ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சினிமா (சீர்காழியில் ஒரு பள்ளி)

16 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

சீர்காழியில் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். "க்ளாஸ் ரூம் அப்சர்வேஷன்" வேலை. மாலை பள்ளி முடிந்ததும், வேன் ஏறுவதற்காகக் காத்திருந்த ஒரு வரிசையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டும், ஆடிக்கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் துவங்கி நான்கு நாட்கள் விடுமுறை உற்சாகம். அதில் ஒருவன், சத்தமாக "வரலாம் வா, வரலாம் வா, பைரவா" என்று துவங்கி மூன்று, நான்கு வரிகளை ஸ்பஷ்டமாகப் பாடினான். கூடவே இன்னும் நான்கு பேர் கோரஸ். "படம் பாத்துட்டியா?" (அன்றைக்குத் தான் ரிலீஸ், சும்மா) கேட்டேன். "ஓ, மூணு தடவை பார்த்துட்டேன்" என்றான். (பதறாதீர்கள், அவன் டிரெயிலரைச் சொன்னான்). ஆறு வயது இருக்கலாம். "என்ன படிக்கிறே?" என்றேன். "கிரேடு 1" என்றான். 

அன்று மதியம் அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் அமர்ந்திருந்தேன். அறிவியல் பாடம். "விலங்குகள் எப்படி நடந்து கொள்கின்றன?" என்பது போன்ற பாடம். ஒன்னொன்றாக டீச்சர் நடத்திக் கொண்டிருக்க, கொஞ்சம் போரடித்ததால், "குரங்கு எப்படி மரத்துக்கு மரம் தாவும்?" என்ற கேள்வியின் போது நான் உள்ளே நுழைந்து "ஜங்கிள் புக் யாரெல்லாம் பாத்தீங்க?" (மோக்லியை, குரங்குகள் தூக்கியபடி மரத்திற்கு மரம் எப்படி தாவின என்பது என் கேள்வி) என்றதும் "சார், சார், சார், சார்" என்று ஒரே சத்தம். 99.99 சதம் பேர் கை தூக்கினார்கள். 

அதற்கு இரு நாட்களுக்கு முன் மாயவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் "நீட்" எக்ஸாம் பற்றிய ஒரு அறிமுக வகுப்பில் பேச அழைத்திருந்தார்கள். மாணவர்கள், அவர்தம் பெற்றோர் என்று சுமார் 600 பேர். சுமார் ஒரு மணி நேரம். பேசிய பிறகு, பெற்றோர் உட்பட பலரும் நெருங்கி வந்து பேசிச் சென்றார்கள். நடுநடுவே கொஞ்சம் மோடிவேஷன் வகுப்பு, கொஞ்சம் டெக்னாலஜி என்றெல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்ததில் மாணவர்களும் நெருங்கி விட்டார்கள். அதில் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் கூடவே சின்னச் சின்ன உதவிகள் செய்து கொண்டிருந்தான். கிளம்பும் போது "ஸ்மார்ட் போன் வச்சிருக்கியா?" என்றதற்கு "ம்" என்றவன், "சார், சல் மார் பாட்டு இருந்தா அனுப்புங்க சார்" என்றான். 

இவற்றில் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் புரிகின்றன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக