திங்கள், 6 செப்டம்பர், 2010

ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?

(இக்கட்டுரை நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் கடந்த 2009 நவம்பர் 20ம் தேதி வெளியானது)

கோவிலுக்குப் போனால் செருப்பைப் பாதுகாக்க இரண்டு ரூபாய் தந்து விட்டு வரும் நம்மை, பிச்சைக்காரர்கள் கேட்டால் கூட ஒரு முழு ரூபாயை அநாயாசமாக தூக்கி எறியும் நம்மை, பஸ் கண்டக்டரிடம் கீப் த சேஞ்ச் என்று ஐம்பது பைசாவை விட்டு விட்டு வரும் நம்மை, ஒற்றை பைசாவையே கண்ணில் பார்த்தறியாத நம்மை, அதன் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வந்த நம்மை இன்றைய மொபைல் நிறுவனங்கள் மீண்டும் பைசாக்களின் காலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். சமீப காலமாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒன் செகண்ட் ஒன் பைசா திட்டங்களைத்தான் சொல்கிறேன். இதை ஆரம்பித்து வைத்த பெருமை தொழில்துறை ஜாம்பவான் டாட்டா (டோக்கோமோ) வுக்கே உரியது.


நம்மூரில் எதற்கெடுத்தாலும் நீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா? என்று கேட்பது வழக்கம். அதிலும் பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருப்பதில் டாட்டா தான் நம்பர் ஒன். டாட்டாவுடன் ஒப்பிடும் போது பிர்லா எல்லாம் சும்மா. காங்லோமெரேட் என்று சொல்வார்கள் அவற்றை. பல்துறை நிறுவனங்களின் கூட்டம். அதாவது எந்தத் துறையில் முதலீடு செய்கிறார்கள் என்பதையே கணக்கெடுக்க முடியாது. காராகட்டும், துணியாகட்டும், குளிர்பானமாகட்டும், வீடாகட்டும், தொலைபேசியாகட்டும்... நுழையும் இடத்தில் எல்லாம் பட்டாசு கிளப்புவதே அவர்களது வழக்கம். இவற்றின் தொடர்ச்சியாக மொபைல் சேவைத் துறையில் இந்தியாவின் டாடா குழுமமும் ஜப்பானின் என்.டி.டி டோக்கோமோ நிறுவனமும் இணைந்து டாடா டோக்கோமோ என்ற சேவையை கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் ஆரம்பித்தன. ஒரு செகண்டுக்கு ஒரு பைசா பில்லிங் என்பதையே அவர்கள் தமது தாரக மந்திரமாகக் கொண்டு களம் இறங்கினார்கள்.

அறிமுகமான வேகத்திலேயே டாப் கியரில் வேகமெடுத்த இந்த திட்டத்தின் திடீர் ஹிட் மற்ற மொபைல் நிறுவனங்களை நிலைகுலையச் செய்தது. முதல் சில வாரங்களிலேயே டோக்கோமோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை அறுபது இலட்சம், எழுபது இலட்சம் என எகிறத் தொடங்கியது. எந்த மொபைல் வைத்திருந்தாலும் சப்ஸ்டிட்யூட்டாக டோக்கோமோ சிம் ஒன்று வாங்கி வைக்கத் துவங்கினார்கள் மக்கள். விளைவு... கடந்த இருவாரங்களுக்கு முன்பு ஒன் செகண்ட் ஒன் பைசா டாரிஃப்பை, எல்லா மொபைல் நிறுவனங்களும் அறிமுகப் படுத்த வேண்டும் என்று ட்ராய் (பங்குச் சந்தைக்கு செபி போல டெலிகம்யூனிகேஷனைக் கட்டுப்படுத்தும் அமைப்பு) அறிவித்தது. இதன் பிரதிபலிப்பு அன்றைய பங்குச் சந்தையில் கூட எதிரொலித்தது. அறிவிப்பு வந்த நாளன்றே டெலி கம்யூனிகேஷன் துறை பங்குகள் மடமடவென்று சரிந்தன.

ஒரே நாளில் அத்துறையில் எல்லா பங்குகளுமே கிட்டத்தட்ட 10% வீழ்ச்சி. ஏனென்றால் பெரும்பாலான, அதாவது சுமார் 60% க்கும் மேற்பட்ட செல்போன் பயனாளர்கள், தமது முதல் செல்போன் அழைப்பை துண்டிப்பது சில வினாடிகளிலேயே. ஆனால் பணம் கட்டுவது என்னவோ முழு நிமிடத்திற்கு. இது விநாடிக்கு என்று மாற்றப் பட்டால் செல்போன் சர்வீஸ் புரொவைடர்களின் தலையில் ஒரு பெரிய துண்டுதான். பேலன்ஸ் ஷீட் எனும் ஆண்டறிக்கையில் இலட்சங்களில், கோடிகளில் நஷ்டமாக எதிரொலிக்கும் அது.

சமீபத்தில் இந்தியா முழுவதும் தகவல் தொடர்புக் கோபுரங்களின் எண்ணிக்கையில் நம்பர் ஒன் என்று விருது வாங்கியிருக்கிறது டாடா இன்டிகாம். அதனால் தான் தன்னுடையது துல்லியமான நெட்வொர்க் என்று விளம்பரமும் செய்து வருகிறது. எண்ணற்ற இந்த டவர் கோபுரங்களின் மூலம் அது தனது டாடா இன்டிகாம், விர்ஜின் மொபைல், டாட்டா டோக்கோமோ ஆகிய நிறுவனங்களை பயனடையச் செய்ய முடியும். அதன் மூன்று நிறுவனங்களைக் கணக்கில் கொள்ளும் போது அதன் இலாப விகிதம் கூடவே செய்யும். ஒன் செகண்ட் ஒன் பைசா என்றில்லை.. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு இலாபம் இருக்கவே செய்யும்.

ட்ராயின் தலையீடு வந்தவுடன் வேறு வழியில்லாமல் அனைத்து நிறுவனங்களும் இதே போன்ற திட்டங்களை வழங்கும்படி ஆனது. அது மட்டுமின்றி ஒவ்வொரு நிறுவனமும் தனக்குத்தோதாய் நிமிடத்திற்கு ஐம்பது பைசா, நிமிடத்திற்கு நாற்பது பைசா, மூன்று நிமிடத்திற்கு ஒரு ரூபாய், மூன்றாவது நிமிடத்தில் இருந்து எஸ்.டி.டி கட்டணம் குறைவு என கூடுதலாக பலப்பல புதிய திட்டங்களையும் சேர்த்து அறிமுகப்படுத்தின. இவற்றால் அவற்றிற்கு நஷ்டம் ஏற்படுமா? இல்லை. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பெட்டிக்கடை பெருமாள்சாமி முதல், அம்பானி வரை யாருமே நஷ்டத்திற்கு வியாபாரம் செய்ய மாட்டார்கள். முந்தைய இலாபத்தைக் கணக்கிடும் போது, இத்தகைய திட்டங்களால் ஒருவேளை அவர்களின் புதிய இலாபம் குறைய வாய்ப்புள்ளதே தவிர கண்டிப்பாக நஷ்டம் வரப்போவதில்லை. இதில் விட்டாலும் வேறொன்றில் பிடித்து விடுவார்கள்.

இந்தியா முழுவதும் 11 கோடி சந்தாதாரர்களை வைத்துக்கொண்டு இந்தியாவிலேயே நம்பர் ஒன் நெட்வொர்க்காக உள்ளது பார்தி ஏர்டெல். தென்னிந்தியாவில் (பிராண்ட் அம்பாஸிடர் சூர்யா, கூடவே ஜோவும்) நம்பர் ஒன் என்று அறிவித்துக்கொண்டு வட இந்தியாவை (பி.அ. தோனி) நோக்கி முன்னேறுகிறது ஏர்செல். டவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் டாட்டாவிற்கு. அம்பானிகளின் ரிலையன்ஸ் போவது எப்போதுமே தனி ரூட்டு. இவ்வாறாக தற்போது டாட்டா டோக்கோமோ, பார்தி ஏர்டெல் உட்பட, வோடஃபோன் எஸ்ஸார், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், வி.எஸ்.என்.எல், டாடா இன்டிகாம், விர்ஜின் மொபைல், ஐடியா, ஏர்செல், ஸ்பைஸ் டெலிகாம், கடைசியாக வந்த எம்.டி.எஸ் என்று மொத்தம் பதினைந்து பேர் உள்ளனர். இப்போது சில வாரங்களுக்கு முன் புதிதாய் ஒருத்தர் லைசென்ஸ் வாங்கி்க்கொண்டு உள்ளே வந்திருக்கிறாராம். ஆக மொத்தம் இன்றைய தேதிக்கு மொத்தம் பதினாறு மொபைல் சர்வீஸ் புரொவைடர்கள் இந்தியாவில்.

ஆனால் இன்றைக்கும் அமெரிக்காவில் ஒரு சிம் கார்டு அல்லது டெலிபோன் கனெக்ஷ்ன் வாங்க வேண்டுமென்றால் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ரொம்பக்கஷ்டம். தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று பயப் படுகிறார்கள். ஆனால் அநியாயம். இன்றைய நிலையில் இந்தியாவில் சிம் கார்டுகள் இப்போது இலவசமாகவே வழங்கப் படுகின்றன. எந்த ஒரு மொபைல் அலுவலகத்திற்கும் அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. இந்தக் கட்டுரையை அப்படியே மினிமைஸ் செய்து விட்டு வெளியே போய்ப் எட்டிப் பாருங்கள். ஒவ்வொரு பெட்டிக் கடையிலும் கிடைக்கிறது சிம் கார்டு. இல்லையா, ஒரு குடையையும், சேரையும் போட்டுக் கொண்டு எக்ஸிகியூட்டிவ்கள் அமர்ந்து சுண்டல் மாதிரி சிம் வினியோகம் செய்து கொண்டிருப்பார்கள். அதிலும் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இலவச டாக் வேல்யூ வேறு.

அப்படியென்றால் அவர்களுக்கு எங்கிருந்துதான் வருமானம் வருகிறது? ரொம்பக் கவலைப் படாதீர்கள். அதுவும் உங்களிடமிருந்து தான். டி.வி முன்னால் உட்கார்ந்து கொண்டு சூப்பர் சிங்கர், ஸ்டார் கிரிக்கெட், மானாட மயிலாட என்று பார்த்தபடி அவர்கள் சொல்லும் ஐந்து எண்களுக்கு (சில சமயம் ஆறு, ஏழு - ஃபேன்ஸி எண்கள்) எஸ்.எம்.எஸ் அனுப்பி ஓட்டு போடுகிறீர்கள் அல்லவா? எஃப். எம் நிகழ்ச்சிகளில் கேட்கப் படும் மொக்கை கேள்விகளுக்கு பதில் அனுப்புகிறீர்கள் அல்லவா? தலைவலி தைலம் முதல் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் பண்டுகள் வரை வாங்கச் சொல்லி உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வருகிறதல்லவா? அவை மூலம் தான் மொபைல் கம்பெனிகளுக்கு அட்டகாசமான வருமானம் வருகிறது. நீங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் உங்களிடம் ரூபாய் 1.20 முதல் 2 ரூபாய், 3 ரூபாய் (உங்கள் செல்ஃபோன் கனெக்ஷ்னைப் பொறுத்து) என்று வசூலிக்கப்படும். அதை அவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வார்கள். ACL வயர்லெஸ், ஆன்மொபைல் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தச் சேவையை (அவர்களுக்கும் நமக்கும் இடையில்) வழங்குகின்றன.

இவை தவிர காசு பார்க்க வேல்யூ ஆடட் சர்வீஸஸ் எனப்படும் பல ஐட்டங்களை ஒவ்வொரு நிறுவனமும் வைத்திருக்கிறார்கள். இன்கமிங், அவுட் கோயிங் வருமானம் எல்லாம் சும்மா. காலர் டியூன் (அதில் நம்பர் ஒன் - சுற்றும் விழிச் சுடரே), ரிங் டோன், சாங் டெடிகேஷன் (இதில் எப்போதும் நம்பர் ஒன் ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட்ஸ்), மிஸ்டு கால் அலர்ட்ஸ், நியூஸ் அலர்ட்ஸ், ஹெல்த் டிப்ஸ், லவ் டிப்ஸ், டெய்லி ஜோக்ஸ், புதிய படங்களின் செய்திகள், ஸ்கிரீன் பிக்சர் / வால் பேப்பர் டவுன்லோட் (நம்பர் ஒன் - பெண்களிடம் சூர்யா, ஆண்களுக்கு நமீதா), விளையாட்டு, வீடியோ, இவைதவிர தினமலர் போன்றோர் வழங்கும் மொபைல் நியூஸ் பேப்பர், எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் என நாம் பொழுது போக்கும் வசதிகள் எல்லாமே அவர்களுக்கு காசு. இங்கே வருமானம் வரும் தெம்பில் தான் அங்கே ஒன் செகண்ட் ஒன் பைசா என்று வாரி வழங்குகிறார்கள்.

அது மட்டுமல்ல மக்களே.. மொபைல் சேவைத் துறை இப்போதுதான் பிறந்த டைனோசர் குட்டி போன்றது. பார்ப்பதற்கு என்னவோ இப்போதைக்கு புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டி போல இத்துணூண்டு தான் இருக்கும். ஆனால் வளரும் போதுதான் அதன் சைஸூம், வேகமும், வலிமையும் தெரிய வரும். ஆட்டுக் குட்டிக்கும் டைனோசர் குட்டிக்கும் உள்ள வித்தியாசம் மாதிரி. அவர்களுக்குத் தேவை நெட்வொர்க், பெரிய நெட்வொர்க், இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க். அது இருந்தால்தான் அவர்கள் தனது மற்ற சேவைகள் எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டி காசு பார்க்கலாம். அவ்வளவு ஏன்? செல்ஃபோன் மூலம் ஷேர் டிரேடிங்கே செய்ய முடியும். இது தென்னை மரம், தேக்கு மரம் மாதிரி. கொஞ்சம் வெயிட் பண்ணிணாலும் பியூச்சரில் விளைச்சல் அதிகம். அதற்குத்தான் இந்த இலவச சிம் கார்டு, ஒன் செகண்ட் ஒன் பைசா விளையாட்டுக்கள் எல்லாம்.

ஆனால் ஒன் செகண்ட் ஒன் பைசா பற்றி இன்னொரு சாராரின் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. இத்தகைய திட்டங்களில், கால் செய்யப்பட்டு சில வினாடிகளிலேயே துண்டிக்கப் படும் முதல் அழைப்பு மட்டுமே வாடிக்கையாளருக்கு இலாபம் தரும். ஆனால் இரண்டாவது, மூன்றாவது என அழைப்பு தொடரும் போது அதன் கணக்கு நிமிடத்திற்கு 60 பைசா என்றாகி விடுகிறது. இது சாதாரண கட்டணமான 50 பைசாவை விட அதிகம் என்பது அவர்கள் சொல்லும் கணக்கு. இந்தியாவில் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 65 கோடி. ஆளுக்கு இரண்டு, மூன்று சிம்கள் வைத்திருப்பதைக் கழித்து விட்டுப் பார்த்தால் சுமார் 45 கோடிப்பேர் செல்ஃபோன் உபயோகிக்கிறார்கள். அப்படியென்றால் மொத்த வருமானத்தைக் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

ஆனால் நிறுவனங்களுக்குப் பாதகமான, செல்போன் சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய இன்னொரு விஷயத்தைக் கையில் வைத்துக் கொண்டு காலம் கனிவதற்காகக் காத்திருக்கிறது ட்ராய். செல்ஃபோன் பயனாளர்கள் தங்களிடம் தற்போது உள்ள அதே நம்பரை வைத்துக் கொண்டு தான் விருப்பப்பட்ட எந்த நெட்வொர்க்குக்கு (அ) சர்வீஸ் புரொவைடருக்கு மாறிக் கொள்ளலாம், புதிய நம்பர் / சிம் வாங்கத் தேவையில்லை என்பது தான் அந்தப் புதிய திட்டம். அனைவருக்கும் கொடுத்து விட்ட நம்பரை மாற்ற முடியாத ஒரே காரணத்திற்காக பல ஆண்டுகளாக ஒரே நெட்வொர்க்கின் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் (என்னைப் போன்ற) பலருக்கும் ஒரு பெரிய நல்ல செய்தி இது. ஆனால் டெலிகம்யூனிகேஷன் நிறுவனங்களுக்கு? ஒரு பெரிய ஆப்புதான். கஸ்டமர் சர்வீஸ் சரியில்லையென்றால் உடனே வேறு நெட்வொர்க்குக்கு மாறி விடுவார் வாடிக்கையாளர். அப்புறம்? துண்டு தான் தலையில்... அதற்குத்தான் ட்ராயின் வாயையே பார்த்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் அனைவரும். அது வரை ஒன் செகண்ட் ஒன் பைசா என்ன? ஒன் செகண்ட் அரை பைசா ஆஃபர் வந்தாலும் ஆச்சரியப் படாதீர்கள்.

9 கருத்துகள்:

 1. அட்டகாசமான அலசல் எஸ்கா!

  // செல்ஃபோன் பயனாளர்கள் தங்களிடம் தற்போது உள்ள அதே நம்பரை வைத்துக் கொண்டு தான் விருப்பப்பட்ட எந்த நெட்வொர்க்குக்கு (அ) சர்வீஸ் புரொவைடருக்கு மாறிக் கொள்ளலாம், //

  நானும், இதைக் கேள்விப்பட்ட நாளிலிருந்து காத்திருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 2. என்னென்ன ஜகஜால வித்தைகளெல்லாம் காட்டுவார்களோ கடவுளே?

  பதிலளிநீக்கு
 3. Whats your network provider? Mine is Airtel. I want to change to other when MNP comes into effective. Airtel, Vodafon and some other networks charging for customer care service. They telling that its a TRAI rule. But DOCOMO not charging like that. Whats in that? If its a rule from TRAI mns it should be for all right?

  பதிலளிநீக்கு
 4. // செல்ஃபோன் பயனாளர்கள் தங்களிடம் தற்போது உள்ள அதே நம்பரை வைத்துக் கொண்டு தான் விருப்பப்பட்ட எந்த நெட்வொர்க்குக்கு (அ) சர்வீஸ் புரொவைடருக்கு மாறிக் கொள்ளலாம்//
  நான் 1996 முதல் BPL கஸ்டமர்... 2007 ல் ரிலையன்ஸ் ஏரியா மேனேஜர் என்னை தங்களின் கம்பனிக்கு மாற்றம் செய்ய வேண்டினார்...நான் எனது நம்பர் முதன் முதலில் வாங்கியது...உங்கள் அம்பானியிடம் சொல்லுங்கள் நான் நம்பர் மாற்றி கொள்ளமாட்டேன், நீங்கள் வேண்டுமென்றால் எங்கள் நெட்வொர்க்கை அணுகி என் நம்பரை மாற்றித் தரசொல்லுங்கள் என்றேன்
  என்று....
  இதை பேப்பரில் எழுதிக் கொடுங்கள் என்றார்..நான் ஈ -மெயிலே அனுப்பிவைத்தேன்...
  2010 ஜனவரியில் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது... ஆனால் அந்த அதே ஏரியா மேனேஜர் 2009 ல் வோடபோனுக்கே மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்....இது எப்படி இருக்கு...

  பதிலளிநீக்கு
 5. // ராமலக்ஷ்மி சொன்னது…
  நானும், இதைக் கேள்விப்பட்ட நாளிலிருந்து காத்திருக்கிறேன்:)! //

  அட நீங்க வேற மேடம், மேலிடத்துல பணம் விளையாடுதாம். நாம காத்துகிட்டே இருக்க வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 6. //Covai Ravee சொன்னது…
  என்னென்ன ஜகஜால வித்தைகளெல்லாம் காட்டுவார்களோ கடவுளே? //

  ஸார், கட்டுரை எழுதும் போது சொன்னா மாதிரி ஒன் செகண்ட் அரை பைசா எல்லாம் வந்தாச்சி. அது மட்டுமில்ல, நான் புதுசா ஒரு எம்.டி.எஸ் வாங்கியிருக்கேனே. ரூ.499-க்கு ரீசார்ஜ் பண்ணச்சொல்லி ஒரு ஸ்கீம்ல. எம்.டி.எஸ் டு எம்.டி.எஸ் இருபது வருஷம் (நிஜம்மா) ப்ரீயாம்.

  பதிலளிநீக்கு
 7. // saravanan சொன்னது…
  Whats your network provider? Mine is Airtel. I want to change to other when MNP comes into effective. Airtel, Vodafon and some other networks charging for customer care service. They telling that its a TRAI rule. But DOCOMO not charging like that. Whats in that? If its a rule from TRAI mns it should be for all right? // ஸேம் ப்ளட் மிஸ்டர் சரவணன். ஏர்டெல்லுல டெய்லி மூணு ரூவா கழிச்சுக்கிறான். ஏன்னு தெரியலை. எத்தனை வாட்டி கம்ப்ளெயின்ட் பண்ணினாலும் இது தொடருது விடாது கருப்பு மாதிரி.

  பதிலளிநீக்கு
 8. //ஆகாயமனிதன்.. சொன்னது…
  நான் 1996 முதல் BPL கஸ்டமர்... 2007 ல் ரிலையன்ஸ் ஏரியா மேனேஜர் என்னை தங்களின் கம்பனிக்கு மாற்றம் செய்ய வேண்டினார்...நான் எனது நம்பர் முதன் முதலில் வாங்கியது...உங்கள் அம்பானியிடம் சொல்லுங்கள் நான் நம்பர் மாற்றி கொள்ளமாட்டேன், நீங்கள் வேண்டுமென்றால் எங்கள் நெட்வொர்க்கை அணுகி என் நம்பரை மாற்றித் தரசொல்லுங்கள் என்றேன்
  என்று....
  இதை பேப்பரில் எழுதிக் கொடுங்கள் என்றார்..நான் ஈ -மெயிலே அனுப்பிவைத்தேன்...
  2010 ஜனவரியில் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது... ஆனால் அந்த அதே ஏரியா மேனேஜர் 2009 ல் வோடபோனுக்கே மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்....இது எப்படி இருக்கு... // எஸ் மிஸ்டர் ஆகாய மனிதன், அந்த மேனேஜர் 2014ல் எங்கே போயிருப்பார் என்று பாருங்கள். பீல்டை விட்டே ஓடிப்போயிருப்பார். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் சுமார் 60 கோடி பேரிடம் செல்போன் விற்றாயிற்று. இன்னும் மூன்று வருடங்களில் 30 கோடி பேர். அதற்கு மேல் விற்க முடியாது. அப்புறம் பாருங்கள் காமெடியை... நூறு ரூபாய்க்கு செல்போன் விற்கிறதா இல்லையா என்று பாருங்கள். சின்னச்சின்ன கம்பெனிகள் எல்லாம் கடையைச் சாத்தி விட்டுப்போய்விடும்...

  பதிலளிநீக்கு
 9. Dear yeshka,

  in india Telephone services are very cheep. In kuwait (one of reachest kuwait in world) they were detecting money for incoming calls also. last year only they cancelled due to new comapny arrival. i'm well remeber in 1998 mobile network were introduced and they sold sim card for 50 to 100 kd + mobile phones for 200 kd (worth more than 25000 rs)
  .now a days due to festival of ramdhan one operator is issuing free post paid sim card includes with a free mobile phone. it will happenend to india also as soon.

  your article is so good.
  keep writing.

  suresh.k.
  kuwait.

  பதிலளிநீக்கு