செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஏன் விழுகிறது பங்குச்சந்தை?

(இக்கட்டுரை கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் வெளியானது)

ஏன் விழுகிறது பங்குச்சந்தை? தெரிந்து கொள்ள ஆசைதான் எல்லோருக்கும். இதை விட எப்போது விழும் பங்குச்சந்தை என்று தெரிந்தால் ரொம்ப நன்றாயிருக்குமே? என்ன? சரிதானே..? ஐ... அது எப்படி? சாகிற நாள் தெரிந்து விட்டால் வாழ்கிற நாள் நரகமாகி விடாதா? மார்க்கெட் என்று விழும் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் உள்ளே புகுந்து பங்குகளை வாங்க அல்லவா செய்வார்கள்? அப்புறம் எப்படி விழும்? ஏற அல்லவா துவங்கும்? (தொப்பி... தொப்பி...) வாழ்க்கை ஒரு வட்டம் ஐயா.. இதில் ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்றவன் ஜெயிப்பான்... ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததல்லவா வாழ்க்கை? சந்தையும் அப்படித் தானே.

சரி... சரி... கொஞ்சம் சீரியஸாய்ப் பார்ப்போம். ஏன் விழுகிறது பங்குச்சந்தை? யோசியுங்கள்.. அது சரி... பங்குச் சந்தை விழுவதற்குக் காரணமா வேண்டும்? வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்று எத்தனையோ காரணங்கள். ஒன்றா இரண்டா? லோக்கலில் இருந்து இன்டர்நேஷனல் வரை காரணங்கள் கிடைக்கும் அதற்கு. ஒபாமாவுக்கு உடம்பு சரியில்லை என்றாலும் விழும். மன்மோகன்சிங்குக்கு மார்பு வலி என்றாலும் விழும். அமெரிக்காவில் வங்கிகள் திவாலானாலும் விழும். மும்பையில் தீவிரவாத அட்டாக் நடந்தாலும் விழும். இராமலிங்க ராஜூ (மற்ற பங்குதாரர்களுக்கு) திருப்பதி லட்டு கொடுத்தாலும் விழும். நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சரியில்லையென்றாலும் விழும். ஆனால்.. ஏறுவதற்குத்தான் தெளிவான, பெரிய காரணங்கள் தேவை.


இரு வாரங்களுக்கு முன்பு ஒன் செகண்ட் ஒன் பைசா டாரிஃப்பை ஏன் அறிமுகப் படுத்தக் கூடாது என்று ட்ராய் (பங்குச் சந்தைக்கு செபி போல டெலிகம்யூனிகேஷனைக் கட்டுப்படுத்தும் அமைப்பு, இதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) கேட்டவுடன் டெலி கம்யூனிகேஷன் பங்குகள் மடமடவென்று சரிந்தன. (எல்லாப் புகழும் அண்ணன் டாடா டோக்கோமோவுக்கே). அத்துறையில் எல்லா பங்குகளுமே கிட்டத்தட்ட 10% வீழ்ச்சி. ஏனென்றால் பெரும்பாலான, அதாவது சுமார் 60% க்கும் மேற்பட்ட செல்போன் பயனாளர்கள், தமது முதல் செல்போன் அழைப்பை துண்டிப்பது சில வினாடிகளிலேயே. ஆனால் பணம் கட்டுவது என்னவோ முழு நிமிடத்திற்கு. இது விநாடிக்கு என்று மாற்றப் பட்டால்? செல்போன் சர்வீஸ் புரொவைடர்களின் தலையில் ஒரு பெரிய துண்டுதான். பேலன்ஸ் ஷீட் எனும் ஆண்டறிக்கையில் இலட்சங்களில் நஷ்டமாக எதிரொலிக்கும் அது.

அதே போல பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ மரணம் என்று தெரிந்தவுடனே அய்யய்யோ அலறி அடித்துக்கொண்டு கீழே விழுந்தது சந்தை. சுமார் 250 புள்ளிகள் அரோகரா. ஆனால் பத்தே நிமிடத்தில் "ஆமாம்..? நமக்கும் அவுங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்று சுதாரித்து இழந்த புள்ளிகளையும் திரட்டிக்கொண்டு எழுந்தது அது. பங்குகள் வீழ்ந்த அந்த இடைப்பட்ட நேரத்தில் உள்ளே புகுந்து ஷேரோ, பியூச்சரோ, ஆப்ஷனோ வாங்கி வைத்தவர்களுக்கு பத்தே நிமிடத்தில் இலாபம். எப்படி என்கிறீர்களா? பாகிஸ்தானுக்கும் நமக்கும் தான் ஏழாம் பொருத்தம் ஆயிற்றே. அந்த நாட்டுத் தலைவர் இறந்தால் நமக்கென்ன நஷ்டம்? இதுதான் கான்செப்ட். ஆனால் இதை சந்தையை உன்னிப்பாக கவனிக்கும், சந்தையில் பழம் தின்று கொட்டை போட்ட மக்கள் மட்டும் தான் கணிக்க முடியும்.

பொதுவாக சந்தை வீழ்ச்சியின் போது தடாபுடாவென்று உள்ளே நுழையாமல், கொஞ்சம் அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்ப்பதே நல்லது. ஏனென்றால் அது பின்னால் வரக்கூடிய ஒரு பெரிய பிரளயத்தின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். ஒருமுறை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் விழத்துவங்கியவுடன் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்கள். சத்யம் விழ விழ எனது நண்பர் ஒருவர் 120 ரூபாய் என்ற விலையில் 500 பங்குகள் வாங்கினார். நீயும் வாங்கு, இந்த விலைக்குக் கிடைக்காது என்று அட்வைஸ் வேறு. ஆமாம். சில தினங்களுக்கு முன் 350-400 என்ற விலையில் பார்த்த பங்கு 120 ரூபாய் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது?


ஆனால் துரதிர்ஷ்டம், சத்யம் அதே தினத்தில் 80 ரூபாய்க்கும் கீழே வந்தது. மீண்டும் போய் ஒரு 500 வாங்கினார் நண்பர். சோகம் தொடர்ந்தது. மறுநாள் 60 ரூபாய். அய்யய்யோ.. அதற்கடுத்த நாள் 40 ரூபாய் என்று உருண்டு கொண்டே போனது அது. அடுத்த சில தினங்கள் கழித்து வெறும் 6 ரூபாய் 30 பைசா என்ற விலையில் வந்து விழுந்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்தது அது. நண்பரை ஒரு மாதமாகப் பார்க்க முடியவில்லை. (இப்போது 110-120 என்ற விலையில் உள்ளது). எனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவர் பங்கு ஒன்று 10 ரூபாய் என்ற விலையில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பங்குகள் வாங்கியதாகப் பேசிக்கொண்டார்கள். அது மட்டும் உண்மையாயிருந்தால்..??? சொக்கா... சொக்கா... எனக்கில்ல.. எனக்கில்ல.. ஆயிரம் பொற்காசு தருமி போலப் புலம்ப வேண்டியது தான்.

ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் தானே நல்லது. விற்பவர்களும் வாங்குபவர்களும் மாறி மாறி அல்லவா வந்தாக வேண்டும்? இல்லாவிட்டால் எப்படி நல்லபடியாக பரிவர்த்தனை நடக்கும்? லிக்விடிட்டி கிடைக்கவும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாக வேண்டுமே. ஏறிக்கொண்டே மட்டும் போனால் எப்படி? கொஞ்சம் தலையில் தட்டி, குட்டி வைத்தால்தானே சரி. இறங்கி, ஏறி, இறங்கி, ஏறி என்று இருந்தால்தான் வாங்கி, விற்று, வாங்கி, விற்று என்று எதையாவது செய்ய முடியும். இலாபமோ நஷ்டமோ பார்க்க முடியும்..


பொதுவாக பெரிய பங்குத் தரகு நிறுவனங்களில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் டிபார்ட்மெண்டுகள் உண்டு. பெரிய வாடிக்கையாளர்களின் பங்கு விலை நிலவரங்களை கவனித்துக்கொண்டிருப்பது அவர்களின் முக்கிய வேலை. ஏனென்றால் லாட் லாட்டாக வாங்கப்படும் பங்குகளுக்கும், பியூச்சர் கான்டிராக்டுகளுக்கும் அவர்கள் கஸ்டமர்களிடம் முழுத் தொகை வசூலிக்கத் தேவையில்லை. மார்ஜின் (பங்குகளின் மொத்த விலையில் சுமார் 20% முதல் 40% வரை) எனப்படும் குறிப்பிட்ட சதவீதம் வாங்கினால் போதும். ஆனால் சந்தை வீழ்ச்சியின் போது கொஞ்சமாகக் கட்டப்பட்ட மார்ஜின் தொகை முழுதாகத் துடைத்துக் கொண்டல்லவா போய் விடும்? பெரிய தலைவலியாயிற்றே. வாடிக்கையாளரையும் சமாளிக்க வேண்டும். மும்பை (அ) தேசிய பங்குச் சந்தைக்கும் பதில் சொல்லியாக வேண்டும். வரிசையாக போன் வந்தபடி இருந்தால் என்னதான் செய்வது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் விவகாரங்கள், 2008 ஜனவரி 21 (சுமார் 1400 புள்ளிகள் வீழ்ச்சி), 2006 மே 22 (சுமார் 1100 புள்ளிகள் வீழ்ச்சி), சத்யம் ராமலிங்க ராஜூ விவகாரம், ரிலையன்ஸ் அண்ணன் தம்பிச் சண்டை, கார்கில், மும்பையில் தீவிரவாதத்தாக்குதல்கள் போன்ற சிறப்புத்(?) தினங்களி்ல் அவர்கள் போன் ரிஸீவரை கீழே எடுத்து வைத்து விட்டு, கதவைப் பூட்டிக்கொண்டுதான் வேலை பார்த்தார்கள். வாடிக்கையாளர் தொந்திரவுதான் காரணம். முழுத் தொகை கொடுக்காமல் மார்ஜின் தொகை மட்டும் கொடுத்து விட்டு வாங்கி வைத்த பங்குகளை விற்காதே விற்காதே என்றால் எப்படி முடியும்? ஒன்று முழுத்தொகையும் கட்டு, அல்லது விற்று விடு. இல்லாவிட்டால் தரகு நிறுவனம் தான் முழுத் தொகையையும் கட்டி பங்குகளை டெலிவரி எடுக்க வேண்டும். எடுத்து வைத்து? என்ன செய்வதாம்? பணியாரம் சுட்டு சாப்பிட வேண்டியதுதான். முழுவதும் வீழ்ந்த பின் எந்த வாடிக்கையாளர் பணம் கட்டுவார்? எஸ்கேப்.....

இதே போல கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். தங்கத்துக்கும் பங்குச்சந்தைக்கும் எதிர்மறைத் தொடர்பு உண்டு. எப்போதெல்லாம் பங்குச் சந்தை இறங்குகிறதோ அப்போது தங்கத்தி்ன் விலை ஏறும். ஏன்? சரியும் பங்குகளை விற்று வரும் பணத்தை எங்கே போடுவதாம்? எல்லா பெருந்தலைகளும் தங்கம் தான் வாங்கி வைப்பார்கள். பின் ஏறாமல் என்ன செய்யும்? கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வரிசையாக நான்கு தினங்கள் சந்தை சரிந்தது. தங்கம் ஏறியது. ஐந்தாம் நாள் செய்தித்தாள்களில் "தங்கம் வரலாறு காணாத(?) விலை ஏற்றம்?" என்று வழக்கம் போல தலையங்கம் எழுதினார்கள். டீக்கடைகளில் தொங்கிய வால் போஸ்டர்களை ஏழை மக்கள் வாய்பிளந்து பார்த்தபடி போனார்கள். (அதற்காக பங்குச் சந்தை ஏறும் போது தங்கம் விலை இறங்குமா என்று கேட்காதீர்கள். அது கஷ்டம். பண்டிகைக்காலம், இறக்குமதி குறைவு, ஏற்றுமதி அதிகம், தென் ஆப்பிரிக்காவில் சுரங்கம் மூடல், லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் கையிருப்பு குறைவு என்று வேறு ஏதேனும் காரணம் காட்டி விலை ஏறும்)


நான் சொல்ல வருவது என்னவென்றால், வீழ்ச்சிகள் சகஜம். ஆனால் இந்த எல்லா வீழ்ச்சிகளையும் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். மார்க்கெட் கீழே விழுந்ததில் நாம் வைத்துள்ள பங்குக்கும் பங்கு உள்ளதா அல்லது எல்லாரும் விழுந்ததால் நம்மாளும் விழுந்தாரா என்று கவனியுங்கள். காரணம் இரண்டாவதாக இருக்கும் பட்சத்தில் நமக்கு ஜாக்பாட்தான். கொஞ்சம் ஆற விட்டு, உள்ளே புகுந்து இன்னும் கொஞ்சம் வாங்கி வைத்து ஆவரேஜ் செய்யுங்கள். விலை குறைவான நேரத்தில் வாங்கி வைத்தால் மார்க்கெட் ரெக்கவரியின் போது விற்றுக் கொள்ளலாம். ஆனால்.. கவனம். வாங்கும் முன் நம் பங்கின் அடிப்படை பலமாக உள்ளதா? மார்க்கெட் இன்னும் வீழுமா? வீழ்ந்தால் நம் பங்கின் நிலை என்ன? தாக்குப் பிடிக்குமா? அல்லது பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ் மட்டம் வீக்கு கதைதானா என்ற விஷயங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

இதில் எப்போதாவது ஆச்சர்ய அதிர்ச்சிகளும் கிட்டும். சில சமயங்களில் சந்தை எதிர்பாராமல் குபீர்பாய்ச்சலில் பாய்ந்து மேலேறி மேஜிக் காட்டுவதும் உண்டு. 2009 மே மாதம் 18ம் தேதி ஒரே நாளில் 2110 புள்ளிகள் ஏறி சந்தையையே ஸ்தம்பிக்க வைத்தது சென்செக்ஸ். மத்திய அரசாக ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரும் என்று நம்பப்பட்ட காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் வெற்றி சந்தையில் பிரதிபலித்ததாகக் கூறப்பட்டது. சந்தையின் வரலாற்றிலேயே புள்ளிகள் ஏறியதற்காக சந்தை நிறுத்தப்பட்டதும் அன்றுதான். இதே போல் மறுபடியும் நடக்குமா? வாய்ப்புகள் ரொம்பக்கம்மிதான். பார்க்கலாம். ஆனால் அப்படி திடீரென மேலேறும் சமயத்தில் விலையேறிய குறிப்பிட்ட பங்குகள் உங்களிடம் இருக்க வேண்டுமே? அதுவல்லவா முக்கியம், அப்படியில்லாவிட்டால் மானாட மயிலாட உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருக்க வேண்டிதுதான்.

மீண்டும் சந்திப்போம்.... இலாபம் வரும் என்ற நம்பிக்கையுடன்.....
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக