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒன்பது தடவை திரும்பத் திரும்பப் போனேன் கண்காட்சிக்கு. போய் என்னடா வாங்கினாய் என்றெல்லாம் கேட்காதீர்கள். எவ்வளவு அய்யா வாங்க முடியும்?


வாங்குகிற சம்பளத்துக்கு கண்காட்சியில் புத்தகம் வாங்கினால் கட்டுபடி ஆகாது என்று கண்காட்சிக்கு எதிர் சாரியில் செகண்ட் ஹாண்ட் புத்தக் கடைகள் வரிசையில் போய் புத்தகங்கள் வாங்கியாயிற்று. உள்ளே வாங்கினது மட்டும் என்னவாம்? வாங்கியது எல்லாம் சீப் எடிஷன் புத்தகங்கள். அதிலும் தமிழன் புத்தகாலயம் (என்று ஞாபகம்) ஐந்து ரூபாய், பத்து ரூபாய் புத்தகங்களாக நிறைய டாபிக்குகளில் போட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட முப்பது நாற்பது புத்தகங்கள் வாங்கினேன்.


உயிர்மை ஸ்டால் பக்கம் போகையில் எல்லாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டே இருந்தேன். அங்கே தான் சுஜாதா உட்காருவார் என்றார்கள். இப்போது மனுஷ்யபுத்திரன் இருந்தார். கொஞ்ச நேரம் நின்று அவரையே பார்த்துக் கொண்டு இருப்பேன். வாசகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டு இருப்பார். சாருவும் தான். ஆனால் அந்த மனுஷனிடம் போய்ப் பேச எனக்குப் பயம். எதாவது திட்டி வைத்து விடுவாரோ என்று. தேவையில்லாமல் எதற்கு அந்த ஆளிடம் திட்டு வாங்க வேண்டும்? எங்க அப்பா திட்டினாலே எனக்குக் கோவம் வரும்.


சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் ஆட்டோகிராஃப் வாங்கிய ஒரே ஆள் மனுஷ்ய புத்திரன்தான். சென்னையில் இருந்த மூன்று வருட காலத்தில் மயில்சாமியில் ஆரம்பித்து காந்திமதி, தமன்னா வரை பார்த்திருக்கிறேன், யாரிடமும் போய்ப் பேசவோ, ஆட்டோகிராஃப் வாங்கவோ தோன்றவில்லை.


உயிர்மையில் போய் ஹைக்கூ, ஒரு எளிய அறிமுகம் (சுஜாதா) புத்தகம் ஒன்று வாங்கினேன். அதைக் கொண்டு போய் எதுவும் பேசாமல் நீட்டியபோதே ஆட்டோகிராஃப் போட தன் பச்சைப் பேனாவைத்திறந்தார். ஆட்டோகிராஃப் போடத் துவங்கினார். தமிழ்வணிகம் டாட் காம் என்ற எங்கள் வலைமனையில் பொருளாதாரம், ஷேர் மார்க்கெட் பற்றிய கட்டுரைகள் எழுதுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.


உடனே நிமிர்ந்து பார்த்து "அப்படியா? உங்கள் எல்லா கட்டுரைகளையும் எடுத்து வாருங்களேன். புத்தகமாக வெளியிடலாம்" என்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு பகீரென்றது. அய்யய்யோ அந்த அளவெல்லாம் கட்டுரைகள் எழுதியதில்லை அய்யா, ஒரு நான்கைந்து தான் இருக்கும். மற்றபடி பொதுவான கட்டுரைகள் இருபதுக்கும் மேல் எழுதியிருக்கிறேன் என்றேன்.


சரி நிறைய எழுதுங்கள். புதிய பதிப்பகத்தின் பேரில் சில புத்தகங்கள் வெளியிடும் எண்ணம் இருக்கிறது. இப்போதைக்கு உயிரோசை டாட் காமில் எழுதுங்கள். தளம் மிகப் பிரபலாமானதாயிருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் படிக்கிறார்கள். எழுதுங்கள். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் என்று விட்டு புத்தகத்தில் அலைபேசி எண்ணை எழுதித்தந்தார்.


(அந்தப் புத்தகத்தை பழைய கம்பேனியில் ஒரு மேனேஜரிடம் இரவல் கொடுத்து விட்டு இன்னும் வாங்க முடியவில்லை. அந்தப் பெரிய மனுஷன் மொபைல் நம்பரையும் மாற்றிவிட்டான், ஈ.மெயில் ஐடிக்கு போகும் மெயில்களும் பவுன்ஸ் ஆகின்றன.)


எனக்கு என்னவோ அவரைக் கூப்பிடவே பயமாக இருக்கிறது. நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று தான் தோன்றுகிறது. (சி.பி.ஐ அளவுக்கெல்லாம் நான் ஒர்த்து இல்லை சார்). ஆயிற்று ஆறு மாதம். தங்க முட்டையிடும் வாத்தை அந்த முட்டாள் அறுத்துத் தான் பார்த்தான், நான் பயந்து போய் விட்டு விட்டு ஓடி வந்து விட்டேனோ என்று இப்போது தோன்றுகிறது.


பார்க்கலாம். எங்கே போய்விடப்போகிறது. உலகம் ரொம்பச் சின்னது தானே. இப்போது உயிரோசை டாட் காமிலேயே என்னுடைய சில கட்டுரைகள் வெளியிடப்பட்டு விட்டன. நல்ல வரவேற்பு. கொஞ்ச நாள் போகட்டுமே.. பார்த்துக்கொள்வோம்.
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

4 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள். தொடருங்கள் பயணத்தை.

  பதிலளிநீக்கு
 2. // வாழ்த்துக்கள். தொடருங்கள் பயணத்தை.//

  ரொம்ப நன்றி மேடம்.. நீங்க என்னுடைய சில படைப்புகளுக்கு யூத்ஃபுல் விகடன்ல கூட பின்னூட்டம் போட்டிருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 3. படித்ததும் பிடித்திருந்தால் கண்டிப்பாகப் பின்னூட்டம் போட்டிருப்பேன்:)! உங்கள் படைப்புகள் என்பது அப்போது கவனத்தில் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எழுதியவரைத் தாண்டி படைப்புகள் பேசப் படுவது என்பதும் இதுதான். சரிதானே:)?

  பதிலளிநீக்கு
 4. //படித்ததும் பிடித்திருந்தால் கண்டிப்பாகப் பின்னூட்டம் போட்டிருப்பேன்:)! உங்கள் படைப்புகள் என்பது அப்போது கவனத்தில் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எழுதியவரைத் தாண்டி படைப்புகள் பேசப் படுவது என்பதும் இதுதான். சரிதானே:)?//

  கண்டிப்பாக. பின்னூட்டங்கள் படிக்கையில் எவ்வளவு உற்சாகம் ஆகிறது மனது..?

  ஆனால் படித்ததும் கடந்து போவதே என் வாடிக்கை. நானும் இனிமேல் பின்னூட்டமிடும் வழக்கத்தை மேற்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு