திங்கள், 13 செப்டம்பர், 2010

சேலம் ஸ்பெஷல்

நேற்றைய (13 செப்டம்பர் 2010) உயிரோசை டாட் காமில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.
--------------------------------------------
நீண்ட நாட்களாகவே சேலம் பற்றி எழுத வேண்டும் என்று யோசனை, ஆசை. ஆனால் நம்ம ஊர்தானே, நாளைக்கு எழுதலாம், நாளன்னைக்கு எழுதலாம் என்று விட்டால் ஒரேயடியாகத் தள்ளிப்போகிறது. ஆஹா இப்படியே விட்டுப்போனால் நன்றாயிருக்காது. அது தாய் மண்ணுக்குச் செய்யும் துரோகம் இல்லையா? இதோ பிடியுங்கள் சேலம் ஸ்பெஷல். (இந்த வாரம் டிரான்ஸ்போர்ட் மட்டும்)

சேலத்தில் மிக முக்கியமான கேந்திரம் என்றால் அது சேலம் புதிய பஸ் நிலையம் தான். "பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்" என்ற பெயரை யாரும் வாசிப்பதே இல்லை. அனைத்து வெளியூர் பஸ்களும் வந்து புறப்பட்டுச் செல்லும் இடம் இதுதான். எந்நேரத்திலும் பஸ் உண்டு இங்கே. புதிய பஸ் நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் ஒரு அழகான ஏரி இருந்ததாம். (past tense) அச்சுவான் ஏரி என்று அழைக்கப்பட்ட அந்த ஏரியைத் தூர்த்து தான் புதிய பஸ் நிலையம் ஆக்கப்பட்டதாம்... அதற்கு முன் அதெல்லாம் புறநகர்ப்பகுதியாம்.


இருபத்தைந்து ரூபாய் காசு வைத்திருந்தால் வழிப்பறி நடக்குமாம் (இருபது வருடங்களுக்கு முன்பு) ஐம்பது ரூபாய் வைத்திருந்தால் ஆள் காலி. இப்போது என்னடாவென்றால் அது சேலத்தின் மையப்பகுதி ஆகிவிட்டது. அங்கே நிலத்தின் மதிப்பும் கன்னா பின்னாவென்று ஏறிப்போய்விட்டது. இப்போது அங்கே நிலம் வைத்திருந்தால் நீங்கள் ஒரு வி.ஐ.பி. சுத்தி முத்தி விவசாயம் நடந்து கொண்டிருந்த ஏரியாக்கள் எல்லாம் விடாமல் விலைக்கு வாங்கப்பட்டு வரிசையாக அடுக்குமாடி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

புதிய பஸ் நிலையத்தைத் தாண்டி எல்லா ஊர்களுக்குமான பை-பாஸ் சாலைகள் ஐந்தாகப் பிரியுமிடம் ஒன்று ஐந்து ரோடு என்ற பெயரில் உள்ளது. இதுவும் பயங்கர பிஸியான ஏரியா. இதனுடன் சேர்ந்து புதிய பஸ் நிலையம் மிக அதிக டிராஃபிக்கில் சிக்கித்திணறும். போதாக் குறைக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுக்காஸ், கஸானா, லோக்கல் ஏ.வி.ஆர் ஸ்வர்ண மகால், ஏ.என்.எஸ் என்ற ஐந்து பெரிய நகைக்கடைகளும், நான்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும், இரண்டு பெரிய ஹோட்டல்களும், இரண்டு மிகப்பெரிய ஜவுளிக் கடைகளும் அந்த ஏரியாவில் வந்து சேர்ந்ததால் கார் பார்க்கிங் மிகப்பெரிய பிரச்சினை. அவர்களால் நம் போன்ற நார்மல் டூ வீலர் பார்ட்டிகளுக்கும் பிரச்சினை.

லோக்கல் பஸ்களுக்கென்று பழைய பஸ் நிலையம் உள்ளது. ஆனால் சென்னையிலும், கோவையிலும் இருப்பது போல ஆம்னி பஸ்களுக்கென்று தனி பஸ் நிலையம் கிடையாது. திருப்பாச்சி படம் வரை ஃபேமஸான கே.பி.என் டிராவல்ஸின் தலைமையிடம் எங்கள் ஊர்தான். புதிய பஸ் நிலையத்திற்கு நேரெதிரில் அதன் அலுவலகம். ஒன்றன் பின் ஒன்றாக ஷெட்யூல் போட்டு வண்டிகள் வரும், ஒன்று கிளம்பியவுடன் மற்றொன்று. ஏனென்றால் பார்க்கிங் பிரச்சினை...

பழைய பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் விக்டோரியா தியேட்டர் என்று ஒன்று இருந்ததாம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது இடிக்கப்பட்டு விக்டோரியா மைதானம் என்ற பெயரில் இருந்தது. இப்போது அங்கே அரசு வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு கடைகள் இயங்கி வருகின்றன. பயங்கர பிஸி ஏரியா ஆகி விட்டது. நான் அங்கே போவது ஆங்கிலப்பட டிவிடிக்கள் வாங்க மட்டும் தான். அண்ணன் ஜாக்கியாரின் பதிவில் ஏற்றப்படும் படங்களையெல்லாம் அங்கே தான் வாங்குவது வழக்கம். டிவிடி ஒன்று முப்பது ரூபாய் (நான் ஒரே டிவிடியில் நான்கைந்து படங்கள் இருக்கும் காம்போ பேக் தான் வாங்குவேன்)

தற்போதைய மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பழைய கட்டிடத்திலேயே பழைய பஸ் நிலையம் இயங்கி வருவதால் அங்கே எப்போதும் கூட்டம் பிதுங்கித் தள்ளும். சுற்றியிருக்கும் பதினெட்டு (சும்மா ஒரு ஃபுளோவில் சொன்னேன், உண்மையில் நிறைய) பட்டிகளில் இருந்து வரும் பட்டிக் காட்டான், ஸாரி, பட்டிக் காட்டு ஜென்டில் மேன் மற்றும் ஜென்டில் உமன்களின் கூட்டம் நெறித்துத் தள்ளும். அதுவும் எதிரில் உள்ள (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி போட்டு (கூடவே மழையும் வந்து) விட்டால் சூப்பராக இருக்கும்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் கலைஞர் சுமார் 800 புதிய லோக்கல் பேருந்துகளையும், சுமார் 20 ஏஸி பஸ்களையும், 21 டிரெயிலர்களையும் அறிமுகப்படுத்தினார் அல்லவா? (இரண்டு பஸ்களை வரிசையாக ரயில் போல இணைத்தால் எப்படி இருக்கும்? அதுதான் டிரெயிலர்) அந்த டிரெயிலர் வண்டிகள் இங்கே சேலத்தில் இப்போது தான் நுழைந்திருக்கின்றன.

அவையும் மண்புழு, மரவட்டை கணக்காக பழைய பஸ் நிலைத்தை சுற்றிச் சுற்றி ரிவர்ஸ் எடுத்து பொஸிஷனுக்கு வரும் அழகைக்காணக் கண்கோடி வேண்டும். மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை வர்ணணை செய்வதற்கு ஒப்பான திறமை வேண்டும் அவற்றை வர்ணிக்க. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் சென்னை மாதிரி இல்லாமல் இங்கே லோக்கல் பஸ்களில் தனியாரும் உண்டு. இதுபோக மிகக் குறைந்த ஏரியாக்களை மட்டும் சுற்றி வரும் "களவாணி" ஸ்டைல் மினி பஸ்களும் உண்டு.

அம்பானி கணக்காக அதன் ஓனர்களும், அம்பானிகளின் அடிப்பொடிகளும் சேலத்தை சுற்றிச்சுற்றி வருவார்கள். அவர்களும், அரசு பஸ் ஊழியர்களும் கொஞ்சிக்கொள்ளும் அழகை நாள் முழுக்க ரசிக்கலாம். (டைமிங் மிஸ்ஸானால் ஒருத்தரையொருத்தர் கிழித்து தொங்கப்போடுவார்கள்). ஆனால் உண்மையாகவே அரசு டிரைவர்களுக்குப் பெருந்தன்மை கொஞ்சம் அதிகமே. எந்த ஏரியாவாக இருந்தாலும் தனியார் பஸ்ஸூக்கு வழி விட்டே போவார்கள். தன் பஸ்ஸில் கூட்டமே இல்லையென்றாலும் சரி.

பழைய பஸ் நிலையத்திற்கு கொஞ்சம் தள்ளி…………. இரண்டு ஆட்சிகள் முன்பு, வட்ட வடிவத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அது எதற்காக அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தவுடன் காட்சிகள் மாறிப்போய் விட்டன. இப்போது அந்த பஸ் நிலையம் மட்டும் பாழடைந்து எதிரே உள்ள ஒயின் ஷாப்புக்கு நிரந்தர கஸ்டமர்கள் பெற்றுத்தரும் இடமாக மாறிப்போயிருக்கிறது. கீழே கால் வைக்க முடியாத அளவு நிரந்தர சேறும், சகதியும், கோரைப்புற்களும் மண்டிப்போய்…………. வா என்கிறதா, வராதே என்கிறதா என்று பிரித்தறிய முடியாத இருட்டு நம்மை வெறித்துப்பார்க்கும். பூத் பங்களா மாதிரி இருக்கும்.

அப்புறம்..... சேலம் முழுக்க ஷேர் ஆட்டோக்கள் உண்டு. ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அடுத்த வருடம் எலக்ஷன் வரை இன்னும் ஒரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கப் போகிறார்களாம். எங்கேயாவது மாடியில் இருந்து கீழே பார்த்தீர்களானால் ஆட்டோக்கள் எல்லாம் சேர்ந்து தர்ணா, பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஊரே மஞ்ச மஞ்சேர் என்று. இத்தனை ஆட்டோக்கள் இருந்தால் பயணிகளிடம் எப்படி அதிக கட்டணம் வாங்க முடியும்? பயணிகளான நம்மிடமும் ஒரு தெனாவட்டு வருமல்லவா?

அதனால் அந்த வண்டிகள் திருவாளர் பேஸஞ்சர் சொல்லுகிற இடத்திலெல்லாம் நின்று இறக்கி விடும், கைகாட்டும் இடத்திலெல்லாம் பிரேக்கடித்து ஏற்றிக்கொள்ளும். நோ ஸ்டாப்பிங், நோ ரூல்ஸ். உங்களுக்கு ஒரு டிப்ஸ். வெளியூரில் இருந்து சேலத்திற்கு வந்தால் தனி ஆட்டோவுக்கு நூறு, நூற்றைம்பது என்று பைஸா அழுவாதீர்கள். அந்த ஏரியாவில் ஷேர் ஆட்டோ சர்வீஸ் உண்டா என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். (பெரிய சைஸ் பியாஜ்ஜியோ ஆபே வண்டி) மூன்று ரூபாய் முதல் அதிகபட்சம் ஆறு ரூபாய் தான் கட்டணம்.

அந்த ஆட்டோ ஓட்டும் பசங்களைப்பார்க்க வேண்டுமே, அடா, அடா, அடா. ஒரு காக்கி பேன்ட்டும், பட்டன் திறந்து பறக்கும் காக்கி சட்டையும், முக்கா சீட்டை காலியாக விட்டு விட்டு கால் சீட்டில் உட்கார்ந்து, பான்பராக்கையும், குட்காவையும் போட்டு எச்சில் துப்பியபடி, அவர்கள் ஒருத்தருக்கொருத்தார் ரேஸ் விட்டு வண்டி ஓட்டும் அழகே அழகுதான். (நாற்பது வயதிற்கு மேற்பட்ட டிரைவர்களிடம் கேட்டால் வண்டி வண்டியாக அள்ளி விடுவார்கள்) எல்லாருமே ரஜினி தான், விஜய் தான், தனுஷ் தான். உள்ளே ஒரு ஹீரோ வந்து புகுந்து கொள்வான், அந்த சந்தோஷத்தில் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் யார் நினைத்துப்பார்க்கப்போகிறார்கள்?

கட்டணம் விஷயத்தில் (லோக்கல்) பஸ் மட்டும் என்னவாம்? பயங்கர சீப். சேலத்துக்குள் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் அதிகபட்சமே மூன்று ரூபாய்தான் டிக்கெட். நான் சென்னையில் மூன்று வருடங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டிய போது (வேறென்ன? குப்பைதான்) மினிமம் டிக்கெட்டே அங்கு நான்கு ரூபாய். அதனால் எனக்கு எங்க ஊரைப்பற்றி பயங்கர பெருமைதான் எனக்கு.


அதே போல் எங்கே இருந்து சேலத்திற்கு வந்தாலும், சேலம் ரயில்வே ஜங்க்ஷன் தான் மையப்புள்ளி. தற்போது பாலக்காட்டில் இருந்து தனியாகப்பிரித்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் மெயின் ஆபீஸ் ஜங்க்ஷனில் அல்ல, உள்ளூர் டவுன் ரயில்வே ஸ்டேஷனில். கொஞ்சம் கொஞ்சமாய் ஹெடெக்காக மாறிக்கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன், வரிசையாய் நிற்கும் கம்ப்யூட்டர் புக்கிங் கவுண்டர்கள், அழகழகான வெளிக்கட்டிட அமைப்பு என்று இப்போது சில மாதங்களாய்த்தான் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது டவுன் ரயில்வே ஸ்டேஷன். ஆனாலும் முக்கிய டிரெயின்கள் அனைத்தும் ரயில்வே ஜங்க்ஷனுக்கே வருவதால் அங்கே தான் கூட்டம் அம்மும். சென்னையில் சென்ட்ரல் மாதிரி ஜங்க்ஷன், எக்மோர் மாதிரி இங்கே டவுன் ரயில்வே ஸ்டேஷன். புரிகிறதா?

அது போக சேலத்தில் ஏர்போர்ட்டும் ஒன்று உண்டு. அட்டெண்டென்ஸ் போட்டு ஒன்றிரண்டு விமானங்கள் போய் வருகின்றன. நிறைய விமானங்கள் கிடையாது. ஒரே பிரச்சினை என்னவென்றால் சென்னை போல் இங்கே பெரிய நிறுவனங்கள் ஏதும் கிடையாது. கோவை போல் சுற்றிச் சுற்றி முக்கியமான ஊர்களும் கிடையாது. சேலத்தில் உள்ள ஒரே பெரிய நிறுவனம் ஸ்டீல் பிளாண்ட் என்று பெருமையுடன் அழைக்கப்படும் SAIL நிறுவனம் தான். அதனால் பெரிய தலைகள் யாரும் வர, போக இருப்பதில்லை. ஸோ, நோ ரெகுலர் சர்வீஸ். திருச்சிக்கு BHEL மாதிரி எங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்யய கம்பெனி இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். BHEL ஐ வைத்து திருச்சி வளர்ந்தா மாதிரி நாங்களும் பேர் சொல்லும் பிள்ளைகள் ஆயிருப்போம். (என்ன செய்ய? நாங்கள் சொல்லிக்கொள்ள மேட்டூர் அணைதான் உண்டு.)

தமிழ் கஜினி படத்தில் சூர்யா ஏர்போர்ட்டில் தனி விமானத்தில் இறங்கி நடந்து வருவார் அல்லவா? அது சேலம் ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட காட்சி தான். அதன் கஜினி தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் என்பதால் பர்மிஷன் வாங்கிக்கொடுத்தார் என்று கேள்வி. படத்தில் அந்தக் காட்சியைப்பாருங்களேன். சைடில் எல்லாம் ஒரே புதர் மயமாக இருக்கும். சென்னை அல்லது கோவை ஏர்போர்ட் சாயலே இருக்காது. அதை வைத்தே நீங்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஏர்போர்ட் சர்வீஸ் நிறுத்தப்படவில்லை. நடுவில் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டுவிட்டதாம்.

சேலத்தின் ஆரம்ப கால ஒரே டிரான்ஸ்போர்ட்டாக இருந்தவை குதிரை வண்டிகள் தான். ஏமி ஜாக்ஸனை வைத்து ஆர்யா பாடிக்கொண்டே வரும் "வாம்மா துரையம்மா" வில் சில வண்டிகள் வருமே, அந்த சீனை நினைவு படுத்திக்கொள்ளுங்களேன். பத்து வருடங்கள் முன்பு வரை படு பிரபலமாக இருந்த அவை ஷேர் ஆட்டோக்கள், பிராணி வதை தடுப்புச் சங்கங்கள் உபயத்தில் காணாமல் போயின. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடியபடியேதான் ஓட்டுவார்கள் வண்டிக்காரர்கள். நாங்கள் சைக்கிளில் குரங்குப்பெடல் போட்டபடி ஸ்கூலுக்குப்போன காலத்தில் (மேனுவல்) சிக்னல்களில் கண்டிப்பாக ஒரு குதிரை வண்டியவாது நிற்கும். இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக டவுன் போலீஸ் ஸ்டேஷன், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பஜார் போன்ற ஏரியாக்களில் மட்டும் தட்டுப்படுகின்றன. வண்டியோட்டிகள் ரிட்டையர் ஆகி விட்டார்கள் போலிருக்கிறது. செவ்வாய்ப்பேட்டையில் ஒரு இடத்திலும், பட்டைக் கோவில் ஏரியாவில் பெருமாள் கோவில் பின்புறம் குதிரைகள் தண்ணீர் குடிக்க கட்டி வைத்த (தெரு விளைக்கைச் சுற்றிய) தண்ணீர் தொட்டி அமைப்பு இன்றும் உள்ளது.

எனக்குத் தெரிந்து டாக்ஸி இங்கே கிடையாது. எங்கேயா ஒன்றிரண்டு பார்த்தது போல் ஞாபகம். இப்போது மெள்ள மெள்ள கால் டாக்ஸிக்கள் முளைக்கத் துவங்கியிருக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களும் முழுக்க வழக்கொழிந்து போய் விட்டன. வேறென்ன டிரான்ஸ்போர்ட் மிச்சமிருக்கிறதுதுதுது???? யோசியுங்கள். வருகிறேன்...
------------------------------------------------------
இன்ட்லியில் அப்படியே ஒரு ஓட்டும் போடுங்களேன்... கைக்காசு ஒண்ணும் செலவில்லை..
------------------------------------------------------

17 கருத்துகள்:

  1. சேலத்து போக்குவரத்த பத்தி சூப்பர்ர்ர்ரா எழுதியிருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  2. சேலம் ஸ்பெஷல் நேற்றே வாசித்து விட்டிருந்தேன் உயிரோசையில்:)!

    நெல்லையிலும் கூட ஊருக்கு சற்றே வெளியேயிருந்த குளத்தை மூடிதான் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆக்கி விட்டுள்ளார்கள். ஊருக்கு ஊர் நீர் ஆதாரங்களுக்கு ஆப்பு:)!

    குதிரை வண்டிகளோடு மாட்டு வண்டிகளும் ஏராளம் உண்டு எழுபதுகளில் நெல்லையில். இப்போது ஒன்றிரெண்டு தென்பட்டாலே ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  3. சேலம் டிராபிக்லயும் ,ஷேர்ஆட்டோவுக்கு நடுவுலயும் வண்டி ஓட்டிட்டா நம்மள ஸ்டிரெயிட்டா பார்முலா 1 ரேஸ்ல
    எடுத்துக்குவாங்க...எல்லா நாட்டு லைசென்ஸையும் ஈஸியா குடுத்துருவாங்க..

    பதிலளிநீக்கு
  4. இன்னும் கொஞ்சம் விரிவா கீழே இருப்பவை பற்றியும் எழுதி இருக்கலாம்

    கிச்சிபாளையம் என்ற டெரர் ஏரியா

    சுத்து வட்டார கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பள்ளிகள் (St pauls , bharati vidyaalayaa.. little flowers..etc)

    உயிரோடு இருந்தவரை தி மு க பிரமுகரின் வாரிசு ஆடிய ஆட்டம்

    விநாயகா மிசன்

    புதிய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் அசந்து போனா நம் உடமைகளை அலேக்காக தூக்கிட்டு போய்விடும் திருட்டு கம்முனாடிகள்

    வாலிப வயோதிக சித்த வைத்தியர் :)

    எற்காடில் உள்ள மரங்களை வெட்டி மலையை மொட்டையடிக்கும் நிகழ்வு

    மணிமுத்தாறு என்ற ஆறு வரலாறாகி போன சோகம்

    பழைய புதிய பேருந்து நிலையங்களில் வெயிற்காலத்தில் விற்கப்படும் கம்மங்கூழ்...

    நரசுஸ் காபி

    பதிலளிநீக்கு
  5. பகிர்தலுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். சேலத்தை பற்றிய மேலும் பயனுள்ள விவாதங்களுக்கு சொடுக்கவும் http://salemjilla.com/forum

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் மேலும் தொடர மண்ணின் பெருமை வளர

    பதிலளிநீக்கு
  7. @ சேலம் தேவா - ரொம்ப நன்றி சாமி...
    ஆனா ஃபார்முலா ஒன்ல கலந்துக்கணும்னா என்ன ஃபார்முலா தெரிஞ்சிருக்கணும்?

    பதிலளிநீக்கு
  8. @ ராமலக்ஷ்மி....
    மேடம், இன்னொரு கூத்தும் இங்க நடந்திருக்கு.. திருமணிமுத்தாறுன்னு ஒரு ஆறு இருந்தது. நீர் உற்பத்தியாகும் அதனுடைய முகத்துவாரம் கொஞ்சம் கொஞ்சமா அடைஞ்சு போச்சு. இப்போ அந்த ஆத்தை கான்கிரீட்டுல கட்டியிருக்காங்க. அதாகப்பட்டது கான்கிரீட் ராட்சஸ சாக்கடை.

    பதிலளிநீக்கு
  9. @ ராமலக்ஷ்மி....
    மேடம், மாட்டுவண்டியா? பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டாவா? நலலாயிருக்குமே...

    பதிலளிநீக்கு
  10. இப்போதைய பள்ளி ஆட்டோக்கள் போல பயன்பட்டன. நெல்லை ஜங்ஷனிலிருந்து பாளைக்கு நாங்கள் காரில் சென்றோமென்றாலும், ஜங்ஷன், டவுண் போன்ற ஏரியாக்களிலிருந்து வரிசை வரிசையாய் சுமார் 20 மாட்டு வண்டிகளாவது எங்கள் பள்ளிநோக்கி பயணிக்கும். ஒவ்வொரு வண்டியிலும் 7,8 குழந்தைகளாவது இருப்பார்கள். வண்டியின் அடியில் தொங்கும் பெரிய சணல் கூடையில் பிள்ளைகளின் புத்தகப் பைகள் வைக்கப் பட்டிருக்கும். குறுக்குக் கம்பிகளின் ஊடாகக் கால்களைத் தொங்க விட்டபடி 3 பிள்ளைகள் பின்புறமாகத் திரும்பி அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி வருவார்கள்.

    //கான்கிரீட் ராட்சஸ சாக்கடை//

    :(!

    பதிலளிநீக்கு
  11. நண்பரே வணக்கம் ... உங்கள் பதிவை நான் உங்கள் பதிவு என்று தெரியாமலே என் இல் பயன்படுத்தி இருந்தேன் கொஞ்சம் என்னுடைய பாணியில் மாற்றி .... அது எனக்கு மெயிலில் வந்தது , உங்கள் பதிவு என்று தெரியாது உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்னரே எனக்கு இது தெரிய வந்தது ... ... இருந்தாலும் உங்கள் படைப்பை பயன்படுத்தியமைக்கு என்ன்டுடைய வருத்ததங்களை தெரிவித்து கொள்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. //பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்" என்ற பெயரை யாரும் வாசிப்பதே இல்லை.//

    ஆஹா, இன்றைக்குத்தான் இந்த பெயரைக்கேள்விப்படுகிறேன். பஸ் ஸ்டேண்டில் எங்கயாச்சும் எழுதி வச்சிருக்காங்களா? எத்தனையோ முறை சேலம் பஸ் ஸ்டேண்ட் போயிருந்தாலும் நம் கண்ணெல்லாம் நாம் போகவேண்டிய பஸ்ஸைத் தேடிக்கொண்டு இருக்கிறதே தவிர இந்த மாதிரி போர்டுகள் எங்கே கண்ணில் படுகின்றன?

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப விலாவாரியா விவரங்கள் கொடுத்துருக்கீங்க. போன வாரம்தான் சேலம் போய்வந்தேன். கோவை-சேலம் முன்பு 4 மணி நேரம் ஆகும். இப்போ இரண்டரை மணி நேரத்தில் (காரில்) போய்விட்டோம்.

    பதிலளிநீக்கு
  15. @ ராமலக்ஷ்மி --
    மாட்டு வண்டிகளா? அருமை. அது சரி. அந்நியன்ல வர்ற மாதிரி வண்டிகள் ஏதும் உங்க ஊர்ல பாத்துருக்கீங்களா? அவற்றை சென்னையில் நான் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  16. @ யூர்கன் க்ருகியர் --
    அய்யா சாமி, அந்த டெரர் மேட்டரையெல்லாம் எழுத பத்திரிகைக்காரங்க இருக்காங்க. ஏன்? அதைப்பத்தி எழுதி காலைக்கதிர்காரன் அடி வாங்கினதெல்லாம் பத்தாதா? நானும் வாங்கணுமா? நான் முழுசா நடமாடுறது புடிக்கலையா உங்களுக்கு? கம்மங்கூழ், நரசுஸ் காபி, சித்த வைத்தியர் போன்ற சாஃப்ட் மேட்டர்களை மட்டும் டீல் செய்வோம், அடுத்தடுத்த கட்டுரைகளில். கொஞ்சம் பொறுங்க..

    பதிலளிநீக்கு