வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

நான் மகான் அல்ல – (ரத்த சரித்திரா) – திரை விமர்சனம்

நடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், பரோட்டா சூரி
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: சுசீந்திரன்
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு: தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ்.


முதலிலேயே சொல்லி விடுகிறேன். "நான் மகான் அல்ல" தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால், மைசூர் பாகுக்கும் மைசூருக்கும் என்ன சம்பந்தமோ, அந்த சம்பந்தம் தான். இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் கவர்ச்சியான ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து, படிப்பவர்களை உள்ளே இழுத்து வேறெதையோ கொடுப்பது போல.

பையா வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியும், வெண்ணிலா கபடிக்குழு வெற்றியை அடுத்து சுசீந்திரனும் கைகோர்த்திருக்கும் படம். நக்கல் நையாண்டி ஆட்டம் பாட்டம் என ஜாலியாகப்போகிறது முதல் பாதி படம். இடைவேளை வரை ஆங்காங்கே ரசிக்கும்படியான சில டைமிங் காமெடிகள். இரண்டாவது பாதியில் (எதிர் பார்க்கப்பட்ட) பகீர், திகீர் திருப்பங்கள். இரண்டு டிராக்குகளில் பயணிக்கிறது கதை.

வேலையில்லாமல் சும்மா இருக்கும் கார்த்தி, பரோட்டா சூரி ரெகமண்டேஷனில் ஒரு வங்கியில் டூ வீலர் கடன் வசூல் செய்யும் வேலையில் டெம்ப்ரவரியாக சேர்கிறார். நண்பியின் திருமணத்தில் காஜல் அகர்வாலை பார்த்தவுடன் காதல். (ஏனென்றால் சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து, நான்கு வருடம் சென்னையிலேயே இன்ஜினியரிங்கும் படித்த ஹீரோ இதற்கு முன் அழகான பெண்களையே பார்த்ததில்லை பாருங்கள்) ஒரே மாதத்தில் காஜலின் தந்தையைப் பார்த்து பெண் கேட்கிறார். அவரோ ஆறு மாதத்துக்குள் நல்ல வேலையுடன் வா தருகிறேன் என்கிறார். இடையில் கால் டாக்ஸி டிரைவரான ஜெயப்ரகாஷ் ஒரு கொலை கேஸூக்கு சாட்சி சொல்லப்போகிறார். இது ஒரு டிராக்.

இரண்டாவது டிராக்கில், போதையில் தடுமாறும் மாணவர் கும்பல் (மெயின் வில்லன் யார்டா என்றால் நந்தா படத்தில் சின்ன சூர்யாவாக வருவாரே அந்தப்பையன் தான்) ஒன்று இரட்டைக் கொலை ஒன்றைச் செய்து விட்டு, போதையில் தொடர்ச்சியாக குற்றங்களைச்செய்கிறது. கொலையின் ஒரே (???) சாட்சியை அழிக்க முயன்று அதில் வெற்றியும் பெறுகிறார்கள் அவர்கள் (ஏனென்றால் ஓடிப்போன ஸ்கூல் பெண்ணை கால் டாக்ஸியில் ஏற்றும் போதும், வீட்டுக்கு கூட்டி வரும் போதும், கொலை செய்து ஊர் முழுவதும் துண்டு துண்டாக வீசும் போதும் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் பாருங்கள்).

இந்த இரண்டு டிராக்குகளும் இணையும் இடத்தில்தான் கார்த்தி விஸ்வரூபம் எடுக்கிறார். அடுத்து??? செகண்ட் ஹாஃப். காதலுக்கான கெடு, ஆறு மாதத்தில் வரும் என்ஜினியர் வேலை எல்லாவற்றையும் மறந்து விட்டு, தந்தையைக் கொன்ற கும்பலை பழி தீர்க்கிறாரா இல்லையா என்பதை ஆயிரத்தில் ஒரு பருத்தி வீரனான பையா கார்த்தி என்பதை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ட்ரீட்மெண்ட் ஓரளவு நன்றாக இருந்தாலும் ஒரு சாதாரண சென்னைக் கதையை ரத்தம் ஊற்றி கொத்திக் கொத்து பரோட்டா போட்டிருக்கிறார் சுசீந்திரன். படம் முழுக்க தெறிக்கும் அதீத வன்முறை பெண் ரசிகைகளை நெளிய வைக்கிறது. கார்த்தி, நான்காவது படத்திலேயே இவ்வளவா? கேரியர் கிராஃபில் ஏறிக்கொண்டிருக்கும் போது கொஞ்சம் நார்மல் படங்களையும் செய்ய வேண்டும் கார்த்தி. பெண் ரசிகைகளை இழந்து விடக்கூடாது. பருத்தி வீரனும், பையாவும் கொடுத்த ரசிகைகளை ஆயிரத்தில் ஒருவனிலும், நான் மகான் அல்ல-விலும் இழந்து விடக்கூடாது.

நினைத்ததை நினைத்தவுடன் நினைத்தபடி செய்யும் விட்டேத்தியான ஒரு கதாபாத்திரம் கார்த்திக்கு. ஆனால் அடிக்கடி சிரிக்கும் பருத்தி வீரன் ஸ்பெஷல் அந்தக் கோணல் சிரிப்பை கொஞ்சம் மாற்றிக்கொண்டாலும் நல்லதே. இல்லாவிட்டால் சிவகுமாருக்கு "நடுங்கும் குரல் நடிகர்" என்று பட்டம் கொடுத்த பத்திரிகைகள் கார்த்திக்கு பொருத்தமான ஒரு நக்கல் பட்டத்தை வைத்து விடுவார்கள்.

யுவன் நன்றாகச்செய்திருக்கிறார். ஆனால் கார்த்தி, சென்னை பேக்ரவுண்ட், யுவன் மூன்றும் சேர்ந்த காம்பினேஷன் பையா பாடல்களையே திரும்ப நினைவு படுத்துகிறது. ஒளிப்பதிவில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் உபயோகித்திருந்தபடி அதே பிரவுன் டின்டட் டோன்-ஐ உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் வெண்ணிலா கபடிக்குழு ளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார். நான் மகான் அல்ல-வுக்கு ஆர்.மதி.

பாஸ்கர் சக்தியின் வசனம் எதுவும் மனதில் பதியவில்லை. மேலே ரத்தம் தெறிக்கும் போது அதைத்துடைக்கவா, வசனத்தைக் கவனிக்கவா? ராஜீவன் போட்டிருக்கும் சுனாமி குடியிருப்பு சினிமா செட் என்று பல இடங்களில் பல்லிளிக்கிறது.

படத்தின் பல காட்சிகள் பகீரென்று இருக்கின்றன. கார்த்தி வெறித்தனமாக முறைத்தபடி நிற்கும், ரத்தம் தெறிக்கும் போஸ்டர்களை பார்த்தே உஷாராகியிருக்க வேண்டும். பசங்கள் சொன்னார்கள் என்று என்னமோ வெண்ணிலா கபடிக்குழு எஃபெக்டை எதிர்பார்த்தபடி உள்ளே போய் உட்கார்ந்தால் போச்சு.

ஆனால் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும் ரசனையான சின்னச்சின்ன விஷயங்கள் கொஞ்சம் சுவாரசியத்தை உண்டாக்குகின்றன. பரோட்டா சூரி தன் பைக் லோன் கலெக்ஷன் ஏஜண்ட் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்தான் படத்தில் ஆங்காங்கே ஆறுதல். நல்ல உடல் மொழி இவருக்கு. நிறுத்தி நிதானமாக படங்கள் செய்தால் சந்தானத்திற்கும், கஞ்சா கருப்புவுக்கும் போட்டியாக வரலாம்.

கிளைமாக்ஸூம் கொஞ்சம் பகீர் ரகம் தான். ஆனால் சாதாரண சினிமா ரசிகன் எழுந்து நின்று கைதட்டுகிறான். ஒல்லி, ஓமக்குச்சி, சுள்ளான்கள் எல்லாம் பறந்து பறந்து போடும் சண்டைகளை பார்த்த நமக்கு கார்த்தியின் உடம்புக்கு அவர் போடும் சண்டைகள் கொஞ்சம் நம்பும் படியாகத்தான் இருக்கிறது. ஆனால் வரிசையாக இத்தனை கொலைகள் செய்து விட்டுப்போனால் போலீஸ் வராதா?

சிரஞ்சீவி மகனுடனான தெலுங்கு மஹாதீரா வெற்றிக்குப்பின் காஜல் அகர்வாலை தெலுங்கில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். தயவு செய்து அவர் பேசாமல் அங்கேயே திரும்பப் போய்விடலாம். உப்புச் சப்பில்லாத ரோல்களை இங்கே செய்வதற்கு. ஆனால் முந்தைய படங்களில் பார்த்ததற்கு கொஞ்சம் முன்னேற்றம் தான்.

டாக்ஸி டிரைவர் ஜெயப்பிரகாஷ் நச்சென்று செய்திருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்கு அப்பா கேரக்டர்கள் புக்கிங் இவருக்கே. ஆனால் அவர் செத்துப்போனவுடன், என்னமோ சிவாஜி கணேசன் கேரக்டர் செத்துப்போன அளவுக்கு சோகப்பாட்டு எல்லாம் கொஞ்சம் ஓவர். கபடிக்குழுவில் இருந்த குண்டுப்பையன், ரெளடி கேரக்டர், நீயா நானா கோபியின் அப்பா ஆகியோர் தலைகாட்டுகிறார்கள்.

மாணவர்கள் என்று தான் அறிமுகமாகிறார்கள் வில்லன்கள். ஆனால் அவர்களை ஏதோ புரொஃபஷனல் கில்லர்ஸ் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து கதை நகர்வது ஒரு சலிப்பைத்தருகிறது. படிப்பை விட்டுவிட்டு, துரத்தித் துரத்தி கொலை செய்து கொண்டு திரிவார்களா அவர்கள் என்ற கேள்வி எழுகிறது நமக்குள்.

சில சந்தேகங்கள்: சென்னை முழுவதும் துண்டு துண்டாக கிடைக்கும் உடல்களைப்பற்றிய கேஸை விசாரித்துக்கொண்டிருக்கும் போலீஸ், சென்னையில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை விசாரிக்காதா? அல்லது ஜெயப்ரகாஷ் பிணங்களை அடையாளம் காட்டியதும் உடனே அவர் எந்த ஏரியாவில் சவாரி எடுத்தார் என்று கேட்டு விசாரணைக்குப்போக மாட்டார்களா?


பார்த்தவுடன் காதல் என்கிற ஊத்த விஷயத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார்களோ தெரியவில்லை. குழந்தையின் அழுகையை நிப்பாட்ட பாட்டுப்பாடுவாராம் ஹீரோ. அய்யா, இதெல்லாம் சின்னதம்பி, வைதேகி காத்திருந்தால் காலத்திலேயே பார்த்தாயிற்றே.

பெரிய ஆள், குப்பத்துத் தலைவன், கட்டப்பஞ்சாயத்து தலைவர் என்றெல்லாம் மகா பில்டப் கொடுக்கப்படும் தாதா சடாரென்று ஒரே நிமிடத்தில் மாணவர்களால் போடப்படுவது பலவீனமாக இருக்கிறது. ஆனால் கார்த்தியோ ஒற்றை ஆளாக நின்று எல்லாரையும் போட்டுத் தள்ளுகிறாராம். ரஜினியில் துவங்கி போன வாரம் களம் இறங்கிய அருள்நிதி வரை எல்லாருமே மாஸ் ஹீரோக்கள் தானா? ஒரே அடி, வெட்டு, குத்து தான். (காமெடி ஹீரோவாக களம் இறங்க உள்ள உதயநிதிக்கு வாழ்த்துக்கள்)

வேலையில்லாத ஹீரோ, அவனைப்பார்த்த அன்றே காதல் கொள்ளும் ஹீரோயின் என்று படம் எடுத்தால் எங்களையெல்லாம் எந்த ஹீரோயின்ப்பா காதலிப்பார்கள்? என்ற சந்தேகம் வருகிறதல்லவா?

ரஜினியின் டைட்டிலான "நான் மகான் அல்ல" வை எதற்கு வைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. ஒரு வேளை "என் அப்பாவைக்கொன்றவர்களை பழிவாங்காவிட்டால் நான் மகன் அல்ல" என்று சொல்கிறாரோ என்னவோ?

டிஸ்கி: முதல் நாள் என்பதால் படத்திற்கு தியேட்டரில் டிக்கெட் கிடைக்குமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுத் திருமணத்திற்காக முதல்வர் கலைஞர் வருகையால் எல்லா கூட்டமும் அங்கே போய்விட்டதால் எங்களுக்கு ஈஸியாக டிக்கெட் கிடைத்தது. கியூ கூட இல்லை.

கிளைமாக்ஸில் நடக்கும் சண்டையைப்பார்த்தால் நம் மீதும் ரெண்டு வெட்டுகள் விழுமோ என்று பயமாக இருக்கிறது. "ஏன் இந்தக்கொல வெறி" என்று வடிவேலு வாய்ஸில் பல குரல்களைக் கேட்க முடிந்தது.

மங்காத்தா டிரெயிலர் போடுவார்கள் என்று ரொம்ப ஆசையாக காத்திருந்தோம். ஆனால் ரொம்ப நாள்(8 வருடங்கள் கழித்து) நண்பர்களுடன் சினிமா போனதால் வழக்கம் போல் இன்டர்வெல்லில் எங்களுக்குள் டீயா, காபியா, ஐஸ்கிரீமா என்ற தகராறு கேன்டீன்காரர் பஞ்சாயத்து பேசும் அளவு போனதால் மங்காத்தா டிரெயிலர் போட்டார்களா என்றே தெரியவில்லை.
------------------------------------------------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
-------
பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..
-------
அப்டியே பட்டனை அமுக்கி ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க. கைக்காசு ஒண்ணும் செலவில்லை.
------------

9 கருத்துகள்:

  1. //மங்காத்தா டிரெயிலர் போடுவார்கள் என்று ரொம்ப ஆசையாக காத்திருந்தோம்

    நானும் அதபத்தி ஏதாவது சொல்லிருப்பீங்கன்னுதான் ஆசையா வந்தேன் எமாத்திடீங்களே தலைவா..

    பதிலளிநீக்கு
  2. //நானும் அதபத்தி ஏதாவது சொல்லிருப்பீங்கன்னுதான் ஆசையா வந்தேன் எமாத்திடீங்களே தலைவா.. //

    என்ன தலைவா பண்றது. நம்ம கூட வந்த நாதாறிங்க பண்ற அட்டகாசம் அப்படி.... அதுக்குத்தான் ஸ்டில் வச்சிட்டேன்.. ஓக்கேவா?

    பதிலளிநீக்கு
  3. andha vellandi sirippai karthi vida mattar enre karudhugiren, ella karthiyum aippadithan sirippargalo ennavo ;):)
    nan innum padathai parka villai .. irundhalam padam eppadiyo vimarsanam rasikkumpadi irukkiradhu .. analum yeskha neelathai kuraithu kollalam, padithu mudippadharkul padam mudindhu vidumo enru bayamaga irukkiradhu.. :)

    பதிலளிநீக்கு
  4. //andha vellandi sirippai karthi vida mattar enre karudhugiren, ella karthiyum aippadithan sirippargalo ennavo ;):)// பழைய நடிகர் கார்த்திக்கை சொல்கிறீர்களா? அல்லது என்னை சொல்கிறீர்களா?

    //analum yeskha neelathai kuraithu kollalam, padithu mudippadharkul padam mudindhu vidumo enru bayamaga irukkiradhu.. :) //
    குறைத்து விடுவோம்.. விஷயத்தை சொல்ல சொல்ல நீண்டு கொண்டே போகிறது கட்டுரை..

    பதிலளிநீக்கு
  5. dei, indha padatha poi first day paakkuriye, nejama sollu, nee velai seiriya illa black la ticket vikkuriya illa kajal agarwala paathu jollu vida poniya.

    idha vida deala no deala poninna free entrance + 18-20 ponnugala freeya paakkalam.

    eppadi, 18-20 la onnu koodava madiyadu????

    - indian

    பதிலளிநீக்கு
  6. //dei, indha padatha poi first day paakkuriye, nejama sollu, nee velai seiriya illa black la ticket vikkuriya//

    திட்டாதீங்க இன்டியன்.. எனக்கு அழுகை அழுகையா வருது.

    பதிலளிநீக்கு
  7. இன்னமும் நீ தமிழ் சினிமாவில லாஜிக் எதிர்பாக்கறியா?

    பதிலளிநீக்கு