(இக்கட்டுரை கடந்த செப்டம்பர் 6-ம் தேதி, உயிரோசை டாட் காமில் வெளியானது)
ஆசிரியர் தினம் ஸ்பெஷலாக நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது "விதை – சூர்யாவுடன் ஒரு வெற்றிப்பயணம்" நிகழ்ச்சி.
தன் தந்தை சிவகுமார் நடத்திவரும் கல்வி அறக்கட்டளையின் நீட்சியாக அகரம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைத் துவக்கி நடத்தி வருகிறார் நடிகர் சூர்யா. தேவை உள்ள ஏழை மாணவர்களை கண்டு பிடித்து அவர்களது உயர்கல்விக்கு உதவுவது அதன் நோக்கம் என்கிறார்கள். இதே விஜய் டிவியில் கடந்த பொங்கல் தினத்தன்று தனது அகரம் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு ரூ.1 கோடி (தலா பத்து இலட்சம் வீதம் பத்து பேர் பங்களிப்பு) நிதி உதவி செய்யவிருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார்.
இதற்கான சரியான மாணவர்களை (பல்வேறு டெஸ்ட்கள் வைத்து அதன் மூலம்) தேர்வு செய்து அவர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சியாக அகரம் ஃபவுண்டேஷன் மற்றும் விஜய் டிவியால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. இதற்கான தேர்வுக்குழுவில் இருக்கும் வாலன்டியர்ஸ் அனைவரும் பெரிய பெரிய எம்.என்.சி கம்பெனிக்களில் நல்ல பணியில் இருப்பவர்கள் என்று கூறினார்கள்.
சென்ற முறை "சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு தொடக்கம்" வெளியான நான்கு தினங்களுக்குப் பிறகு சூர்யா வீட்டில் வருமான வரித்துறையின் "நியாயமான அதிகாரிகளால்" ரெய்டு நடத்தப்பட்டது பலருக்கும் தெரிந்திருக்கும். இப்போது மறுபடி "விதை சூர்யாவுடன் ஒரு வெற்றிப்பயணம்" பாவம். பி கேர்ஃபுல் சூர்யா.
முதல்வன் திரைப்படத்தில் டிவி ரிப்போர்ட்டரும் முதல்வரும் பேசும் ஒரு காட்சி. உங்களுக்கு நினைவிருக்கும். "ஐயா, அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்க எந்த மாதிரி குடும்பம்?", "சாதாரண ஏழ விவசாயக் குடும்பம் தம்பி", "உங்க சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கலாமா?", "பிடித்தம் போக பதினெட்டாயிரம் வரும்", "ஆக கூட்டிக் கழிச்சுப்பாத்தா வருடத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாய்", "ஆமாம் தம்பி", "ஆக, மொத்தமா உங்ககிட்ட சுமாரா ஒரு இருபது இலட்சம் ரூபாய் இருக்கலாம், ஆனா இன்னைக்கு உங்ககிட்ட இருக்கிற சொத்தோட மதிப்பு பல நூறு கோடி ரூபாய், இந்தப் பணம் எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா?"
முதல்வர் கதாபாத்திரம் பதில் இல்லாமல் முழிக்கும். இப்போது இதே கேள்விதான் எங்களுக்கும். இவர்களுக்கு எல்லாம் வருமானம் எப்படி வருகிறது, வரும் வருமானத்திற்கு சரியாக கணக்குக் காட்டுகிறார்களா? என்றெல்லாம் நாம் இந்த வருமான வரி்த்துறையிடம் கேட்க முடியுமா? அவர்களுக்குப் பயந்தே “மாணவர்கள் அனைவரும் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்” என்று (ரெய்டுக்குப் பயந்தே) திரும்பத் திரும்ப டி.வியிலேயே சொல்லிக்கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.
கல்வி உதவிக்காக தேர்வு செய்யப்பட்ட உங்கள் பிள்ளை என்னவாக ஆக வேண்டும் என்று கேட்ட போது "டாக்டர் ஆகணும், (கம்ப்யூட்டர்) என்ஜினியர் ஆகணும்" என்றே சொல்லிக் கொண்டிருந்த வெகுளிப்பெற்றோர்களை, அவை மட்டுமே படிப்புகள் அல்ல, அவற்றைத் தாண்டியும் பல்வேறு படிப்புகள் உள்ளன என்று "ஞாநி"யை வைத்து கவுன்சிலிங் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாம் கிராமப்புற பெற்றோர்கள். எத்தனை பேர் கன்வின்ஸ் ஆனார்களோ தெரியவில்லை.
இதைவிட முக்கியமான நம்மையெல்லாம் கொதிக்க வைக்கும் ஒரு செய்தி. தங்கள் பள்ளியில் உயர்கல்வி உதவி பெறத் தகுதியான ஏழை மாணவர்கள் இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று கல்வி அதிகாரியின் ஒப்புதலின் பேரில் அகரம் ஃபவுண்டேஷனால் 827 பள்ளிகளுக்கு பரிந்துரைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. (இதில் எல்லா கடிதங்களும் நமது சூப்பர் போஸ்டல் டிபார்ட்மெண்டினால் சரியாக டெலிவரி செய்யப்பட்டு விட்டன என்று வைத்துக்கொள்வோம்)
அதில் எத்தனை பள்ளிகள் தமது மாணவர்களை பரிந்துரை செய்து பதில் அனுப்பின என்று மாவட்ட வாரியாக லிஸ்ட் வாசித்தார் பேராசிரியர் கல்யாணி. 827 பள்ளிகளில் 143 பள்ளிகள் மட்டுமே பரிந்துரையுடன் பதில் அனுப்பியிருக்கிறார்கள். வெறும் 17 சதவீதம். இதன் மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக அக்கறை அதிகமாக இருக்கிறது என்று தெரிய வருகிறது என்று சாட்டையால் சுழற்றி அடித்தார் கல்யாணி. பேராசிரியர் கல்யாணி பேசும் போது செருப்பால் அடித்தது போல் இருந்தது.
பெரும்பாலான ஆசிரியர்கள் சமூகத்தின் மேல் ஒரு துளியும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசிரியர், புதுக் கட்டிடம் கட்டுவதற்கு வந்துள்ள சிமெண்டு மூட்டைகள், கம்பிகளை மாணவர்களின் அறையில் போட்டுவைத்து மழை வந்தபோது ஒதுங்கக் கூட முடியாத சிதிலமடைந்து வகுப்பறைகளில் மாணவர்களை வைத்திருக்கிறார் என்ற தகவலை பவா சொன்ன போது மிகவும் அதிர்ச்சியளித்தது.
சம்பளத்துக்கு சண்டை போடவே சரியாக இருக்கிறது இவர்களுக்கு. என் நண்பன் ஒருவன். ஆங்கில இலக்கியம் முடித்ததால் பி.எட் முடித்தால் சீனியாரிட்டியில் உடனடியாக அரசுப்பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று படித்து முடித்து தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் உள்ள சிறு பள்ளியில் முடங்கிப்போனான் அவன். இருமாதங்களுக்கு முன் அவனைப்பார்த்த போது கவர்மெண்ட் ஸ்டாஃப் கார்த்தி என்று பெருமையாகச் சொன்னான் அவன்.
சமீபத்தில் பேப்பர் வேல்யூவேஷன் பணியின் போது மாணவனின் பேப்பரை கிழித்து கழிவறையில் போட்ட ஒரு ஆசிரியையின் செய்தியைப்படித்திருப்பீர்கள். அவனிடம் அதைப்பற்றிய பேச்சு வந்த போது, கொடுத்த காசு போதவில்லை, வேலையும் எங்களுக்கு அதிகம், அதனால் அந்த ஆசிரியை செய்தது சரி தான் என்கிறது இந்த மூதேவி. அய்யா, அந்த விவாதத்திற்குள் நான் போகவே இல்லை, சிம்பிளாகக் கேட்கிறேன். கிழித்துப்போடப்பட்ட அந்தப்பேப்பர் என் பையனுடைய பேப்பராக இருந்தால் எனக்கு எவ்வளவு கோபம் வரும். அல்லது அது அந்த ஆசிரியையின் பத்தாம் வகுப்பு மகனின் பேப்பராக இருந்தால்?
என்னை மாதிரி, உங்களை மாதிரி சாதாரண வேலைக்குப்போய் சாதாரண சம்பளம் வாங்கி, ரேஷன் போய், சினிமா பார்த்து, டிவி பார்த்து, சாதாரணமாக சைட் அடித்து என்று மிகச் சாதாரண இளைஞனாக இருந்த ஒருவனை "அரசு ஊழியன்" ஆக்கியது எது? மற்ற துறை அரசு ஊழியர்களை விடுங்கள். ஆசிரியர்கள் எனும் அரசு ஊழியர்கள்? இங்கே ஒரு ஊரில் அரசுக்கல்லூரியின் முதல்வருக்கு மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? எண்பத்து இரண்டாயிரம் ரூபாயாம், கேட்டால் சீனியாரிட்டி. இதுதவிர அவர் சொல்லும் எந்த வேலையையும் பார்க்க நாலைந்து அல்லக்கைகள் கூடவே சுற்றிக்கொண்டிருக்கும்.
இது பரவாயில்லை போல் இருக்கிறது, ஒரு யுனிவர்சிடியில் லெக்சரருக்கு ஆரம்பச்சம்பளமே முப்பதாயிரத்தைத் தாண்டுகிறது என்று கேள்வி. அதிலும் மூன்று நான்கு வருடம் அனுபவம் உள்ள ஒரு (இருபத்தேழு வயது) லெக்சரருக்கு நாற்பதாயிரம் சம்பளமாம் (இது முழுக்க உண்மையாக இருந்தால்? யம்மோவ்?) இதில் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் வகுப்பு எடுக்க மாட்டார்களாம். மூளை டயர்டாகி விடுமாம், ஜூனியர்கள் செய்ய வேண்டுமாம். அப்புறம் ஏன் "மக்களுக்காக சேவை செய்யும்" எம்.எல்.ஏக்கள் தங்கள் சம்பளத்தை அறுபதாயிரமாக உயர்த்த வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்?
ஒரு ஊரில் சொறி பிடித்த நாய் ஒன்று இருந்ததாம், அது வைக்கோல் போரில் போய் படுத்துக்கொண்டதாம். முதலில் இதமாக இருந்தாலும் நேரமாக நேரமாக எரிச்சல் எடுத்ததாம், அதனால் புரண்டு புரண்டு படுத்த அந்த சொறிநாய் வைக்கோல் தின்ன வந்த மாட்டை தின்னவும் விடவில்லையாம். தானும் படுக்காது தள்ளியும் படுக்காது என்ற இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது பேராசிரியர் கல்யாணி மற்றும் பவா செல்லத்துரையின் ஆதங்கங்களைப்பார்த்த போது.
ஆனால் அதற்காக ஒரேயடியாக ஆசிரியர்களை குற்றம் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இதே நிகழ்ச்சியில் சில நல்ல உதாரணங்களும் கிடைத்தன. தனது முன்னாள் மாணவனுக்காக அலைந்து திரிந்து அவனை கண்டுபிடித்து அப்ளிகேஷன் ஃபில் அப் செய்து அனுப்பியிருக்கிறார் ஒரு ஆசிரியை. தனது டீச்சர்தான் தனக்காக அப்ளிகேஷன் எழுதி அனுப்பினார் என்று தேர்வான மாணவர்களில் பல பேர் குறிப்பிட்டார்கள். அந்த நல்ல மனம் கொண்ட, ஆக்டிவ்வான டீச்சர்ஸூக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்தே ஆகவேண்டும்.
இன்றைக்கும் தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் தான். அங்கே பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடனே பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுகிறார்கள் என்ற அவலத்தை தமது கருத்தாக பதிவு செய்தார்கள் அம்மாவட்டங்களைச் சேர்ந்த இருதாய்மார்கள். அதனால் தமக்குக் கிடைக்காத படிக்கும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று முயற்சித்து இந்த வாய்ப்பைப் பெற்றதாகச் சொன்னார்கள்.
சென்ற வாரம் தர்மபுரியில் நான் சந்தித்த பள்ளியின் தாளாளர் ஒருவரும் இதே கருத்தைச்சொன்னார். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளை படிக்க வைக்கவே மாட்டார்கள். மீறிப்போனால் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பெண் குழந்தைகள் படித்து முடித்தவுடன் திருமணம் தான். இப்போது பனிரெண்டாம் வகுப்பு வந்து விட்டதால் அதை முடித்தவுடன் திருமணம். வெகு சமீபமாக இப்போது தான் பெண்களை டி.டி.எட் படிக்க வைக்கிறார்கள். படித்தவுடன் ஆசிரியை வேலை. இதற்குச் சரியான உதாரணமாய் அதே பள்ளியில் நான் சந்தித்த ஒரு ஆசிரியையும் இருக்கிறார். இருபத்தைந்து வயதில் ஏழு வயதுக் குழந்தைக்குத் தாய்.
இதே தர்மபுரியில் மற்றொரு தனியார் பள்ளியில் வேறு ஒரு பிரச்சினை. உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருடன் பேசினார் (பள்ளியில் தான்) என்று ஒரு ஆசிரியையை போட்டு வறுத்தெடுத்திருக்கிறது அவரது குடும்பம். வேலைக்கே போக வேண்டாம் என்று சொல்லியதை மீறி கெஞ்சிக் கூத்தாடி வேலைக்கு வருகிறார் அவர்..
சரி விடுங்கள் நிகழ்ச்சிக்குப்போவோம். இந்த இடத்தில் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு, படித்தே ஆக வேண்டும் என்று மற்றவர் உதவியுடனாவது மேலேறி வர முயற்சி செய்யும் இந்தக் குழந்தைகளை போதை, ராகிங் என்ற இரண்டு சனியன்களிடம் இருந்து காப்பாற்றித்தாருங்கள். தயவுசெய்து இவர்களை மீண்டும் ஒரு நாவரசு லிஸ்டுகளில் சேர்த்து விடாதீர்கள்.
ராணுவமும், போலீஸூம், ஆசிரியனும், மருத்துவனும் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள். ஆனால் அனைத்து துறைகளையும் "தன்னலம் பாராத" என்று மட்டும் சொல்ல முடியவில்லை. இன்றைய நிலையில் ராணுவம் மட்டுமே அந்த வரிசையில் ஒற்றையாக நிற்கிறது. மற்ற அனைத்துப்பிரிவுகளிலும் வேலை செய்யும் நாமெல்லாம் செய்யும் வேலைக்குச் சம்பளம் வாங்கும் சாமானியர்கள். ஆனால் கேளிக்கைச் சாதனங்களாக இருக்கும் திரைப்படங்களின் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பங்களிப்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வைக்கப்படுகிறது.
அவர்களின் மேல் சுற்றியிருக்கும் புகழ் வெளிச்சம் சாமானியன் தந்தது. தான் சம்பாதித்ததை தனக்குக் கொடுத்த சமூகத்திற்கு தான் சம்பாதித்ததில் கொஞ்சம் திருப்பித்தரும் ஒரு நடிகனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. அவன் இதைச்செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை என்று கூற முடியாது. செய்தால் நல்லது. அங்கொருவர், இங்கொருவர் என்று திரைத்துறையில் சிலர் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அனைத்து மாணவர்களின் பேரைச் சொல்லி விபரம் சொல்லும் அளவுக்கு அனைவரையும் பற்றித் தெரிந்து வைத்திருந்தார் சூர்யா. இந்த விஷயத்தில் ஒரு ரியல் ஹீரோ என்று கூட தாராளமாகப் பாராட்டலாம் அவரை. டிரஸ்டுகள், ஃபவுண்டேஷன்கள் மூலம் பெரிய தொழிலதிபர்கள் தமது கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்றெல்லாம் கருத்துக்கள் கிளம்பவும் செய்கின்றன. அது ஒரு வேளை உண்மையாகவே இருந்தாலும், நம் நாட்டு அரசியல்வாதிகளின் ஸ்விஸ் பேங்க் கணக்குகளில் முடங்கிக்கிடக்கும் பல்லாயிரம் கோடிகளில் (ஸ்வேர்டு தெரியாமல் முடங்கிக் கிடப்பவை அதில் எண்பது சதவீதமாம்) நம் பணம் நாசமாய்ப் போவதற்கு இது பரவாயில்லை.
அகரத்திற்காக தங்களது கல்லூரியில் சில மேனேஜ்மெண்ட் சீட்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றன சில தனியார் கல்லூரிகள். டாக்டர், இன்ஜினியர் படிப்பு மட்டும் தான் படிப்பா என்றுநாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மாற்றுக்கருத்தாக "சார்ட்டட் அக்கவுண்டன்ட் போன்ற மற்ற படிப்புகளையும் தேர்ந்தெடுத்தால், குறைந்த செலவில் நிறைய படிக்க வைக்கலாம்" என்று சூர்யாவிடம் சொல்லி இன்னும் சில மாணவர்களை தேர்ந்தெடுத்ததாகவும், அதில் ஒரு மாணவியை தான் தத்தெடுத்திருப்பதாகவும் சொன்னார் ஒரு வி.ஐ.பி.
தனக்குக் கிடைத்த ஒரு இலட்ச ரூபாய் கல்வி உதவிப்பரிசை அகரம் ஃபவுண்டேஷனுக்கு கொடுத்த மாணவரும் கலந்து கொண்டிருந்தார். குடியுரிமைப்பிரச்சினையால் அரசுக்கல்லூரியில் படிக்க முடியாத நிலையில் இருந்த இலங்கை மாணவர் ஒருவருக்கும் உதவி வழங்கப்பட்டிருந்தது. தனியார் கல்லூரியில் பணம் அதிகமாக செலவாகும் என்றாலும், இந்த வாய்ப்பை விட்டால் அந்தப்பையனால் வேறெங்குமே படிக்க முடியாமல் போய்விடும் என்று அந்த மாணவனையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
சக்தி மசாலா துரைசாமி, சாந்தி துரைசாமி. மாஃபா பாண்டியராஜன், பாரதி சிமெண்ட் உரிமையாளர் போன்ற இன்னும் பலர் இதற்கு உதவியதாக அமர்ந்திருந்தார்கள். மேலும் ஞானவேல், ஜெயஸ்ரீ, நாகலக்ஷ்மி, என்று சில பேரின் பெயர்களைச் சொல்லிப்பாராட்டினார் சூர்யா. ஆசிரியர் தினத்தின் சிறப்புகள் கூறி, ஆசிரியருக்கு நன்றி சொல்லும் வேளையில் சூர்யாவையும் சேர்த்துக்கொள்ளத்தோன்றியது. நெகிழ்ச்சியாகத்தான் நிறைவடைந்தது விதை.
----------------------------------------
உயிரோசை டாட் காமில் இந்தக் கட்டுரையை படித்து விட்டு, கிருஷ்ணா என்ற புதிய நண்பர் ஈ.மெயில் மூலம் இந்தக்கடிதத்தை அனுப்பியிருந்தார். அன்புக்கு நன்றி கிருஷ்ணா..
--------------------------------------------------
வணக்கம் திரு எஸ்கா,
தங்களது "விதையும் அரசு ஆசிரியர்களும் " உயிர்ம்மையில் படித்தேன். சமூக மாற்றத்திற்கான புதிய வழிகளை நோக்கி செல்லும் நடிகர் சூர்யா போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. அதே சமயம் தாங்கள் குறிப்பிட்ட "ராணுவமும், போலீஸும், ஆசிரியனும், மருத்துவனும் சமூகத்திற்கு சேவை செய்பவர்கள். ஆனால் அனைத்து துறைகளையும் "தன்னலம் பாராத" என்று மட்டும் சொல்ல முடியவில்லை. இன்றைய நிலையில் ராணுவம் மட்டுமே அந்த வரிசையில் ஒற்றையாக நிற்கிறது."
இந்த வரியில் வரும் ராணுவமும் கூட ""தன்னலம் பாராத" என்ற வாசகத்திற்கு ஏற்புடயதுதானா என்பதை நீங்கள் சற்று உள்நோக்கி பார்க்க வேண்டுகிறேன். இன்றைய நடப்பில் எனக்கு தெரிந்து நாட்டு பற்று கொண்டு சேவை செய்வதாக நினைத்து யாரும் ராணுவத்தில் சேருவதில்லை. வேலை இல்லாத காரணமாகவே சேருகின்றனர். நூறில் நாற்பது சதவீதம் பேர் குறுக்கு வழியில் அதிகாரிகளுக்கு ஐம்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லஞ்சம் கொடுத்தே சேருகின்றனர் (அடிப்படை சிப்பாய் வேலைக்கே இந்தth தொகை). இப்படி சேர்பவர்களிடம் எந்த தேச பற்றை எதிர்பார்ப்பது?? ராணுவத்திலும் கீழ் நிலா முதல் மேல் நிலை வரை கொள்ளை நடை பெறுகின்றது. எனக்கு தெரிந்த பல ராணுவ நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.
இதில் நீங்கள் வேறு " தன்னலம் பாராத" என்று போட்டு விட்டீர்கள்.
தங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன் நல்ல பல கட்டுரைகளை எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.. வாழ்த்துக்கள்....
கிருஷ்ணா..
--------------------------------------------------