செவ்வாய், 22 ஜூன், 2010

ஞாநி அட்வைஸ் + இது இருபத்தைந்தாவது பதிவு

- எஸ்கா

அவனவன் நூற்றைம்பது பதிவு, நானூற்றைம்பது பதிவுகள் போடும் போது இருபத்தைந்தாவது பதிவுக்கு எதற்கு ஒரு தனிக் குறிப்பு என்று ஒரு கேள்வியை முதலில் நானே கேட்டுக்கொண்டேன்.


பதிவுலகில் ப்ளாக்கர் / பதிவர் என்று எத்தனையோ பேர் ஏற்கனவே எதையெதையோ எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் போது நாமும் உள்ளே நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்று தான் தோன்றியது. நாம் என்னத்தை பெரிதாக எழுதிக் கிழிக்கப் போகிறோம் என்றும் ஒரு யோசனை. ப்ளாக் என்பது நாம் எழுதும் டைரிபோல. அதைப் பொதுவில் வைப்பதால் என்ன பலன்? என்பது என் எண்ணம்.


மேலும் ஆரம்பத்தில் நான் பார்த்த பதிவுகள் எல்லாம் சொந்தக் கதை, சோகக் கதை பேசுபவை அல்லது விக்கிப்பீடியா டிரான்ஸ்லேஷன். அதையும் மீறினால் ஒருவரையொருவர் திட்டும் தண்ணி வராத குழாய்ச் சண்டைகள். பின் நவீனத்துவம், சே குவாரா, ஈழத்தமிழர் என்று அங்கங்கே தோன்றியதைத் தூவி தம் அறிவு ஜீவித் தனத்தை பறைசாற்றும் முயற்சிகளும் இருந்தன.


ஆகவே பிளாக்குகளைப் படிப்பது என்பதே ரொம்ப சுவாரசியமாக இருந்து கொண்டிருந்தது எனக்கு. வெரைட்டியாக, வெட்டியாக, பொழுது போக, ஆபீஸில் சீன் போட என்று செலக்ட் செய்து லிங்க், லிங்க்காகப் போய் படித்துக்கொண்டிருந்தேன். படிப்பதே போதும். எழுதுவதெல்லாம் தேவையில்லாத வேலை என்றிருந்தது எனக்கு.


ப்ளாக் என்பது சொந்தப் பத்திரிகை போல மனம் போன போக்கில் நாம் விருப்பப்பட்ட எதை வேண்டுமானாலும் எழுதி நாமே போட்டுக் கொள்வதாயிற்றே. இதில் என்ன பெரிய இது என்றெல்லாம் எண்ணிக் கொண்டுதான் இருந்தேன். நாம் எழுதுவதை நாமே பப்ளிஷ் செய்வதால் என்ன பயன்? நம் எழுத்தை மற்றவர் தானே அங்கீகரித்து பப்ளிஷ் செய்ய வேண்டும்?


அதனால் கடந்த ஆண்டு (2009) மார்ச் மாதத்தில் இருந்து யூத்ஃபுல் விகடனுக்கு கட்டுரைகளையும், நகைச்சுவைப் படைப்புகளையும் எழுதி அனுப்பத் துவங்கினேன். என்ன காரணமோ தெரியாது, என் கட்டுரைகள் எதுவும் நிராகரிக்கப் பட்டதே இல்லை, ஒன்றிரண்டைத்தவிர (நன்றி:விகடன் குழுமம்).


சிற்றிலக்கியக் கூறுகள் கொண்ட ஒன்றிரண்டு கட்டுரைகள் மட்டும் உயிரோசை டாட் காமுக்கு (நன்றி:மனுஷ்யபுத்திரன்) அனுப்பி வைக்கப் பட்டு உடனடியாக வெளியிடப்படும். பாதகமில்லை. அவரவர்க்கு அவரவர் பாலிஸி. இது தவிர தமிழ்வணிகம் டாட் காமில் பொருளாதாரம் சம்பந்தப் பட்ட சில கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன (தேங்க்ஸ் டு செல்வமுரளி). ப்ளாக் எழுதலாம் என்ற எண்ணமே வராமல் இருந்தது.


ஒருமுறை குர்காவுன் போய்விட்டுத் திரும்பிய பயணத்தில் விமானத்தில் ஞாநியைப்பார்த்த போது போய்ப் பேசிக்கொண்டிருந்தேன். (அதைத்தனிப்பதிவாகப் போடுகிறேன்) அவரிடம் "ப்ளாக் என்பது நாம் எழுதும் டைரிபோல. அதைப் பொதுவில் வைப்பதால் என்ன பலன்?" என்று வழக்கம் போல வாதம் செய்து கொண்டிருந்தேன். அவரோ "பதிவுலகம் என்பது ஊரில் உள்ள பொதுச் சுவர் போன்றது. நம் பதிவுகள் விதவிதமான சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போன்றன. விருப்பமுள்ளவர்கள் தேவையானதைப் படிக்கலாம்" என்று சொல்லிவிட்டு கண்டிப்பாக ப்ளாக் எழுதுங்கள் என்று அட்வைஸினார்.


ஊருக்குத் திரும்ப வந்ததும் ரூமுக்கு வந்து (ரூம் போட்டு இல்லை) ரொம்ப நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். சரி. ஆனது ஆயிற்று. அவர் பேச்சையும் கேட்க வேண்டாம். என் பேச்சையும் கேட்க வேண்டாம். ரெண்டுக்கும் நடுவில் எதாவது செய்வோம் என்று இப்போதைக்கு யூத்ஃபுல் விகடன், உயிரோசை டாட் காம், தமிழ்வணிகம் டாட் காம் மூன்றிலும் வெளியானவற்றை மட்டும் பதிவேற்றுவோம். வரவேற்பைப் பார்த்துவிட்டு ப்ளாக் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.


அப்படியாகப் பதிவேற்றப் பட்டவைதான் நீங்கள் படித்த 24 பதிவுகள். இவற்றில் "ஸாரி சூர்யா, ஸாரி சிங்கம்" மற்றும் "இராவணன்" பதிவுகளைத் தவிர மற்ற அனைத்தும் மேற்கண்ட வெப்சைட்டுகளில் வெளியாகி மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அப்படிப் பதிவேற்றியும் ரொம்ப நாளாக ஒருத்தரும் வீட்டுப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.


ஒருமுறை யூத்ஃபுல் விகடனில் "நம் பதிவுகளை பலரையும் படிக்க வைப்பதெப்படி?" என்று ஒரு கட்டுரை வெளியானது. அதில் தமிழிஷ், தமிழ்மணம், திரட்டி போன்ற திரட்டிகளைப்பற்றியும், அவற்றில் எப்படி நம் பதிவுகளை இணைப்பது எப்படி என்றும் அழகாகச் சொல்லியிருந்தார்கள். அதன் படி சில பதிவுகளை தமிழிஷில் ஏற்றினேன். இவை தவிர சில பதிவுகள் யூத்ஃபுல் விகடனின் "குட் பிளாக்ஸில்" வெளிவந்தன. அதன் பிறகுதான் என் பதிவுக்கும் ஆட்கள் எட்டிப்பார்க்கத் துவங்கியதெல்லாம்.


ஆனால் என் பதிவுகளுக்கு எவனும் பின்னூட்டம் போட மாட்டேனென்கிறானே என்று ஒரு வருத்தம் இன்னமும் இருக்கிறது. டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்த நண்பன் ஒருவனிடம் பேசிய போதுதான் அதற்குப் பல காரணங்கள் என்பது தெரிந்தது. முதலில் ப்ளாக்கில் கேட்ஜட்டுகள் இணைப்பதில் துவங்கி, படிப்பவர்கள் பின்னூட்டம் போட வசதிகளை ஈஸியாக ஏற்பாடு செய்து தருவது வரை மாற்றங்கள் செய்து தர வேண்டுமென்று புரிந்து கொண்டேன்.


செய்வோம். எல்லாவற்றையும் செய்வோம். என்ன அவசரம்? இப்போது தானே எழுத ஆரம்பித்திருக்கிறோம். சீக்கிரமே ரெகுலராக்கி எல்லாவற்றையும் செய்யலாம். என்ன? சரிதானே..
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

2 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. நானும் பிளாக்கை டைரி என்றே நினைத்தேன். பிறகு, அது நமது மனதில் உள்ளதைக் கொட்டுவதற்கு உரிய இடமாகத் தெரிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி திரு அமைதி அப்பா, உங்கள் பேரை ப்ளாக்குளில் பார்ப்பது வழக்கம். வித்தியாசமாக இருந்ததால் மனதில் நின்று விட்டது. இதே போல் அபி அப்பா என்ற பெயரில் ஒரு பதிவர் இருக்கிறார்.

    உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படித்தேன். ஆணி அடித்தாற்போல் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு