ரிலையன்ஸ் வைபாட் பற்றிப் புலம்பி நீண்ட நாள் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். நினைவிருக்குமோ இல்லையோ.
இப்போது ஐந்து நாட்களாக மீண்டும் அவர்களது அட்டகாசம் தாங்கவில்லை. இன்டர் நெட் கனெக்ட் ஆகவே இல்லை. வேலை விஷயமாக புது இடங்களுக்குப் போகிற எனக்கு கூகிள் மேப், ஓலா, கூகிள் சர்ச், வாட்ஸ் அப் உள்ளிட்டவை அவசியம் தேவை. நெட் இல்லாமல் இருக்க முடியாது. ரிலையன்ஸ் வைபாட் இல் என்ன பிரச்சினை என்று தெரியாமல் பழைய வேதாளம் ஏர்டெல்லுக்கு நெட் உபயோகத்திற்காக தனியாக தெண்டம் அழ வேண்டியிருக்கிறது.
நம் நெட் பேலன்ஸ் ஒரு வேளை தீர்ந்து விட்டதோ என ஒரு சந்தேகத்தில் ஐ.வி.ஆர் மூலம் செக் செய்யப் பார்த்தால், "மன்னிக்கவும், இப்போது இந்தத் தகவலைப் பெற இயலாது" என்கிறது குரல். சரி எக்ஸிகியூட்டிவ் இடம் பேசலாம் என்று மீண்டும் போன் செய்தால் கலக்கப் போவது யாரு?வில் முல்லை, கோதண்டம் செய்த கஸ்டமர் காமெடி (எவ்ளோ நேரம் சுத்த உட்டாலும் கட் பண்ண மாட்டேங்கிறான் சார் இந்த கஸ்டமர்) என்பது போல எவ்வளவு நேரம் ஆனாலும் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் - இடம் பேச விடாமல் இழுத்தடிக்கிறார்கள். நானும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். மற்ற ஆப்ஷன்களுக்குள் தான் சுற்ற விடுகிறார்களே தவிர, எக்ஸிகியூட்டிவிடம் கனெக்ட் செய்யவே மாட்டேனென்கிறார்கள். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை, ஐந்து நாட்கள்.
ஒரு வழியாகப் பிடித்தேன். 23 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு தான் கிடைத்தான். கஸ்டமர் கேர்காரனும் நம்மைப் போல மனுசன் தானே என்று அமைதியாகவே பேசுவது என் பழக்கம். ஆனால் ஐந்து நாட்களாக சுமார் 35 முறைக்கு மேல் முயற்சி செய்து வெறுத்துப் போனேன். பிடித்து ஏறலாம் என்று தோன்றினாலும் நேற்று சிக்கியவனிடம் போனால் போகிறதென்று அமைதியாகவே பேசினேன். 4 ஜிக்கு மாற்றுகிறோம், அதனால் இருக்கலாம் என்றான். புது சிம் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மெஸேஜாக அடித்துத் தள்ளுகிறார்கள். நெட்வொர்க் மட்டும் கனெக்ட் ஆக மாட்டேனென்கிறது. ஆனால் அதற்கு ஒரு தகவலும் கிடையாது. யோவ், "அப்போ ஒரு தகவலாவது மெஸேஜ் அனுப்பித் தொலையலாம்ல" என்றதற்கு "இன்று இரண்டு மணிக்கு மேல் சரியாகி விடும் சார்" என்றான். ஆச்சு. ஆனால் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் கனெக்ஷன் கட். மீண்டும் திரும்பத் திரும்பத் திரும்ப ட்ரை செய்து ஒருத்தனைப் பிடித்தால், என்னால செக் செய்ய முடியலை. "ஐ.வி.ஆர்ல செக் பண்ணுங்க" என்று பல்லவி. டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும் 2016 ல் கூட நம்மையெல்லாம் முட்டாள் என நினைக்கிறார்கள் போல. அது தான் வேலை செய்யலியே.
"சர்வர் உன்கிட்ட தானே இருக்கு, உன்னால முடியலைன்னு என்னை நம்பச் சொல்றியா, இல்லே உன் கஸ்டமர் எல்லாம் விபரம் தெரியாத முட்டாப் பயன்னு நினைக்கிறியா? உன்னால செக் பண்ண முடியலைன்னா என்னால எப்படி முடியும்?" என்ற பிறகு, "இருங்க சார்" என்று செக் செய்து "இன்னும் 4 ஜி.பி பேலன்ஸ் இருக்கு சார்" என்கிறான். "பின்ன ஏன் கனெக்ட் ஆகலை?" என்றால் "திரும்ப முயற்சி பண்ணுங்க, ஆகும்" என்று பதில். பிறகு "4 ஜி சிம் வாங்கிட்டீங்களா?" என்று அபத்தமாகக் கேட்கிறான். "வைபாட் என்ற சி.ஜி.எம்.ஏ டிவைஸூக்குள் எப்படி ஐயா சிம்மை சொருகுவது, நீயே சொல்லித் தா" என்றேன். பிடித்து இரண்டு ஏறு ஏறி விட்டு போனை கட் செய்து விட்டேன்.
இப்போது கனெக்ட் ஆகிறது. நெட் வேலை செய்கிறது. என்ன எளவோ?
.
15 ஜூலை 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.