திங்கள், 5 ஜூலை, 2010

வைகுண்ட ஏகாதசியும் அடை அவியலும்

-எஸ்கா

(இக்கட்டுரை ஜூலை 05 அன்று உயிரோசை டாட் காமில் வெளியானது.)


டிசம்பர் மாதம் எப்போதுமே ஒரு ஸ்பெஷல்தான். ஏனென்றால் அதில் நிறைய பண்டிகைகள் வரும். கிறிஸ்துமஸ், மொகரம், குருநானக் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நியூ இயர் என்று. யாருக்கு பண்டிகை வந்தால் என்ன? நமக்கு என்னவோ தீனி வந்தால் சரி. கிறிஸ்துமஸுக்கு சார்லஸ் அல்லது ஸ்டீபன் வீட்டிலிருந்து ஸ்டாரும், பெரிய கேக்கும் வந்து விடும். மொகரம் என்றால் பிரியாணி கன்ஃபார்ம். வைகுண்ட ஏகாதசிக்கு எங்கள் பகுதியில் பலர் வீடுகளிலும் அவியல் செய்வார்கள். சாப்பாடு + அவியல் + அடை மிகப் பிரசித்தம்.

நியாயமாகப் பார்த்தால் அன்றைக்கு விரத தினம் மாதிரி. ஃபாஸ்டிங் இருக்க வேண்டும். நமக்கு எங்கே அந்த ரூலெல்லாம் மண்டையில் ஏறும்? நமக்கு அவியல் வேண்டும். தட்ஸ் ஆல். சேலத்தில் பெரிய பெருமாள் கோவில், கோட்டை பெருமாள் கோவில்தான். அன்று வைகுண்ட வாசல் திறப்புக்காக நீண்டு வளர்ந்த அனுமார் வால் கியூ மணிமுத்தாறு கரையை ஒட்டி நிற்கும். போலீஸ், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ், என்.சி.சி, என்.எஸ்.எஸ். பசங்கள் காவலோடு இன்ச் இன்சாக நகரும் கியூ.

நடு ராத்திரியே, ஏன் முதல் நாள் இரவு பத்து மணிக்கே போய் கியூவில் நின்று விடுவோம். நின்றால் காலை ஆறு மணிக்கு எப்படியும் சாமி பார்த்து விடலாம். எப்படியும் என்.சி.சி. டியூட்டியில் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்கள்தான் இருப்பார்கள். காலையில் லேட்டாக வரும் அம்மா, தங்கச்சி, பக்கத்து வீட்டு ஆயா, எதிர்த்த வீட்டு ஃபிகர், பின் வீட்டுப் பாப்பா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, அண்ணன் என எல்லாரையும் உள்ளே விடுவோம்.

வால் நகர நகர பாதியில் ஓடி ஓடிப் போய் வழியல் தரப்படும் இலவச பிரசாதங்களைச் சாப்பிட்டு விட்டு கியூவில் நிற்பவர்களுக்காகக் கொஞ்சம் கவர்ந்து வருவோம். காசு கொடுத்துக் கொஞ்சம் தீனி. கோயிலுக்குள்ளே தரும் பிரசாதம், அங்கே காசுக்கு வாங்கும் பிரசாதம் என வரிசையாக வஞ்சனையில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டே இருப்போம். தள்ளு முள்ளுகள் எல்லாம் செய்து சாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டுக்குப் போனால் அன்றைய ஸ்பெஷல் அவியல் ரெடியாக இருக்கும்.

மோரில் பச்சை மிளகாய் அரைத்து, கரைத்து ஊற்றி எல்லா காய்கறிகளையும் போட்டு அவியல் செய்திருப்பார்கள். அம்மா கைமணம் சூப்பராக இருக்கும் (எல்லா மகன்களும் சொல்கிற டயலாக் தானே இது என்கிறீர்களா?) நான் மட்டுமல்ல, வீட்டருகில் இருக்கும் எல்லாரும் என் அம்மா கைமணம் சூப்பராக இருக்கும் என்றுதான் சொல்வார்கள், ஏனென்றால் உண்மையிலேயே அம்மா செய்யும் அவியல் எங்கள் தெருவில் இருக்கும் சுமார் பதினெட்டு வீடுகளுக்கு சாம்பிள் போகும்.

அந்த ஏரியாவில் இருக்கும் பத்து வயதுக்குட்பட்ட எல்லா அரை டிக்கெட்டும் எங்கள் வீட்டில் அவியல் சாப்பிடும். அதனால் முதல் கண்டிஷனே எனக்குத் தனியாக தந்து விட வேண்டும் என்பது... ஒரு குண்டா /அண்டா / சட்டி நிறைய செய்து நமக்குத் தனியாகத் தந்து விடவேண்டும், அப்பா, பப்பி, தானம், தருமம், ஏன் அம்மாவுக்கே தர மாட்டேன். அவர்களுக்காக கொஞ்சமாய் இரண்டாவது முறை வைத்துக்கொள்வார்கள். என் பங்கில் (பங்கு என்ன பங்கு, முழுதும் என்னிடம்தான் இருக்கும்) பச்சரிசி சாதம் வைக்கச்சொல்லி தட்டு நிறைய போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு மல்லாந்து விடுவேன்.

அன்றைக்கு ஸ்கூலோ, காலேஜோ கட்டாயம் லீவுதான். லீவு போடாவிட்டாலும் லோக்கல் ஹாலிடே விட்டு விடுவார்கள். அவியலுக்குத் தோதாய், காரமாய் அதற்கு ஒரு இஞ்சி பச்சடி செய்வார்கள் பாருங்கள்... அதை நக்கிக்கொண்டே (சிரிக்காதீர்கள், பச்சடியை நக்கித்தான் சாப்பிட வேண்டும், ஐயாம் சீரியஸ்) அவியல் + சாதம் நாலு முறை உள்ளே தள்ளலாம். காலை கோயிலிலிருந்து வந்தவுடன் எட்டு மணிக்கு ஒருமுறை, வெளியில் போய் சுற்றி விட்டு வந்து பதினோரு மணிக்கு ஒரு முறை, டி.வி. பார்த்துக் கொண்டே தூங்கி எழுந்து விட்டு மூன்று மணிக்கு ஒரு முறை, சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்டு வந்து விட்டு ஆறரை மணிக்கு ஒருமுறை.

மிச்சம் மீதி ஏதாவது தென்பட்டால் நைட்டு அடை போட வேண்டுமென்பது அம்மாவுக்கே தெரியும். அவர்களே அதற்கேற்ற அளவில் அவியல் செய்து விடுவார்கள். அதற்காக என்ன வேலை செய்யச் சொன்னாலும் ரெடி. மாவு அரைத்துத் தரச்சொன்னால் கூட அதற்கும் ரெடி. ஏனென்றால் நைட்டு மிச்சம் நிற்கும் அவியல் எப்போதுமே ஸ்பெஷல். அதன் சாறு கெட்டியாகி காய்கறிகளில் காரம் இறங்கி அட்டகாசமாக இருக்கும். தட்டில் சூடான அடையைப் போட்டு மேலே அப்படியே அவியலை ஊற்றி கை சுடச்சுட பிய்த்து சைடில் வழிய வழிய நக்கிச் சாப்பிட்டால் அடா, அடா, அடா (அடை இல்லீங்க.. அடா) சும்மா கலக்கலாக இருக்கும். எப்படியும் ஏழு அடையாவது உள்ளே இறங்கும்.

அப்பா அப்படியே பார்த்துக்கொண்டிருப்பார். என்னடி பண்றான் இவன்? என்பார்" "சும்மா இருங்க, அவன் சாப்பிடுறதே பெரிசு. கண்ணு வைக்காதீங்க என்பாள் என் தாய். தெய்வத் தாய். (சீரியஸ் பாஸ், அவியல் மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஸ்பெஷல் ஐட்டங்களை மட்டும்தான் இந்தக் கட்டு கட்டுறது, மற்றபடி நான் சரியாக சாப்பிடாத நோஞ்சான் குழந்தைதான். இப்போதும் என்னுடைய வெயிட் ஜஸ்ட் 49 கிலோதான்) ஆக.. நைட்டு பத்து மணிக்கு மேல் ஸ்டார் மூவீஸ் பார்த்துக்கொண்டே மிச்சம் சாப்பாடு + அடை + மீதி நிற்கும் அவியல் எல்லாம் சுத்தமாகக் காலி செய்து விட்டுத் தான் எழுந்திருப்பது. ஸாரி... படுத்து விடுவது.

அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது ஒரு லவ்-ஓ (பாவண்டோ மாதிரி இருக்கும், லோக்கல் கூல் டிரிங்க்ஸ், பப்பிக்கு பிடிக்காது)-வுக்கு மட்டும் பர்மிஷன் வாங்கி விட்டால் அன்றைய பொழுது திவ்யமாக முடியும். ஆனால் சென்னை வந்த பிறகு அது மாதிரி டேஸ்ட்டாக எங்கும் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அடை அவியல் கிடைத்தாலும் காம்பினேஷன் சரியாக அமையவில்லை (திரும்ப ஊருக்குப்போய் மம்மி கையால் சாப்பிடு என்கிறீர்களா? அந்தக் கொடுப்பினை எனக்கு இப்போ இல்லை).

ஆபீஸில் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் அவியல் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். அம்மா கையால் சாப்பிட்ட ஞாபகத்தில் அங்கே போய் (போன வைகுண்ட ஏகாதசி சமயம்தான்) அடை அவியல் என்று இரண்டு முறை கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. மேற்கொண்டு சிறு சிறு உபரித் தீனிகள் சாப்பிட்டு விட்டு (தனியாகத்தான் அய்யா போனேன்) பில்லைப் பார்த்து கேரிங் ஆகிப்போனது. நூத்தியிருபது ரூபாய். அதோடு சரி. எழுந்து ஓடியே வந்து விட்டேன். ஒரு வருடம் ஆகப் போகிறது. அதற்குப் பிறகு இன்னும் அந்தப் பக்கம் எட்டியே பார்க்கவில்லை.

மக்களே! அடுத்த வைகுண்ட ஏகாதசியும் வரத்தான் போகிறது. ஊருக்கெல்லாம் போனால், அடையாவது அவியலாவது? செஞ்சு தர யாரும் இல்லை. ஆனால் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு அடை அவியல் சாப்பிட்டாக வேண்டுமே. எங்கே கிடைக்கும்? கொஞ்சம் சொல்லுங்களேன். திரும்பவும் ரத்னா கபேவுக்கே போலாமா அல்லது வேற எங்காவது டேஸ்ட்டாகக் கிடைக்குமா?
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

4 கருத்துகள்:

 1. Amma kai manam entha Hotelilum varaathu thambi.

  பதிலளிநீக்கு
 2. ஆமாண்ணே, என்ன பண்ணலாம் சொல்லுங்க? அந்தக் கொடுப்பினை தான் எனக்கு இப்போ இல்லையே

  பதிலளிநீக்கு
 3. ரசித்துச் சாப்பிட்டதை ருசிக்க ருசிக்க எழுதியுள்ளீர்கள். உயிரோசைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி. தமிழிஷில் இணைக்கப்பட்ட என் கட்டுரைகளில் இந்தக் கட்டுரை தான் அதிக ஓட்டுகள் வாங்கி முதல் பக்கத்தில் வைக்கப்பட்டது. என் கணக்கு சரியென்றால் இது உயிரோசையில் வெளியான ஆறாவது கட்டுரை..

  பதிலளிநீக்கு