ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தி.நகரும் அங்காடித்தெருவும் கூடவே நானும்

பாதியில் நின்ற படத்தையோ பாதியில் நின்ற படைப்பையோ பார்த்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் நமக்கு என்றைக்கும் கிடைக்காது. எப்போதும் ஒரு முழுமை பெற்ற படைப்பே நமக்கு பார்க்கக் கிடைக்கும். என் பங்காக பாதியில் நின்ற படைப்புக்கு இதோ ஒரு சாம்பிள்.

தோன்றும் விஷயங்களை அப்படியே ஒன்றிரண்டு பாராக்கள் டைப்படித்து வைத்துக்கொள்வது நம் வழக்கம். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மசாலாக்கள் சேர்த்து சேர்த்து பெரிதாக்கி அதனை முழுக்கட்டுரை ஆக்க சிலபல நாட்கள் பிடிக்கும். ஒரேயடியாக உட்கார்ந்து ஒரே கட்டுரையாக எழுவதெல்லாம் ஒரு சிலவே...

அங்காடித்தெரு படம் வரும் முன் எழுத ஆரம்பிக்கப்பட்ட கட்டுரை இது. அப்போது சென்னையில் வேலை. ரூமுக்குப் போக தவுசண்ட் லைட்ஸில் இருந்து டி.நகர் வரை பஸ்ஸில் வந்து ரங்கநாதன் தெருவை குறுக்கே கடந்து மாம்பலம் போய் அங்கிருந்து டிரெயினில் கிரோம்பேட்டை போகவேண்டும்.

ரங்கநாதன் தெருவில் தினசரி கவனிக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்து கட்டுரைக்கு பேட்ச் ஒர்க் செய்து கொண்டிருந்தேன். முழுதாக எழுதி முடித்தவுடன் ஆனந்த விகடனுக்கு அனுப்பத்திட்டம். ஆனால் என் நேரமோ என்னவோ நான் கட்டுரையை முடிக்கு முன் அங்காடித்தெரு படம் வெளிவந்து விட்டது. படம் வந்தபின் என்னவோ எனக்கு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து முடிக்க மனமில்லை. அப்படியே விட்டு விட்டேன். என்னமோ படத்தைப்பார்த்து விட்டு கட்டுரை எழுதினாற்போல் இருக்கும்.

(இடையில் ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் வசந்தபாலனைப்பார்த்தேன். "லோகி" புத்தகத்தை வெளியிட்டு விட்டு மறைந்த இயக்குனர் லோகித தாஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் மேலிருந்த "வெயில்" வெளிச்சம் குறைய ஆரம்பித்திருந்த நேரம் அது. அடுத்த படமான அங்காடித்தெரு நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த நேரம். படம் எப்போது தான் வெளிவரும் என்று அவரிடம் கேட்டதற்கு மேலே கையைக்காட்டி என் கையில் ஏதும் இல்லை என்றார்.)அவரும் தினசரி தி.நகருக்குப் போய் அங்கே இருப்பவர்களை அவதானித்து படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்ததாகப் படித்தேன். இக் கட்டுரை குறுக்கே பல இடங்களில் இணைப்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும். உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் தேவை அங்கங்கே வரிகள் சேர்த்து செயின் லிங்க் கொடுப்பதற்கு.

தலைப்பு கூட பாதியில் நிற்கிறது. தி.நகரும் அங்காடித்தெருவும் என்று வைத்துக்கொள்ளலாமா? படியுங்கள். படித்து விட்டுச் சொல்லுங்கள்...

---------------------------

தி.நகரும்……………………..

திகுதிகுவெனத் தீப் பற்றியது போல் பரபரத்துக் கொண்டே இருக்கிறது தி.நகர்.

தி.நகர் எனச்சுருக்கப் பட்ட தியாகராய நகர் எனும் சென்னையின் மிக முக்கிய வர்த்தகக்கேந்திரம் இது. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாமே கிடைக்கும் என வழக்கமான வாக்கியத்துடன் ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தாலும் எல்லாமே இங்கே கிடைக்கும். தியாகராய நகர் ஏன் தி.நகர்னு ஆச்சு? இங்க சென்னைல எல்லாமே அப்படித்தான். கலைஞர் கருணாநிதி நகர் தான் கே.கே நகர், மகாகவி பாரதியார் நகர் இப்போ எம்.கே.பி நகர், அதே மாதிரி தியாகராய நகர் தான் தி.நகர்.

"எல... என்னல இது.. எங்கிட்டு திரும்பினாலும் சனக்காடாவுல்ல கெடக்கு" எனப் பிரமிக்கும் கிராமத்து அப்பாவை சும்மா வாப்பா என இழுத்தபடி நடக்கிறார் ஒரு ஐடி இளைஞர்..

போ, போ, போ நிக்காத நகந்துகிட்டே இரு, டேய் ஆட்டோ, இங்க நிறுத்தக் கூடாதுன்னு சொன்னா கேக்க மாட்டியா? கேஸ் புக் பண்ணாதான் அடங்குவியா? மூங்கில் லத்தியால் ஓங்கித் தட்டியபடியே உறுமுகிறார் ஒரு சின்சியர் போலீஸ்மேன்.

மொளகா பஜ்ஜி எங்கன கெடைக்கும் என்ற அம்மணியின் கேள்விக்கு பஸ் ஸ்டாண்டு வெளியில போயிடு பெரீமா. அங்க ஒரு பஜ்ஜிக்கடை கீது. என்ற பதில் வரும்போதே தே.. சும்மாயிரு. ஊருக்கு எத்தனை மணிக்கு வண்டின்னு நான் யோசிட்டு இருக்கேன். மொளகா பஜ்ஜி வேணுமாம் இவுளுக்கு என்று சடைத்த படியே இழுத்துக் கொண்டு நடக்கிறார்

தி.நகர் என்றாலே ரங்கனாதன் தெரு தான் எனுமளவு கூட்டம். அதிலும் திறந்து விடப்பட்டுள்ள புதிய பாலம் சரியாக ரங்கனாதன் தெருவின் துவக்கத்திலேயே வந்து முடிவதால் கன்ட்ரோல் செய்ய முடியாத அளவு ஜனக்கூட்டம். மாதம் ஒருமுறை டிராபிக்கை புதிய புதிய வழிகளில் திருப்பி விட்டு கூட்டத்தையும், டிராபிக்கையும் சமாளிக்க முயற்சிக்கிறது போலீஸ். ரங்கனாதன் தெரு முழுக்க தலைகள் மட்டுமே தெரிகின்றன.

என்னடா மாப்ள இது? இங்கயும் ஒரு சரவணா ஸ்டோர்ஸ். டி.நகர் முழுக்க சரவணா ஸ்டார்ஸ் இருக்கா என்ன? இனிப்பில் ஆரம்பித்து, துணிக்கடை, நகைக்கடை, பாத்திரங்கள் என ரங்கநாதன் தெரு முழுக்க வியாபித்து இருக்கின்றன சரவணா ஸ்டோர்ஸூம், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸூம். அது போக நூற்றுக்கணக்கான கடைகள். முப்பதடி இருந்த சாலை சுருங்கி பத்தடி ஆகிப்போயுள்ளது. சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தின் விளைவாக கோர்ட் உத்திரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் மெள்ள மெள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.

செருப்பு வாங்க காதிம்ஸிலும், பாட்டாவிலும் நுழையும் மேட்டுக்குடி வர்க்கம். நூறு ரூபாய் சேலையைக் கூட நடைபாதையில் பேரம் பேசி எண்பது ரூபாய்க்கு வாங்கும் கீழை வர்க்கம், மூணு பத்து மூணு பத்து சார் மூணு கர்ச்சீஃப் பத்து ரூபா சாரில் துவங்கி, இருபது ரூபாய், இருபது ரூபாய் டி.சர்ட்டுகள் வரை வாங்கி மாட்டி அழகு பார்க்கும் மத்திய வர்க்கம் எனக் கலவையாய் நகர்ந்து கொண்டே இருக்கும் ஜனத் திரள்.

பழம் வாங்கியபடியே சென்ட்ரல் செல்வதற்கு வழி விசாரிக்கும் வெளியூர் கஸ்டமருக்கு "இதோ இருக்கு பாரு, மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷன், அங்க போ சார். பார்க் ஸ்டேஷன்னு சொல்லி டிக்கெட் எடு. இறங்கி மெயின் ரோட்ட கிராஸ் பண்ணியானா சென்டிரல் தான். சப்வே இருக்கும் சார். அதுல போ. ஊர் ஞாபகத்துல அங்க போய் ரோட்டுக்கு குறுக்க கிராஸ் பண்ணிடாத. போலீஸ் ஃபைன் போட்
பத்து ரூபாய் ஃபேன்ஸி கம்மல் வாங்கித்தரும் காதலன்.

அம்மா எனக்கு கரும்பு ஜூஸ், அவனுக்கு ஐஸ்கிரீம் தான் வேணுமாம். ஒன்பதரை மணி ஆனவுடன் துணி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் வந்து நிற்கின்றன.

எஸ்.கே.சி மாதிரி பிராண்ட் ஷோரூம்லாம் அந்தப்பக்கம் இருக்கு. இதெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு. உள்ளாற போய் பாரு. சத்யா பஜாருன்னு ஒன்னு கீது. ஜீன்ஸூ, டி.சர்ட்டு, பர்பியூமு, புதுப்பட சிடி, பேக்கு, பெல்ட்டு, பேன்ஸி அயிட்டம்னு இன்னா வேணும் உனுக்கு? எல்லாம் கிடைக்கும்.

"இவ்ளோ பெரிய பாலத்தை எப்பிடிறா கட்டியிருப்பானுக? இம்மாம் கூட்டம் வரும்போது எங்கன நின்னு கான்கிரீட்லாம் போட்டிருப்பாங்க?" உஸ்மான் ரோடை ஊடறுத்து ஓடும் புதிய மேம்பாலத்தை அண்ணாந்து பார்த்தபடியே போகிறது ஒரு கும்பல். "ஏன் பச்ச பெயிண்ட் அடிச்சுருக்காங்க. அது அம்மா கலராச்சே, கலைஞருக்குன்னா மஞ்ச பெயிண்டுல்ல அடிச்சிருக்கணும்?" என்று பாலத்தில் பாலிடிக்ஸை மிக்ஸ் பண்ணியபடியே போகிறது ஒரு கரைவேட்டிப்பெருசு.

கரும்பு ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், இட்டாலியன் சாஃப்டி ஐஸ்கிரீம், பானி பூரிக் கடைகள், நாகற்பழம், சமோசா, மசால் சோடா, வெள்ளரிக்காய், புரூட் மிக்ஸ், மசால் பொரி, ஆட்டுக்கால் சூப் என அனைத்து ஐட்டங்களையும் விற்கிறார்கள் நடைபாதை வியாபாரிகள். இந்தக் கடைக்கெல்லாம் வாடகை கிடையாதுல்ல, எனக் கேட்கும் பெண்மணியிடம் அட நீ வேற சங்கத்துக்கு காசு, டெய்லி டோக்கன், போலீஸ் மாமூல், ரெளடிங்க தண்டல்னு எல்லாத்துக்கும் அழுவணும்.போத்தீஸ் வாசலில் நின்றபடி சரவண பவன் எங்க இருக்கு என்று கேட்ட பப்ளிக்கிடம், உக்காரு சார், 20 ரூபா குடு, கொண்டு போய் விடுறேன் எனும் ஆட்டோக்காரரை விரட்டுகிறார் மற்றொரு ஆட்டோக்காரர். சார் நீங்க போங்க சார், நடக்குற தூரம் தான், இப்பிடியே லெஃப்டுல மூணு நிமிசம் நடந்தியானா சரவணா பவன் வந்துடும். டேய் ஏண்டா ஏமாத்துற அவுங்கள.

இடித்தபடி நகரும் கும்பலில் எரிச்சலுற்று "இதுக்குத்தான் ஞாயித்துக்கெழம வரவேணாம்னு சொன்னேன் கேட்டியா?" எனக்கூறியபடியே நடக்கும் ஒரு நடுத்தர வயது அப்பாவிடம் "எப்ப வந்தாலும் இதே கூட்டம் இருந்துகிட்டு தான் இருக்கும், புலம்பாம வாப்பா" என்றபடி நடக்கும் ஒரு கல்லூரி மாணவி.

ரங்கநாதன் தெருவில் ஒன்பதரை மணிக்கு நைட் இட்லிக்கடைகள் முளைத்திருக்கின்றன. பர்ச்சேஸ் முடித்து ஊர் செல்லும் அவசரத்தில் ஓடும் மக்கள், வேலை முடிந்து போகும் இளைஞர்கள், மாம்பலம் ஸ்டேஷன் வரும் இளைஞர்கள் என கலவையான கும்பல் மொய்க்கிறது. நாலு இட்லி கொடுப்பா என்பவரிடம் அஞ்சு இட்லியா வாங்கிக்கோ. இட்லிக்கு சேர்வையா? சாம்பாரா? என்றபடியே அள்ளி ஊற்றுகிறார் சர்வர் ப்ளஸ் சேல்ஸ்மேன் ப்ளஸ் மாஸ்டர் ப்ளஸ் ஓனரான வண்டிக்காரர். சேர்வைன்னா என்ன? கறிக்குழம்பா? குருமாவா? ரெண்டும் இல்லப்பா குடல் குழம்பு. அந்தா மொதக்குது பாரு குடலு.

தடதடத்தபடி கடந்து செல்கிறது ரயில்.

------------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...

நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....

எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
------------------------------------------------------

9 கருத்துகள்:

 1. //பாலத்தில் பாலிடிக்ஸை மிக்ஸ் பண்ணியபடியே போகிறது ஒரு கரைவேட்டிப்பெருசு.//

  நல்ல உவமை..!!

  //அள்ளி ஊற்றுகிறார் சர்வர் ப்ளஸ் சேல்ஸ்மேன் ப்ளஸ் மாஸ்டர் ப்ளஸ் ஓனரான வண்டிக்காரர்.//

  இப்படி ஆரம்பிச்சு சரவணபவன் மாதிரி ஆயிடுவாரோ..?!

  பதிலளிநீக்கு
 2. //வினோ சொன்னது…

  நல்ல அனுபவங்கள்..//

  நன்றி வினோ... இதே போல் ஆயிரம் அனுபவங்கள் காணக்கிடைக்கும் அங்கே. அதுவும் சென்ற வாரம் அங்கே ஒரு மழை நாளில் சென்றிருந்தேன். ஆஹா....... நூறு சிறுகதைகள் எழுதலாம் அங்கே காணக்கிடைத்த காட்சிகளைக்கொண்டு....

  பதிலளிநீக்கு
 3. தேவா........ நண்பேண்டா..

  என்ன இருந்தாலும் நீ ஒரு தொழிலதிபர். இன்னோரு தொழிலதிபரை கிண்டல் பண்ணலாமா?

  பதிலளிநீக்கு
 4. அனுபவம் பேசும் காணக்கிடைத்த அனுபவம் நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 5. //dineshkumar said...அனுபவம் பேசும் காணக்கிடைத்த அனுபவம் நல்லாருக்கு //

  நன்றி... dineshkumar

  பதிலளிநீக்கு
 6. நல்ல அவதானிப்பு.......... நீங்க சொன்னமாதிரி படம் வெளிவருவதற்க்கு முன்னாடி வந்திருந்தால்
  இன்னும் சிறப்பாய்.........

  பதிலளிநீக்கு
 7. // தோன்றும் விஷயங்களை அப்படியே ஒன்றிரண்டு பாராக்கள் டைப்படித்து வைத்துக்கொள்வது நம் வழக்கம் //
  நாங்களும் அப்படித்தான்...

  பதிலளிநீக்கு
 8. அங்காடித் தெரு ஒரு ஒளி ஓவியம். உங்கள் எழுத்தோவியம் முற்றிலும் அதிலிருந்து வேறுபட்டது. இதை முழுதாகவே வெளியிட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு