வியாழன், 17 செப்டம்பர், 2009

பட்டி மன்றம் முதல் நீயா நானா வரை.

தமிழ் நாட்டின் பாரம்பரிய பண்பாட்டு, கலை நிகழ்ச்சிகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அவற்றில் பட்டிமன்றங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பங்கு உண்டு. பிற நிகழ்ச்சிகள் வெறும் நேரக்கொல்லிகளாக இருந்த போது (ஓரளவுக்காவது) அறிவூட்டிகளாக இருந்தவை பட்டிமன்றங்களே. ஆனால் அழுது வடியும் அரங்க அமைப்பையும், தூங்கி வழியும் நேயர்களையும் வைத்துக் கொண்டு போரடிக்கும் தலைப்பு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்தன பழைய பட்டி மன்றங்கள். தலைப்புகள் பெரும்பாலும் இராமாயண, மகாபாரத, புராண, இதிகாசங்களிலிருந்தே கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இரண்டு ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களும், இரண்டு கல்லூரி (தமிழ்!) விரிவுரையாளர்களும், லீவு அதிகமாகக் கிடைக்கும் சில அரசு "அலுவலர்களும்" கலந்து கொண்டு இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொள்வார்கள். பட்டி மன்ற நடுவருக்கு என வரையறுக்கப்பட்ட சில குணாதிசயங்களுடன் (தள்ளாடும் வயது, குழப்பல் பேச்சு, அரசு அலுவலராகவோ, பேராசிரியராகவோ இருந்து ரிட்டையர் ஆகியிருத்தல் நலம்) ஒரு நடுவரும் உண்டு. நடுநடுவே "நடுவர் அவர்களே" என்ற வரியை மட்டும் நூறு முறை நீங்கள் கேட்க முடியும்.

"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?" "வீரத்தில் சிறந்தவன் இராமனா? வாலியா?" "நட்பில் சிறந்தவன் குகனா? சுக்கிரீவனா?" என்ற ரீதியில் காலம் காலமாக வழங்கி வந்த அவற்றை திசை மாற்றி கமர்ஷியல் தலைப்புகளைக்கொடுத்து பெயருக்கேற்றார்போல் உண்மையாகவே பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்ற பெருமை முதலில் சாலமன் பாப்பையாவின் தலைமையிலான டீமையே சேரும்.

பட்டி மன்ற விவாதங்களில் குடும்பம் சார்ந்த தலைப்புகளைக் கொடுத்து அனைவரையும் (முக்கியமாக) பெண்குலங்களைக் கவர்ந்தது (அன்புத் தாய்மார்களே!! அருமைக் குழந்தைகளே) பாப்பையாவின் அணுகுமுறை. "கூட்டுக்குடும்பம் சிறந்ததா? தனிக்குடித்தனம் சிறந்ததா?", "குடும்பச் சக்கரம் நன்றாய்ச் சுழலக் காரணமாயிருப்பது மாமியாரா? மருமகளா?" "காதல் திருமணம் சிறந்ததா? நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?" என்று மிஸ்டர் பப்ளிக்கின் வீட்டுக்குள் உரிமையுடன் நுழைந்தன இவரது மன்றங்கள். பட்டி மன்றங்களில் நகைச்சுவையைப்புகுத்தியதும் எதிரணியை நக்கலடிக்கும் பாணியைத் துவக்கி வைத்ததும் இவரே. மேடை மிமிக்ரிக் கலைஞர்களின் லிஸ்டில் நேயர்களின் விருப்பக்குரலாக இடம்பெறும் அளவு பிரபலமாகிப்போனது இவரது குரல்.

மத, இன வாடையற்ற ஒரு வெள்ளந்தி கிராம மனிதனின் சொல்மொழியும், உடல்மொழியும் இவரது மிகப்பெரிய பலம். ஆனால் இவரது டீமும் முழுக்க அரசுப்பள்ளி வாத்தியார்களைக் கொண்டிருந்தது பட்டிமன்ற இலக்கணம் உடையாமலிருந்ததன் உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் ஸ்டீரியோ டைப்பிலான (இதுக்கு என்னப்பா அர்த்தம்?) விவாதங்களும், எதிரணிக்காரரை பர்சனலாக இழுத்து நக்கலடிப்பது போன்ற விஷயங்களும் இவரது மைனஸாகிப் போனதாகச் சொல்லலாம். இயக்குனர்களின் அன்பு வற்புறுத்தலுக்கிணங்கி சினிமாக்களிலும் நடித்தார். ("வாங்க பழகலாம். என்கிட்ட ரெண்டு இருக்கு, புடிச்சா கல்யாணம், இல்லேன்னா ஃப்ரண்ட்ஸா இருப்போம்" - என்று வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார்)

அவரின் நீட்சியாய் மிஸ்டர் ஐ. லியோனி ஃப்ரம் திண்டுக்கல் பட்டி மன்றங்களை இன்னும் பிரபலமாக்கினார். ஆனால் அவர் எடுத்துக்கொண்டவை முழுக்க முழுக்க சினிமாத்தலைப்புகள். "நகைச்சுவையில் சிறந்தவை பழைய படங்களா? புதிய படங்களா?" "காதல் ரசம் பொங்கி வழிவது பழைய பாடல்களிலா? புதிய பாடல்களிலா?" என்று தரை ரேட்டுக்கு இறங்கி அடித்தது இவரது டீம். தலைப்பைப் படிக்கும் போதே உங்கள் மனதில் லியோனியின் குரல் எதிரொலிப்பது அவருக்குக் கிடைத்த வெற்றி. பாப்பையா ரீச் ஆகாத இடங்களிலும் நுழைந்து அடிமட்ட லெவல் விசிலடிச்சான் குஞ்சுகளையும் கவர்ந்தவர் இவர்.

இந்த திண்டுக்கல்காரரது ஸ்டைல் வேறு. இளையராஜா & வகையறாக்களின் தமிழ்த் திரைப்பாடல்கள் பிரபலமாகியிருந்த 80-90 களில் (அப்போதைய) டெக்னாலஜியை லாவகமாகப் பயன்படுத்தினார் அவர். நேரடி பட்டி மன்றங்களை விட ஸ்டுடியோக்களில் பதிவு செய்யப்பட்டு கேசட் வடிவில் வெளிவரத் துவங்கின இவரது மன்றங்கள். லியோனியின் குரல் ஒலிக்காத டவுன் மற்றும் மொபசல் பஸ்களே இல்லை எனுமளவு பரபரப்பாக அவரது கேசட் விற்பனை தூள் பரத்தியது. ஆனால் திகட்டிப்போகுமளவு சினிமாத்தலைப்புகள் இந்தக் கேசட்டை ஏற்கனவே கேட்டு விட்டோமோ என்று எண்ண வைத்தன. தொடர்ந்து கடி காமெடிகளும் (பள்ளிக்கூட வாத்தியார், மாணவன் ஜோக்குகள்) ரிப்பீட்டடித்தன. ஆனால் பாப்பையாவுக்கு முன்னோடியாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இவர். இவரைப்பார்த்து ஆசைப்பட்டுத்தான் சினிமாக்களில் தலை (வாய்!) காட்டினார் பாப்பையா.

இவற்றின் தொடர்ச்சியாக குழப்ப வசனக்காரர், இயக்குனர் விசு பட்டிமன்ற வடிவத்தை சற்றே மாற்றி விசு வின் "அரட்டை அரங்கம்" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியாக்கி டிவிக்குக் கொண்டு வந்தார். சன் டிவியின் பிரபல்யத்தினாலும் விசுவின் சென்டிமெண்டான நடையினாலும் மிக விரைவில் கடைக்கோடி ரசிகன் வரை ரீச் ஆனது அரட்டை அரங்கம். ஆனால் நிறைய நலத்திட்ட உதவிகள் செய்ய ஆரம்பித்து நாம் அரட்டை அரங்கம் பார்க்கிறோமா? அல்லது உதவும் கரங்கள் வித்யாகரின் நிகழ்ச்சியைப் பார்க்கிறோமா எனுமளவு அழுவாச்சி மன்றம் ஆனது அரட்டை அரங்கம். கொடுக்கப்பட்ட தலைப்புகளும் கிட்டத்தட்ட பல வாரங்கள், சில மாதங்களுக்கு இழுக்கப்பட்டன.

பல ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பாகிய இதனை மற்ற டிவிக்களும் மெள்ள மெள்ள காப்பி அடிக்கத்துவங்கின (ஒளிபரப்பாகும் டிவியின் அரசியல் சார்பைப் பொறுத்து லேசான கட்சி வாடையுடன்). அரட்டை அரங்கத்திலிருந்து விசு விலகியதும் அது கைமாறியது அடுக்கு மொழிக்காரர் டி.ஆரிடம். (இடையில் சில வாரங்களுக்கு பாப்பையாவும், அவரது செல்லம் ராஜாவும் எடுத்துக்கொண்டனர்) ஆனால் அது டி.ஆரிடம் படும்பாடு சொல்லி மாளாது. அதற்குத்தனி மன்றம் தேவை. விசுவாவது பரவாயில்லை. இவரோ, உதவி பண்ணுங்க என்று நேரடியாகவே நேயர்களைக் கேட்கத்துவங்கி "அய்யா சாமி, தர்மம் பண்ணுங்க" ரேஞ்சுக்கு நிகழ்ச்சியைக்கொண்டு போய்விட்டார். கேப்பில் டி.வி. தாவி ஜெயாவில் போய் "மக்கள் அரங்கம்" என்று அதையே நடத்திக்கொண்டிருக்கிறார் விசு அதே டர்க்கி டவல், மூக்குறிஞ்சான் டயலாக்குகளுடன்.

ஊர்களில் (இளந்தாரிகளுக்கான ரெக்கார்ட் டான்ஸ் மற்றும் ஸ்பெஷல் (!!!!) கரகாட்டங்களால் தத்தெடுக்கப்பட்ட) திருவிழாக்களில் நடக்கும் பட்டி மன்றங்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து இன்று விசேஷ தினங்களை சிட்டியில் ஏ.ஸி ஹாலுக்குள் (கட்டணத்துடன்) நடக்கும் பட்டிமன்றங்கள் ஆக்கிரமிக்கின்றன. டிவியில் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினங்களில் கட்டாயம் ஒரு பட்டிமன்றம் உண்டு. அவையும் அதே லியோனி, பாப்பையா மற்றும் அவர்களது அடிப்பொடிகளுடன்.

இவற்றையும் தாண்டி (உலகெங்கும்) சீரியல் பார்த்து போரடித்துப்போன மக்களிடம் டாக் ஷோக்கள் பிரபலமாகத் துவங்கிய நேரத்தில் விஜய் டி.வி, கோபிநாத் மூலம் "நீயா நானா" என்ற டாக் ஷோவை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சி பட்டிமன்ற வடிவத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்கிறது. நிகழ்ச்சியின் குறிப்பிடத்தகுந்த அம்சங்களாகச் சொன்னால், மற்ற அரங்கங்கள் போன்ற நாடகத்தன்மையும், போரடிக்கும் தலைப்புகளும் இல்லை. ஒரே தலைப்பை வைத்து மாதக்கணக்கில் இழுக்கும் இழுவை இல்லை. எவ்வளவு சுத்தத் தமிழில் பேசினாலும் புரியுமாறு பேசுவது, நடத்துனரின் (ஹோஸ்ட்) கண்ணியமான நடை, உடை, பாவனை, பேச்சு, (வி)வாதம் தலைப்பில் இருந்து விலகிச்செல்கையில் சாதுர்யமாக அதை வளைத்துச்சென்று சரியான திசைக்குத்திருப்பும் திறமை என்று முந்தைய மன்றங்களிலும் ஷோக்களிலும் இருந்த மைனஸ்களை கழித்துக்கட்டி ப்ளஸ்கள் அதிகரிக்கப்பட்டு ஒரு சரிவிகித காக்டெயிலாக அமைந்திருக்கிறது. இவற்றால் இந்நிகழ்ச்சிக்கு விசுவின் அரட்டை அரங்கத்தை விட அதிகபட்ச வரவேற்பு. கட்சி சார்பற்ற, மத, இன, மொழி சார்பற்ற, உணர்ச்சி வசப்படாத வாதமும் அதன் மற்றொரு ப்ளஸ். ஆனால் இவை அனைத்தும் நீடிக்குமா? அல்லது மற்ற நிகழ்ச்சிகளைப்போல காலப்போக்கில் போரடித்து நீர்த்துப்போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பழம்பட்டிமன்றங்களில் இருந்து நீயா? நானா? வரை பரிணாம வளர்ச்சி கொண்ட இதன் வடிவம் எதிர்வரும் காலங்களில் இன்னும் எப்படியெல்லாம் மாறும்? (காஃபி வித் (கரன்) அனு, ஓப்ரா வின்ஃப்ரே ஷோ, நையாண்டி தர்பார், ஹரி, கிரி அசெம்பிளி போன்றவை இவற்றில் சேராது. அவை லைவ் இண்டர்வியூவின் கூறுபாடுகள் கொண்ட வேறு வடிவத்தைச் சேர்ந்தவை) ஆனால் பட்டிமன்றம் எனும் விவாத மேடை எத்தனை வடிவங்கள் மாறி வந்தாலும் அவை அனைத்துமே அறிவுப்பூர்வமான விவாதங்களையும் சிந்தனைகளையும் தூண்டுவதால் வரவேற்கத்தக்கவையே. அழுவாச்சி சீரியல்களையும், கடி காமெடிகளையும், டான்ஸ் போட்டிகளையும், மூளை மழுக்கி நிகழ்ச்சிகளையும் ரசிகக்கண்மணியை வாயைப்பிளந்து கொண்டு பார்க்க வைக்கும் இடியட் பாக்ஸ் கொஞ்சமேனும் அவனை சிந்திக்க வைக்கிறதென்றால் அது இவை போன்ற ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளின் மூலமே.

டெய்ல் பீஸ்: இந்தக்கட்டுரையை முடிக்கும் நேரத்தில் விஜய் டி.வியில் திண்டுக்கல் ஐ. லியோனியின், விவாதக்களத்துடனான புதிய நிகழ்ச்சி "அந்தக்காலம், இந்தக்காலம்" துவங்கப்போவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் மற்றொரு புதிய வடிவமா? அல்லது அரைத்துச்சலித்த பழைய மாவா? என்று வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.

நீங்கள் நிச்சயம் இவற்றில் சிலவற்றைத்தாண்டித்தான் உங்கள் பால்யத்தைக் கடந்திருப்பீர்கள். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்களேன்.

yeskha@gmail.com

3 கருத்துகள்:

  1. leoniyoda pecchu palamurai palarai mugam sulika vaithurppathai naan kandirukiren. thepol, vijay tv ondrum neengal solvathu pol nadunilai piralatha ondru illai. neeya naana palatha sarchaigalukllanathu. athai patri nan oru pathivu pin podugiren

    பதிலளிநீக்கு
  2. அய்யா, இது 2009 ஜூன் மாதம் நான் எழுதி யூத்ஃபுல் விகடனில் வெளியானது. இன்ட்லியில் இணைத்தது இன்று தான்..
    -------
    இப்போது நானும் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன்..

    பதிலளிநீக்கு
  3. all these tv programmes r bore- including barka dutt's india talk or india decides, same with nidhi razdani's

    பதிலளிநீக்கு