வியாழன், 17 செப்டம்பர், 2009

மிலே சுரு மேரா துமாரா. தோ சூரு பனே ஹமாரா

வாங்க நண்பா வாங்க. வெல்கம் டு யு. டைட்டில பாத்தவுடனே புரிஞ்சுகிட்டு க்ளிக் பண்ணி உள்ள வந்துருந்தீங்கன்னா நீங்க கண்டிப்பா 22/23 வயசுக்கு கீழ இருக்க மாட்டீங்க. அட்லீஸ்ட் 26 அண்டு எபவ். நம்மள மாதிரி ஆளுகளுக்குத்தான இதெல்லாம் மலரும் நினைவுகள் மாதிரி. ஞாபகம் இருக்கா? 16/18 வருஷத்துக்கு முன்னாடி கதை இது... தூர்தர்ஷன். அப்போதைய சூப்பர் ஸ்டாருல்ல. நமக்கு பொதிகைன்னு தமிழ்ல வருமே.

அது சும்மா ரேடியோ பொட்டிங்க மட்டும் இருந்த காலம். நம்ம அக்காக்கள் அம்மாக்கள்லாம் டிசைன் டிசைனா உல்லன் துணியில ஸ்வெட்டர் தச்சுப் போட்டு அந்தப்பொட்டிய அழகா மூடி வச்சிருப்பாங்க. அது மேல பூனைக்குட்டி போய் படுத்திருக்கும். விவித பாரதி, சிலோன் ரேடியோன்னு பாடிட்டு கிடக்கும் அது. காலைல "ஆகாஷ வாணியின் செய்தியறிக்கை. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சுவாமி"ன்னு கேட்டுகிட்டே எந்திரிப்போம். தென்கச்சியார் வேற சைட்ல வருவாரு. ரெண்டு நிமிஷக் கதைய ஜவ்வா இழுத்து பத்து நிமிஷம் சொல்லி கடைசில தத்துவம் கூட ஒண்ணு சொல்லுவாரு. டி.வி-லாம் அப்போ ரொம்ப ரொம்ப கம்மி. அதுவும் தூர்தர்ஷன் மட்டும்தான்.

ஞாயித்துக்கிழமை காலையில தூர்தர்ஷன்-ல வந்து "மிலே சுரு மேரா துமாரா. தோ சூரு பனே ஹமாரா"னு பாடுவாரு பாலமுரளி கிருஷ்ணா (ன்னு ஞாபகத்துல இருந்தது. ஆனா ஆக்சுவலி அதப்பாடினது பீம்ஷென் ஜோஷின்னு ஒருத்தரு, பெரிய சிங்கருங்கோவ்). பாலமுரளி "நாம் இசைந்தால் இருவரின் சுரங்களும் நமதாகும்" னு பாடுவாரு. ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க. என்னா குரல் வளம்?

கூடவே லதா மங்கேஷ்கர், வாணி ஜெயராம், கமல்ஹாசன், பிரகாஷ் படுகோன் (நம்ம தீபிகா படுகோனோட அப்பா), மீனாட்சி சேஷாத்ரி, ஷபனா ஆஸ்மின்னு எத்தன பேரு... வந்து அவுங்கவுங்க லேங்குவேஜூல பாடிட்டு போவாங்க. ஞாயித்துக்கிழமை ஆரம்பமே அசத்தலா ஆரம்பிக்கும். அஞ்சு வயசுல இருந்து பதினஞ்சு வயசு வரைக்கும்னு அரை டிக்கெட்டுங்க எல்லாம் கும்பல் சேந்து டி.வி. பாக்க உக்காந்துக்குவோம்.

அதெல்லாம் ஒரு கனாக்காலம்ங்க. வெள்ளிக்கிழமை சாயங்காலமே மாமா வந்து என் தங்கச்சிய அவுங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போயிடுவாரு. அவருக்கு பெண்குழந்தைங்கன்னா இஷ்டம். (அவுங்க வந்தா அத்தைக்கு கூடமாட வேலை செய்வாங்க, நாம செய்வமா?) நாம ஞாயித்துக்கிழமை தான் என்ட்ரி. எங்க வீட்ல டி.வி கெடயாது. மாமா வீட்லதான். அதுவும் பிளாக் & ஒயிட் டி.வி தான். கலர் டி.விலாம் ரொம்ப அதிசயம். ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் போடுற படத்தைப்பார்க்க கூட்டம் முண்டியடிக்கும். எங்க வீட்டுக்கிட்ட சில வெவரமான ஆளுங்க டிக்கெட் அம்பது பைசா வச்சு வசூல் பண்ணுவாங்க. செம கலெக்ஷ்ன் ஆகும். (அப்போ சிலேட்டுக் குச்சி அஞ்சு பைசா, தவிட்டு பிஸ்கட் அஞ்சு பைசாக்கு ரெண்டு, குச்சி ஐஸ் பதினஞ்சு பைசா, ரேஷன் மண்ணெண்ணெய் லிட்டர் ஒண்ணே முக்கா ரூபா)

ஞாயித்துக்கிழமை காலைல இராமாமாமாமா....யணம் போடுவாங்க. இராமனையும், சீதாவையும், அந்த ஸ்மைலி கிருஷ்ணனையும் மறக்க முடியுமா? கெழடு கட்டைல இருந்து கால் டிக்கெட்டுங்க வரைக்கும் ஒண்ணா உக்காந்து பாத்த ஒரே நாடகம். இப்போ வர்ற இராமயணம்லாம் சும்மா. அப்புறம் சந்திரகாந்தா-ன்னு ஒரு டப்பிங் நாடகம். போட்டு ஜவ்வு இழு இழுத்தாங்கல்ல. அது முடிஞ்சவுடனே மத்தியானத்துக்கு மாநில மொழித்திரைப்படம். கீழ சப் டைட்டிலோட எல்லா மொழிப்படத்தையும் போடுவாங்க. வங்காளி, போஜ்பூரி, கொங்கணின்னு... சத்யஜித் ரே படம்லாம் கூட போடுவாங்க.

அதுல எப்படா தமிழ்ப்படம் போடுவாங்கன்னு தேவுடு காப்போம். ஆனா பெரியவங்க யாரும் அதை பாக்க மாட்டாங்க. மத்யானம் இட்லிக்கு மாவரைக்க போயிடுவாங்க. அப்பதான வேலையெல்லாம் முடிச்சுட்டு ஈவினிங் உக்காந்து தமிழ் படம் பாக்க முடியும். நொய்யி நொய்யின்னு விளம்பரம் தொந்திரவெல்லாம் கிடையாது அப்ப. ஞாயித்துக்கிழமை ஃபுல்லா இப்டியே போகும்.. ஏண்டா திங்கக்கிழமை வருது, ஸ்கூலுக்குப் போணுமேன்னு கடுப்பா இருக்கும்.

கொஞ்ச நாள் கழிச்சு வெள்ளிக்கிழமையானா ஒளியும் ஒலியும் போட ஆரம்பிச்சாங்க. அரை மணிநேரத்துக்கு சினிமாப் பாட்டு தூள் பறக்கும். (அதுலயும் நோ விளம்பரம்) "அதை ஒரு மணி நேரம் ஆக்கினாலே போதும் மக்கள் நமக்கு ஓட்டு போட்டுடுவாங்க. நாம ஈஸியா ஜெயிச்சுடலாம்"னு படத்துல வசனம்லாம் வந்துது. அவ்ளோ ஃபேமஸ். அதே மாதிரி புதன்கிழமைன்னா ஹிந்தி பாட்டுங்களுக்கு சித்ரஹார்னு ஒன்னு, ரங்கோலின்னு ஒரு ப்ரோக்ராம். அப்புறம் வியாழக்கிழமை திரைமலர்னு சொல்லி அரை மணி நேரம் எதாவது ஒரு படம் (ரேண்டமா செலக்ட் பண்ணி) போடுவாங்க.

அதுக்கப்புறம் ஞாயிறு மட்டுமில்லாம வெள்ளிக்கிழமையும் படம் போட ஆரம்பிச்சாங்க. நைட்டு பத்து மணிக்கு ஆரம்பிச்சு ரெண்டு மணிக்கு முடியும். திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குவோர் டாபர் லால் தன்த் மஞ்சன், விக்கோ டர்மரிக் (இல்ல காஸ்மடிக்), உஜாலா (சொட்டு நீலம் டோய், ஹோய் ஹோய் சொட்டு நீலம் டோய்), 501 பார் சோப், ஹீரோ சைக்கிள், கோல்கேட், ஹமாரா பஜாஜ், வாஷிங் பவுடர் நிர்மா, மாலா டி, டீலக்ஸ் நிரோத்-னு அது ஒரு பெரிய லிஸ்ட்டே வாசிப்பாங்க. சூப்பரா இருக்கும். அப்பா கடையில இருந்து பூஜை போட்டு கொண்டு வர்ற பொரிகடலை மூட்டையோட படம் பாக்க உக்காந்தா பொரி முடிஞ்சு, கடலை முடிஞ்சு, பட்டாணி எல்லாம் முடிஞ்சு, தேங்காவ காலி பண்ணி, வாழைப்பழத்த முழுங்கி... அதுக்கப்புறம் தான் படம் முடியும்.

அதே மாதிரி, வயலும் வாழ்வும்னு ஒரு நிகழ்ச்சி. சும்மா பட்டையக்கிளப்பும். ஆடு மேய்க்கறது எப்பிடி? பூச்சி மருந்து தெளிப்பது எப்பிடி? உரம் (விஜய் 17-17-17) போட்றது எப்பிடி? வெட்டுக்கிளிய தொரத்தறது எப்பிடி? கரும்பு மகசூல் சாகுபடி முறைன்னு வெரைட்டியா போட்டுத்தாக்குவாங்க. நடுநடுவே கோவணத்தோட திரியிற நம்ம மண்ணின் மைந்தர்களோட பேட்டியும் (நீங்க எத்தன வருஷமா ஆடு மேய்க்கிறீங்க? ஆடு நெறயா புழுக்கை போட்டா என்ன பண்ணுவீங்க? ஆடு மட்டும்தான் மேய்ப்பீங்களா? இல்ல எருமையுமா?) உண்டு.

செவ்வாய்க்கிழமையானா ஒரே ஸ்டுடியோல ஒரே செட்டப்போட்டு அதுக்குள்ளாறயே நடக்குற ஒரு மணி நேர நாடகம் போடுவாங்க, பகல் நேரத்துல திங்கள் முதல் வெள்ளி வரை "சாந்தி..சாந்தி..சாந்தி.." ன்னு ஒரு மெகா சீரியல் (அதாவது நெடுந்தொடர்) இப்போதைய தொடருக்கெல்லாம அண்ணன், அக்கா எல்லாம் அதான். ஹீரோயின் சாந்தி யாரு தெரியுமா? சொன்னா இப்போதைய சின்னப்பசங்க கூட ஜொள்ளு உடுவீங்க. கிரிக்கெட், சிம்பு மற்றும் லோ கட் ஜாக்கெட் புகழ் மந்திரா பேடிதான். (அவுங்களுக்கு இப்போ 37 வயசாம், பாத்தா அப்டியா இருக்கு?) அப்புறம் ஜூனூன்னு ஒரு நாடகம். ஸ்வாபிமான்(சுயமரியாதை)ன்னு ஒண்ணு. எல்லாமே தமிழ் டப்பிங்.

அப்பப்ப நிகழ்ச்சிகளுக்கு நடுவுல "பீய்ங்க்க்....... ன்னு சவுண்ட் குடுத்துகிட்டே.. தடங்கலுக்கு வருந்துகிறோம்னு கார்டு போடுவாங்க வானவில் கலர்ல. புதன்கிழமையானா எதிரொலின்னு ஒரு நிகழ்ச்சி. நேயர்களோட கடிதங்கள படிப்பாங்க. எவ்ளோ திட்டி எழுதிருந்தாலும் நல்லவங்க மாதிரி சிரிச்சுகிட்டே படிப்பாங்க. அந்த காலத்து பி.ஏ படிச்ச அண்ணணுங்க எல்லாம் அதுக்கு லெட்டர் எழுதி போடுவாங்க (அத மட்டும் டிவில படிச்சுட்டாங்கன்னா அவுங்கள கைல புடிக்க முடியாது. டைப் இன்ஸ்டிடியூட் வாசல்ல போயி நின்னுட்டு அக்காங்க முன்னாடி சீன் போடுவாங்க) சனிக்கிழமை நைட்டு "முன்னோட்டம்". அடுத்த ஒரு முழு வாரத்துக்கு வரப்போற நிகழ்ச்சிகளோட லிஸ்ட வாசிப்பாங்க.

இது போக மத்த நாட்கள்லல டர்னிங் பாயிண்ட் இண்டியா, வொண்டர் பலூன் (இதுல சின்ன வயசுல ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிச்சிருக்காருப்பா) இராமாயணம் தொடர் முடிஞ்சதும் மகாபாரதம், அலிஃப் லைலா (ஆயிரத்தோரு இரவுகள்), திப்பு சுல்தான், சுரபி (ரேணுஹா சஹானே), ஷா ருக் கான் நடிச்ச "பாஜி", நம்ம மேடி மாதவனோட "ஸீ ஹாக்ஸ்", சின்னக்கலைவாணர் விவேக்கோட "மேல் மாடி காலி", ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சு "துப்பறியும் சாம்பு", அவரோட பொண்ணு ஒய்.ஜி.மதுவந்தி யோட அந்தாக்ஷரின்னு எத்தனை சூப்பர்ஹிட் ப்ரோக்ராம்ஸ்.. ஹிட் ரைட்டர் சுஜாதாவோட ஹிட் நாவல் "மீண்டும் ஜீனோ" கூட நாடகமா வந்துது.

எட்ரை மணி டிடி நியூஸ் பயங்கர ஹிட். ஷோலே, பாட்ஷால்லாம் கூட அதுகிட்ட நிக்கக்கூட முடியாது. அதுலயும் நியூஸூன்னா சோபனா ரவிதான், சேலை, ஜாக்கெட், ஸ்டிக்கர் பொட்டு கலர்லாம் மேட்சிங்கா போட்டுட்டு வருவாங்க (நதியாக்கு முன்னாடியே) பிறகு ஃபாத்திமா பாபு கொஞ்சம் ஃபேமஸ், வரதராஜன், நிஜந்தன், ஹேண்டிகேப்டு (சாரிங்க) ஒருத்தரு பேரு மறந்து போச்சி (அழகன் படத்துல கூட வருவாரு). மத்தியானத்துல ஊமை நியூஸ் (ஒரு அக்கா நியூஸ் வாசிக்கும், இன்னோரு அக்கா சைகைல விளக்கம் சொல்லும்-பாராளுமன்றத்துக்கு ஒரு பெரிய வட்டம் போட்டு சைகை காமிக்கும் பாருங்க, செமையா இருக்கும்)

குட்டிப் பசங்களுக்குன்னு கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம்னு அறிவுப்பூர்வமான லோக்கல் நிகழ்ச்சிகளும் உண்டு. வெஸ்டர்ன் ஹிட்ஸா ஹீ மேன், ஜங்கிள் புக், டேல்ஸ்பின், டக் (வாத்து) டேல்ஸ், ஸ்பைடர் மேன், ஜெயண்ட் ரோபாட்டுன்னு, டிடிய அடிச்சுக்க யாராலயும் முடியாது.. "சக்திமான்" ஒண்ணு போதும் குட்டீஸூக்கு. சக்திமானா நடிச்சது ஹிந்தி சூப்பர் ஆக்டர் முகேஷ் கன்னா. பார்லே-ஜி அதுலேர்ந்துதான் ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. கேப்டன் வ்யோம்-னு மும்பை மாடல் மிலிந்த் சோமன் நடிச்ச தொடர் ஒண்ணு(பச்சைக்கிளி முத்துச்சரம்ல ஜோதிகாக்கு ஜோடியா வருவாரே - நீள முடி வில்லன், அவர்தான்).

இப்படி வெரைட்டியா வெளுத்துக்கட்டி தனிக்காட்டு ராஜாவா ரொம்ப நாள் இருந்ததுதுங்க தூர்தர்ஷன். அப்புறமாதான் கொஞ்சம் கொஞ்சமா கேபிள் டி.விங்க வர ஆரம்பிச்சுது. முதல்ல பெரியண்ணன் சன் டி.வி. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம்னு ஆரம்பிச்சாங்க. அத அப்படியே 24 மணி நேரமாக்கி, தம்பி தங்கச்சிங்களா நிறைய சேனல் ஆரம்பிச்சு, சினிமாவுக்குன்னே ஒரு தனி சேனல போட்டு... இப்போ தான் உங்களுக்கே தெரியுமே. எத்தனை சேனல். இதனால நம்ம ஊர்கள்ல புறநகர்ப்பகுதியில இருந்த சினிமாத் தியேட்டருங்களையெல்லாம் மூட வேண்டிய அளவுக்கு ஆகிப்போச்சு நிலைமை. "வேக வேகமாக மூடப்பட்டு வரும் புறநகர்ப்பகுதி சினிமாக்கொட்டகைகள்-ஒரு சிறப்புப் பார்வை"ன்னு அதுக்கு அவுங்களே அதுக்கு ஒரு நியூஸூம் போட்டாங்க. "வெயில்" பிளாஷ்பேக்ல கூட வருமே.

ஆனா என்னதான் இருந்தாலும் சளைக்காம அடிக்கறதுன்னா நம்ம தூர்தர்ஷனை மிஞ்சற ஆள் என்னைக்குமே கிடையாது. எத்தனை சன் வந்தாலும் இன்னைக்கும் கன் மாதிரி நிக்கிறாங்கல்ல.

2 கருத்துகள்:

  1. ஏ அப்பாடி, தொலைக்காட்சி பத்தி இவ்வளவுபெரிய ஆராய்ச்சியா? சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே பிட்டுப்பிட்டு வச்சிருக்கிரதைப்பாத்தா, நீங்க கூட ஒரு
    சீனியர் சிட்டிசனாதான் இருக்கனும்.

    பதிலளிநீக்கு
  2. // Lakshmi சொன்னது…
    நீங்க கூட ஒரு
    சீனியர் சிட்டிசனாதான் இருக்கனும். //

    அப்படின்னு நினைக்கிறீங்களா மேடம்....?

    மேலாப்புல ஒரு போட்டோ போட்டிருக்கேன்ல... அது போன மாசம் விஜய் டி.வி நீயா? நானா? வுல கலந்துகிட்டப்போ எடுத்தது.... என்ன வயசிருக்கும்னு சொல்லுங்க பாக்கலாம்??

    பதிலளிநீக்கு