வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

நா ஒன் டாய் போட்டு வந்தேன் மிஸ், திம்ப சொங்க மிஸ்

 இன்றைக்கு ஆன்லைன் க்ளாஸ் ஆப்ஸர்வேஷனில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான EVS அதாவது "சுற்றுச்சூழல் அறிவியல்" வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒன்றாப்பு எனில், எல்.கே.ஜி மட்டும் பள்ளியில் படித்து விட்டு, கோவிட் காரணமாக யு.கே.ஜி முழு வருடம் பள்ளிக்கே போகாமல், ஒன்றாம் வகுப்புக்கு வந்துள்ள குழந்தைகள். சிலர் நேரடியாக எல்.கே.ஜி, ஊக்கேஜியெல்லாம் படிக்காமல் வந்தவர்கள்.
அழகாக, பொறுமையாக வகுப்பை நடத்திக்கொண்டிருந்தார் அந்த ஆசிரியை. ஆன்லைன் வகுப்புகளுக்கென்று சில விதிகளும், நியமங்களும் உண்டு. இருமொழி உபயோகம், பெற்றோர் அருகில் இருத்தல், கேமரா ஆனில் இருந்தல், மைக் மியூட்-டில் இருத்தல், கையில் வொர்க் புக் இருத்தல், அவ்வப்போது ஓரிருவர் பெயர் சொல்லி செக் செய்தல், தேவையான போது விதிகளைத் திரும்பச் சொல்லல், இதர, இதர. அவை அனைத்தையும் சரியாக பின்பற்றிக் கொண்டு இருந்தார் அவர். குழந்தைகளும் மிஸ் சொல்வதைக் கேட்டு சரியாக உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பாடம் முடித்து Exercise - பயிற்சிப் பாடம் நடக்கையில் திடீரென அழகான கொஞ்சும் குரல் ஒன்று கேட்டது - "மிஸ், நா ஒன் டாய் (சூச்சூ) போட்டு வந்தேன் மிஸ், திம்ப சொங்க மிஸ்" என்றது அந்தக் குரல். வார்த்தைகள் புரியவில்லை ஆனால் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று புரிந்தது. இதுபோல கோரிக்கை வரும்போது, வெவ்வேறு வகுப்புகளில் வெவ்வேறு வித மறுமொழிகள் வரும். இந்த மிஸ் என்ன சொல்லப் போகிறார் என்று அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன்.
மிஸ், உடனே "என்னடா தங்கம்? பாத்ரூம் போயிட்டு வந்தியா? நான் திரும்ப பேஜ் 51 ஐப் படிக்கணுமா?" என்றார். "ஆமங் மிஸ்" என்று பதிலியது அந்தக் கொஞ்சும் குரல். சரி என்று "பசங்களா நான் மறுபடி இந்த எக்சைஸ் படிக்கப் போறேன்" என்று சொல்லிவிட்டு அந்தப் பயிற்சியை மீண்டும் தெளிவாகச் செய்து காட்டினார் அந்த ஆசிரியை. 30 நொடிகள் தான் என்றாலும், நெட்வொர்க் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனைகள் வரக்கூடிய ஆன்லைன் வகுப்பில் ஒற்றைப் பிள்ளைக்கான கோரிக்கையை முன்னெடுத்துச் செய்வது பெரிய விஷயம்.
தன் ஆசிரியை மேல் என்ன ஒரு நம்பிக்கையும், பிணைப்பும், உறவும் இருந்திருந்தால் அந்தக் குழந்தை கொஞ்சம் கூடப் பயமும், தயக்கமும் இன்றி இந்தக் கோரிக்கையை வைக்கும் என்று எண்ணிய போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. அந்த அளவு சுதந்திரத்தையும் அந்த ஆசிரியை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
வகுப்பறைகள் மாறி வருகின்றன. கற்றல் முறை மாறி வருகிறது. ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான அணுகுமுறையும் நன்றாக மாறி வருகிறது. மாற்றத்திற்குத் தயாராக இல்லாத ஆசிரியர்கள் பின்தங்கிப் போவார்கள்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

அவார்டு வாங்கலையோ அவார்டு.

26 ஆகஸ்ட் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

கொஞ்ச நாளா ஒரு அவார்டு மேட்டர் ஃபேஸ்புக்ல ஓடிட்டிருக்கு. நம்ம கருத்து என்னன்னா, அவார்டு வாங்கறதை விட... அவார்டு குடுப்போம். அப்போ, நாம தானே பெரிய ஆளு, என்னங்கறீங்க? 

"அவன் என்னடா நமக்கு கடன் குடுக்கறது? நாம பேங்கு ஆரம்பிப்போம், எல்லாருக்கும் கடன் கொடுப்போம்"-னு ஒரு படத்துல தலைவர் கவுண்டர் சொல்லுவாரு. ஸோ, "அவன் என்னடா நமக்கு அவார்டு குடுக்கறது? நாம கமிட்டி ஆரம்பிப்போம், எல்லாருக்கும் அவார்டு கொடுப்போம்" 

இந்த ஞானோதயம் எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை (நான் பல கம்பேனீஸ்-ல ஒர்க்-கிருக்கேன். அதுல ஒரு) பழைய மன்னார் அண்டு கம்பேனி மீட்டிங் போயிருந்தப்ப வந்தது. பாலிடிக்ஸ்-னா பாலிடிக்ஸ். செம்ம பாலிடிக்ஸ். என் டீம்ல இருந்த நாலு பேருக்கும் (என்னையும் சேத்து அஞ்சு) ஒருத்தனுக்கும் ஒரு கேட்டகிரியில கூட அவார்டு இல்ல. 

அவுங்க கீழ் நக்கிங்களுக்கு (அடி வருடியோட நிஜ மீனிங்) மட்டும் ஏதாவது ஒரு கேட்டகிரியில அவார்டு. இதுக்காகவே பல புதுப் புது கேட்டகிரியே உருவாக்கி வச்சிருந்தாங்க. உதா - கலெக்ஷன், டீம் ஹேண்ட்லிங், இங்கிலிபீஷ் எதுலயும் ஒரு ம------ரையும் புடுங்காத ஒருத்தன் இருந்தா அவனுக்கு "எனர்ஜடிக் யங் மேன்" னு ஒரு அவார்டு. அதுக்கு என்ன க்ரைடீரியா (இதுக்கு என்னப்பா தமிழ்-ல) ன்னே யாருக்கும் தெரியாது. ஆனா அவார்டு குடுத்தாச்சு. பர்ப்பஸ் சால்வுடு. 

நமக்கு புரிஞ்சு போச்சு. இது வேலைக்காவாதுன்னு. இதுல நம்ம டீம் பசங்களுக்கு அவார்டை தடுத்து நிறுத்துனவங்க பக்கத்துல தான் உட்கார வேண்டிய நிலைமை வேற. ஸோ, எல்லாத்தையும் மறந்து அடுத்தவங்களுக்கு கை தட்டி, நக்கல்  உட ஆரம்பிச்சேன். என் டீம்ல என் வயசுல ஒருத்தன் இருந்தான். அவனுக்கும் சேம் ஃபீலிங்ஸ். எல்லா பாலிடிக்ஸையும் பாத்தவன் அவன். விட்றா, சப்ப மேட்ரு-ன்னு சொல்லிட்டான். ஆனா என் டீம்ல இருந்த ரெண்டு நிஜ எனர்ஜெடிக் யங் மேன்களுக்கு தாங்க முடியல. மூஞ்சி காட்டிக் கொடுத்துடுச்சு. ஆனா என்ன புண்ணியம். அவங்களை வெறுப்பேத்த நினைச்சவங்களுக்கு சந்தோசம் தான். அவங்க பர்ப்பஸ் சால்வ்டு. 

அதுவும் மெட்ராஸ்ல ஒரு பெரிய தலை இருந்தது. அதுக்கு கீழ நாலு லேயர்ல 32 பேர் இருந்தாங்க. அநியாயம் என்னன்னா, ஒருத்தன் உடாம எல்லாருக்கும் அவார்டு. அடங்கொக்கமக்கா. ஏண்டா அது எப்டிடா ஒருத்தன் உடாம 32 பேரும் சூப்பரா ஃபர்ஃபார்ம் பண்ணுவாங்க? சிட்டுக்குருவி ஏதும் லேகியம் சாப்டுவானுங்களோ? 

புதன், 25 ஆகஸ்ட், 2021

காசுக்கேத்த பணியாரம்

எப்போதும்....

கால் வைத்த இடத்திலெல்லாம் சேறும், முறைத்தபடியே விரல் விட்ட தண்ணி டம்பளரை டொங்கென்று வைத்துப்போகும் சப்ளையர்களும், புளித்த வாடை அடிக்கும் மகா கேவலமான சாப்பாடும், காலாவதியான தேதியுடனான ஆனால் டபுள் ரேட் லேஸ் பாக்கெட்டுகளும், காரல் வாசமடிக்கும் காஞ்ச மிச்சர் பாக்கெட்டுகள் தொங்கும் ஹைவே மோ(ச)ட்டல்களில் வண்டியை நிறுத்தும்,
கழுத்தை சாய்த்து தோள் பட்டையில் செல்ஃபோனை வைத்து பேசியபடி ஸ்டியரிங்கை மட்டும் ஆட்டி ஓட்டும்,
ஆளே இல்லாத இடத்திலும் "ங்கொய், ங்கொய்" என அழுத்தியபடியே வண்டியோட்டும் ஹாரனுக்குப் பொறந்த டிரைவர்களும்,
சில்லறை பாக்கி வைத்து, இறங்கும் போதும் சில்லறை தராத, நம்மைத் திட்டுகிற, ஹோட்டலில் நிற்கும் என்று சொல்லாமல் ஹோட்டலில் நிறுத்தி லேட்டாக்கி நம்மை நகம் கடிக்க வைத்து கடுப்பேற்றும் கண்டக்டர்களும்,
எப்பயோ இசுக்கூல்ல பாட்டு கிளாசுல நம்மள அடிச்ச வாத்தி மேலயே கோபமும், எரிச்சலும் வரும் அளவு மொக்க பாடல் சிடிக்களை போட்டு பஸ் பூரா இருக்கும் ஸ்பீக்கர்களை அலற விடும் தனியார் வண்டி அஜிஸ்டேண்டு கண்டக்டர்களும்,
நிறைந்த
எடைக்கும் போடும் ஸ்பேர் பார்ட்டுகளுடன் இருந்தாலும், எல்லா பார்ட்டும் ஆடினாலும் வெறுமனே "EXP" என்று சாக்பீஸ் கோடுகளால் மட்டும் எழுதிவிட்டு அதிக சார்ஜ் வாங்கும் அர"சு"ப் பேருந்துகளிலேயே பயணிப்பவன் நான்.
இன்றைக்கு மஹிந்திரா-வின் "Xylo" வண்டியில் பயணிக்க நேர்ந்தது. அட்டகாசம்யா... வண்டி மிதக்கிறது. 165 கிலோ மீட்டர் தூரத்தை ஹைவேயில் இரண்டே மணி நேரத்தில் கடந்து வந்தது வண்டி.
120 கிமீ வேகத்தில் போனாலும் ஒரு உதறல் இல்லை, ஒரு உறுமல் இல்லை. தேவையின்றி டிரைவர் ஹாரன் அடிக்கவில்லை. அடித்தாலும் உள்ளே சத்தம் அதிகமாக கேட்கவில்லை. எங்கே அமர்ந்தாலும் முகத்திலறையும் குளிர்காற்று வேறு, அருமைய்யா...
சொம்மாவா சொன்னாங்க பெரியவங்க, "காசுக்கேத்த பணியாரம்"னு...

26 ஆகஸ்ட் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கவுண்டரின் மகிழ்ச்சி

10 ஆகஸ்ட் 2015 அன்று எழுதியது. 

உறவில் சர்வேஷ், அர்விந்த் என்று இரண்டு பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். யு.கே.ஜி போன்ற பெரிய படிப்பு படிப்பவர்கள் அவர்கள். 

அதர்வன் (மகனார்) அவர்களில் எவரையேனும் பார்த்தால் "ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்" என்று கதைகளில் படித்திருப்பீர்களே, அதை முகத்தில் காண்பிப்பான். பரவசம், பரவசம் என்பார்களே அது உடலில் தெறிக்கும், மற்ற எல்லா வித சிரிப்புகளிலும் அப்போது வரும் சிரிப்பு அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அவர்களிடம் போய் உரசியவாறு நின்று கொள்வான். கட்டிப்பிடிக்கவும் தெரியாது. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாது. எட்டு வயதுப் பையனிடம் திடீரென் ஆயிரம் ரூபாய் கொடுத்து "என்ன வேணா வாங்கிக்கோ, பண்ணிக்கோ, கேக்க மாட்டேன்" என்றால் அவன் நிலை எப்படி இருக்கும்? 

"இப்போ எதாவது செய்யணும், ஆனா என்ன செய்யறதுன்னு தெரியலையே" என்ற அவனது நிலை பதினைந்து இலட்சம் லாட்டரி விழுந்தவுடன் "அய்யோ நான் இப்போ எதையாவது வாங்கியாகணுமே" என்ற கவுண்டரின் மகிழ்ச்சி நிலைக்கு ஈடானது.


ஏர்டெல் அராஜகம்.

10 ஆகஸ்ட் 2017 அன்று எழுதியது. 

ஜியோ வந்தாலும் சரி, பியோ வந்தாலும் சரி, அய்யோ வந்தாலும் சரி, இந்த ஏர்டெல் காரனின் ரேட் அராஜகம் குறைவதே இல்லை. கிட்டத்தட்ட நம்பர் 1 நான்தான் என்ற கெத்தில் இருக்கிறான். இப்போது கதை என்னவென்றால், பல மாதங்களாக போஸ்ட் பெய்டில் உள்ள என் கனெக்ஷனுக்கு கொள்ளை காசு தெண்டம் கட்டிக் கொண்டிருந்தேன் சென்ற மாதம் வரை. புதிய ப்ரீ பெய்டு சிம்முக்கு வெறும் 300 ஓவாவுக்கு வழங்கும் சலுகைகளை விட, 5 மடங்கு கட்டினாலும் எனக்கு பாதி சலுகை தான் வழங்கிக் கொண்டிருந்தான். ஜியோ வந்து ஆறு மாதம் ஆகியும் போஸ்ட் பெய்டு ஸ்கீம்களில் மாற்றம் செய்யவே இல்லை. கஸ்டமருக்காக உயிரையே கொடுப்பேன் என்பது போலக் காண்பிப்பதெல்லாம் விளம்பரங்களில் மட்டும் தான். 

கஸ்டமர் கேருக்கு கால் செய்து "தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்", "ஹிந்தி மே ஜான்காரி கேலியே தோ தபாயியே" "செவுத்தில் முட்டிக் கொள்வதற்கு எண் மூன்றை அழுத்தவும்" என்றெல்லாம் செய்து ஒன்றும் நடக்காமல் ஆர்.எஸ்.புரம் ஏர்டெல் ஆபீஸூக்கு நேரே போய் டோக்கன் எடுத்து கியூவில் உட்கார்ந்து கம்ப்ளெயிண்ட் எழுதி, "ரேட்டைக் குறைக்கிறியா? ப்ரீ பெய்டு வாங்கிக்கவா? இல்லை, ஜியோவுக்கு மாறிக்கவா? என்றெல்லாம் மிரட்டி, ப்ரீ பெய்டுக்கு அவ்ளோ சலுகை வழங்கும் போது போஸ்ட் பெய்டு கட்டும் நான் மட்டும் இளிச்சவாயனா?" என்றெல்லாம் சண்டை போட்டு, "சார் நான் உங்களுக்கு 10 ஜி.பி ஃப்ரீயா தர்றேன்" என்ற ஆசை வார்த்தைகளைக் கேட்டு, "யோவ், ப்ரீபெய்டுக்கு 30 ஜி.பி தருவியாம், எனக்கு பத்து ஜி.பி பிச்சையா?" என்று சண்டை போட்டு", அடுத்த கட்ட ப்ராஸஸ், ப்ராஸஸ், என்று (கார்ப்பரேட் அல்லவா?) பல முறை போனிலும், நேரிலும் ஃபாலோ அப் செய்து இந்த மாதம் ஸ்கீம் ரேட்டைப் பாதியாகக் குறைத்திருக்கிறேன். இதற்குத் தலையால் தண்ணீர் குடிப்பது என்பார்கள் அல்லவா? அதந்த ரேஞ்சுக்குப் போக வேண்டியதாகி விட்டது. 

அதில் இரண்டு முறை கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்கள் வாய்க்கு வந்த ஸ்கீமைச் சொல்வது, அதை என் நம்பருக்கு மாற்றுவது (அதில் ஒரே ஒரு நன்மை. அது கடைசியில்) அடுத்த எக்ஸிகியூட்டிவ் முந்தையவன் சொல்லிய ஸ்கீம் வழக்கத்திலேயே இல்லை என்பது, நான் உடனே "உனக்கு மேலே யாரு? நான் கம்ப்ளெயிண்ட் செய்யணும்" என்பது, மீண்டும் ஒரு ஸ்கீம் சேஞ்ச், நான் ஒரு கம்ப்ளெயிண்ட், அதுக்கு ஒரு நம்பர், அதற்கு ஒரு ஃபாலோ அப் என ஒரு வாரம் கிட்டத்தட்ட தாவு தீர்ந்து விட்டது. "போய்யா வெண்ணை, நான் ஜியோவுக்குப் போறேன்" என்று போகலாம். ஆனால் நாளை அவன் இதைச் செய்யமாட்டான் என என்ன நிச்சயம்? எந்த விஷயமாயிருந்தாலும், இந்த "ப்ராஸஸ்" வகையாறக்களை முடிந்த வரை ஸ்டெப் பை ஸ்டெப் ஆக முட்டிப் பார்ப்பது என் வழக்கம். என்னமோ? 13 வருஷம் ஓடிப்போச்சு. கடைசி வரை இந்த ஏர்டெல்லுடன் தான் குப்பை கொட்ட வேண்டும் என்று விதியோ என்னவோ?

சரி, அந்த நன்மை என்னவென்றால் பல முறை ஸ்கீம் மாற்றியதில் என் அக்கவுண்டில் 42 ஜி.பி பேலன்ஸ் உள்ளது. இந்த மாதம் கடைசியில் எக்ஸ்பையரி ஆகி விடும். அதை நல்ல விதமாகக் கரைக்க நண்பர்கள் வழி ஏதேனும் சொல்லவும்.


வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை

"முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை" ரேஞ்சுக்கு ஒரு நாள் சினேகன் நாலைந்து பேரை வைத்து "முத்தம் புனிதமானது, உலகிலேயே தூயது" என்று கிளாஸ் எடுத்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். 

சினேகன் பற்றிய முன்னாள் வீடியோ ஒன்றை தேடினால் கிடைக்கும். "டைனமிக் திருமணம்" என்ற பெயரில் திருமணங்கள் நடத்தி, கல்யாணத்திற்கு வருபவர்கள், போகிறவர்களையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ஒரு மாபெரும் "புதுமை" ஒன்றை மூன்று முறை செய்திருக்கிறார், இதே தமிழ்நாட்டில். 

இன்றைக்கு ஆண்டவரே சொன்ன மாதிரி, விந்திய மலை தாண்டி ஸ்டார் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சியை இங்கே கொண்டு வந்த போது அவர்கள் நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள் நிறைய. இங்கே இருக்கும் கல்ச்சர் வேறு. என்னதான் கையில் நிறையப் பணம் புரளும் ஒரு தலைமுறை எல்லாவற்றையும் லைட்டாக எடுத்துக் கொண்டு (அப்படி மனதில் நினைத்துக் கொண்டு) திரிந்தாலும் அது மிஞ்சிப் போனால் 2 சதம் இருக்கலாம். ஆனால் மீதி 98 சதம் ஊர் எரிப்பு, பஸ் ஸ்டாண்டில் வெட்டு, தண்டவாளத்தில் கிடத்தல் எனும் அளவு இங்கே கொஞ்சம் சீரியஸ் கல்ச்சர் தான். 

சமீபத்தில், வட இந்தியாவில் ஒரு முறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மீட்டிங் மற்றும் சந்திப்புகள் நடந்த போது (அங்கே மக்கள் எப்படி இருப்பார்கள் எப்படிப் பழகுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை, இருந்தாலும்) ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவரும் ஹக் செய்து கொண்டுதான் அன்பைத்தெரிவித்துக் கொள்வார்கள். அறிமுகமே கூட அப்படித்தான். நானும் என்னுடைய சென்னை கொலீக் ஒருவரும் மட்டுமே மற்றவர்களிடம் வெறும் கை குலுக்கலோடு நிறுத்திக் கொண்டவர்கள். அவர்கள் கட்டிப் பிடித்தாலும், அதை நாம் செய்ய முயற்சித்தாலும், அது நமக்கு இயல்பாக வராது, வரவில்லை. 

பெண்கள் கூட என்னை ஹக் செய்து (கட்டிப் பிடித்து என்றால் நல்லா இல்லை) பழகும் போது "you south guys are the only people who didn't hug me yar" என்று அந்த நேஷனல் ஹெட் டே வாய் விட்டுச் சொல்லி விட்டார். அது தான் நாம். நமக்கு இதெல்லாம் பழக இன்னும் தலைமுறைகள் ஆகலாம். 

இதையெல்லாம் யோசிக்காமல், இந்த சினேகனின் "கட்டிப்புடி, முத்தா குடு" அறிவுரையை நம்பி ஆரவ் கேஷூவலாகச் செய்த ஒரு விஷயம் இன்றைக்கு அவரை எப்படிப் பட்ட ஒரு தர்ம சங்கடத்தில் கொண்டு வந்து விட்டது. பாவம். இந்த வாரம் பூரா ஆரவ் புலம்பப் போகிறான் பாருங்கள்.

6 ஆகஸ்ட் 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கிரியேட்டிவ் ஆக கேக் செய்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஒரு வார்த்தை.

ஃபேஸ்புக்கில் 2015 ஆகஸ்ட் 8 அன்று எழுதியது.

கிரியேட்டிவ் ஆக கேக் செய்பவர்கள் முக்கியமாக வாங்குபவர்களுக்கு ஒரு வார்த்தை.

.
நீங்க நாய்க்குட்டி, சோட்டா பீம், சுட்கி, தேவதை, மனித உருவங்கள் போன்ற வடிவங்களில் செய்யும் வாங்கும் கேக்குகள் பார்க்க நன்றாக இருக்கின்றன. ஆனால் அதை வெட்டும் போது? நன்றாகவா இருக்கிறது? அவரது கிரியேட்டிவிடியையும் கொல்வது போல இருக்கிறது.
.
இதிலென்ன சென்டிமெண்ட், கேக்தானே? நிஜத்தையா வெட்றோம்? என்பீர்களானால் அப்போ பிறந்த நாள் கொண்டாடுவதே ஒரு சென்டிமெண்ட்
தானே? அதைக் கொண்டாடாமல் விட வேண்டியது தானே?
.
சுரைக்காயை வெட்டும் போது கூட பலர் தலை போன்ற பாகத்தை முதலில் வெட்டி தனியாக வைப்பார்கள். என் தாயார், முதலில் குறுக்காக இரண்டாக வெட்டுவார். பிறகு தான் துண்டு துண்டாக. கேட்டால் "அப்படி வெட்டுனா என்னமோ ஒரு குழந்தை கழுத்துல கை வைக்கிற மாதிரி இருக்குடா" என்பார்.