ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

தந்தை மகற்காற்றும்......ஜூனியருக்கு இரண்டரை வயதாகிறது. இன்றைக்கு ஒரு விஷயத்தைச் செய்வது, விரும்புவது. இரண்டே வாரங்களில் அடுத்த விஷயத்திற்குத் தாவுவது போன்ற குழந்தைகளுக்கே உரிய அனைத்து செயல்பாடுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறான். சுவற்றில் கிறுக்குவது, சாப்பிட அடம் பிடிப்பது, இதைத் தான் எல்லாக்குழந்தையும் செய்யுமே போன்ற எல்லாச் செயல்களையும் மீறிக் கவனித்ததில் அவன் ஒரு விஷூவல் லேர்னர் ஆக இருப்பான் என அவதானிக்கிறேன். சொல்லி, கேட்டுக் கற்பதை விட பார்த்துக் கற்பது அதிகமாக இருக்கிறது.
.
விளம்பரங்கள், நாடகங்கள், திரைப்படக் காட்சிகளை உற்றுக் கவனிக்கிறான். இரு முறை பார்த்து விட்டால் மூன்றாவது முறை அடுத்து வரப்போகும் சீனை இமிடேட் செய்து விடுகிறான். உதா - பர்ஃயூம் விளம்பரங்களில் கைகளைத் தூக்குவது, நீயா நானா விளம்பர இடைவேளை முடிந்து வெல்கம் பேக் சொல்கையில் கோபி யைப் போல விரல் இடைவெளிகளுடன் கைகளைக் கோர்த்துக் காண்பிப்பது, இதர. இவையெல்லாம் கொஞ்சம் மற்ற குழந்தைகளை விடச் சில சதவீதம் அதிகமாயிருக்கிறது.
.
அதை ஊக்கப் படுத்தும் வகையில் அவ்வப்போது RLE - Real life example களை காட்டி விடுகிறேன். Furious 6 கிளைமாக்ஸ் ஓடும் போதோ, டாட்டா க்ளூக்கோ ப்ளஸ் விளம்பரத்தின் போதோ, வெளியே நிஜ விமானம் பறக்கும் போதோ இவனது பொம்மை விமானத்தை டி.வி அருகில் வைத்துக் காண்பிப்பது, வேறு சில பொருட்களை, ஆட்களைக் காண்பிக்கையில் அதே போன்றவற்றை எடுத்துக் காண்பிப்பது, போன்றவை. இதனால் அவன் இயல்பில் சில மாற்றங்களை உணர முடிகிறது. சில விஷயங்களைக் கூடுதலாக நினைவில் நிறுத்துகிறான்.
.
கூடவே கொஞ்சம் சென்டிமெண்ட்ஸ் பார்ட்டியாகவும் இருக்கிறான். நாயக பாத்திரம் (ஹீரோ வேட்டையன், அல்லது சிறுவனாயிருந்தாலும் சரி - தாரே ஸமீன் பர் ஈனோ) பாதிக்கப்பட்டால் அழுகை வருகிறது. சண்டை போட்டால் ஆமோதித்தல், அடி வாங்கினால் வருத்தப் படுதல், பாராட்டப் பட்டால், பரிசு வாங்கினால் கை தட்டுதல், வணக்கம் சொன்னால் பதில் வணக்கம் (கடைசி மூன்றும் நான் பழக்கியது) செய்தல் போன்ற ரசிக்கும் விஷயங்களை தினசரி பார்ப்பது பெருமையாயிருக்கிறது.
.
ஹீரோயின் என்ட்ரிக்கு அய் (அல்லது ஊய்) என்று உற்சாகக் குரல் எழுப்புவது, ரொமான்ஸ் சீனையும் (நான் சேனல் மாற்றுவதில்லை, பார்த்துட்டுப் போ, என்ன இப்ப?) வெட்க முகத்தோடு ரசிப்பது போன்றவற்றை சொல்லித் தராமலே செய்கிறான். திரைப்படங்களை உணர்ந்து, ஒன்றி ரசித்துப் பார்க்கிறான். தியேட்டரிலேயே இருந்தாலும் அசதியோ, பிடிக்கவில்லையோ, நான் தூங்குறேன் என்று தூங்குகிறான். "நீங்க, டி.டிஸ் வேணா போடுங்க, டால்ஃபி வேணா போடுங்க, ஆரோ த்ரீ டி வேணா போடுங்க, எங்களுக்குத் தூங்கியே ஆகணும், ஹாங்.." "பிச்சைக்காரன்" செகண்ட் ஹாஃப் முழுக்கத் தூங்கினான். இதில் என் டிட்டோ. நான் செல்லாத்தா பாட்டே ஹை டெஸிபலில் ஓடினாலும் "ஹூ ஈஸ் தட் செல்லாத்தா" என்றெல்லாம் கேட்காமல் ஸ்பீக்கர் பக்கத்திலேயே குறட்டை விட்டுத் தூங்குகிற டைப். இதெல்லாம் ஜீனில் வருகிறது போலும்.
.
சுற்றியிருப்பவர்களைச் சட்டை செய்யாமல் நினைத்ததைச் செய்ய பழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறு வயதில் எனக்குக் கூச்ச சுபாவமும், பயமும் ரொம்ப அதிகம். அது வந்துவிடக் கூடாதே. சில குழந்தைகள் டான்ஸ் ஆடச் சொன்னால் ஆடவே ஆடாது. சிலது தன்னிஷ்டத்துக்கு ஆடும் - ஓப்பன் டைப். சிலது மற்றவர்கள் ஆதரித்தால் மெள்ளப் பயம் விலகி ஆடும். நம்மாள் மூன்றாவது டைப். மற்றவர்கள் முன் பயமின்றி இருக்கவும், எந்த விஷயத்தையும் ஃபீல் செய்து, அனுபவித்துச் செய்யவும் பழக்கிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.
.
என்னுடன் சேர்ந்து நிறையப் படங்கள் பார்க்கப் பழகி வருகிறான். பிடித்த படம், பிடித்த சீனை ரிப்பீட் செய்யச் சொல்வதும் கூட. தாரே ஸமீன் பர் இது வரை ஐந்து முறைக்கு மேல் பார்த்து விட்டான். அதில் இரண்டு முறை தனியாக. தர்ஷீல் அடி வாங்கும் சீன்களுக்கு மட்டும் என்னை அழைத்து ஃபார்வர்ட் செய்யச் சொல்லி விட்டு மீதியைத் தனியாகப் பார்ப்பான். ரஜினி முருகனின் மூன்று பாடல்களை (கன், கன், கன், என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா, ஓம் மேல ஒரு கண்ணு) வரிசையாகப் பார்க்க வேண்டும் அவனுக்கு. அவனது இஷ்ட ஹீரோ சிவகார்த்திகேயன்.
.
வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் படம் பார்ப்பது என்ற குடும்பத்தில் இருந்து, வாரம் ஒரு படம் தியேட்டரில் படம் பார்த்தே ஆக வேண்டும் (அதுவும் தரை டிக்கெட் ரசிகன், ஃபர்ஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து நைஸ் நோ என்று மெள்ளச் சிரிப்பது நமக்கு ஆகாது) என்று கிளம்பிய ஆள் நான். டி.வியில் பார்ப்பது தனி. Fist of fury யில் ஆங்கிலப் படங்களின் மேல் எனக்குக் கிளம்பிய மோகம், Face off ல் வெறியாகி சொந்தக்காரங்க எல்லாம், கார்த்தி வந்தா ரிமோட் குடுத்துடாத, ஸ்டார் மூவிஸூம், HBOவும் தான் வைப்பான் என்ற அளவுக்குப் போயிருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் - பள்ளிக் காலத்தில் சேரி போன்ற சுற்றுப்புறத்தில் வாழ்ந்த நான், ஓரளவுக்கு நாலு விஷயங்கள் கற்றுக் கொள்ளவும், கொஞ்சம் இங்கிலீஷ் பேசவும் முடிகிறதென்றால் அதன் காரணம் ஹாலிவுட் படங்களே.
.
ஆகவே, எதிர்காலத்தில் அவன் வளர்ப்பில் இரு விஷயங்களை நான் செய்யப் போவதில்லை.
ஒன்று - டாப் ரேங்க்கில் வர வேண்டும் என்று இம்சிப்பது (நாம ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்து என்னத்தைக் கிளிச்சிட்டோம்?)
இரண்டாவது - சினிமா பார்ப்பதைத் தடுப்பது. (நல்லாப் பாரு. இதில இருந்து என்ன கத்துகிட்டே? என்பது போல கொஞ்சம் நெறிப்படுத்தினால் போதும்). சுபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக