ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

பங்குச்சந்தை ... ஏன் பயம்?

(இக்கட்டுரை கடந்த வருடம் நவம்பர் 2-ம் தேதி நண்பர் செல்வமுரளியுடைய தமிழ்வணிகம் டாட் காமில் வெளியானது)

-எஸ்கா


பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட் பற்றிப் பேச்செடுத்தாலே ஒரு சாராருக்கு உற்சாகம் ஊற்றெடுக்கும். ஆனால் அதில் ஆர்வமுள்ளவர்கள் தவிர மற்ற பலரும் காட்டும் ஒரே எதிர்வினை "ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டம் மாதிரியில்ல".. உண்மையைச் சொன்னால்... அப்படி இல்லை...., (ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான்). பங்குச் சந்தை பற்றி ஏன் இந்தக் குழப்பம்? பயம்? இது தேவையா? நியாயமாகச் சொன்னால் இந்தப் பயம் தேவையே இல்லை.

பங்குச் சந்தை எனப்படும் ஷேர் மார்க்கெட்டில் எத்தனை பேர் வர்த்தகம் புரிகிறார்கள்? சொல்ல முடியுமா? நூற்றுக்கணக்கில்?, ஆயிரக் கணக்கில்?, இலட்சக்கணக்கில்?, கோடிக்கணக்கில்? யெஸ். யூ ஆர் ரைட். கோடிக்கணக்கில் தான். இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டரை கோடி பேர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் புரிகிறார்கள். இத்தனை பேர் வியாபாரம் செய்யும் இடத்தில் கொஞ்சம் கூச்சல் குழப்பம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பதற்றம் வேண்டாம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் இருப்பது போல இங்கும் உண்டு. ரெகுலேட்டரி என்று பெயர். அவர்கள் முடிந்த வரை கூச்சல், குழப்பம், பிரச்சினைகள் வராமல் தடுக்கப் பார்ப்பார்கள்.

பொதுவாக ஷேர் மார்க்கெட்டில் மூன்று வகையான ஆசாமிகள் (நிறுவனங்கள் கூட) உண்டு. Investor, Trader, Speculator என்று. இதில் Investor என்பவர் முதலீட்டாளர், Trader என்பவர் வியாபாரி, வர்த்தகம் செய்பவர், Speculator என்பவர் ஊக (யூகம் - Guess) வணிகம் செய்பவர். பச்சையாகச் சொன்னால் சூதாடி. Traderகள், Investorகளின் எண்ணிக்கையை விட இப்படிப்பட்ட ஸ்பெகுலேட்டர்கள் கூட்டம் அதிகமாகிப்போனதால்தான் சந்தையில் இத்தனை கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது, இத்தனை நிறுவனங்கள் இருக்கின்றன, இந்தியப் பொருளாதாரம் அசைத்துப்பார்க்கப் படுகிறது. சிறு அளவில் வர்த்தகம் செய்யும் நம்மைப் போன்றோருக்கும் லிக்விடிட்டி (வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில், கிட்டத்தட்ட வேண்டிய விலையில்) கிடைக்கிறது.

ஸ்பெகுலேஷன் செய்யும் விருப்பம் உள்ளவர்களுக்காகவே ஃபியூச்சர்ஸ் (எதிர்காலம்) & ஆப்ஷன்ஸ் என்ற வர்த்தகங்களையும் பங்குச் சந்தைகள் அறிமுகப்படுத்தின. அதிலும் தினசரி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அதனால் சிறு முதலீட்டாளர்கள் மட்டும் சற்று நிதானமாக, எச்சரிக்கையாக அடி எடுத்து வைக்க வேண்டும். கரணம் தப்பினால்..

நண்பர் ஒருவரிடம் இன்வெஸ்ட்மெண்ட் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது அவரையும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யச் சொன்னேன். அவருக்கும் இதில் விருப்பம் இருந்தது. ஆனால் ஷேர்களில் இன்வெஸ்ட் செய்வதால் மாதா மாதம் எவ்வளவு கிடைக்கும் என்றார்.. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஷேர் மார்க்கெட் என்பது போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸோ அல்லது மாதா மாதம் வட்டி வரும் பேங்க் முதலீடோ அல்ல.

மற்ற முதலீடுகளுக்கும் இதற்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், ஷேர்கள் மூலம் நீங்கள் நேரடியாக கம்பெனிகளில் முதலீடு செய்கிறீர்கள். அந்தக் கம்பெனியின் வியாபாரத்தில் நடக்கும் லாப நஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள் ஷேரில் எதிரொலிக்கும். நீங்களும் அந்தக் கம்பெனியின் ஒரு (சிறிய) முதலாளி என்பதால் அதன் பலன் உங்களுக்கும் தான்.

ஆனால் வங்கிகளிலோ போஸ்ட் ஆபீஸிலோ முதலீடு செய்யப் படும் பணத்திற்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். அந்தப்பணத்தை பல்வேறு வகைகளில் முதலீடு செய்கிறார்கள். வரும் வருமானத்தில் உங்களுக்கு வட்டியாக ஒரு மிகச் சிறு (8% - 10%) தொகையைக் கொடுத்து விட்டு மீதி (எவ்வளவு வந்தாலும்) அவர்களுக்கு. ஆனால் ஷேரில் செய்யப்படும் முதலீடுகளுக்கு.. லாபமோ, நஷ்டமோ... அது உங்களுக்கே உங்களுக்கு. கொஞ்சம் ரிஸ்க் மாதிரி தெரிந்தாலும் லாபம் அதிகம் வர வாய்ப்புண்டு. 8% என்ன 10% என்ன 100% கூட இலாபமாகக் கிடைக்கலாம். அதாவது போட்ட பணம் டபுள். அவ்வளவு ஏன்? சில நிறுவனங்களின் ஷேர்கள் அதைவிட அதிகமான இலாபமெல்லாம் கொடுத்திருக்கின்றன - ஒரே வருடத்தில்.


ஆனால் இதே விஷயத்தில் மற்றொரு நண்பர் ஒரு படி மேலேயே போய்விட்டார். அவர் "நான் இன்று ஐயாயிரம் ரூபாய் ஷேரில் போடுகிறேன். அடுத்தமாதம் எனக்கு ஏழாயிரத்தைநூறு ரூபாய் ஆக வேண்டும். அப்படி ஏதாவது ஷேர் சொல்லுங்கள்" என்று அசர வைத்துவிட்டார். ஐயாயிரம் ரூபாய் முதலீட்டுக்கு ஒரு மாதத்தில் இரண்டாயிரத்தைநூறு ரூபாயா? அதாவது 50 சதவீதம் ஒரு மாதத்தில். அப்படியானால் 12 மாதத்தில் 600 சதவீதமா? கொள்ளையடிக்கத்தான் போக வேண்டும். அதிலும் கூட ரிஸ்க் உண்டு.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 600% வருமானம் வங்கி வட்டி மூலம் வர வேண்டுமானால் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்? 60 வருடம். ஒரு மனிதனின் வாழ்நாள். ஒரு முழு வாழ்நாளில் வங்கி மூலம் வரும் வருமானத்தை விட அதிகமாக ஒரே வருடத்தில் வர வேண்டும் என்றால் எப்படி? இதைத்தான் பேராசை என்று சொல்வது.

ரொம்பவும் ஆசைப்படாதீர்கள். அப்படி ஆசைப்பட்டு அவசரமாய் பணப் பெட்டியோடு (அதாவது செக் புக்கோடு) உள்ளே வருபவர்களால் தான் ஷேர் மார்க்கெட் இப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. நியாயமாக பேங்க் வட்டியை விட சில விழுக்காடுகள், அல்லது இருமடங்கு இருக்குமா என்று பாருங்கள். இந்தியாவில் கடந்த 1985-2006 க்கு இடைப்பட்ட 20 வருடங்களி்ல் ஷேர்களில் செய்யப்பட்ட முதலீடு சுமார் 17.9% (வருடந்தோறும் - CAGR கணக்கீடு) வருமானத்தை அளித்துள்ளது. இது மற்ற உலக நாடுகளின் சந்தைகள் அளித்துள்ள இலாபத்தின் சராசரியை விட அதிகம்.

இதில் நூற்றுக்கணக்கான விழுக்காடுகள் இலாபம் தந்த பங்குகளும் உண்டு. நஷ்டப்பட்டு அதலபாதாளத்தில் விழுந்த பங்குகளும் உண்டு. கடையை மூடிய கம்பெனிகளும் உண்டு. இவை எல்லாவற்றின் சராசரி தான் இந்த 17.9% வருமானம். ஆக, நாம் கவனம் செலுத்த வேண்டியது சரியான பங்குகள் தேர்வில் தான். நல்ல, மிக நல்ல பங்குகளாகப் பார்த்து தேர்ந்தெடுங்கள். முதலீடு செய்யுங்கள். ஜாலியாக இருங்கள்.


மோனோபலி என்று ஒரு ஆங்கிலப் பதம் உண்டு. ஏகபோக உரிமை, தனியுரிமை என்று சொல்லலாம். அதாகப்பட்டது, தான் இருக்கும் துறையில் தான்தான் வல்லவன். சிங்கம் மாதிரி... மற்ற நிறுவனங்கள் எல்லாம் பொடி, அல்லது போட்டிக்கு நிறுவனமே இல்லை என்ற நிலை.. அம்மாதிரி நிறுவனங்களைக் கண்டுபிடித்து முதலீடு செய்யலாம்.. முதலீடு மட்டும் செய்யுங்கள், காத்திருங்கள்,.. ஒரு நியாயமான காலம் வரை. அப்படிக் காத்திருந்தால் நல்ல அறுவடைதான். காத்திருக்கும் கொக்குக்குத்தான் பெரு மீன்கள் கிடைக்கும்.

மோனோபலி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? மிகவும் சிம்பிள். இன்டர்நெட் என்கிற ஒரு உன்னதமான ஒரு விஷயம் உங்களுக்கு உதவவே காத்திருக்கிறது. அது ஒரு அலாவுதீன் பூதம். சரியாகப் பயன்படுத்தினால் உங்களுக்கு ஜாக்பாட் தான். மோனோபலியில் உதாரணமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்வோம். இன்றைக்கு நீர் மின்சாரத்துக்கு மாற்றாக விளங்குவது காற்றாலை மின்சாரம். காற்றாலை மின்சாரத்திற்கான துறையில் ஒரே நிறுவனமாக, ஜாம்பவானாக இருப்பது சுஸ்லான் எனர்ஜி என்ற நிறுவனம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு யாரும் இல்லை.

அதே போல பார் ட்ரானிக்ஸ் என்று ஒன்று. நீங்கள் வாங்கும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் கருப்பு வெள்ளை பார் கோடுகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? ஷாப்பிங் மால்களில் அவற்றை பில் போடாமல் வெளியில் எடுத்துப் போனால் ஊய்.. ஊய்.. ஊய்.. என்று சைரன் அலறுமே, அதே கோட்தான். அவற்றை அச்சடித்துத் தரும் நிறுவனம் அது. இத் துறையிலேயே ஒன்றுதான். இது போன்று பல நிறுவனங்கள். அப்படிப்பட்ட நல்ல நிறுவனங்களாகப் பார்த்து முதலீடு (கவனிக்கவும், முதலீடு) செய்யுங்கள். பலன்? பழம்தான்.

ஷேர் மார்க்கெட்டைப் பார்த்து அச்சம் வேண்டாம். உங்கள் முதலீட்டுத் தொகை கையைக்கடிக்காத தொகையா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம், மருத்துவம், கல்வி முதலிய முக்கியச் செலவினங்களுக்காக வைத்திருக்கும் தொகைகளில் கை வைக்காதீர்கள். உபரித்தொகை மட்டுமே பங்குச் சந்தைக்கு என்று முடிவு செய்து இறங்குங்கள். ஜெயம் தான். மீண்டும் சந்திப்போம்.
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

6 கருத்துகள்:

  1. பங்கு வர்த்தகம் பற்றிய எனது நீண்ட நாள் சந்தேகத்துக்கு உங்களின் விளக்கம் அதுவும் தமிழில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    இதன் மூலம் பங்கு வர்த்தகம் மீது இருந்த பயம் எனக்கு சென்றுவிட்டது என்று சொல்லவேண்டும்.

    மேலும் நான் என்னோடைய எதிர் காலத்தை பற்றி www.yourastrology.co.in என்ற இணையத்தளத்தில் பார்த்து பயனடைந்தேன். நீங்களும் உங்கள் எதிர்காலம் பற்றி மிக பயனுள்ள தகவலை அறிந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. //sridharan சொன்னது…
    பங்கு வர்த்தகம் பற்றிய எனது நீண்ட நாள் சந்தேகத்துக்கு உங்களின் விளக்கம் அதுவும் தமிழில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    இதன் மூலம் பங்கு வர்த்தகம் மீது இருந்த பயம் எனக்கு சென்றுவிட்டது என்று சொல்லவேண்டும்.//

    நன்றி ஸ்ரீதரன். இதே வலைப்பூவில் பங்குச் சந்தை பற்றி எழுதப்பட்டுள்ள இன்னும் இரு கட்டுரைகளை படித்துப்பாருங்கள். உங்களுக்குப்பயனளிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. annualreport,balancesheet,bargain,bluechip,captalaisation,dividend,equities,liquidation,net asset value,portfolio,காளைமாடு,
    எருமைமாடு,கரடி,புலின்னு பயமுறுத்தாம எளிமையா சொல்லியிருக்கீங்க...இன்னும் எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  4. //சேலம் தேவா annualreport,balancesheet,bargain,bluechip,captalaisation,dividend,equities,liquidation,net asset value,portfolio,காளைமாடு,
    எருமைமாடு,கரடி,புலின்னு பயமுறுத்தாம எளிமையா சொல்லியிருக்கீங்க...இன்னும் எழுதுங்க... //

    ஷேர் மார்க்கெட்டுன்னு ஆரம்பிச்சாலே நீங்க சொல்ற எல்லா விஷயத்தையும் தாண்டித்தான் வந்தாகணும். இந்தக் கட்டுரை சும்மா ஒரு Eye opener அவ்வளவுதான். சுய முன்னேற்றக் கட்டுரை மாதிரி. ஆனா annualreport, balancesheet, bargain, bluechip, captalaisation, dividend, equities, liquidation, net asset value, portfolio, காளைமாடு, பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சா பயம் வரத்தான் செய்யும். வேற வழியல்லை தேவா.

    பதிலளிநீக்கு
  5. பாலசுப்பிரமணியம் ஈரோடு2 மார்ச், 2016 அன்று PM 11:29

    என்னை போன்ற ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தாங்கே முதலீடு செய்ய வேண்டு பல நிறுவனங்களை விபரங்களை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு