திங்கள், 26 ஜூலை, 2010

டீம் மீட்டிங்

மூணு சிம்மு, மூணு போன் என்று எத்தனை வைத்திருந்தாலும் வரும் போன்களில் எல்லாம் கேள்விகள் தான். ஆபீஸ் கேள்விகள் போக என்னாச்சு? இரண்டு வாரங்களாக பதிவே போடவில்லையே என்று எக்ஸ்ட்ரா கேள்விகள். வரும் மெயில்களிலும் அதே கேள்விகள் தான். துபாய் முதல் மஸ்கட், குவைத் என்று முளைத்திருக்கும் புதிய நண்பர்களிடமும் இருந்து மெயில். என்னப்பா இது. சும்மா சும்மா ப்ளாக்கை ஓப்பன் செய்து பார்த்துவிட்டு ஒண்ணுமில்லை என்று திரும்பிப் போக வேண்டியிருக்கிறதே என்று.

எல்லோருக்கும் ஸாரி. கொஞ்சம் பிஸியாகி விட்டேன். ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது போடுங்கள் என்று அட்வைஸூவார்கள் பிரபல பதிவர்கள். ஆனால் என்னவோ இப்போதெல்லாம் எழுத நேரம் இல்லாமல் போகிறது. தினசரி பஸ் பயணம் மட்டுமே சுமார் நான்கு மணி நேரமாவது ஆகிறது. வேலை, வேலை என்று ஊர், ஊராக சுத்துவதால் முதுகு வலிதான் மிச்சம். என் ஆர்.எம் (ரீஜனல் மேனேஜர்), பஸ்ஸூல போகும்போது டைம் வேஸ்ட் பண்ணாதீங்க கார்த்தி, அப்படியே லேப்டாப்பை ஓப்பன் பண்ணி நெட் கனெக்ட் பண்ணி மெயில் அனுப்புங்களேன் என்பார். அதற்காகவே எந்த பஸ்ஸாக இருந்தாலும் அதில் ஓடிப்போய் முன்ஸீட் பிடிப்பது வழக்கம்.

முன்ஸீட் என்றால் எக்ஸாக்டாக முன்ஸீட் அல்ல. தனியாக கண்டக்டருக்கு என்று ஒரு ஸீட் இருக்குமே, அதற்குப்பின்னால் உள்ள இரட்டை ஸீட்டில் முன்னால் இடிக்காத ஸீட். அதில் உட்கார்ந்து கொண்டால் லேப்டாப் உபயோகிக்கும் போது இடிக்காது. வேறு ஏதாவது ஸீட்டில் உட்கார்ந்தோமோ?? போச்சு.. ஸடன் பிரேக் போட்டால் லேப்டாப் ஸ்கிரீன் அரோகரா தான். அதனால் கண்டக்டர் ஸீட்டை விட்டுவிட்டு பின் ஸீட்டில் உட்கார்ந்து கொள்வேன்.

ஆரம்பத்தில் லேப்டாப்பை ஓப்பன் செய்து மெயில் பார்க்கவோ, பிரவுஸ் செய்யவோ கூச்சமாகத்தான் இருந்தது. என்னடா இது. ரொம்ப ஸீன் போடுகிறோமோ என்று. பின்னாளில் நானே எனக்குப் பல சமாதானங்களைச் சொல்லிக்கொண்டேன். அவன் அவன் பஸ்ஸில் தம் அடிக்கிறான், சைட் அடிக்கிறான், வாந்தி எடுக்கிறான், ஈவ் டீஸிங் செய்கிறான், நாம் என்ன மெயில் தானே பார்க்கிறோம் என்று. இப்போது இந்த ஐடியா ரொம்பவும் உபயோகமாக இருக்கிறது. ஒன்றிரண்டு ஆபீஸ் வேலைகளை அப்படியே முடித்து விடலாம் பாருங்கள்.

இனிமேல் அந்த ஃபார்முலாவையே ப்ளாக் எழுதவும் அப்ளை செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். டைமிங் பிரச்சினைக்கு அது மட்டும் காரணம் அல்ல.

போன வாரம் ஒரு மீட்டிங் நடத்த வேண்டியிருந்தது. டீம் மீட்டிங் ஒன்று வைக்கலாம் என்று திட்டம். என் டீமில் 23 பசங்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், நான்கு மாவட்டங்களில். ஒன்றாக ஒரே ஆபீஸூக்குள் இருப்பவர்களை வேலை வாங்குவதே கஷ்டம்? இப்படி சிதறிக்கிடந்தால் எப்படி மேய்ப்பது என்று யோசித்துப்பாருங்கள்? ஒவ்வொருவருக்கும் போன் செய்தாலே ஒரு மணி நேரம் ஆகும்.

மாதம் ஒருமுறை வைக்க வேண்டிய மீட்டிங் அது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் ஆகி விட்டன. இன்னும் ஒரு மீட்டிங் கூட வைக்கவில்லை என்றால் போச்சு. பசங்கள் ஒருத்தருக்கொருத்தர் முகம் கூடப்பார்த்ததில்லை. தனித்தனித்தீவாகத் திரிகிறார்கள். ஆகவே ஒரு மீட்டிங், கெட் டுகெதர் போல வைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று யோசனை.

அதைப்பற்றி (தொடரும்......)

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

செவ்வாய், 13 ஜூலை, 2010

ஆந்திரா மெஸ்ஸூம், ஆர்மண்ட்லா சுதீர் குமாரும்

-எஸ்கா

(இக்கட்டுரை ஜூலை 12 அன்று உயிரோசை டாட் காமில் வெளியானது.)


(இரு நாட்கள் கழித்து யூத்ஃபுல் விகடனால் குட் பிளாக்ஸ் பகுதியில் தேர்ந்தெடுத்து வெளியிடப்பட்டது.)


அய்யா கவிமணி மங்கையர்க்குச் சொன்னாற்போல், பேச்சுலராய் இருப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று தான் சொல்ல வேண்டும்.. வாழ்வது எதற்கு? (பல விஷயங்களுக்கு………….. ஆனால் முக்கியமாய்?) சாப்பாட்டிற்கு. அந்த விஷயத்தில் பேச்சுலராய் இருப்பது ரொம்பவே வசதி. அதிலும் பேச்சுலராய் வெளியூரில் வேலை பார்ப்பது வசதியோ வசதி. வீட்டுத் தொந்திரவு கிடையவே கிடையாது. நைட்டு மீந்து போன புளித்த மாவில் ரவை கலந்து அடை போட்டுத் தருகிறேன் என்ற கொடுமையெல்லாம் இங்கே நடக்கவே நடக்காது.


பெங்களூர் மாதிரி ஹை டெக் நரகங்களில் மாட்டாமல், செங்கல்பட்டு, திருப்பூர் போன்ற சிறு நகரங்களிலும் மாட்டாமல் சென்னை மாதிரி மீடியம் நகரங்களில் வேலை பார்ப்பது சாப்பாட்டுக்கு ரொம்ப ரொம்ப வசதி. சென்னை என்றதும் ஐடி-யா எனாதீர்கள். ஆ, ஊ என்றால் எல்லாருக்கும் ஐடி ஞாபகம் வந்து தொலைத்து விடுகிறது. ஐடி தவிரவும் ஆயிரம் வேலைகள் இருக்கின்றன அய்யா.. கொளுத்து வேலையில் இருந்து சுஜாதா சொன்னது போல் நாய் குளிப்பாட்டுவது வரை பல வேலைகள்.


ஐடி-க்காரர்களுக்கு கேன்டீன், ஸாரி கேஃபடேரியா என்று ஒன்று இருக்கும். மிலிட்டரி கேன்டீனில் டேக்ஸ் இல்லாமல் சோறு, டீ, காபி தருவதைப்போல இவர்களுக்கு இந்த கேஃபடேரியாவில் ஆஃபர் ரேட்டில் அயிட்டம்கள் கிடைக்கும். இடையிடையே ஸோடக்ஸோ, டிக்கட் ரெஸ்டாரண்ட் வகையறா சலுகைகளும் அனுபவிக்கக் கிடைக்கும். மற்றவர்களுக்கெல்லாம் ஹோட்டல்கள் தான் கதி.. அதனால் கொஞ்சம் கஷ்டம் தான். இதே போல் யூத்ஃபுல் விகடனில் எனது முந்தைய கட்டுரையான "ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி" யை இந்த லிங்கில் http://youthful.vikatan.com/youth/yeskhastory07082009.asp படித்துப் பாருங்கள்.


(தமிழிஷில் ஓட்டுப் போடுவீர்கள்தானே??)ஆனால் என்ன? கொஞ்சம் கஷ்டப் பட்டாலும் சோறு என்னவோ வகை வகையாகக் கிடைக்கும். தின்று விட்டு, தின்று விட்டு, மல்லாந்து கிடக்கலாம். ஊர் சுத்தலாம். அனுபவிக்கலாம். என்ன ஒன்று? பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ தினங்களில் மட்டும் ஊரே காலியாகி விடும். ஹோட்டல்களும் மூடப்பட்டு விடும். அந்த நேரத்தில் மட்டும் சோத்துக்கு.... சோத்துக்கு.... அது என்ன? ஆங்..சிங்கி.. சிங்கி.. சோத்துக்கு.... சிங்கிதான். உஷாராகி ஊருக்கு ஓடிப்போவது உங்கள் சாமர்த்தியம்.


அந்த வகையில் நமக்கு வேலை கிரீம்ஸ் ரோடில். ஆயிரம் விளக்கு பகுதி அய்யா. “பிரபல கம்பெனி” ஒன்றில் டிரெய்னர். இப்போது இல்லை. அதனால் தானோ என்னவோ அது இப்போது “மிகப் பிரபல கம்பெனி” ஆகி விட்டது. சரி விடுங்கள். ஆந்திரா மெஸ் கதைக்கு வருவோம். கிரீம்ஸ் ரோடில் உள்ள கம்பெனிகளில் வேலை செய்யும் பேச்சுலர்களிடம் ரொம்பவும் பேமஸ் ஆந்திரா மெஸ்(கள்). கொல்கத்தா மெஸ், தாலி ஹவுஸ், நீலா பவன், செந்தூர், அபூர்வாஸ் சங்கீதா, கையேந்தி பவன், தள்ளு வண்டி, இந்திய உணவுக் கழகம், போஸ்ட் ஆபீஸ் கேன்டீன், பஞ்சாபி தாபா என எத்தனை ஹோட்டல்கள் இருந்தாலும் பலரும் ஆந்திரா மெஸ்களை அதிகம் நாடுவதுண்டு. அதன் அதிமுக்கிய காரணம், அங்கே போடப்படும் அன்லிமிடெட் மீல்ஸூம், நேட்டிவிட்டி கலந்த உபசரிப்பும்.


வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு மீல்ஸ் இருபத்து நான்கு ரூபாய் இருந்தது. இப்போது படிப்படியாக உயர்ந்து முப்பதைத் தாண்டியிருக்கிறது. ரெகுலர் கண்மணிகளுக்காக ஒரு மாதம் முழுமைக்குமான மன்த்லி கார்டும் உண்டு. அதில் முப்பது நாட்களுக்கான சாப்பாடு எண்ணிக்கை குறிக்கப் பட்டிருக்கும். ஒரு அட்டெண்டென்ஸ் போன்ற அட்டை. ஆந்திரவாலாக்கள் அதிகமாகப் புழங்கும் இடமது. தெலுங்கு பேப்பரெல்லாம் கிடக்கும். சிரஞ்சீவி, சித்தார்த் படமெல்லாம் போட்டிருக்கிறதா என்று பார்த்து விட்டு வருவேன் நான். பிரஜா ராஜ்யம் இஷ்யூ வந்தபோது ஒரே அமளிதுமளியாக இருந்தது.


ஹைதராபாதில் இருந்து பாலாஜி சார் வந்தால் முரளி சாருக்கு போன் செய்யுமுன்பு எனக்குக் கூப்பிடுவார் "பாபு, எக்கட உன்னாவு? சென்னாய் ஒச்சானுப்பா.. என்பார். அவருக்கு பவர்பாயிண்டில் ப்ரசன்டேஷனகள் செய்து தர வேண்டும். கூடவே அவரது டாகுமெண்டுகளை லிஸ்ட் அவுட் செய்து சரியாக தயார் செய்து கொடுப்பதால் அவருக்கு ரொம்பப்பிடிக்கும். கூடவே தெலுங்கு வேறு. நடுநடுவில் வரும் போன்கால்களில் ஹிந்தி பேசிவிட்டு தவறி என்னிடமும் ஓரிரு வார்த்தை விடுவார், பதில் சொன்னால் நீகு ஹிந்திகூட ஒஸ்துந்தா? என்பார். "ம்" என்பேன்.


வேலை இருந்தால் கூட அப்படியே போட்டுவிட்டு, மதியம் சரியாய் ஒரு மணிக்கு சாப்பிடக் கிளம்பி விடுவோம். செந்தூரில் கல் தோசை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னச்சின்னதாய் மூணு தோசை போடுவான். ஆனால் ஒவ்வொரு முறை வரும்போதும் உன்னை ஆந்திரா மெஸ் கூட்டிப்போகிறேன் என்பார். பலமுறை மிஸ்ஸாகி ஒரே முறை எல்.ஐ.சி அருகில் உள்ள மாடர்ன் லாட்ஜில் ஆந்திரா மெஸ்ஸுக்குப்போய் சாப்பிட்டோம். (அதுவே நாங்கள் இணைந்து சாப்பிட்ட கடைசி முறையாகிப்போனது.)


ஆனால் அந்தச் சுவை இன்னும் நாக்கடியிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் முதன் முதலில் நமக்கு அறிமுகப் படுத்தி பெருமையைத் தட்டிக்கொண்டு போனது நம்மாளு சுதீர்தான். முழுப்பெயர் ஆர்மண்ட்லா சுதீர் குமார். அர மண்டேலா, அரை மண்டையன், என்றெல்லாம் ஆபீஸில் பட்டப் பெயர்கள் வழங்கும். லூஸூப்பயல் மாதிரி திரிவான். ஆனால் தலைவரை சாப்பாட்டு நேரத்தில் பார்க்க வேண்டுமே, ஆஹா... கைப்பட்டியை மடித்து முழங்கைக்கு மேலேற்றி, நன்றாக முழங்கை வரை வழித்துச் சாப்பிடுவான். நல்ல தீனிக்காரன். ஒரு முறை நீலா பவனில் ஒரு புல் லிமிடெட் மீல்ஸை சாப்பிட்டு விட்டு எனக்குப் போதவில்லை என்று ஆந்திரா மெஸ்ஸூக்குப் போனவன் அவன்.


வேலைக்குச் சேர்ந்த புதிதில் முரளி சார் எக்ஸ்பீரியன்ஸ்டு பர்சன் என்று அவனுடன் கோர்த்து விட்டு விட்டார். கொஞ்சம் டார்ச்சராய் இருந்தாலும் விஷயம் தெரிந்ததால் (அந்நியன் அம்பி மாதிரி. அந்தக் கேரக்டர் எல்லாம் சினிமாவுக்குத் தான் சுவாரசியமாக இருக்கும். நிஜ வாழ்வில் டார்ச்சர் தாங்க முடியாது) சில மாதங்கள் அவனையும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று. என்ன கேள்வி கேட்டாலும் ஐன்ஸ்டீன் மாதிரி வேறு எதையோ யோசித்துக் கொண்டு இருப்பான். தோன்றினால் பதில் சொல்வான். இல்லாவிட்டால் பதில் வாங்குவது கஷ்டம்.


ஒன்று தெரியுமா? கம்ப்யூட்டரையே குளிப்பாட்டிய அதிமேதாவி அவன். தவறுதலாய் கீபோர்டில் காபி கொட்டி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவன் அழகாக பக்கத்தில் இருந்த வாட்டர் கேனை எடுத்து ஒரு குழந்தையைக் குளிப்பாட்டும் லாவகத்துடன் தண்ணீர் ஊற்றினான். அப்போது அவனைப்பார்த்து பயமாக இருந்தது எனக்கு. ஓடிப்போய் கிஷோரிடம் சொன்னேன். அவர் ஓடி வந்து டேய் லூஸூப்பயலே என்று சொல்லி கீபோர்டின் யு.எஸ்.பி ஒயரை பிடுங்கி விட்டார்.


அதே போல் ஒரு முறை டிரெயினிங் செஷனில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த போது தனக்கு வந்த போன் காலை அட்டெண்ட் செய்த படியே போக்கிரி வடிவேலு போல டிரெயினிங் வந்த ஒருவர் எழுதிக் கொண்டிருந்த பவர் ஆஃப் அட்டார்னி பேப்பரைக் கிழித்து போன் நம்பர் எழுதியவன் அவன். (தம்பி, வட இன்னும் வரல.. அவனை பிறகு நாங்கள் உரித்துக் காயப் போட்டது தனிக்கதை.)


வேலை நேரத்தில் என்ன நடந்தாலும் சாப்பாட்டு நேரத்துக்கு சரியாகப் பிரிந்து விடுவோம். ஆனால் ஒருமுறை "கார்த்திக், இக்கட ஒஸ்தாரா, இக்கட ஒக ஆந்த்ரா மெஸ் உந்தி, தீஸ்கி யெல்தானு.." (இங்கே வருகிறீர்களா? இங்கே ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது, கூட்டிச் செல்கிறேன்) என்று அழைத்துப் போனான். போகும் போது இவனை நம்பிப் போகிறோமே என்று யோசனையாய் இருந்தாலும், போன பின்பு ஆந்திரா மெஸ் ரொம்பவும் பிடித்துப் போனது.


சுடச்சுட உதிரியாய் அள்ளி அள்ளிப் போடப்படும் அன்லிமிடெட் சுடுசாதம், பப்பு எனப்படும் பருப்புக்கூட்டு, கொஞ்சம் நெய், சட்னி, துவையல், ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி ப்ளஸ் நெய், சாம்பார், ரசம், கூட்டு, மோர்க் குழம்பு, ஊறுகாய், ஏதேனும் ஒரு வறுவல் வகை, பொறியல் இத்துடன் ஒரு முழு தயிர் கப்பும் உண்டு. அதில் சேர்த்துச் சாப்பிட சர்க்கரை கொஞ்சம் கேட்டால் ஸ்பூனுடன் சேர்த்துத் தருவார்கள். எல்லாம் முடிந்து வாழைப்பழம் தனி. அதையும் முடித்து விட்டு கை கழுவித்துடைத்து விட்டு வந்தால் பன்னீர் சர்க்கரை கலந்த சோம்பு வைத்திருப்பார்கள். பீடா வேண்டுமென்றால் அதுவும் உண்டு. ஒரு முழு கல்யாண விருந்து சாப்பிட்ட எஃபெக்ட் இருக்கும்.


அடிக்கடி அங்கே போவோம். வரும் எல்லோருமே சாப்பாட்டுடன் சேர்த்து ஆந்திரா ஆம்லெட் ஒன்றையும் ஆர்டர் செய்வர். மசாலாத்தூளை முட்டை, ஆனியனுடன் கலந்து ஒரு மாதிரி காரமாக ஆம்லெட் போடுவார்கள். அதையும் சேர்த்து வகையாக வழித்துச் சாப்பிட எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் அவனே.


ஒரு நாள் திடீரென்று ரிஸைன் செய்து விட்டுப்போய்விட்டான். சம்பளம் பத்தவில்லை என்று ஒரு காரணம். பிஸினஸ் செய்யப் போகிறேன் என்று ஒரு காரணம். ஷேரில் லாஸானதும் ஒரு காரணம் என்று ஆபீஸில் சொன்னார்கள். ரிஸைன் செய்வதற்குக் கொஞ்ச நாட்கள் முன்புதான் சத்யம் ஷேரில் இன்வெஸ்ட் செய்தான், அன்றுதான் மார்க்கெட் விழுந்து சத்யத்தை அடி பின்னிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் இப்போது தான் உள்ளே நுழைந்து 120 ரூபாய்க்கோ 80 ரூபாய்க்கோ 200 ஷேர் வாங்கினார். மறு நாளிலிருந்து மேலும் சறுக்கத் துவங்கியது அது. இரண்டு நாட்களில் ஆறு ரூபாய்க்கோ, பத்து ரூபாய்க்கோ போய் நின்றதாக ஞாபகம்.


இப்போதும் ஆந்திரா மெஸ்ஸூக்குப் போனால் சுதீரின் நினைவுகள் அலை மோதும். ரொம்ப நாளாயிற்று. பிஸினஸ் செய்யப் போனவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. சும்மா சுற்றிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இருந்த உருப்படியான வேலையை விட்டு விட்டு ஏன் இந்தப் பொழப்பு என்று நானும் கூடச் சொன்னேன். ஆனால் யார் கண்டது? சொதப்பல் எனப் பெயரெடுத்திருந்த நம்ம லல்லுவே சூப்பராக ஒரு பட்ஜெட் போட்டு அசத்தியதைப்போய் அவனுக்கும் ஒரு நல்ல டீம் அமைந்தால்....? நல்லாயிருக்கட்டும்.


சரி, சரி. அதை விடுங்கள். அங்காடித் தெரு பார்த்தீர்களா? தி.நகரில் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்று போர்டு வைத்திருப்பார்கள் அல்லவா? அதற்கு நேர் பின்புறம் நடேசன் தெரு (என்று ஞாபகம்)வில் கனகதுர்கா மெஸ் என்று இரண்டாவது மாடியில் ஒரு மெஸ் உண்டு. அருமையாய் இருக்கும். அங்கே ஸ்பெஷல் என்னவென்றால் லேடீஸ் கூட்டமும் வரும். ஏனென்றால் அங்கே ஒரு ஓனர் அம்மாயி இருப்பார். நேடிவிட்டி டச்சுக்காக. அதனால் சாப்பாடும் நன்றாய் இருப்பதாய் ஒரு பிரமை.


இரண்டாவது மாடிக்குப் போகும் கூட்டத்தில் கொஞ்சத்தைப் பிரிப்பதற்காக முதல் மாடியில் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது. ஆனால் கூட்டம் போவதென்னவோ கனகதுர்கா மெஸ்ஸூக்குத் தான்.ஆயிரம் விளக்கு பகுதியில் ஜெமினி பிரிட்ஜ் இறக்கம் முடியும் இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதை ஒட்டிப் பிரியும் தெரு ஒன்றில் இன்றும் ஒரு ஆந்திரா மெஸ் இருக்கிறது. கூட்டம் அலைமோதும். வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டு நினைத்திருந்த பாலாஜியையும் அங்கே ஒருநாள் பார்த்து்த்தொலைத்தேன். (அவனும் கொல்ட்டிதான்.)


அதே போல் அந்த தெருவையும், கிரீம்ஸ் ரோட்டையும் இணைக்கும் சந்து ஒன்றில் சாய் மெஸ் என்று மற்றொன்று. சீனிவாசன் வருவதாக இருந்தால் அங்கே போவோம். அதன் ஸ்பெஷல் என்னவென்றால் அங்கே உள்ள அனைவரும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். சந்தானத்துக்கு கக்கத்தில சொறிந்த படியே வடை எடுத்துத் தரும் எஃபெக்டில் இருப்பார்கள் அனைவரும்.


அதே போல் தாம்பரம் சானடோரியம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு ஆந்திரா மெஸ் உண்டு. அங்கும் இதே சாப்பாட்டு அனுபவம் மிஸ்ஸாகாமல் கிடைக்கும். விலையும் மேனேஜபிள் தான்..


எல்.ஐ.சி அருகில் உள்ள மாடர்ன் லாட்ஜ் ஆந்திரா மெஸ்ஸில் மட்டும் சாப்பாடு கொஞ்சம் காஸ்ட்லி (ஐம்பது ரூபாய் - ஆனால் பாலாஜி சாரே கொடுத்து விடுவார். போக வர ஆட்டோ ஃபேரும் அவரே). கவனிப்பு அருமையாக இருக்கும். எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கூட கொடுப்பார்கள். ரெகுலர் கஸ்டமர்களை பெயர் சொல்லி அழைத்து, கோங்கூரா சட்னி போட்டு, அளவு பார்த்துப் பரிமாறி என்று ராஜ உபசாரமாக இருக்கும்.


தாம்பரம் சேலையூரில் ஒரு காலேஜில் வேலை செய்த போது அங்கிருந்து இரண்டாவது கேட்டின் பக்கத்து சந்தில் ஒரு ஆந்திரா மெஸ்ஸில் (அப்போது இருபது ரூபாய் மட்டுமே) சாப்பிடுவதுண்டு. அங்கே மட்டும் பப்புக் கூட்டு கொஞ்சம் காரமாய் இருக்கும். சாம்பார் குழம்பு மாதிரி இருக்கும். அங்கே வருவது முழுக்க காலேஜ் பசங்கள் என்பதால் அனுபவித்துச் சாப்பிடலாம்.

ஒருமுறை டிரை செய்து தான் பாருங்களேன்.

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------

பின்னூட்டத்தில் கருத்துக்கள் சொன்னால்தானே கட்டுரை எப்படி இருக்கிறதென்று எனக்குத் தெரியும்? பின்னூட்டம் போடுங்கள்..

-------

திங்கள், 12 ஜூலை, 2010

வரம் தரும் கிணறு

-எஸ்கா

மக்கள் அதிகமாக சுற்றுலா வந்து செல்லும் இடம் ஒன்றில் பழங்காலத்துக் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலைச் சுற்றிப் பார்க்க திருமணமானவர்கள் ஜோடி ஜோடியாக வருவதுண்டு.

கோவிலின் பிரகாரத்தில் ஸ்தல விருட்சத்துடன் பழைய, பெரிய கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றில் காசு போட்டு விட்டு மனதில் எதையேனும் வேண்டிக் கொண்டால் அது நடக்கும் என்பது ஐதீகம். தன் அனுபவத்தில் கண்ட வரையில் கண்டிப்பாக நிறைவேறும் என்று சுற்றுலா வந்தவர்களுக்கு விளக்கினான் கைடு.

வந்த ஜோடிகளில் ஒரு கணவனுக்கு சந்தேகம். இருந்தாலும் வேண்டித்தான் பார்ப்போமே என்று எதையோ வேண்டிக் கொண்டு கிணற்றருகே குனிந்து நின்று காசு போட்டான் அவன்.

இதைப்பார்த்தாள் அவனது மனைவி. அவளுக்கோ இதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. "சும்மா சொல்லாதீங்க. பழைய கிணறாம். ஐதீகமாம். வேண்டினதெல்லாம் நடக்குதாம். நான் பார்க்கிறேன். நடக்குமா என்னன்னு?" என்றபடி குனிந்து பார்த்தாள் அவள்.

ஒரு வினாடி நிலை தடுமாறி கால் இடறி அந்தக் கிணற்றிலேயே விழுந்தாள் அவள்.

எட்டிப்பார்த்து புருவம் உயர்த்திய கணவன் சொன்னான்

"ஆமாம் நடக்குது".

-------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். நல்லாயிருந்தா தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
-------

செவ்வாய், 6 ஜூலை, 2010

அவதார் - சில கணக்குகள்

அவதார்.

(இக்கட்டுரை அவதார் படம் வந்த போது தமிழ்வணிகம் டாட் காமில் வெளியாகி மிகப் பரவலான வரவேற்பைப்பெற்றது. அப்போது இந்தக் கட்டுரையைப் படித்தவர்கள் சுமார் 3400 பேர்.)

ஹாலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர் 1 & 2 படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்தாக எடுத்திருக்கும் "அவதார்" இது. படம் பற்றி பல இடங்களில் விமர்சனம் படித்திருப்பீர்கள். பலர் படமே பார்த்திருப்பீர்கள். ஆக, இங்கே அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. வசூல் மற்றும் சில டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.. வசூல் பற்றி இப்போதைக்கு சிம்பிளாகச் சொன்னால் "பிளந்து கட்டுகிறது". டெக்னிகல் விஷயங்கள் "சான்ஸே இல்ல" ரகம்.

வழக்கம் போல எல்லா ஹாலிவுட் படத்துக்கும் சொல்வது போல உலகிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப் பட்ட படம் என்றார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிளந்து கட்டுகிறது என்றார்கள். அடப்போங்கப்பா, ஸ்டார் வார்ஸூக்கும் இதைத்தான் சொன்னீர்கள். டைட்டானிக்குக்கும் இதைத்தான் சொன்னீர்கள். கிங்காங்குக்கும் இதைத்தான் சொன்னீர்கள் என்று சலித்துக் கொண்டு படம் பார்க்கச் சென்றீர்களானால் மலைத்துப் போவீர்கள். மக்களே! உண்மையிலேயே அவதார் கையாண்டிருக்கும் தொழில்நுட்பங்களும் செய்திருக்கும் விஷயங்களும் நம்மால், நம் சினிமா மக்களால் தொட முடியாதவை.

கதை என்னவோ ரொம்பப் பழையது தான். ஆனால் அதை எடுத்திருக்கும் விதம்தான் சாதாரண ரசிகனையும் படத்தின் உள்ளேயே இழுத்துச் சென்று விடுகிறது. ஸ்கிரீனைப் பார்த்து அடி, வெட்டு, சுடு என்ற குரல்களை சத்யம் தியேட்டரின் ஆங்கில வெர்ஷனிலேயே கேட்க முடிந்தது. தமிழ் வெர்ஷன்? நல்ல வேளை. நம்ம இராம.நாராயணன் கோஷ்டியிடம் கொடுக்காமல் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் நார்மலாகத் தான் இருக்கிறது. அதனால் தப்பித்தோம்.

ஆனால் படத்தில் டெக்னாலஜி மிரட்டுகிறது. 3டி படத்தை 2டியில் பார்க்காமல், டிவிடியில் பார்க்காமல் 3டியில் பார்ப்பதே உண்மையான சந்தோஷத்தைத் தரும் என்று சொல்லலாம். நடு நடுவே ஸ்பை கிட்ஸ் 3டி போன்ற ஒருசில படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப் பட்டாலும் நம்ம ஊர் ரசிகனுக்கு மைடியர் குட்டிச்சாத்தான் படத்திற்குப்பிறகு 3டி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை கச்சிதமாக உணர இப்போதுதான் வாய்த்திருக்கிறது

வெறும் 32 நாட்கள் நியூசிலாந்து காடுகளில் லைவ் ஆக்‌ஷன் முறையிலும், 32 நாட்கள் லாஸ் ஏஞ்சல் ஸ்டுடியோவில் மோஷன் கேப்ச்சர் முறையிலும் படம் பிடிக்கப் பட்ட அவதார் படத்திற்கு, இரண்டு கேமரா மேன்கள் வேலை செய்திருக்கிறார்கள். 32 + 32 = 64 நாட்களே மொத்தமாக படம் பிடிக்கப் பட்ட அவதார் திரைக்கு வர, 4 வருடங்கள் ஆகியிருக்கிறது. படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போது, டைட்டானிக் கப்பல் போல மூழ்கத்தான் போகிறது என்றார்கள். டிலேயின் காரணம்??? ஒவ்வொரு ஃப்ரேமின் சராசரி ரெண்டரிங் நேரம்: 58 மணி நேரங்கள். படம் மொத்தம் 162 நிமிடங்கள். ஒரு நொடிக்கு 24 ப்ரேம்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். (162 நிமிடங்கள் X 60 விநாடி X 24 பிரேம்கள் X 58 மணி நேரங்கள்)

அதில் நடித்த நடிகர்களுக்கு நாம்தான் நடித்தோமா? என்று சந்தேகமே வந்திருக்கிறது படக் காட்சிகளைப் பார்த்ததும். அதிலும் நடித்து பல வருடங்களில் கழித்து தான் படம் ரிலீஸென்றால்? கிராபிக்ஸ் காட்சிகளுக்காகத்தான் சுமார் மூன்றரை வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள். இங்கே ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தில் ஸ்டைல் பாடல் முதலிலேயே படமாக்கப் பட்டு சுமார் எட்டு மாத காலம் சி.ஜி மூலம் ரஜினியின் கலர் மாற்றம் உள்ளிட்ட கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்ப்பட்டன. அதற்கு மட்டும் ஆன செலவு சுமார் ஒரு கோடி. இதுதான் அதிகபட்ச டிலே நம்மூரில்.

இந்தியாவிலும் 2டி, 3டி என்று இரு விதமாக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது அவதார். அனிமேஷன், மோஷன் கேப்சர் தொழில்நுட்பம், சி.ஜி என்று பலப்பல புதிய விஷயங்கள் படத்தில் கையாளப் பட்டிருக்கின்றன. அவதார் திரைப்படம் சுமார் 237 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்டிருப்பதாக விக்கிப்பீடியா கணக்குச் சொல்கிறது. ஆனால் உண்மையான செலவு 450 மில்லியன் டாலர் இருக்கலாம் என தி வீக் பத்திரிகை சொல்கிறது. விளம்பரத்திற்காகச் செய்யப் பட்ட தொகையையும் கூட்டிக்கொள்ளலாம். அதற்கு மட்டும் சுமார் 150 மில்லியன்.

ஆனால் ரிலீஸான ஒரே வாரத்தில் உலகம் முழுக்க சுமார் 230 மில்லியன் டாலர்களை வசூலித்துக் குவித்திருக்கிறது இது. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று வாரங்கள் முடிவதற்குள் 1000ஐத் தாண்டியிருக்கிறது. சமீபத்திய நிலவரப் படி வசூல் சுமார் 1020 மில்லியன் டாலர்கள். போட்ட காசை விட மூன்று மடங்கு லாபம் (சுமார் 300%). அருணாச்சலம் படத்தில் ரகசிய அறையில் கட்டுக் கட்டாக பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பணத்தை ரஜினி மலைப்பாகப் பார்ப்பார் அல்லவா? அதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். எப்படி இருக்கிறது?

இந்தியப் படங்களின் அதிகபட்ச வசூல் என்று பார்த்தால் 55-60 கோடி ரூபாயில் தயாரிக்கப் பட்ட தமிழ் சிவாஜி சுமார் 130 கோடி ரூபாயும் 40 கோடி ரூபாயில் தயாரிக்கப் பட்ட ஹிந்தி கஜினி சுமார் 115 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறன. (இதெல்லாம் ஏட்டுக் கணக்குகள். கஜினி 275ஐ தாண்டியதாகவும், சிவாஜி 380ஐத் தொட்டதாகவும் சினிமாப்பட்சிகள் கூவுகின்றன). அதனால் தான் இப்போது எந்திரன் பட்ஜஃட் சுமார் 135 கோடி ரூபாய், சன் பிக்சர்ஸின் முதல் நேரடித் தயாரிப்பு ஆசை என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் வளர்ந்து வந்துள்ள பணவீக்கத்திற்கு எதிராக வசூலை அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் "மதர் இந்தியா" திரைப்படம் வசூல் கணக்கில் கஜினியை முந்துகிறது. "ஷோலே", "மொகல்-இ-ஆஸம்" போன்ற படங்களின் வசூல்கள் (தனித்தனியாக) சிவாஜியின் வசூலையும் முந்துகின்றன.

இது தவிர மற்றொரு விஷயம். 1997-ம் ஆண்டில் கேமரூனின் டைட்டானிக் திரைப்படம், அகாடமி அவார்ட்ஸ் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்குப் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கர் வென்றது அது. அதற்கு முன்பு பென்-ஹர் திரைப்படம் இதே எண்ணிக்கையில் விருதுகளை வென்றிருந்தது. அதற்குப் பிறகு அந்த சாதனையை முறியடிக்கவோ ஏன் சமன் செய்யவோ கூட யாரும் இல்லை. இப்போது அவதார் எத்தனை பிரிவுகளுக்குப் போட்டி போடுகிறது என்று பார்க்கலாம்.

ஆங்கில சினிமாக்கள் குவிக்கும் வசூல் தமிழ்ப் படங்களுக்கு ஆபத்தாகத் துவங்கியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு 2012 - ருத்ரம் திரைப்படம் அதன் விநியோகஸ்தர்களைத் தவிர மற்றவர் கண்களைக் கலக்கிவிட்டுப் போனது. இப்போது அவதார் களத்தில். போட்டியின்றி ரிலீஸான வேட்டைக்காரனுக்கு அவதார் தான் போட்டி என்று கூறப்படுகிறது. வசூல் அப்படி. மற்றும் விளம்பரங்கள். அவர்கள் செய்யும் விளம்பரங்கள் தவிர வாய்மொழி, பத்திரிகை, டி.வி விமர்சனங்கள், எஃப்.எம் போன்றவை.. ஏன்? இந்தக் கட்டுரை உட்பட.

இவற்றுக்கெல்லாம் பின்னணிக் காரணம் என்ன? இந்திய மார்க்கெட் மிகப் பெரியது. பிஸினஸ் விஷயத்தில் பார்த்தால் மொழிவாரியாக இந்தியா பிளவு பட்டிருப்பது தவறு என்றே தோன்றுகிறது. நமக்குத் தேவை ஒரு நேஷனல் லேங்குவேஜ். எது எப்படியிருந்தாலும் அதில் பணம் பண்ணும் சூட்சுமத்தை ஹாலிவுட் புரிந்து கொண்டு விட்டது. உலகம் முழுக்க ரிலீஸ். அதுவும் ஒரே நேரத்தில். உன் மொழியில் வேண்டுமா? இந்தா இப்பவே பிரிண்டைத் தருகிறேன். டப்பிங் செய்து வைத்துக்கொள். ஒண்ணா ரிலீஸ் பண்ணுவோம். எனக்குத் தேவை காசு. முடிந்தால் உங்கள் ஊரைப் பற்றியும் படத்தில் ரெண்டு சீன் வைத்துத் தருகிறேன். உங்க ஆள் சந்தோஷமாக கைதட்டுவான் அல்லவா?

இப்படி யோசித்த ஹாலிவுட்காரர்கள், இந்தியாவைப் பற்றியும், ஏன் சைனாவைப் பற்றியும் கூட ஹாலிவுட் படங்களில் காட்சிகள் வைக்கத் துவங்கி விட்டார்கள். காரணம் மார்க்கெட். 30கோடி பேர் உள்ள அமெரிக்காவில் மட்டும் அவ்வளவு வசூல் வந்தால் தலைக்கு 120 கோடி பேர்களை வைத்துள்ள இந்தியாவிலும், சைனாவிலும் இருந்து எவ்ளோ பைசா கொட்டும்? யோசியுங்கள். மலைப்பாக இருக்கிறது அல்லவா? அதை அவர்கள் முன்னமேயே செய்து விட்டார்கள்.

தி மித் படத்தில் இந்தியாவில் ஒரு விஸிட் அடிப்பார் ஜாக்கி சான், படத்தில் அவருக்கு உதவி செய்வது நம்ம மல்லிகா ஷெராவத். (அதன் நீட்சியாகத்தான் தசாவதாரத்தில் மல்லிகாவை நடிக்க வைத்து, அவரை வைத்தே ஜாக்கியை ஆடியோ ரிலீஸூக்குக் கூட்டி வந்தார்கள். மார்க்கெட், பிஸினஸ் தந்திரம் - இன்னும் சில இலட்சம் பேர் கவனிப்பார்கள் அல்லவா?). தவிர ஆர்மகெட்டன், இன்டிபென்டன்ஸ் டே படங்களிலும் உலகம் அழியும் போது தாஜ்மஹாலைக் காண்பிப்பார்கள். நம் ரசிகன் அது இடிவதை கண்கள் விரியப் பார்த்து கை தட்டுவான்.

2012 ருத்ரம் படத்தில் இந்திய விஞ்ஞானி உலகம் அழியப் போவதைப் பற்றி கண்டுபிடித்துச் சொல்வார். படத்தில் பல காட்சிகள் இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் நடக்கும். அதில் அந்தந்த நாட்டு நடிகர்களும் உண்டு. படத்தை உங்கள் ஊரிலும் விற்க வேண்டுமல்லவா? (பிகைண்ட் தி சீன்ஸ்: அதன் இயக்குனர் ரோலண்ட் எம்மரீச் தன் முந்தைய படமான காட்ஸில்லா ரிலீஸ் சமயத்தில் உலகம் முழுக்க டூர் அடித்த போது நம்ம ஹாய் மதன் இரண்டு நாட்கள் அவருடன் தங்கி, விமானப் பயணம் செய்து, ஒரு சிறு விபத்தில் மாட்டி, தப்பி... என்று அது ஒரு கிளைக் கதை. ஆக மதன் சாரின் பாதிப்பில் இந்தியா நினைவு வந்து படத்தில் அக் காட்சிகளை சேர்த்திருக்கலாம்)

அதுபோல் அவதாரிலும் பல விஷயங்கள். அவதார் என்ற இந்திச் சொல், ந"வி-க்களின் (நமது) விஷ்ணு போன்ற நீலநிறம், ஹீரோ நெற்றியில் நாமம், கழுகு போன்ற இக்ரன் பறவை, ந"விக்களின் அனுமார் வால், கதாநாயகியின் பெயர் (நேத்ரி - அழகான கண்கள் கொண்டவள்) போன்ற விஷயங்களை எல்லாவற்றையும் வைத்துப்பார்த்தால் ஸ்டோரி டிஸ்கஷனி்ல் எங்கோ நம்மாள் ஒருத்தர் இருக்கிறார் போலத் தெரிகிறது.

நம் (சினிமா) மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே ஹாலிவுட் படங்கள் அதிக அளவில் இந்தியாவில் ரிலீஸானாலும், அவை முழு மூச்சில் இறங்கிக் கலக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. டிவி, டிவிடி, திருட்டு விசிடி, உயர்ந்துள்ள தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் போன்ற பிரச்சினைகளை விட பெரிய பிரச்சினை.

இனிமேலும் காதல், ஊதல், ஹீரோ பில்டப் என்று எத்தனை காலத்திற்கு ஜல்லியடித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? இந்தக் கொடுமைகள் போதாதென்று உலகப் படங்களையே சுட்டு தமிழில் படம் எடுத்து அதையும் தைரியமாக உலகப் பட விழாவுக்கு அனுப்பும் வேலையெல்லாம் வேறு நடக்கிறது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் எத்தனை படங்கள் வந்தாலும் ரசிக்கும் விதத்தில் தந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். புது முயற்சியில் படங்கள் வர வேண்டும். பசங்க, ஈரம், எ வெட்னஸ்டே, ஸ்லம்டாக் மில்லியனர், பா, பழசிராஜா போன்ற சமீபத்திய நம்பிக்கை தரும் உதாரணங்களுடன் மீண்டும் சந்திப்போம்.


----------
நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.
----------

பட்டையைத் தட்டும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.

-எஸ்கா

ஸ்டார் மூவீஸ் (இந்தியாவின் நம்பர் ஒன் இங்கிலீஷ் மூவி சேனல்????) சேனலில் "ஜாக்கி சான் ஃபிலிம் ஃபெஸ்டிவல்" என்ற பெயரில் ஜூன் மாதம் முழுவதும் பதினோரு மணிக்கு சூப்பர் ஹிட் ஜாக்கி சான் படங்களாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். கிடைத்ததோ அட்டகாசமான வரவேற்பு. அந்த வரவேற்பு கிடத்த உற்சாகத்தில் "இந்த வாரம், ரம்பா வாரம்" என்பது போல இந்த மாதம் "ஜேம்ஸ்பாண்ட்" மாதம்.... என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த மாதம் திங்கள் முதல் வியாழன் வரை இரவு பதினோரு மணிக்காட்சியில் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்களாக வெளியிடப்படுகின்றன. மொத்தம் 17 படங்கள். கேஸினோ ராயல் முதல் வரை தி மேன் வித் தி கோல்டன் கன் வரை வெரைட்டியான ஜேம்ஸ்பாண்ட் படங்கள் (குட்டித்) திரையிடப்படுகின்றன. சந்தோஷமாகக் கண்டு களியுங்கள்.

நான் ஒரு படம் விடுவதில்லை. வீட்டில் எல்லோரும் தூங்கினாலும் மியூட்டில் வைத்துக்கொண்டாவது எல்லா படங்களையும் பார்த்துக் கிழித்துவிட்டுத்தான் தூங்குவது. எப்படிப் புரியும் என்கிறீர்களா? அதான் சப் டைட்டில்ஸ் போடுகிறார்களே. அழகான ஆங்கிலத்தில். அப்புறம் என்ன? SDI Media என்ற கம்பெனி சப் டைட்டில்ஸை அழகாக வெளியிடுகிறது.

இன்று முதல் தேதி வாரியான படங்கள் வரிசை இங்கே.. மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

ஜூன் 7ம் தேதி - தி மேன் வித் தி கோல்டன் கன்

ஜூன் 8ம் தேதி - லைசென்ஸ் டு கில்

ஜூன் 12ம் தேதி - தி வேர்ல்டு ஈஸ் நாட் இனஃப்

ஜூன் 13ம் தேதி - பார் யுவர் ஐஸ் ஒன்லி

ஜூன் 14ம் தேதி - லிவ் அண்ட் லெட் டை

ஜூன் 15ம் தேதி - கோல்ட் ஃபிங்கர்

ஜூன் 19ம் தேதி - டைமண்ட்ஸ் ஆர் ஃபாரெவர்

ஜூன் 20ம் தேதி - எ வியூ டு எ கில்

ஜூன் 21ம் தேதி - யூ ஒன்லி லிவ் ட்வைஸ்

ஜூன் 22ம் தேதி - டுமாரோ நெவர் டைஸ்

ஜூன் 26ம் தேதி - டை அனதர் டே

ஜூன் 27ம் தேதி - மூன்ரேக்கர்

ஜூன் 28ம் தேதி - க்வாண்டம் ஆஃப் சோலேஸ்

ஜூன் 29ம் தேதி - ஆக்டோபுஸ்ஸி

இந்த லிஸ்ட்டு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------

திங்கள், 5 ஜூலை, 2010

வைகுண்ட ஏகாதசியும் அடை அவியலும்

-எஸ்கா

(இக்கட்டுரை ஜூலை 05 அன்று உயிரோசை டாட் காமில் வெளியானது.)


டிசம்பர் மாதம் எப்போதுமே ஒரு ஸ்பெஷல்தான். ஏனென்றால் அதில் நிறைய பண்டிகைகள் வரும். கிறிஸ்துமஸ், மொகரம், குருநானக் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நியூ இயர் என்று. யாருக்கு பண்டிகை வந்தால் என்ன? நமக்கு என்னவோ தீனி வந்தால் சரி. கிறிஸ்துமஸுக்கு சார்லஸ் அல்லது ஸ்டீபன் வீட்டிலிருந்து ஸ்டாரும், பெரிய கேக்கும் வந்து விடும். மொகரம் என்றால் பிரியாணி கன்ஃபார்ம். வைகுண்ட ஏகாதசிக்கு எங்கள் பகுதியில் பலர் வீடுகளிலும் அவியல் செய்வார்கள். சாப்பாடு + அவியல் + அடை மிகப் பிரசித்தம்.

நியாயமாகப் பார்த்தால் அன்றைக்கு விரத தினம் மாதிரி. ஃபாஸ்டிங் இருக்க வேண்டும். நமக்கு எங்கே அந்த ரூலெல்லாம் மண்டையில் ஏறும்? நமக்கு அவியல் வேண்டும். தட்ஸ் ஆல். சேலத்தில் பெரிய பெருமாள் கோவில், கோட்டை பெருமாள் கோவில்தான். அன்று வைகுண்ட வாசல் திறப்புக்காக நீண்டு வளர்ந்த அனுமார் வால் கியூ மணிமுத்தாறு கரையை ஒட்டி நிற்கும். போலீஸ், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ், என்.சி.சி, என்.எஸ்.எஸ். பசங்கள் காவலோடு இன்ச் இன்சாக நகரும் கியூ.

நடு ராத்திரியே, ஏன் முதல் நாள் இரவு பத்து மணிக்கே போய் கியூவில் நின்று விடுவோம். நின்றால் காலை ஆறு மணிக்கு எப்படியும் சாமி பார்த்து விடலாம். எப்படியும் என்.சி.சி. டியூட்டியில் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்கள்தான் இருப்பார்கள். காலையில் லேட்டாக வரும் அம்மா, தங்கச்சி, பக்கத்து வீட்டு ஆயா, எதிர்த்த வீட்டு ஃபிகர், பின் வீட்டுப் பாப்பா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, அண்ணன் என எல்லாரையும் உள்ளே விடுவோம்.

வால் நகர நகர பாதியில் ஓடி ஓடிப் போய் வழியல் தரப்படும் இலவச பிரசாதங்களைச் சாப்பிட்டு விட்டு கியூவில் நிற்பவர்களுக்காகக் கொஞ்சம் கவர்ந்து வருவோம். காசு கொடுத்துக் கொஞ்சம் தீனி. கோயிலுக்குள்ளே தரும் பிரசாதம், அங்கே காசுக்கு வாங்கும் பிரசாதம் என வரிசையாக வஞ்சனையில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டே இருப்போம். தள்ளு முள்ளுகள் எல்லாம் செய்து சாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டுக்குப் போனால் அன்றைய ஸ்பெஷல் அவியல் ரெடியாக இருக்கும்.

மோரில் பச்சை மிளகாய் அரைத்து, கரைத்து ஊற்றி எல்லா காய்கறிகளையும் போட்டு அவியல் செய்திருப்பார்கள். அம்மா கைமணம் சூப்பராக இருக்கும் (எல்லா மகன்களும் சொல்கிற டயலாக் தானே இது என்கிறீர்களா?) நான் மட்டுமல்ல, வீட்டருகில் இருக்கும் எல்லாரும் என் அம்மா கைமணம் சூப்பராக இருக்கும் என்றுதான் சொல்வார்கள், ஏனென்றால் உண்மையிலேயே அம்மா செய்யும் அவியல் எங்கள் தெருவில் இருக்கும் சுமார் பதினெட்டு வீடுகளுக்கு சாம்பிள் போகும்.

அந்த ஏரியாவில் இருக்கும் பத்து வயதுக்குட்பட்ட எல்லா அரை டிக்கெட்டும் எங்கள் வீட்டில் அவியல் சாப்பிடும். அதனால் முதல் கண்டிஷனே எனக்குத் தனியாக தந்து விட வேண்டும் என்பது... ஒரு குண்டா /அண்டா / சட்டி நிறைய செய்து நமக்குத் தனியாகத் தந்து விடவேண்டும், அப்பா, பப்பி, தானம், தருமம், ஏன் அம்மாவுக்கே தர மாட்டேன். அவர்களுக்காக கொஞ்சமாய் இரண்டாவது முறை வைத்துக்கொள்வார்கள். என் பங்கில் (பங்கு என்ன பங்கு, முழுதும் என்னிடம்தான் இருக்கும்) பச்சரிசி சாதம் வைக்கச்சொல்லி தட்டு நிறைய போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு மல்லாந்து விடுவேன்.

அன்றைக்கு ஸ்கூலோ, காலேஜோ கட்டாயம் லீவுதான். லீவு போடாவிட்டாலும் லோக்கல் ஹாலிடே விட்டு விடுவார்கள். அவியலுக்குத் தோதாய், காரமாய் அதற்கு ஒரு இஞ்சி பச்சடி செய்வார்கள் பாருங்கள்... அதை நக்கிக்கொண்டே (சிரிக்காதீர்கள், பச்சடியை நக்கித்தான் சாப்பிட வேண்டும், ஐயாம் சீரியஸ்) அவியல் + சாதம் நாலு முறை உள்ளே தள்ளலாம். காலை கோயிலிலிருந்து வந்தவுடன் எட்டு மணிக்கு ஒருமுறை, வெளியில் போய் சுற்றி விட்டு வந்து பதினோரு மணிக்கு ஒரு முறை, டி.வி. பார்த்துக் கொண்டே தூங்கி எழுந்து விட்டு மூன்று மணிக்கு ஒரு முறை, சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்டு வந்து விட்டு ஆறரை மணிக்கு ஒருமுறை.

மிச்சம் மீதி ஏதாவது தென்பட்டால் நைட்டு அடை போட வேண்டுமென்பது அம்மாவுக்கே தெரியும். அவர்களே அதற்கேற்ற அளவில் அவியல் செய்து விடுவார்கள். அதற்காக என்ன வேலை செய்யச் சொன்னாலும் ரெடி. மாவு அரைத்துத் தரச்சொன்னால் கூட அதற்கும் ரெடி. ஏனென்றால் நைட்டு மிச்சம் நிற்கும் அவியல் எப்போதுமே ஸ்பெஷல். அதன் சாறு கெட்டியாகி காய்கறிகளில் காரம் இறங்கி அட்டகாசமாக இருக்கும். தட்டில் சூடான அடையைப் போட்டு மேலே அப்படியே அவியலை ஊற்றி கை சுடச்சுட பிய்த்து சைடில் வழிய வழிய நக்கிச் சாப்பிட்டால் அடா, அடா, அடா (அடை இல்லீங்க.. அடா) சும்மா கலக்கலாக இருக்கும். எப்படியும் ஏழு அடையாவது உள்ளே இறங்கும்.

அப்பா அப்படியே பார்த்துக்கொண்டிருப்பார். என்னடி பண்றான் இவன்? என்பார்" "சும்மா இருங்க, அவன் சாப்பிடுறதே பெரிசு. கண்ணு வைக்காதீங்க என்பாள் என் தாய். தெய்வத் தாய். (சீரியஸ் பாஸ், அவியல் மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஸ்பெஷல் ஐட்டங்களை மட்டும்தான் இந்தக் கட்டு கட்டுறது, மற்றபடி நான் சரியாக சாப்பிடாத நோஞ்சான் குழந்தைதான். இப்போதும் என்னுடைய வெயிட் ஜஸ்ட் 49 கிலோதான்) ஆக.. நைட்டு பத்து மணிக்கு மேல் ஸ்டார் மூவீஸ் பார்த்துக்கொண்டே மிச்சம் சாப்பாடு + அடை + மீதி நிற்கும் அவியல் எல்லாம் சுத்தமாகக் காலி செய்து விட்டுத் தான் எழுந்திருப்பது. ஸாரி... படுத்து விடுவது.

அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது ஒரு லவ்-ஓ (பாவண்டோ மாதிரி இருக்கும், லோக்கல் கூல் டிரிங்க்ஸ், பப்பிக்கு பிடிக்காது)-வுக்கு மட்டும் பர்மிஷன் வாங்கி விட்டால் அன்றைய பொழுது திவ்யமாக முடியும். ஆனால் சென்னை வந்த பிறகு அது மாதிரி டேஸ்ட்டாக எங்கும் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அடை அவியல் கிடைத்தாலும் காம்பினேஷன் சரியாக அமையவில்லை (திரும்ப ஊருக்குப்போய் மம்மி கையால் சாப்பிடு என்கிறீர்களா? அந்தக் கொடுப்பினை எனக்கு இப்போ இல்லை).

ஆபீஸில் பேசிக்கொண்டிருந்தபோது ஒருமுறை திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் அவியல் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். அம்மா கையால் சாப்பிட்ட ஞாபகத்தில் அங்கே போய் (போன வைகுண்ட ஏகாதசி சமயம்தான்) அடை அவியல் என்று இரண்டு முறை கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. மேற்கொண்டு சிறு சிறு உபரித் தீனிகள் சாப்பிட்டு விட்டு (தனியாகத்தான் அய்யா போனேன்) பில்லைப் பார்த்து கேரிங் ஆகிப்போனது. நூத்தியிருபது ரூபாய். அதோடு சரி. எழுந்து ஓடியே வந்து விட்டேன். ஒரு வருடம் ஆகப் போகிறது. அதற்குப் பிறகு இன்னும் அந்தப் பக்கம் எட்டியே பார்க்கவில்லை.

மக்களே! அடுத்த வைகுண்ட ஏகாதசியும் வரத்தான் போகிறது. ஊருக்கெல்லாம் போனால், அடையாவது அவியலாவது? செஞ்சு தர யாரும் இல்லை. ஆனால் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு அடை அவியல் சாப்பிட்டாக வேண்டுமே. எங்கே கிடைக்கும்? கொஞ்சம் சொல்லுங்களேன். திரும்பவும் ரத்னா கபேவுக்கே போலாமா அல்லது வேற எங்காவது டேஸ்ட்டாகக் கிடைக்குமா?
-------

நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தமிழிஷில் ஓட்டும் போடுங்கள். மறக்காமல்.

-------
-------