சனி, 5 ஜூன், 2010

டீமேட். ஏன்? எதற்கு?

ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப் புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில் டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப் போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள். ஷேர் வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள் உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.



மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய் வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா? அதற்கு என்ன அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான் செக் புத்தகம் கொடுத்தார்கள். சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில் பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம் ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள். அதாவது, பொருளாக / மெட்டீரியலாக, அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!

இன்னோரு விஷயம். ஏடிஎம் கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும். நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்? அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா? ....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு. போதும். (கட்ட முடியவில்லையா? அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ, பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி (ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..

சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு, புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம் செய்யப் பட்டன. நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள் என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன. ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள் நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?

இங்கே தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம் என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம் காகிதத்தில் அச்சிடப்பட்டது. காகிதமா? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம் தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.

அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார் பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு? ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று முடிவாகியது. உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப் பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை. நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல். சுருக்கமாக டீ-மேட்.

அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர் மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர் சிஸ்டத்துக்கு மாற்றினார்கள். NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும் பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை (transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர வேண்டியதாயிற்று. பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

இப்போது ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச் சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம் சொல்லி விடுவார்கள். அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும். இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங் (கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ, எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே? உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி?

ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள். இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள் இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை. அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக் லீஃப். அவ்வளவுதான்.

கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும். (முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும். சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள் போட வேண்டியிருக்கும். மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............? விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு? என்று வடிவேல் புலம்புவது போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்) மாறியிருக்கும், அவ்வளவுதான்.

ஆக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட் அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை டெபாஸிட்டரி என்பார்கள். இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள் உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம் இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும்.

ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங் (பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும் சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE, BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும. டீ-மேட் அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்) போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும் போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில் வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

15 கருத்துகள்:

  1. எனக்கும் பல நாட்களாக எண்ணம் இருக்கிறது நண்பரே
    ஷேர் மார்க்கெட்டில் புழங்க... உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் பாலா... ஷேர் மார்க்கெட் ஒன்றும் பிரம்ம வித்தையல்ல... சுலபம் தான்... ஆனால் அதில் புழங்க வேண்டாம்.. அதை வெறும் முதலீட்டாக மட்டும் பார்த்தால் போதும்... அப்போதுதான் மீள முடியும். http://www.tamilvanigam.com/ உங்களுக்கு உதவலாம்... முயற்சி செய்து பாருங்கள்..

    பதிலளிநீக்கு
  3. நல்லா புரியும்படி எழுதிருக்கீங்க!பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான விளக்கம்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. நன்றி அருணா மேடம்.. உங்க கட்டுரைகளை யூத்ஃபுல் விகடன்ல பாத்துட்டு இருக்கேன். ஆனா முழுசா படிக்காம அங்கங்க படிச்சுட்டு ஜம்ப் ஆயிடுவேன்.. பின்னூட்டம் போடுறதுலயும் ஒரு சலிப்பு.. for your kind information நானும் டீச்சிங் ஃபீல்டுல இருந்தவன்தான். மூணு வருஷம் டீச்சராவும், லெக்சரராவும் இருந்தேன். அந்த வகையில நாம ஒரே ஜாதி...

    பதிலளிநீக்கு
  6. கதிர் சார், உங்களுக்கும் நன்றி.. நான் ஒரு மிகப்பிரபல ஷேர் மார்க்கெட் கம்பெனியில டிரெயினரா இரண்டரை வருஷம் நிறைய குப்பையை கொட்டியிருக்கேன், அந்த வகையில நீங்களும் நானும் ஒரே ஜாதி... வெல்கம்.. நான் பக்கத்து ஊருதான் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... அருண்..

    பதிலளிநீக்கு
  8. hi informative post. thanks .. Can u suggest how to choose a good brokerage? I am planning to open up a demate account and to do trading.. So many brokers with different brokerages are availabe in the field.. So which one is best.. Or how to choose a best one?

    பதிலளிநீக்கு
  9. நண்பரே....
    brokerage எனப்படும் தரகுத் தொகையைப்பார்த்து தரகரைத் தேர்ந்தெடுப்பது என்பது முக்கியமில்லை, அது வீண் வேலைதான். அவர் தரும் பரிந்துரைகள் உங்களுக்கு உபயோகமாயிருக்குமா என்பதையும் சரியான நேரத்தில் பரிந்துரைக்கிறாரா என்பதையும் மட்டும் சற்று கவனித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் ஆரம்பப் பத்திரங்களில், தங்கள் அனுமதி இல்லாமலே பங்குகளை விற்று காசாக்கிக் கொள்ளும் ஆப்ஷனில் (பவர் ஆஃப் அட்டார்னி) கையெழுத்துக் கேட்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் கையெழுத்துப் போட்டு விட்டு... ஷேரை மறந்து வேறு வேலை பார்க்கும் பட்சத்தில் சில மாதங்கள் கழித்துப் பார்த்தால் உங்கள் ஷேர்கள் காணாமல் போயிருக்கும். சிலர் லிமிடெட் பவர் ஆஃப் அட்டார்னியில் கையெழுத்து வாங்குவார்கள். அது அவ்வளவாக பாதிப்பைத் தராது. என்னைக் கேட்டால் டிரேடிங்கே வேண்டாம் என்று தான் சொல்வேன். டிரேடிங் செய்து சம்பாதித்தவர் என்று எனக்குத் தெரிந்து எவருமில்லை. முதலீடு மட்டும் செய்யுங்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நல்ல நிறுவனமாக வாங்கி வைத்து விட்டு ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து விற்றுக் கொள்ளுங்கள். டிரேடிங் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  10. Excellent. ICICI confuses NRIs with PIN and NON PIN Accounts. Can you please explain these in your next posting ?

    பதிலளிநீக்கு
  11. ICICI ஆ... முயற்சிக்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  12. நானும் ஒரு பங்கு சந்தைப் பைத்தியம் :)
    நல்ல விஷயம்.விளக்கமாய் சொல்லியுள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    LOSHAN
    http://arvloshan.com/

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் துவக்கத்தில் எழுதியது போல் டீ மேட் என்ன வென்று பல முறை தெரிந்து கொள்ள முயற்சி செய்து அப்படியே விட்டு விட்டேன். உங்கள் பதிவில் இருந்து தலை முதல் கால் வரை படித்து தெரிந்து கொண்டேன் இருந்தாலும் எனக்கு பங்கு வர்த்தனையில் ஆர்வமில்லை என்பது தான் உண்மை. ஹி.. ஹி.. மன்னிக்க.

    பதிலளிநீக்கு