செவ்வாய், 6 ஜூலை, 2010

அவதார் - சில கணக்குகள்

அவதார்.

(இக்கட்டுரை அவதார் படம் வந்த போது தமிழ்வணிகம் டாட் காமில் வெளியாகி மிகப் பரவலான வரவேற்பைப்பெற்றது. அப்போது இந்தக் கட்டுரையைப் படித்தவர்கள் சுமார் 3400 பேர்.)

ஹாலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர் 1 & 2 படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்தாக எடுத்திருக்கும் "அவதார்" இது. படம் பற்றி பல இடங்களில் விமர்சனம் படித்திருப்பீர்கள். பலர் படமே பார்த்திருப்பீர்கள். ஆக, இங்கே அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. வசூல் மற்றும் சில டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.. வசூல் பற்றி இப்போதைக்கு சிம்பிளாகச் சொன்னால் "பிளந்து கட்டுகிறது". டெக்னிகல் விஷயங்கள் "சான்ஸே இல்ல" ரகம்.

வழக்கம் போல எல்லா ஹாலிவுட் படத்துக்கும் சொல்வது போல உலகிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப் பட்ட படம் என்றார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிளந்து கட்டுகிறது என்றார்கள். அடப்போங்கப்பா, ஸ்டார் வார்ஸூக்கும் இதைத்தான் சொன்னீர்கள். டைட்டானிக்குக்கும் இதைத்தான் சொன்னீர்கள். கிங்காங்குக்கும் இதைத்தான் சொன்னீர்கள் என்று சலித்துக் கொண்டு படம் பார்க்கச் சென்றீர்களானால் மலைத்துப் போவீர்கள். மக்களே! உண்மையிலேயே அவதார் கையாண்டிருக்கும் தொழில்நுட்பங்களும் செய்திருக்கும் விஷயங்களும் நம்மால், நம் சினிமா மக்களால் தொட முடியாதவை.

கதை என்னவோ ரொம்பப் பழையது தான். ஆனால் அதை எடுத்திருக்கும் விதம்தான் சாதாரண ரசிகனையும் படத்தின் உள்ளேயே இழுத்துச் சென்று விடுகிறது. ஸ்கிரீனைப் பார்த்து அடி, வெட்டு, சுடு என்ற குரல்களை சத்யம் தியேட்டரின் ஆங்கில வெர்ஷனிலேயே கேட்க முடிந்தது. தமிழ் வெர்ஷன்? நல்ல வேளை. நம்ம இராம.நாராயணன் கோஷ்டியிடம் கொடுக்காமல் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் நார்மலாகத் தான் இருக்கிறது. அதனால் தப்பித்தோம்.

ஆனால் படத்தில் டெக்னாலஜி மிரட்டுகிறது. 3டி படத்தை 2டியில் பார்க்காமல், டிவிடியில் பார்க்காமல் 3டியில் பார்ப்பதே உண்மையான சந்தோஷத்தைத் தரும் என்று சொல்லலாம். நடு நடுவே ஸ்பை கிட்ஸ் 3டி போன்ற ஒருசில படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப் பட்டாலும் நம்ம ஊர் ரசிகனுக்கு மைடியர் குட்டிச்சாத்தான் படத்திற்குப்பிறகு 3டி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை கச்சிதமாக உணர இப்போதுதான் வாய்த்திருக்கிறது

வெறும் 32 நாட்கள் நியூசிலாந்து காடுகளில் லைவ் ஆக்‌ஷன் முறையிலும், 32 நாட்கள் லாஸ் ஏஞ்சல் ஸ்டுடியோவில் மோஷன் கேப்ச்சர் முறையிலும் படம் பிடிக்கப் பட்ட அவதார் படத்திற்கு, இரண்டு கேமரா மேன்கள் வேலை செய்திருக்கிறார்கள். 32 + 32 = 64 நாட்களே மொத்தமாக படம் பிடிக்கப் பட்ட அவதார் திரைக்கு வர, 4 வருடங்கள் ஆகியிருக்கிறது. படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போது, டைட்டானிக் கப்பல் போல மூழ்கத்தான் போகிறது என்றார்கள். டிலேயின் காரணம்??? ஒவ்வொரு ஃப்ரேமின் சராசரி ரெண்டரிங் நேரம்: 58 மணி நேரங்கள். படம் மொத்தம் 162 நிமிடங்கள். ஒரு நொடிக்கு 24 ப்ரேம்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். (162 நிமிடங்கள் X 60 விநாடி X 24 பிரேம்கள் X 58 மணி நேரங்கள்)

அதில் நடித்த நடிகர்களுக்கு நாம்தான் நடித்தோமா? என்று சந்தேகமே வந்திருக்கிறது படக் காட்சிகளைப் பார்த்ததும். அதிலும் நடித்து பல வருடங்களில் கழித்து தான் படம் ரிலீஸென்றால்? கிராபிக்ஸ் காட்சிகளுக்காகத்தான் சுமார் மூன்றரை வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள். இங்கே ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தில் ஸ்டைல் பாடல் முதலிலேயே படமாக்கப் பட்டு சுமார் எட்டு மாத காலம் சி.ஜி மூலம் ரஜினியின் கலர் மாற்றம் உள்ளிட்ட கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்ப்பட்டன. அதற்கு மட்டும் ஆன செலவு சுமார் ஒரு கோடி. இதுதான் அதிகபட்ச டிலே நம்மூரில்.

இந்தியாவிலும் 2டி, 3டி என்று இரு விதமாக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது அவதார். அனிமேஷன், மோஷன் கேப்சர் தொழில்நுட்பம், சி.ஜி என்று பலப்பல புதிய விஷயங்கள் படத்தில் கையாளப் பட்டிருக்கின்றன. அவதார் திரைப்படம் சுமார் 237 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்டிருப்பதாக விக்கிப்பீடியா கணக்குச் சொல்கிறது. ஆனால் உண்மையான செலவு 450 மில்லியன் டாலர் இருக்கலாம் என தி வீக் பத்திரிகை சொல்கிறது. விளம்பரத்திற்காகச் செய்யப் பட்ட தொகையையும் கூட்டிக்கொள்ளலாம். அதற்கு மட்டும் சுமார் 150 மில்லியன்.

ஆனால் ரிலீஸான ஒரே வாரத்தில் உலகம் முழுக்க சுமார் 230 மில்லியன் டாலர்களை வசூலித்துக் குவித்திருக்கிறது இது. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று வாரங்கள் முடிவதற்குள் 1000ஐத் தாண்டியிருக்கிறது. சமீபத்திய நிலவரப் படி வசூல் சுமார் 1020 மில்லியன் டாலர்கள். போட்ட காசை விட மூன்று மடங்கு லாபம் (சுமார் 300%). அருணாச்சலம் படத்தில் ரகசிய அறையில் கட்டுக் கட்டாக பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பணத்தை ரஜினி மலைப்பாகப் பார்ப்பார் அல்லவா? அதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். எப்படி இருக்கிறது?

இந்தியப் படங்களின் அதிகபட்ச வசூல் என்று பார்த்தால் 55-60 கோடி ரூபாயில் தயாரிக்கப் பட்ட தமிழ் சிவாஜி சுமார் 130 கோடி ரூபாயும் 40 கோடி ரூபாயில் தயாரிக்கப் பட்ட ஹிந்தி கஜினி சுமார் 115 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறன. (இதெல்லாம் ஏட்டுக் கணக்குகள். கஜினி 275ஐ தாண்டியதாகவும், சிவாஜி 380ஐத் தொட்டதாகவும் சினிமாப்பட்சிகள் கூவுகின்றன). அதனால் தான் இப்போது எந்திரன் பட்ஜஃட் சுமார் 135 கோடி ரூபாய், சன் பிக்சர்ஸின் முதல் நேரடித் தயாரிப்பு ஆசை என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் வளர்ந்து வந்துள்ள பணவீக்கத்திற்கு எதிராக வசூலை அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் "மதர் இந்தியா" திரைப்படம் வசூல் கணக்கில் கஜினியை முந்துகிறது. "ஷோலே", "மொகல்-இ-ஆஸம்" போன்ற படங்களின் வசூல்கள் (தனித்தனியாக) சிவாஜியின் வசூலையும் முந்துகின்றன.

இது தவிர மற்றொரு விஷயம். 1997-ம் ஆண்டில் கேமரூனின் டைட்டானிக் திரைப்படம், அகாடமி அவார்ட்ஸ் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்குப் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கர் வென்றது அது. அதற்கு முன்பு பென்-ஹர் திரைப்படம் இதே எண்ணிக்கையில் விருதுகளை வென்றிருந்தது. அதற்குப் பிறகு அந்த சாதனையை முறியடிக்கவோ ஏன் சமன் செய்யவோ கூட யாரும் இல்லை. இப்போது அவதார் எத்தனை பிரிவுகளுக்குப் போட்டி போடுகிறது என்று பார்க்கலாம்.

ஆங்கில சினிமாக்கள் குவிக்கும் வசூல் தமிழ்ப் படங்களுக்கு ஆபத்தாகத் துவங்கியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு 2012 - ருத்ரம் திரைப்படம் அதன் விநியோகஸ்தர்களைத் தவிர மற்றவர் கண்களைக் கலக்கிவிட்டுப் போனது. இப்போது அவதார் களத்தில். போட்டியின்றி ரிலீஸான வேட்டைக்காரனுக்கு அவதார் தான் போட்டி என்று கூறப்படுகிறது. வசூல் அப்படி. மற்றும் விளம்பரங்கள். அவர்கள் செய்யும் விளம்பரங்கள் தவிர வாய்மொழி, பத்திரிகை, டி.வி விமர்சனங்கள், எஃப்.எம் போன்றவை.. ஏன்? இந்தக் கட்டுரை உட்பட.

இவற்றுக்கெல்லாம் பின்னணிக் காரணம் என்ன? இந்திய மார்க்கெட் மிகப் பெரியது. பிஸினஸ் விஷயத்தில் பார்த்தால் மொழிவாரியாக இந்தியா பிளவு பட்டிருப்பது தவறு என்றே தோன்றுகிறது. நமக்குத் தேவை ஒரு நேஷனல் லேங்குவேஜ். எது எப்படியிருந்தாலும் அதில் பணம் பண்ணும் சூட்சுமத்தை ஹாலிவுட் புரிந்து கொண்டு விட்டது. உலகம் முழுக்க ரிலீஸ். அதுவும் ஒரே நேரத்தில். உன் மொழியில் வேண்டுமா? இந்தா இப்பவே பிரிண்டைத் தருகிறேன். டப்பிங் செய்து வைத்துக்கொள். ஒண்ணா ரிலீஸ் பண்ணுவோம். எனக்குத் தேவை காசு. முடிந்தால் உங்கள் ஊரைப் பற்றியும் படத்தில் ரெண்டு சீன் வைத்துத் தருகிறேன். உங்க ஆள் சந்தோஷமாக கைதட்டுவான் அல்லவா?

இப்படி யோசித்த ஹாலிவுட்காரர்கள், இந்தியாவைப் பற்றியும், ஏன் சைனாவைப் பற்றியும் கூட ஹாலிவுட் படங்களில் காட்சிகள் வைக்கத் துவங்கி விட்டார்கள். காரணம் மார்க்கெட். 30கோடி பேர் உள்ள அமெரிக்காவில் மட்டும் அவ்வளவு வசூல் வந்தால் தலைக்கு 120 கோடி பேர்களை வைத்துள்ள இந்தியாவிலும், சைனாவிலும் இருந்து எவ்ளோ பைசா கொட்டும்? யோசியுங்கள். மலைப்பாக இருக்கிறது அல்லவா? அதை அவர்கள் முன்னமேயே செய்து விட்டார்கள்.

தி மித் படத்தில் இந்தியாவில் ஒரு விஸிட் அடிப்பார் ஜாக்கி சான், படத்தில் அவருக்கு உதவி செய்வது நம்ம மல்லிகா ஷெராவத். (அதன் நீட்சியாகத்தான் தசாவதாரத்தில் மல்லிகாவை நடிக்க வைத்து, அவரை வைத்தே ஜாக்கியை ஆடியோ ரிலீஸூக்குக் கூட்டி வந்தார்கள். மார்க்கெட், பிஸினஸ் தந்திரம் - இன்னும் சில இலட்சம் பேர் கவனிப்பார்கள் அல்லவா?). தவிர ஆர்மகெட்டன், இன்டிபென்டன்ஸ் டே படங்களிலும் உலகம் அழியும் போது தாஜ்மஹாலைக் காண்பிப்பார்கள். நம் ரசிகன் அது இடிவதை கண்கள் விரியப் பார்த்து கை தட்டுவான்.

2012 ருத்ரம் படத்தில் இந்திய விஞ்ஞானி உலகம் அழியப் போவதைப் பற்றி கண்டுபிடித்துச் சொல்வார். படத்தில் பல காட்சிகள் இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் நடக்கும். அதில் அந்தந்த நாட்டு நடிகர்களும் உண்டு. படத்தை உங்கள் ஊரிலும் விற்க வேண்டுமல்லவா? (பிகைண்ட் தி சீன்ஸ்: அதன் இயக்குனர் ரோலண்ட் எம்மரீச் தன் முந்தைய படமான காட்ஸில்லா ரிலீஸ் சமயத்தில் உலகம் முழுக்க டூர் அடித்த போது நம்ம ஹாய் மதன் இரண்டு நாட்கள் அவருடன் தங்கி, விமானப் பயணம் செய்து, ஒரு சிறு விபத்தில் மாட்டி, தப்பி... என்று அது ஒரு கிளைக் கதை. ஆக மதன் சாரின் பாதிப்பில் இந்தியா நினைவு வந்து படத்தில் அக் காட்சிகளை சேர்த்திருக்கலாம்)

அதுபோல் அவதாரிலும் பல விஷயங்கள். அவதார் என்ற இந்திச் சொல், ந"வி-க்களின் (நமது) விஷ்ணு போன்ற நீலநிறம், ஹீரோ நெற்றியில் நாமம், கழுகு போன்ற இக்ரன் பறவை, ந"விக்களின் அனுமார் வால், கதாநாயகியின் பெயர் (நேத்ரி - அழகான கண்கள் கொண்டவள்) போன்ற விஷயங்களை எல்லாவற்றையும் வைத்துப்பார்த்தால் ஸ்டோரி டிஸ்கஷனி்ல் எங்கோ நம்மாள் ஒருத்தர் இருக்கிறார் போலத் தெரிகிறது.

நம் (சினிமா) மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே ஹாலிவுட் படங்கள் அதிக அளவில் இந்தியாவில் ரிலீஸானாலும், அவை முழு மூச்சில் இறங்கிக் கலக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. டிவி, டிவிடி, திருட்டு விசிடி, உயர்ந்துள்ள தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் போன்ற பிரச்சினைகளை விட பெரிய பிரச்சினை.

இனிமேலும் காதல், ஊதல், ஹீரோ பில்டப் என்று எத்தனை காலத்திற்கு ஜல்லியடித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? இந்தக் கொடுமைகள் போதாதென்று உலகப் படங்களையே சுட்டு தமிழில் படம் எடுத்து அதையும் தைரியமாக உலகப் பட விழாவுக்கு அனுப்பும் வேலையெல்லாம் வேறு நடக்கிறது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் எத்தனை படங்கள் வந்தாலும் ரசிக்கும் விதத்தில் தந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். புது முயற்சியில் படங்கள் வர வேண்டும். பசங்க, ஈரம், எ வெட்னஸ்டே, ஸ்லம்டாக் மில்லியனர், பா, பழசிராஜா போன்ற சமீபத்திய நம்பிக்கை தரும் உதாரணங்களுடன் மீண்டும் சந்திப்போம்.


----------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
----------

2 கருத்துகள்: