புதன், 11 ஆகஸ்ட், 2010

அறிவுத்திருட்டும், துணுக்கு எழுத்தாளர்களும்

-எஸ்கா

(இக்கட்டுரை ஆகஸ்ட் 9ம் தேதியன்று உயிர்மையின் உயிரோசை டாட் காமில் வெளியானது.)
--------------------------------------------
‘அங்காடித்’தெரு படம் நான் இன்னும் பார்க்கவே இல்லை. பலரும் ஓவர் சோகம் என்று சொன்னதால் பார்க்காமல் விட்டு விட்டேன். ஆனால் சமீபத்தில் வீட்டில் வழக்கம் போல சேனல் சேனலாகத் தாவிக் கொண்டிருக்கும் போது வசந்த் டி.வி.யோ, கேப்டன் டி.வி.யோ எதோ ஒன்றில் அந்தப் படத்தில் இருந்து ஒரு சீனைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் காட்சியில் அந்த குண்டுப் பையனை விளாசிக்கொண்டிருப்பார் அவனது அப்பா. அவன் சொல்வான். "அப்பா சும்மாருப்பா, எப்பப்பாரு என்னைப் பக்கத்து வீட்டுப்பொண்ணோட கம்பேர் பண்ணிக்கிட்டே இருப்பியே. இப்பப்பாரு, அவ 470 மார்க், நான் 480 மார்க்". அப்பா. "அடப்பாவி. அவ டென்த், நீ ப்ளஸ் டூ-டா" என்பார்.

இதைப் பார்த்ததும் எனக்குப் பகீரென்றது. ஏண்டா என்கிறீர்களா? நான் எழுதி மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளியான ஜோக் அது. (நம்பாதவர்கள் yeskha@gmail.com என்ற ஐ.டி.க்கு மெயில் அனுப்பி அந்தப் பக்கத்தின் ஸ்கேன் காப்பியை வாங்கிக்கொள்ளலாம்). ‘விகடன்’, ‘குமுதம்’, ஜூ.வி, ‘ஆனந்த ஜோக்ஸ்’ என்று சில பத்திரிகைகளில் இதுவரை என்னுடைய சுமார் 150 ஜோக்குகள் வெளியாகியிருக்கின்றன. நாம் எழுதிய ஜோக் ஒரே வாரத்தில் நமக்கே எஸ்.எம்.எஸ்ஸாகவும், நமக்கே ஈ.மெயிலிலும், அல்லது வேறொரு பத்திரிகையில் வேறொரு பெயரில் வெளிவந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் கோபம் வந்தது. அப்புறம் எரிச்சல் வந்தது. அப்புறம் மரத்துப்போய் விட்டது.

தற்போது வாசகர் கடிதத்தில் ஆரம்பித்து, ஜோக்குகள், கவிதைகள், ஏன் கட்டுரைகள் வரை பரவலாக அப்படியே சுடும் வேலை கனஜோராக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பதிவர் ஜாக்கி சேகரின் ஆங்கிலப்பட விமர்சனம் ஒன்றைத் தன் பெயரி்ல் ‘பாக்யா’ பத்திரிகைக்கு அனுப்பி வெளியிட்டு விட்டார் சி.பி.செந்தில்குமார் என்ற ஜோக் எழுத்தாளர் கம் பதிவர் என்ற சர்ச்சை பதிவுலகில் வெடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

அவ்வளவு ஏன்? ‘விகடன்’ குழுமத்தின் "யூத்ஃபுல் விகடன்" ஒரு பிரபல இணையதளம். அந்த இணையதளத்தில் "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது எப்படி?" என்ற பெயரில் என்னுடைய நகைச்சுவைப்படைப்பு ஒன்று வெளிவந்தது. சில வாரங்கள் கழித்து அதே, அப்படியே ‘கல்கி’ புத்தகத்தில் "ஜான்ஸி ராணி" என்ற பெயரில் வெளிவந்திருந்தது. ‘யூத்ஃபுல் விகட’னையே காப்பி பேஸ்ட் செய்து அனுப்ப அவனுக்கு / அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

எழுதும் பழக்கம் இருப்பவர்கள் பல பத்திரிகைகளையும் படிப்பார்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவரும் என்று கூட அந்த நாதாறிக்கு அறிவு இல்லை போலிருக்கிறது. அது சரி.. அந்தப் பிரபல பத்திரிகைகளுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் எல்லாம் அதை எழுதி அனுப்புபவர்களிடம் குறைந்தபட்சம் "இந்தப் படைப்பு சொந்தக் கற்பனையே" என்ற உறுதி மொழியைக்கூட வாங்குவதில்லை போலிருக்கிறது. கொதித்துப்போய் போன் செய்தாலோ, கடிதம் எழுதினாலோ எந்த பதிலும் இல்லை. ‘கல்கி’க்கு மெயில் அனுப்பினால் சிம்பிளாக "sorry" என்று ஒரு பதில் வருகிறது "பொறுப்பாசிரியர் சார்பாக" என்று யாரோ பெயர் போட்டு. அந்த "ஜான்ஸி ராணி" யாரென்றே தெரியவில்லை. திருடுபவர்களின் தைரியம் எல்லை மீறித்தான் போய்க்கொண்டிருக்கிறது.

சொல்லப்போனால் இன்றைய வளர்ந்து வரும் டெக்னாலஜி யுகத்தில் எதுவுமே சீக்ரெட் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் சொந்தம் என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை யார் புரிந்து கொண்டார்களோ, செயல்படுத்தினார்களோ தெரியாது. அதை நம்ம ஊர் ஆட்கள் நன்றாகவே செயல்படுத்துகிறார்கள். கலக்கப்போவது யாரு? அசத்தப்போவது யாரு? கலக்கல் மன்னர்கள் போன்றவர்கள் இந்த ஜோக் வகையறாக்களை அழகாக சுட்டுத் தள்ளுகிறார்கள். அவர்கள் சொல்லும் உதிரி ஜோக்குகள் எல்லாம் எங்களை மாதிரி ஜோக் எழுத்தாளர்கள் எழுதுவதே. அவ்வளவு ஏன்? இந்த ஈரோடு மகேஸு, மதுரை முத்து, சிவகார்த்திகேயன் வகையறாக்கள் கூட என் ஜோக்குகளில் இரண்டிரண்டை உருவியிருக்கிறார்கள்...

(தமிழிஷில் ஓட்டுப் போடுவீர்கள்தானே??)

என்னமோ போங்கய்யா, நாங்கள் எல்லாம் போஸ்ட் கார்டு (பத்துப் பைசா இருந்த போதில் இருந்து வாங்கிவருகிறேன்) வாங்கி வந்து உட்கார்ந்த இடத்தில் இருந்து இருக்கும் கொஞ்சூண்டு மூளையையும் கசக்கி யோசித்து ஒரு நாளைக்கு ஐந்து ஜோக்குகள் என்ற கணக்கில் ‘விகட’னுக்கும், ‘குமுத’த்துக்கும் எழுதிப்போட்டு (ஆக, வாரத்துக்கு முப்பத்தைந்து) பப்ளிஷ் ஆகாத ஜோக்குகளை நோட் பண்ணி வைத்து அவற்றை மூன்று வாரங்கள் கழித்து மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்பி அதில் ‘விகட’னில் ஒன்று, ‘குமுத’த்தில் ஒன்று, வேறெதாவதில் ஒன்று என பப்ளிஷ் ஆகி புக்கைக் கையில் வாங்கிப் பாக்கும்போது உஸ், அப்பாடா என்று இருக்கும்.

அதற்கு மணியார்டர் வரும் ஐம்பது ரூபாய்க்கு (விகடன் ஐந்து ரூபாயில் இருந்து பதினைந்து ரூபாய் ஆகியிருக்கிறது இந்த ஐந்து வருடங்களில். ஆனால் ஜோக்குகளுக்கான சன்மானம் இன்னமும் ஐம்பது ரூபாய்தான்) பல நாட்கள் கழித்து. பத்துப் பதினைந்து நாளாகும். ‘விகட’னில் இருந்து வருவதற்கு. அதுவும் ‘குமுத’த்தில் இருந்தென்றால் பணம் வர மூன்று மாதமாகும். அந்த மூன்று மாதத்தில் ‘குமுத’த்தில் வெளிவந்த வாசகர் கடிதம், ஜோக்ஸ் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே செக்காக வந்து விடும். ஸோ, பயப்படத் தேவையில்லை. சில புத்தகங்கள் காம்ப்ளிமெண்டரி காப்பி கூட அனுப்பாது. நண்பர்கள் யாராவது ஃபோன் செய்து, ‘டேய், இந்த புக்குல இந்த பேஜுல வந்திருக்கு பாரு’ என்று சொல்ல வேண்டும் அல்லது கொஞ்ச நாள் கழித்து மணியார்டர் வந்தால் தான் தெரியும். அப்படி எல்லாம் சில்லறை சுகங்களை அனுபவிக்கும் எங்களுக்கு இந்த அறிவுத் திருட்டு என்ன மாதிரி உணர்ச்சியைக் கொடுக்கும் சொல்லுங்கள்??

யோவ், நீங்கள்லாம் இப்படி எங்க சரக்கை உருவிக்கொண்டிருந்தால் நாங்கள்லாம் எப்பய்யா பெரியாளு ஆகறது. நானாவது பரவாயில்லை. எனக்கு சீனியர்கள்?. தஞ்சை தாமு என்று ஒரு பெரியண்ணன் இருக்கிறார். முகம் கூடத் தெரியாது. தல ஜோக்காக எழுதித் தள்ளிக்கொண்டே இருப்பார். ‘விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’ என்று மூன்று புத்தகங்களில் மட்டுமே மாதம் சுமார் நாற்பது ஐம்பது ஜோக்குகளாவது வெளியாகும். அவர் பெயரைப் பார்த்தாலே எனக்கு ஒரு மாதிரி இருக்கும். என்னடா இந்த ஆள் எந்த புக்கை எடுத்தாலும் அதில் ஜோக் எழுதி வைத்திருக்கிறார் என்று. அவர் ஜோக்கெல்லாம் இப்படித் திருடுபோனால் எப்படி இருக்கும் அவருக்கு?

இதுபோல் ஒன்றல்ல ரெண்டல்ல. பல நூறுகள், ஏன் ஆயிரக்கணக்கான ஜோக்குகள் இவ்வாறு சுடப்பட்டு சினிமாக்களில் செருகப்பட்டவையே. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ஜூ.வி-யின் "டயலாக்" பகுதி மிகப்பிரசித்தம். அப்பகுதியில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து "டயலாக்" என்ற பெயரிலேயே இரு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது விகடன் பிரசுரம். அதில் முதல் புத்தகத்தில் இருந்து நான்கைந்து ஜோக்குகள் ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின் நடித்த ‘மெர்க்குரிப்பூக்கள்’ என்ற படத்தில் அப்படியே வார்த்தை மாறாமல் காப்பியடித்து உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. (என்னென்ன என்று நான் சொல்ல மாட்டேன். "டயலாக்" புத்தகம் ஐம்பது ரூபாய். "மெர்க்குரிப்பூக்கள்" சி.டி வாங்கியோ டவுன்லோட் செய்தோ பார்த்துக்கொள்ளுங்கள்.)

அது சரி. இதெல்லாம் என்ன ஜோக்குத் திருட்டு, சப்ப மேட்டர்....பெரிய பெரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளில் இருந்தெல்லாம் திருட்டு வேலை நடக்கும். நாஞ்சில் நாடன் கூட ஒருமுறை இதைப்பற்றி நொந்து போய் புலம்பியிருந்தார். கனவுத் ‘தொழிற்சாலை’யில் வாய்ப்பு கிடைக்கப்போராடி சுற்றும் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் என்ற ஒரு வர்க்கத்தில் பலரும் இந்த வேலையைச் செய்வதுண்டு. டைரக்டருடன் ரூம் போட்டு டிஸ்கஷன் வைக்கும்போது சீன் பிடிக்கும் வேலையில் கொத்து பொரோட்டா போடப்படுபவை பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கதைகளே. என்ன ஒன்று? ஆணைப் பெண்ணாகவும், மாமனாரை நாத்தனாராகவும், பாஸை எம்ப்ளாயீ ஆகவும் கொஞ்சம் கொஞ்சம் மாற்றி சீன் வைத்தால் ஒன்றும் தெரியாது.

உலக எழுத்தாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இப்போது அந்த சிறுகதைகளின் இடத்தை உலக சினிமா டி.வி.டி.க்கள் நிரப்புகின்றன. டிஸ்கஷன் போகும்போதே இரண்டு மூட்டை டிவிடிக்களுடன் தான் ரூம் போடுகிறார்கள் இன்றைய படக்குழுவினர். ‘அயன்’ படத்தில் சூர்யாவும், கருணாஸும் பேசும் காட்சி ஓர் உதாரணம். (செல்வராகவன் வீட்டில் இரண்டு அறைகள் நிறைய உலக சினிமா டிவிடி வைத்திருக்கிறாராம்). அவார்டுகள் வாங்கிய உலகப்படமான ‘ஸோட்ஸி’ படத்தை அப்படியே சீன் பை சீனாக "யோகி" என்று படமெடுத்து அதே உலகப்பட விழாக்களுக்கு அனுப்பிய தைரியசாலிகள் இருக்கும் இடம் இது (இதையெல்லாம் அப்பட்டமாக உடனுக்குடன் வெளிக்கொண்டு வரும் பதிவர்கள் என்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு நன்றி).

அப்படியிருக்கையில் ஜோக்குத் திருட்டெல்லாம் எம்மாத்திரம். போ, போ. போயிட்டே இரு. ஆஹா, ஜோக்குகள் திருட்டு பற்றி எழுத ஆரம்பித்து கட்டுரை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் உதாரணங்கள் சொல்ல ஆரம்பித்தால் ரொம்பவும் நாறிப்போகும். வேண்டாம். இதைக் கொஞ்சம் பாஸிடிவ்வாக கொண்டு வந்து முடிக்கத்தான் ஆசை.

வாழ்க்கையை ரசம் குறையாமல் வைத்திருப்பது நகைச்சுவை மட்டுமே. எவ்வளவு கோபம், துக்கம், ஆத்திரம், டென்ஷன் இருந்தாலும் அவற்றைக் குறைத்து வாழ்வைப் பிரச்சினையில்லாமல் நடத்த உதவுவது நகைச்சுவைச் சுவையே. நகைச்சுவை நடிகர்களில் துவங்கி நகைச்சுவை எழுத்தாளர்கள் வரை நமக்கு அந்த உதவியைச் செய்பவர்கள் பலர். அவ்வாறு ஒரு சிறு பங்கைத்தரும் ஜோக் எழுத்தாளர்கள் பலர் உண்டு.

அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு வாழ்த்து அல்லது நன்றி. இந்தப் பெயர்களை நீங்கள் எங்காவது கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள். குறைந்தது இவர்களில் பத்துப் பதினைந்து பேர்களின் பெயர்களாவது தெரிந்திருந்தால் நீங்கள் ரெகுலராகப் பத்திரிகைகள் வாசிப்பவரே தான். பாருங்களேன்.

தஞ்சை தாமு, ஈரோடு ஜெயாப்ரியன், குட்டி மு.வெங்கடேசன், தூத்துக்குடி சகிதா முருகன், எஸ்.எஸ்.பூங்கதிர், தஞ்சை ராம்.ஆதிநாராயணன், பர்வதவர்த்தினி, ஜக்கி, முத்து, வேளச்சேரி வீ.விஷ்ணுகுமார், தஞ்சை வளர்மதி, சுந்தரப்பெருமாள் கோவில் தே.ராஜாசிங் ஜெயக்குமார், கோவை டி.ஜெய்சிங், புதூர் பாலா, லெ.நா.சிவக்குமார், அம்பை தேவா, கொளக்குடி சரவணன், குளச்சல் எஸ்.முகம்மது யூசுப், வழுதூர் வைகை ஆறுமுகம், கள்ளியம்புதூர் சிக்ஸ்முகம், புளியரை கணேசன், டி.சேகர், சொக்கம்பட்டி தேவதாசன், பாளை பசும்பொன், அதிரை புகாரி, அவ்வை.கே.சஞ்சீவிபாரதி, கோபிசெட்டிபாளையம் ஜி.கே.எஸ்.மூர்த்தி, ஈரோடு வீ.ரவீந்திரன்,

இடைப்பாடி ஜெ.மாணிக்கவாசகம், சாயம்.வெ.ஜெயராமன், சென்னிமலை சி.பி.செந்தில்குமார், தஞ்சை அனார்கலி, ரிச்சு, வந்தை ஜி.கே நிதி, ராஜபாளையம் பேச்சி, அரவக்குறிச்சிப்பட்டி எம்.அசோக்ராஜா, அவ்வையார்பாளையம் ஏ.எஸ்.யோகானந்தம், திருமயம் பெ.பாண்டியன், ஓரியூர் கே.சேகர், போளூர் சி.ரகுபதி, க.கலைவாணன், ராசா தேசிங்கு, ரிஷிவந்தியா, மன்னன், சிவம், லீலாஜி, சாத்தூர் மிக்கேல்ராஜ், சென்னை சாரதி டேச்சு, சேலம் அ.ரியாஸ், கொங்கணாபுரம் வே.செந்தில்குமார், குருவை சோலோ செல்வா, சேலம் எஸ்கா (நான்தாங்க) ஆகிய முகம் தெரியாத ஜோக் எழுத்தாளர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

மேலே உள்ள பெயர்களை என் ஞாபகத்தில் உள்ள வரை மட்டும் எடுத்துக் குறித்திருக்கிறேன். மறந்திருந்து விட்டுப்போயிருந்தால் மன்னிக்கவும். உங்களுக்குத் தெரிந்தால் எடுத்துக் கொடுங்கள். அவர்களுக்கு ஒரு சிறு பாராட்டாக இருக்குமே.

------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் அதாவது இட்லியில், ஸாரி, இன்ட்லியில்.... ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------

6 கருத்துகள்:

 1. வள்ளுவரும்தான் நெறய எழுதி வச்சிருக்காரு!
  அதையும்தான் நெறயபேர் use பண்றாங்க!
  உங்க பேரும் வரலாற்றுல வரும் வுடுங்க!!!

  பதிலளிநீக்கு
 2. dear yeskha,

  nan ellam joke paddithu neeriya sirikka than therium. antha nimisum ku paddicitu ungalku valthu solla time/mood irunthal than solla mudiyum. indha katturaiya paditha thu appuram kojam idathatil valli. ivaga ellarumkum enn manmara valthugal. idhai control panna copy write laws kojam kadumaiyaka amu paduthinal than enna.
  may be yarum enda alavuku yarum muyarchi eduthathu illai nu nenaikiran. any how idhuku ennal muditha support pannuvan varum kalangil.
  anbudan suresh.k. kuwait.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தேவா, இந்த ஆசை எனக்கும் ரொம்ப நாளா இருக்கு. அதனாலதான் நான் ஸ்கூல்ல படிக்கும் போது வரலாற்று புக்குல சாணக்யா பாடத்துல எல்லாம் என் பேரை எழுதி வைப்பேன்..

  பதிலளிநீக்கு
 4. நன்றி சுரேஷ்.. இதெல்லாம் "திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" கேஸ். ஒண்ணும் பண்ண முடியாது.

  பதிலளிநீக்கு
 5. படைப்பு உலகம் அவ்வாறு உள்ளது! போட்டியில் திக்கு முக்காடி கொண்டிருக்கிறார்கள். அந்த நெருக்கடியில், அவர்களின் அறிவு மழுங்கி விடுகிறது. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று இந்த வெறி. விடுங்கள் யெக்க்ஷா! மனம் புழுங்கி என்ன ஆவ போகிறது.

  கீழானோரை நினைத்து சிரித்து விட்டு போக வேண்டியது தான்.

  உங்க.. உறவுகாரன் அப்பு!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு. அறிவுத்திருட்டு எல்லா மட்டத்திலும் வந்துவிட்டது வேதனை தான்!

  பதிலளிநீக்கு