ஞாயிறு, 12 ஜனவரி, 2020

அறச்சீற்றம்

ஒரு முறை ஒரு பள்ளி விழாவிற்கு ஆபீஸ் நண்பரையும் என்னையும் கூப்பிட்டிருந்தார்கள். விழாவில் நாங்கள் பணி புரிந்த நிறுவன புராடக்ட் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். சரின்னாச்சு. ஆனா விழா நெருங்க நெருங்க ஓவர் பில்டப்பு. நீங்க கோட்டு போட்டுட்டு வாங்க, 20 நிமிஷம் பேசுறதுக்கு PPT குடுங்க, அஜெண்டா குடுங்கன்னு, வீடியோவை மெயில் அனுப்புங்கன்னு ஒரே டார்ச்சரு. நண்பர் எதாச்சும் கேட்டா, "ரிட்டயர்டு ஜட்ஜ்ஜூ வாராரு, நீயா நானா கோபி வாராரு நீங்க மட்டும் கேள்வி கேக்குறீங்க"ன்னு பதில் வந்துச்சு. நண்பர் நம்மள விட ஸ்டிரெயிட் ஃபார்வர்டு.

கடுப்பான அவரு, ரிட்டயர்ஜூ ஜட்ஜூ சும்மா இருப்பாரு அதனால வருவாரு. எனக்கு கம்பெனி இல்லையா? வேலை இல்லையா? மீட்டிங் இருக்குன்னு கத்தி விட்டாரு. கூடவே, யாருய்யா அந்த கோபி ன்னாரு. (நண்பர் டி.வியே பாக்க மாட்டார், சினிமாவும் கிடையாது. ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே) நான் நம்ம கோட்டு கோபி பத்தி சொன்னதும், அவன் கோட்டு போட்டா என்ன டேஷூக்கு நான் கோட்டு போட்டு வரணும்னாரு. நாயந்தேன். அவரு வி.ஐ.பி வேறங்க, ஒரு விழாவுக்கு வருகை புரிய சன்மானம் வேற வச்சாகணும்ற தகவலையும் எடுத்து விட்டேன். எவ்ளோன்னு (தெரிஞ்சிக்க, உள்டப்பி) கேட்ட மனுசன் அதுக்கும் மேல இன்னும் டென்ஷனாயிட்டாரு.

அந்தாளு சன்மானமா வாங்குற காசுக்கு தான் நான் இந்த ஸ்கூலுக்கு என் மொத்த புராடக்டையே வித்துருக்கேன். இந்த டேஷ் மவன் (இது ஸ்கூல் ஆளை) காசு வாங்கிட்டு வர்றவங்களுக்கு மரியாதை தரான். கைக்காசை செலவு பண்ணிட்டு வர என்னைய நொய்யி, நொய்யிங்கிறான். இது ஆள் பத்தலன்னு கொற வேற.

கோபி வர்றதால ஸ்கூலுக்கு என்ன பிரயோஜனம்? என் புராடக்டை யூஸ் பண்ணாலாவது பசங்களுக்கு நாலெட்ஜ் இம்ப்ரூவ் ஆகும். இவனுங்க விளம்பர சீனுக்கு என்னை அஜென்டா அனுப்பு, கஜன்டா அனுப்புன்னு சாவடிக்கிறாங்களான்னு ஒரே சவுண்டு. பேயாட ஆரம்பிச்சிட்டாரு. எல்லாம் நாயந்தான். விழா முடியட்டும். அமைதியா உக்காந்து பேசுவோம்னு சொல்லி.......

கூட இருந்த மார்க்கெட்டிங் மேனேஜரோட இவரை டாஸ்மாக் அனுப்பி வச்சு அவரைக் கூல் பண்றதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு.
.

Integrated learning - ஒருங்கிணைந்த கற்றல்

மொழிகள் அனைத்தும் ஆதியில் ஒன்றாக இருந்து, பிறகு பிரிந்தவையே என்பார்கள் சில ஆய்வாளர்கள். வெவ்வேறு மொழிகளில் உள்ள சில வார்த்தைகளைக் கேட்கும் போது அவை உண்மையே என்றும் தோன்றும்.

உதாரணமாக தமிழில் "வீடு" என்று சொல்கிறோம். அதை கன்னடத்தில் "மனே" என்பார்கள். "மனை" என்றால் தமிழிலும் ஆதியில் வீடு என்ற பொருள் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது நாம் "காலி நிலம்" - என்ற பொருளில் "மனை"யைப் பயன்படுத்துகிறோம். அதுவே தெலுங்கில் "இல்லு". கேட்கும் போது தமிழ் "இல்லம்" என்ற வார்த்தையின் மருவி போல இல்லை? தமிழில் "நிலம்" என்பதை தெலுங்கில் "பொலம் (அ) புலம்" என்கிறார்கள். சற்று யோசித்தால் தமிழிலேயே ஊர்ப்பக்கம் "நிலபுலம்" என்று சொல்வதை நினைவுகூரலாம்.
ஆக இவை அனைத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது புரிகிறதா?

தெலுங்கில் "வேலையில்லாம / சும்மா இருக்கியா?" என்பதை "காலிகா உன்னாவா?" என்கிறார்கள். தமிழில் "காலி" என்றால் "ஒன்றுமில்லாமல்" என்ற பொருள். அதை மனதில் வைத்து யோசித்தால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே போன்ற வார்த்தைகள் தானே.

பல மொழிகளைக் கற்கும் தேவை உள்ளவர்களுக்கு இது போன்ற "integrated learning - ஒருங்கிணைந்த கற்றல்" முறை உதவும். புதிய மொழியில் உள்ள சில வார்த்தைகளை புரியலையே என்று புலம்புவதற்குப் பதிலாக அதே வார்த்தை என் மொழியில் எந்த இடத்தில், எந்தப் பொருளில் வருகிறது அதன் link - தொடர்பு என்ன என யோசித்தால் விரைவாகக் கற்கவும், புதிய வார்த்தைகளை நினைவில் வைக்கவும் முடியும். தோன்றிய சில வார்த்தைகளைத் தந்திருக்கிறேன். நண்பர்கள் பங்களிக்கலாம்.

"வெறும் ஒரு ரூபாய்" - தமிழ் - "கேவல் ஏக் ரூப்யா" - ஹிந்தி
ரூப்யா - ரூபா - தமிழ்
கேவல் - கேவலம் (தெலுங்கு வார்த்தை) - வெறும் (தமிழ்)
ரூபாய் - (தமிழில் roobai என்ற உச்சரிப்பில்) ரூபாய - தெலுங்கில் சிறிய மாற்றத்துடன் roopai என்ற உச்சரிப்பில்.
ரெண்டு (தமிழ்) - ரண்டு (தெலுங்கு)
ஸமீன் (ஹிந்தி) - நிலம் (தமிழ்)
ஜமீன்தார் - "சமஸ்கிருதம்" என நினைக்கிறேன் ஆனால் தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் வெகுவாகப் புழங்கிய வார்த்தை - முத்து, லிங்கா படங்கள் வரை. "நிலச் சுவான்தார்" - தமிழ்
நிலம் - ஜமீன் - ஸமீன்

அஸ்பதால் - ஆஸ்பத்திரி - hospital - இவையெல்லாம் ஒரே பொருள் ஆனால் எவை எதிலிருந்து வந்தவை என்பதற்கு ஒரு பெரும் ஆராய்ச்சியே தேவை.
ஷக்கர் - ஹிந்தி (சக்கர - பேச்சு மொழியில்) சர்க்கரை (தமிழ்)
பாபா (papa) - ஹிந்தி - அப்பா - தமிழ்
மா (ஹிந்தி) - அம்மா (தமிழ்) - அம்மி (உருது) - மம்மி (ஆங்கிலம்) - மாமா (ஆங்கிலம்)
கிட்க்கி (ஹிந்தி) ஜன்னல் - கிட்க்கி தெலுங்கிலும் ஜன்னல்.

இதுபோக (கேரள நகரப்பகுதிகளில் பேசப்படும்) மலையாளம், கிட்டத்தட்ட பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளை ஒத்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். கன்னடத்திலும், தெலுங்கிலும் ஸ்கிரிப்டு ஒன்றுதான். ஏகப்பட்ட வார்த்தைகள் ஒரே போல இருக்கும்.

புரியாதவர்கள் வாட்ஸ் அப் விஞ்ஞானிகள் ஃபார்வர்டு செய்யும், சீமான் புகழ் "தமிழிலிருந்து தான் ஆங்கிலம் வந்தது (தாக்கு - அட்டாக்கு - attack போன்ற அரிய பொக்கிஷங்கள் நிறைந்த)" வீடியோவை பார்க்கக்கடவது.
.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

தர்பார் - தர்பாரிஸம்

ஆபீஸ்ல ஆயிரம் பிரச்சினை, வீட்ல ஐநூறு பிரச்சினை, இதுபோக திருட்டு பிரிண்டுகள், ஆன்லைன் ஃபுல்லா படங்கள், லீகலா படங்களைக் குமிச்சி வச்சிருக்குற அமேசான், நெட்பிளிக்ஸ் கடைகள். அநியாய டிக்கெட் ரேட்டு, ஸ்நாக்ஸ் அதைவிட ஓவர் ரேட்டு.... போக வர டிரான்ஸ்போர்ட்டு, திரும்பி வாரப்ப ஹோட்டல் செலவுன்னு ஒரு குடும்பஸ்தனுக்கு பல கவலைகள். இதைத்தாண்டி குடும்பத்தையே இழுத்துகிட்டு தியேட்டருக்குப் போனா ஜாலியா ரசிக்க வைச்சு அனுப்பனும். அதைத்தான் "தர்பார்" செஞ்சிருக்கு.

அதை விட்டுட்டு.... ரஜினி மாதிரி ஒர்த்தரை வச்சு காலா, போ-லான்னு கடுப்பேத்தி அனுப்பக் கூடாது.

என் பாஸ் சொல்வாரு What you believe is what you deliver னு. அதே மாதிரி தான் நம்பிக்கைகளும் what you believe is only what you will take. நீ என்னதான் குத்தவச்சி கருத்து சொன்னாலும், இடது சாரி சிந்தனை உள்ளவனுக்கு இடது சாரி குறியீடுகள் தான் தெரியும். வலது சாரி சிந்தனை உள்ளவனுக்கு வலது சாரி குறியீடுகள். பெரியவங்களுக்கு அவங்க பிடிச்சது தான் தோணும். குழந்தைகளுக்கு, அவங்க எதிர்பார்க்குறது தான் தெரியும்.

ரஜினி காரை வில்லன் லாரி மூலமா அடிச்சித் தூக்குற சீன்ல, என் 6 வயசுப் பையன்ட்ட கேட்டேன் "ஏம்பா ஆக்ஸிடெண்ட் ஆச்சு?" ன்னு. "ரெட் சிக்னல்ல நிக்காமப் போனா ஆக்ஸிடெண்ட் தானே ஆகும்" னான் அவன். அதுதான் அவன் புரிதல். ஸோ, நீங்க என்னதான் வேற எதையோ திணிச்சாலும் அவனவனுக்கு என்ன வேணுமோ, அதைத்தான் எடுத்துக்குவான். எது போய்ச் சேரணுமோ அதுதான் போய்ச்சேரும்.

ஊர்ல இருக்கிற எல்லா தியேட்டர்களிலும் ஒரே படத்தை ரிலீஸ் பண்ணினா நாலு தியேட்டர்ல காத்தாட தான் செய்யும். This is applicable for all mass heros. நம்ம சித்தாந்தத்துக்கு ஏத்த மாதிரி எந்த தியேட்டர் போட்டோ வேணுமா அதை போட்டு நாம சொறிஞ்சிக்கலாம். தியேட்டர் காலியா இருக்குன்னு சொல்லிக்கலாம். அப்படியே காலியா இருந்தாலும் அதில் ரஜினி தப்பென்ன? பிரச்சினை என்பது டிஜிட்டல் மீடியா. கையில ஸ்மார்ட் போனை வச்சுகிட்டு "நாளைக்கு எப்படியும் திருட்டுப் பிரிண்ட் வந்துடும் நான் பார்த்துக்கிறேன்" ன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கிற லட்சக்கணக்கான பேருடைய தப்பு.

அதே போல வயசாயிடுச்சி, கெழவன் ன்னு கிண்டல் பண்லாம். யூத்தா இருக்குற எத்தனை நூத்துக்கணக்கான ஹீரோஸ் படமே இல்லாம சும்மா உக்காந்திருக்காங்க. இவருக்கு எவ்ளோ பெரிய மார்க்கெட் இருக்கு? அதை விடுங்க. சிம்பிளா யோசிங்க. 60 வயசுக்கு மேல உள்ள உங்கப்பா டான்ஸ் ஆடினா சந்தோஷப் படத்தானே செய்வீங்க. எங்க மாமாவுக்கு 66 வயசு. டான்ஸ்லாம் ஆட மாட்டாரு. மூட்டு வலியெல்லாம் வேற இருக்கு. ஆனா என் கஸின் (அவர் பையன்) கல்யாணத்துல நாங்க போட்ட ஆட்டத்தைப் பாத்துட்டு என் கூட வந்து கையப் பிடிச்சிகிட்டு பத்து நிமிஷம் ஆடுனாரு. அப்புறம் "என்னையே ஆட வச்சுட்டியில்லடா" ன்னு சந்தோஷமா சிரிச்சாரு. குமுதா ஹேப்பி அண்ணாச்சி.

அதே போலத்தான் ரஜினி படங்களும். பாத்தோமா, என்ஜாய் பண்ணோமா, you happy? I am happy ன்னு போய் வரணும். அந்த விதத்தில் "தர்பார்" ஒரு என்டர்டெயினிங் மூவி. உங்க உலக சினிமா அறிவு, டெக்கினிக்கல் அறிவையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு மூளையோட கதவை சாத்திட்டு போய் பார்த்துட்டு வாங்க. பொங்கலுக்குப் பைஸா வசூல்.

அடுத்தவங்களைத் தொந்தரவு பண்ணாம நாம நம்ம சந்தோஷத்துக்கு எதைச் செஞ்சாலும் தப்பில்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு கியூவில் நின்று டிக்கெட் வாங்கியது, ஸ்கிரீன் முன்னால் குழந்தைகளோடு ஆடியது, அனைவரும் என்ஜாய் செய்து படம் பார்த்தது என்று பல சந்தோஷ அனுபவங்கள். forget all politics. Just enjoy the movie & celebrate the festival folks.
.

வியாழன், 9 ஜனவரி, 2020

தமிழ்நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டுமா?

9 ஜனவரி 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

தமிழ்நாட்டைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்று ஆங்காங்கு குரல்கள் ஒலிக்கத்துவங்கி இருக்கின்றன. சமீபத்தில் திரு சைமான் அவர்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்றால் "யார் தமிழன்?" என்பது மிகப் பெரிய கேள்வி.

வேற்று மொழியான மராத்தி பேசும் ரஜினிக்கும், வந்தேறி என்று நீங்கள் தூற்றும் பிராமணரான லதா ரஜினிக்கும் பிறந்து, தனித்தனியாக வேறு வேறு இன, மொழி மக்களைத் திருமணம் செய்த பிள்ளைகளுக்குத் தமிழ்நாட்டில் பிறந்த பிறந்த மூன்றாம் தலை முறைப் பிள்ளைகள் யார்? தமிழனா? இல்லையா?

உங்க வசதிக்கு, அரசியலுக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிச்சா, பரம்பரை பரம்பரையா இங்கயே பல நூறு ஆண்டுகளா இங்கேயே வாழுறவன் அங்கே போகணுமா? லூஸூத்தனமா இருக்கு. "பொது இடத்தில் புகை பிடித்தால் 15 நாள் ஜெயில்" என்று இன்று சட்டம் போட்டால் நேற்று சாதாரணமாக தம் அடித்தவன் எல்லாம் இன்று குற்றவாளி. அந்த மாதிரி அபத்தமா இருக்கு நீங்க பேசுறதெல்லாம். அவனுங்க தான் ஆதாயத்துக்காக அரசியல் பண்றானுங்க. அதை நம்பி பிழைப்பைக் கெடுத்துக் கொண்டு...

தமிழ்நாட்டில் தமிழன் தான் இருக்க வேண்டும் என்றால்....... மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படும் முன்பு பலப்பல தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும், வாழும்........ முஸ்லிம் ஆகப் பிறந்த ஒரே காரணத்தினால் உருது பேசும், ஆந்திராவை பார்த்தே இராத ஆனால் தெலுகு பேசும், எழுத்து வடிவமே இல்லாத சௌராஷ்ட்ரா பாஷை பேசும், மலையாளத்தை பேச மட்டுமே தெரிந்த, தமிழ் கலந்த கன்னடம் பேசும், என்ன பாஷை என்றே தெரியாத குறவர் பாஷை பேசும், மற்றும் ஹிந்தி, பெங்காலி பேசும் எல்லாரையும் சுட்டுக் கொன்று விடுங்கள்.

பரம்பரையில் எங்கேனும் ஒரு கண்ணியில் வேறு மொழி பேசும் இணையைத் திருமணம் செய்திருந்தால் அவர்களும் லிஸ்டில் இருந்து எடுத்துக் கொன்று விடுங்கள்.

ஏழு கோடியில் மீதி ஒரு கோடி தமிழன் கூட மிஞ்ச மாட்டான். அவர்களை அவர்களே ஆண்டு கொள்ளுங்கள்.

இன்றைக்கு மொழியை வைத்துப் பிரிப்பீர்கள். சரின்னு பிரிச்சா, அந்த மீதி இருக்கும் ஆட்கள் மத வாரியாகப் பிரிவீர்கள். சரின்னு அதையும் பிரிச்சா ஆதிக்க சாதி, அழுத்தப்பட்ட சாதின்னு பிரிப்பீர்கள். என்னடா உங்க பிரச்சினை?
.

புதன், 8 ஜனவரி, 2020

சுஜாத்................ஆ

3 டிசம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

நான்கைந்து நாட்களாக ஒரே மண்டை குடைச்சலாக இருக்கிறது, எந்த வேலையும் செய்ய முடியாமல். ஐ மீன் லிட்ரலி, தலைவலியைச் சொல்கிறேன் ஐயா. தலைவலி என்று கூட சொல்ல முடியாது, நெற்றியில் வலி இல்லை. "மண்டை வலி" என்பது தான் சரியான பதம். அதிலும் ஒரு பக்கம் மட்டுமே. வலது பக்க மண்டை மேல் பகுதியில் ஒரே வலி. பசி, நேரத்திற்கு சாப்பிடாமை, டி.வி பார்த்தல், மொபைல், லேப்டாப் நோண்டல், உடல் ஹீட்டு, எதையாவது யோசித்துக் கொண்டே இருத்தல், என பல காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றிற்கு நிவாரணங்கள் கொடுத்தால் கொஞ்சமாகக் குறையும் வலி சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் "ங்ங்ங்ங்ங்கொய்" என்று ஆரம்பித்து வைக்கும். சில சமயம் கன்ட்ரோல் செய்ய முடியாத அளவுக்கு. அப்படியே சுவரோரம் சாய்ந்து நிற்க வேண்டும் போலத் தோன்றும். ஒப்புக்கொண்ட இரண்டு முக்கிய வேலைகளைக் கூட முடித்துத் தரமுடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு, கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

ஏழெட்டு மாதங்கள் முன் இதே போல் இடது பக்கம் வலி கண்டு ஒரு 15 நாட்களுக்கும் மேல் அவதிப் பட்டேன். மாத்திரைகளில் தற்காலிக நிவாரணங்களே கிடைத்தன. டாக்டரிடம் போன பிறகும், "சரியான காரணம் தெரியவில்லை ஆனால் பயப்படும் அளவு பெரிய பிரச்சினை இல்லை, தலையில் நீர் கோர்த்திருக்கலாம்" என்றும் "ஈரத்தலையுடன் இருக்காதீர்கள்" என்றும் அட்வைஸி மாத்திரைகள் போதும் என்று கொடுத்து அனுப்பினார். "நிறைய யோசிப்பீங்களோ?" என்றார். "நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய" என்றேன். சிரித்தார். "பயப்பட வேண்டாம்" என்று டாக்டரும், மருந்துக் கடைக்காரரும் சொல்லி விட்டதால் ஸ்கேனிங் லெவலுக்கெல்லாம் இறங்கவில்லை. மூன்று நான்கு நாட்கள் குறைந்திருந்த வலி 15 நாட்களுக்கு விட்டு விட்டு வந்து விளையாட்டுக் காட்டி விட்டு, ஒரேயடியாய்க் காணாமல் போய் விட்டது. தினமும் தலைக்குக் குளிப்பதால் ஹேர் டிரையர் வாங்கியே ஆக வேண்டும் என்றெழுந்த வைராக்கியமும் தலைவலி குறைந்ததும் ஓடிப் போய்விட்டது.

"தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். இரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன். நிறைய இனிப்பு தின்பேன், இன்றும் கூட. அதன் விளைவுகளாக, கடந்த சின்ன வயதில் கேவிட்டீஸ் பற்றியெல்லாம் விபரம் தெரியாமல் விளையாட்டுத் தனமாய் இருந்ததன் காரணமாக பத்து ஆண்டுகளில் மூன்று கடைவாய்ப் பற்களை பல்லு புடுங்கிகளிடம் இழந்திருக்கிறேன். ஒரு ரூட் கேனால் வேறு. ஆகவே, வருடத்திற்கு ஒரு பெரிய உடல் உபாதை வந்து போய்க் கொண்டு தான் இருக்கிறது. (இது போக அம்மா, அப்பா, வேலை இழப்பு என சில சமயம் மன உபாதைகள் வேறு) இப்போது மீண்டும் தலைவலி. கொஞ்சம் கஷ்டம் தான். என்ன செய்ய. ஆனால், ஒரு கஷ்டத்தை அனுபவித்து விட்டு, பின் மீண்டும் சராசரி வாழ்க்கைக்கு வந்தால் வாழ்க்கையே ஆனந்தமாக இருக்கிறது. "சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும் போது தெரியாது" என்று விருமாண்டி தந்த தத்துவத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

நான் பயங்கர சென்ஸிடிவ் பார்ட்டி வேறு. கோபமோ, பாசமோ, மற்ற சிலபல குணாதிசயங்களோ, என்னிடமிருந்து எக்ஸ்ட்ரீம் ஆகத் தான் வெளிப்படும். மளுக் கென்று கண்ணில் நீர் வந்து விடும். தங்கமணியும், தங்கையும் அறிவார்கள் இதை. திரைப்படங்களைக்கூட அதன் உள் இறங்கி முழுதாய் ரசிக்கும் ஒரு பாமர ரசிகன். "பிச்சைக்காரன்" படத்தையெல்லாம் கண்ணில் நீர் வழிய அழுதபடியே தான் பார்த்தேன். 95 ல் "ஜூமாஞ்சி" பார்த்து விட்டு வந்ததும் நைட்டு கனவில் "ஜூமாஞ்சி பார்ட் டூ" கற்பனையில் ஓடும் அளவு ரசித்துப் பார்ப்பவன். எழுத்திலும் கொஞ்சம் அனுபவம் இருப்பதால், கதாபாத்திரத்தை திட்டும் அளவிற்கு, லயித்துப் பார்ப்பதே வழக்கம். பெரும்பாலும் நான் படங்களை ரசிப்பது அப்படித்தான்.

இப்போது "சைத்தான்" பட விமர்சனங்களைப் படிக்கும் போது எனக்கும் மண்டைக்குள் குரல் கேட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது. யேசப்பா, காப்பாத்தப்பா...
.

கோயமுத்தூரில் இருந்து ட்ரங்க் கால்

18 நவம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

"சுவர் இல்லாத சித்திரங்கள்" படத்தில் காஜாவுக்கு டீ குடிக்க காசு தரும் கவுண்டமணி "ஒரு டீ விலை பதினஞ்சு பைசா தானடா" என்று சொல்வார் ஞாபகம் இருக்கிறதா?..
அதே கவுண்டமணி இன்னோரு படத்தில் ஓமக்குச்சி நரசிம்மனிடம் "எவ்வளவுடா வச்சிருக்க? தொண்ணூத்தஞ்சு பைசாவா? ஒரு டீக்கே அஞ்சு பைசா குறையுது" என்கிறார்..
என்னுடைய காலேஜ் நேரங்களில் ஒரு டீ விலை ரூபாய் இரண்டு..
அப்புறம் டீ குடிப்பதே இல்லை... (உடம்புக்கு கெடுதல்னு அம்மா, ஐ மீன் என்னோட அம்மா சொன்னாங்க)
நேற்று, ஓசூர் சிப்காட்டில் நீண்டநாள் கழித்து ஒரு டீ குடித்த போது விலை கேட்டால் ஐந்து என்றார்கள்.. குட்டி வெள்ளை கப்பில்..
பால் விலையேற்றத்துக்குப்பிறகு இன்று முதல் எங்கள் தெரு டீக்கடையில் ஒரு டீ ஏழு ரூபாய்.. டீ குடிக்கறது உடம்புக்கு நல்லது இல்லன்னு அம்மா (என்னோட அம்மா இல்ல) இன்டைரக்டா சொல்றாங்களோ?
உங்க ஏரியாவில் இன்றைய டீ விலை என்ன?
- மீள் 18 நவ 2011
-----------------------------------------------------------------------------------------------------

இன்றைய அப்டேட் (கோயமுத்தூரில் இருந்து ட்ரங்க் கால்).
இன்றைய டீ விலை மிகச் சாதாரண கடையில் ரூ.10. கொஞ்சம் நல்ல டீ 15 ஆம். நான் ரெகுலராக டீ குடிப்பதில்லை. ஆடிக்கொரு முறை, அம்மாவாசைக்கு ஒரு முறை குடிப்பவன். எனவே பிற விபரங்கள் தெரியவில்லை.
இன்னும் ஏற்றினால் விக்காது என்ற காரணத்தினாலோ என்னவோ கொஞ்ச காலமாக விலை இந்த மட்டிலேயே உள்ளது. "டீ குடித்தே ஆக வேண்டும், இல்லாட்டி கை உதறும்" என்ற போதை அடிமைகளுக்காக ரூ. 5 க்கு "ஒரே ஒரு மடக்கு" டீயும் இன்னும் சில இடங்களில் சின்ன கப்பில் விற்கப்படுகிறது.
.

ட்விஸ்ட் என்னான்னு தெரியாம படம் பாக்குறது ரொம்ப முக்கியம் சண்முகம்


18 நவம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

"அசுரன்" ப்ரைம்ல வந்ததும் நிதானமா ஒரு அமைதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்து ஆரம்பத்துல இருந்து முழுசா பாக்கணும்னு ப்ளான் பண்ணி வச்சிருந்தேன். இதுனாலயே அசுரன் குறித்த விமர்சனங்களைக் கூட முழுசா படிக்கல. ஆனாலும் கதை மேலோட்டமா தெரிஞ்சுடுச்சுன்னு வைங்க. மேலும் வன்முறை அதிகம்னு பலரும் சொன்னதால ஒரு சின்ன ஜெர்க்கும் இருந்தது. நாம கொஞ்சம் ஊன்றிப் போய் படம் பாக்குற டைப். புத்தகங்களும் திரைப்படங்களும் மற்றோர் வாழ்க்கையை வாழ உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் என உறுதியாக நம்புபவன். அம்மா சென்டிமெண்ட் காட்சிகளுக்கெல்லாம் கண்ணுல ஜலம் வச்சுப்பன். அப்படி, பிதாமகன் பார்க்கும் போது அதன் க்ளைமாக்ஸ் அவ்ளோ ஷாக்கிங்கா இருந்தது.

ஆகவே தான் அசுரனுக்கு அப்படி ஒரு ப்ரீ ப்ளானிங். ஆனா, "உடம்பு பூரா எண்ணெய தடவிகிட்டு உருண்டு பொரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்" னு எங்கம்மா சொல்வாங்க. என் நேரக் கொடுமை என்னன்னா போனவாரம் தங்கமணி கிட்ட சப்பாத்தி கேட்டேன். "செஞ்சு தரேன். குருமா வெளிய வாங்கியாரியா?" ன்னாங்க. சரின்னு போய் ஒரு ஹோட்டல்ல "இந்தா ரெடிண்ணே, இந்தா ரெடிண்ணே"ன்னு இருபது நிமிஷம் மாட்டிகிட்டேன். அங்க டிவில அசுரன் - சிவசாமி பிளாஷ் பேக் கை முழுசா பாத்துத் தொலைச்சுட்டேன். ஓடவும் முடியல. ஒளியவும் முடியல.

"சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழற நாள் நரகமாயிடும்"னு சொல்ற மாதிரி, கதை தெரிஞ்சதும் "அசுரன்" முதல்ல இருந்து பார்க்கும் போது முன்ன எதிர்பார்த்திருந்த அந்த ஃபீல் இல்ல. "எப்டி இருந்த சிவசாமி இப்டி ஆயிட்டாரே"ன்னு ஆரம்பத்துலயே கம்பேரிசன் ஆரம்பிச்சுடுச்சு. என்னமோ போங்க. ஒரு படம் உருப்படியா பாக்க உடுறீங்களாடா...
.

ராகவன்.... ஸ்டே இன் தி ப்ராஸஸ்.....



இந்த குட்டிப் பயலை ராஷ்மண்ட்ரி (ராஜமுந்திரி, ஆந்திரா) ஏர் போர்ட்டில் சந்தித்தேன். ஏதோ ஷூட்டிங் வந்திருப்பான் போல. படத்தில் ஒரு மாதிரி க்யூட் ஆக இருந்தால், நேரில் வேறு மாதிரி க்யூட் ஆக இருந்தான் புசுபுசுவெனப் பறக்கும் அழகிய கேசத்துடன். ரொம்பக் குட்டியெல்லாம் இல்லை. நன்கு வளர்ந்திருக்கிறான். நம் இடுப்பளவுக்கு மேல், லேசாக நெஞ்சு உயரம் அளவுக்கு. ஆனால் பிள்ளைகளுக்கான விளையாட்டுத் தனம் இருந்தது. ஏர்போர்ட்டில் வீல் வைத்த சின்னப் பெட்டியுடன், நம் மனசுக்குள் ஜாலியாக ஒரு பாட்டு ஓடினால் லேசான முக மலர்ச்சியுடன் திரிவோமே, அதுபோலத் திரிந்து கொண்டிருந்தான்.

அவனது தந்தை அமைதியாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். மே பி சென்னை ஏர்போர்ட்டாக இருந்திருந்தால் அவனைக் கூட்டம் மொய்த்திருக்கக் கூடும். அது ஆந்திராவென்பதால், அவனை யாரும் அறிந்திருக்கவில்லையோ, என்னவோ? அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். பாவம், "செல்ஃபி, போட்டோ, வீடியோ" என்று போய் அந்த சின்னப் பையனின் பிரைவஸியைக் கெடுக்க விரும்பவில்லை. நேருக்கு நேர் முகம் பார்த்த போது மட்டும் கண் சிமிட்டிச் சிரித்தேன். அதே போலச் சிரித்தான்.

ஃபிளைட்டில் (பிளைட்டா அது? கொஞ்சம் பெரிய பர்வீன் டிராவல்ஸ். 2 + 2 சீட் போட்டு, இடம் பற்றாமல், லேசாகத் திரும்பினாலே பின்னிருப்பவர்களை முழுதாகப் பார்க்கும்படி) பார்த்தால் அவன் என் பின் ஸீட். "ஹாய் மேன்" என்று கோணலாகக் கை நீட்டினேன். "ஹாய்" என்று அதில் தட்டினான். புன்னகைத்தபடி "உம் பேரு மட்டும் தெரியாது" என்றேன். "ராகவன்" என்றான்.

"யு லுக் க்யூட்" என்றேன். "தேங்க்ஸ் அங்கிள்" என்றான்.

அவனுடன் சேர்த்து இரண்டு தெத்துப்பற்களும் புன்னகைத்தன.
.
5 டிசம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
.

#சாவுங்கடா_பதிவுகள் (எனது முதல் ஈ.புக்-கை முன்வைத்து)


"10 செகண்ட் கதைகள்" வந்த காலத்தில் விகடனுக்கு 500 க்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பியதாகவும், ஆனால் அந்த கலெக்ஷனைத் தொலைத்து விட்டதாகவும், 250 ஐ மட்டும் மீட்டெடுக்க முடிந்ததென்றும் பதிவிட்டிருந்தேன். தொடர்ந்து ஆப்பிஸ், ஆப்பிஸ், வேலை, வேலை, பயணம், பயணம், என மண்டைக்காய்ச்சலாக இருந்ததால் மூளை சில சிம்பிள் விஷயங்களைக் கூட மறந்து விட்டிருந்தது.

இன்னிக்கு சுத்திமுத்தி கொஞ்சம் இளமை, புதுமையா இருந்ததாலயும் (புரூக்ஃபீல்டு மாலில் இருந்தேன்), மால் மோட்டு வளையைப் பார்த்து விடாம வெறிச்சி யோசிச்சதாலயும் திடீர்னு ஒரு மேட்டர் தோணுச்சு. நீ அனுப்பிய கதை எல்லாமே மெயில்ல தானே? அப்போ எல்லாமே sent items ல இருக்குமே பக்கின்னு நானும், என் மூளையும் பேசிக்கிட்டோம். அப்டின்னா? அப்டின்னா? அடாடாடா.. ஒரு நாள் உக்காந்தோம்னா sent items ல இருந்து எல்லாக் கதைகளையும் உருவி எடுத்துடலாமே.

போச்சா? "8 செகண்ட் கதைகள்" பார்ட் 2 மட்டும் தான் ப்ளான் பண்ணிருந்தேன். இப்போ பார்ட்டுகள் 3, 4, 5 வரப்போறத உங்க யாராலயும் தடுக்க முடியாது. வெயிட்டுங்கள். வருகிறேன். ஜெய் "சிவகாமி தேவி".

8 செகண்ட் கதைகள்

15 டிசம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது


8 செகண்ட் கதைகள் - எனது முதல் கின்டில் ஈ.புக்

எப்போதும் புதுமைகளைச் செய்வதில் "ஆனந்த விகடன்" இதழ் முன்னோடி. நான்காண்டுகளுக்கு முன் அதாகப்பட்டது 2015 ஆம் ஆண்டு விகடன் "10 செகண்ட் கதைகள்" என்ற ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தது. குட்டிக்குட்டிக் கதைகள். அவற்றில் எந்தக்கதையும் 25 வார்த்தைகளுக்கு மேல் மிகாது. மினி மீன்ஸ் Meenakshi Sundaram போல சிலர் 6 வார்த்தைகளில் கூடக் கதைகள் எழுதினார்கள். ஆனால் அவை தந்த உள்ளார்ந்த அனுபவம் ரசிக்கத்தக்கது. பிரபல எழுத்தாளர்கள் முதல் துணுக்கு எழுத்தாளர்கள், நகைச்சுவை எழுத்தாளர்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் என மைக்ரோ ப்ளாக்கிங் பிரபலங்கள், அவ்வளவு ஏன்? எழுதியே பழக்கமில்லாத வாசகர்கள் எனப் பல தரப்பினரும் "10 செகண்ட் கதைகளை" எழுதித்தள்ளினார்கள். விகடனும் ரசிக்கும் படியான படைப்புகளைத் தேர்வு செய்து வாராவாரம் 10 கதைகளை வெளியிட்டது. இந்தக் காலகட்டத்தில் அதில் அடியேனின் கதைகளும் சுமார் 25+ கதைகள் வெளியாயின.

மூட்டை மூட்டையாக, மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய, விகடனுக்கு, இந்த ஒட்டு மொத்த காலத்தில் கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்து 400 க்கும் மேற்பட்டோர் கதைகள் எழுதிக்குவித்ததில், கதைகள் வெளியான எண்ணிக்கையில் அடியேன் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருந்தேன். என்னை விடப் பிரபல சிற்றெழுத்தாளர்கள் சிலர் போட்டியில் நின்று கலக்கினார்கள். டாப் 5 இல் இருந்த ஒவ்வொருவருக்கும் சுமார் 20 கதைகளுக்கு மேல் வெளியாகி இருந்தன.

மற்றவர்கள் "எனக்கு 20, உனக்கு 18, அவனுக்கு 7" என்றெல்லாம் சந்தோஷித்தார்கள். விவாதித்தார்கள். ஊக்குவித்தார்கள். ஒரே ஒரு கதை வெளியான அன்பர்கள் கூட ஃபேஸ்புக்கில் அக்கதையைப் போட்டு "நானும் எழுத்தாளராகிட்டேன்" எனக்கூத்தாடினார்கள். அந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர் குழுக்களில் பெரும் ஆரோக்கிய போட்டியை இது உருவாக்கியது.

வெளியானது 25 என்றால் அனுப்பியது எவ்வளவு இருக்கும் என்று கேட்கிறீர்களா? ரேஷியோ பாருங்கள். வாரா வாரம் ஆயிரக்கணக்கான கதைகள் விகடனுக்குச் சென்று சேர்ந்தால்? அவற்றில் மொத்தக் காலகட்டத்தில் நான் அனுப்பியவை மட்டுமே 500-க்கும் மேற்பட்ட கதைகள். ஆனால் சில பல வருடங்களில் பல வீடுகள் (ஐ மீன் லேப்டாப்) மாறியதில் அத்தொகுப்பு காணாமல் போய் அண்ணன் Jackie Sekar க்கு ஒருமுறை குறும்படத் தேர்வுக்காக அனுப்பிய 250 கதைகளை மட்டுமே என்னால் மீட்டெடுக்க முடிந்தது.

அவற்றில் 100 கதைகளைத் தொகுத்து அமேஸான் புண்ணியத்தில் "பார்ட் - 1" எனத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். இத் தொகுப்பில் உள்ளவற்றில் பல கதைகள் ஆனந்த விகடனில் வெளியானவை. அவற்றை குறிப்புக்குள் கொடுத்திருக்கிறேன். "பசியோடு திரிந்தான் பீட்ஸா விற்பவன்" என்பது போன்ற, "சம்பவம் - வேலை முரண்” கொண்ட (டேய், இதெல்லாம் ஒரு கதையாடா என்று வாத்யார் Ganesh Bala போன்றோர் திட்ட வாய்ப்பளிக்காமல்) ஒரு வரிக் கதைகளையெல்லாம் ஆன வரை தவிர்த்திருக்கிறேன்.

படித்துவிட்டு கருத்துச் சொன்னால் மகிழ்வேன். இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி. வெறும் ஈ.புக் என்றாலும், இந்த வாய்ப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எனக்குத் தூண்டுகோலாக இருந்த அத்துணை நண்பர்களுக்கும் நன்றி. அதைத் தனிப் பதிவாகப் பிறகு போடுகிறேன்.

"10 செகண்ட் கதைகள்" தலைப்பை நான் உபயோகப்படுத்தக் கூடாது என்பதாலும், இக்கதைகளை 8 செகண்டிலேயே படித்து விட முடியும் (டைமர் வச்சு செக் பண்ணேன் பாஸ்), இத்தொகுப்பின் பெயர் "8 செகண்ட் கதைகள்" என்றானது (அப்பாடா, டைட்டில் வந்துருச்சி). அமேசான் லிங்க் முதல் கமெண்டில். "kindle unlimited" சப்ஸ் வைத்திருப்பவர்களுக்கு இலவசம். மற்றவர்களுக்கு அமேசானின் மினிமம் விலை.

டவுன்லோட் செய்ய இந்த லிங்க் செல்லவும்.
.

சிவகார்த்திகேயன் - "ஹீரோ" - கஸ்ட்ட்ட்ட்ட்டம் பாஸ்

21 டிசம்பர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.  

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த "ஹீரோ" படத்தை முன்வைத்து.

ஹீரோ - கஸ்ட்ட்ட்ட்ட்டம் பாஸ்

மிக மேலோட்டமான ஒரு படம். டீடெய்லிங் மிகக் குறைவு. ஐ மீன் புதிய கண்டுபிடிப்புகளில் பல டீடெய்லிங்குகள் உள்ளன. ஆனால் படத்தின் ஓட்டத்தில் டீடெய்லிங் வெகுவாக மிஸ்ஸிங். 2.0, நண்பன், நான் ஈ எல்லாம் கொஞ்சம் எடுத்து மிஷ்கினின் முகமூடியைக் கலக்கி முதல்வன், அந்நியன், இந்தியன் எல்லாத்தையும் மேலோட்டமா தூவி ஒரு மாதிரி கலக்கு கலக்கி அப்டியே கொஞ்சம் பேட்மேனை தொட்டுக் கொடுத்திருக்காங்க. ஹீரோவுக்கான பலமான ஒரு பேக்ரவுண்ட் டீம் உருவாகுறதைப் பார்த்தா "ஏண்ணே, இதைத்தான் கந்தசாமியிலயே பாத்துட்டமேண்ணே".

க்ரிஷ் வந்தப்பயே எனக்கு இந்த கேள்வி இருந்தது. கண்ணை மட்டும் மறைக்கிற ஒரு மாஸ்க் போட்டுட்டா ஆள் அடையாளம் தெரியாம போயிடுமா? உதாரணமா "லாரன்ஸ் அன் மேயோ"ல பெருசா ஒரு கூலிங் க்ளாஸ் விக்கிறான். அதை நான் வாங்கிப் போட்டுகிட்டா எங்கப்பாக்கே எனக்கு அடையாளம் தெரியாதுன்னு சொல்ல வர்றீங்க. இதெல்லாம் நம்பற மாதிரியா சார் இருக்கு?

எனக்கு சிவகார்த்திகேயனைப் புடிக்கும். அவர் படங்களையும் புடிக்கும். (ஆனா நல்லால்லன்னு தெரிஞ்சா பார்க்கவே மாட்டேன். சீமராஜா முழுசாப் பாக்கல, மிஸ்டர்.லோக்கலும் இன்னும் பாக்கல). என்னையே இப்படி எழுத வச்சிட்டீங்களே மித்ரன். நீங்க மித்ரன் இல்ல. கொஞ்சமா மாறியிருக்குற அட்லீ.
சிலபல கேள்விகளோட மறுபடி வர்றேன்.

--------------------------------------------------------------------------------------------------------
அன்றே எழுதப்பட்ட மற்றொரு பதிவு.
கையில் தரப்பட்ட மண்வெட்டி. 

கருத்தாக்கத்திலும், சொல்ல வந்த விஷயங்களிலும், வசனங்களிலும், இந்த "ஹீரோ"வை கண்டிப்பாகப் பாராட்டலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, நிறைய சென்டிமெண்ட் காட்சிகளுடன் "ஒரு குன்ஸா பாத்தா நல்லா இருக்குல்ல" என்றே தோன்றுகிறது. மேபி அந்த சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகி விட்டால் படம் நன்றாக ஓட வாய்ப்புண்டு.

ஆனால் நிறைய ஓட்டைகள். அதுவும் இது போல சூப்பர் ஹீரோ படங்களுக்குத் தேவையான பல விஷயங்களில். பல சறுக்கல்கள். வளவளவென்ற முதல் பாதி. எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் ரெஃபரன்ஸூக்கு இருக்கும் போது ஏன் இப்படத்தின் டீம் தடுமாறியிருக்கிறது என்ற கேள்வி மனதில். "இப்படி மாத்துங்க, அப்படி வையுங்க" என்று யாருடைய இன்ஃப்ளூயன்ஸோ படத்தின் தெளிவான உருவாக்கத்தை பாதித்திருக்கலாமோ?


(இங்கிருந்து ஃபுல் ஸ்பாய்லர்ஸ்)

ஊருக்கே சர்வீஸ் செய்யும் ஹீரோயின், அவளைப் பார்த்ததும் மயங்கி அவள் பின்னாடியே போய் உதவி செய்யும் ஹீரோ (நான் ஈ), வித்யாசமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மாணவர்கள் உள்ள பள்ளி (நண்பன்), எஜூகேஷன் சிஸ்டத்தைக் கேள்வி கேட்பது (நண்பன்), ஹீரோவின் மாஸ்க் (க்ரிஷ், முகமூடி), ஏற்கனவே இந்த பேடண்ட் 5 வருஷம் முன்னாடி ரெஜிஸ்டர் ஆகியிருக்கு என்று சொல்லுதல் (கத்தி), ஒரு கார்ப்பரேட் ஆள் வந்து ஏழைகளை ஓழித்தல் (கத்தி), ஹீரோவுக்கு ஒரு பேக்ரவுண்ட் டீம் உருவாகுதல் (கந்தசாமி), இன்வென்ஷன் நிறைய செய்யும் டெக்னிகல் ஆள் பின்னணியில இருத்தல், அவருக்கு ஒரு ரகசிய இடம் (பேட்மேன்), வாய்ப்பு மறுக்கப்பட்டதும் தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவி கேரக்டர், அதனால மனம் மாறி சொஸைட்டிக்கு ரகசியமா உதவி செய்யும் ஹீரோ (ஜென்டில்மேன்), பொதுமக்களுக்கு ஹீரோ டி.வியில் கொடுக்கும் பேட்டி (இந்தியன்), ஒரே பேட்டியை வேடிக்கை பார்த்து உடனடியாக மனம் மாறும் மக்கள் (அந்நியன், முதல்வன், ரமணா, தென்னவன்) என எல்லா சட்டியிலும் கைவிட்டு எடுத்து அட்லித்தனமாகக் கலக்கி இருக்கிறார் மித்ரன்.

படம் பார்க்கும் போதே ஒன்ற முடியாமல் பலப்பல சந்தேகங்கள். ஊகிக்கக் கூடிய எத்தனையோ காட்சிகள்.

கார்ப்பரேட் என்றாலே ஒரு ஆள்தானா? அந்த ஒரே ஆளும் ஊர் முழுக்க தேடித்தேடி இன்வென்ஷன் செய்பவர்களை செயலிழக்க வைப்பானா? கொல்வானா? தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ வேறு கார்ப்பரேட்டுகளே இல்லையா?

போலி சர்டிபிகேட்களுக்காக எவ்வளவோ மைன்யூட் வேலைகள் செய்யும் ஒரு ஆளுக்கு "அவ்வளவு சோகமா இருக்குற பெண்ணை டிரெயினில் தனியாக விட்டுச் செல்கிறோமே, அவ டிரெயின்ல இருந்து குதிச்சிடுவாளே"ன்னு தோணாதா?

ஒரே ஒரு ஷேக்கு டீம், ஒரே ஒரு வில்லன் டீம்தான் ஊரில் இருக்குமா? அதுவும் அந்த உப்புத்தண்ணி என்ஜினை நேரில் கூடப் பார்க்காமல், செய்முறை வீடியோ கூடப் பார்க்காமல் வெறும் பேப்பரை, அதுவும் டூப்ளிகேட் பேடன்ட் பேப்பரை, நம்பி அவ்ளோ ரூபாய் தர அவன் ஷேக்கா? பேக்கா? "அதை அழிச்சிட்டியா" என்று வெறுமனே இவங்க கேட்பார்களாம். "யெஸ்" என்றதும் 60,000 கோடியை தந்துடுவாங்களாம். அதுவும் 60,000 ஆயிரம் கோடி ரூபாய். அதை எப்டி அனுப்பினார்கள் என்பதற்கு விபரம் இல்லை. அதை எப்படி நாலு ஸ்கூல் பசங்களை வைத்து ஹீரோ எடுக்கிறார் என்பதற்கும் தகவல் இல்லை.

"உனக்கு 24 மணி நேரம் டைம் தர்றேன்" என்பதெல்லாம் எவ்வளவு பழைய டயலாக்? "தனி ஒருவன்" இல் சேட்டிடம் இருந்து பல நூறு கோடிகளை இ.வா (இருட்லயே வாழ்றவரு) கைமாற்றுவதை எவ்வளவு த்ரில்லிங்கா கக் காண்பித்திருப்பார்கள். இதில் "திரிசூல மலைகிட்ட பொட்டியை எடுத்துட்டு வந்து குடுத்துட்டு குழந்தையை வாங்கிக்கோ" என்ற 1970 படம் போல "பே" என்று காண்பிக்கிறார்கள்.

இரவு ரோட்டுவண்டிக்கடையில சதுரமாக, உயரமாக இட்லி அவிக்கும் ஒரு அலுமினிய சாதனம் இருக்கும், அதைக் காண்பித்து சேட்டிலைட் என்கிறார்கள். அதை ஏவ ராக்கெட் லாம் வேண்டாமாம். ஒரே ஒரு பாராசூட்டில் அதை வானத்தை நோக்கி ஏவி விடுவார்களாம். அதுவும் ஒரு ஆறாப்பு படிக்கிற பையன். அதுவும் ஒரு பேட்டரி கார் ரிமோட்டை வைத்து. இஸ்ரோ, நாஸா கண்ணிலெல்லாம் படாமல் அது மூணே வினாடியில் பூமியின் அவுட்டர் ரிங்க்கில் போய் உக்காந்துக்குமாம். அதை வைத்து ஊரில் உள்ள எல்லா, ஐ மீன் "எல்லா" டீவியையும் ஹேக் பண்றதெல்லாம் 2 கே கிட்ஸ் சொல்ற மாதிரி "வேற லெவல்" பாஸ்.

அவ்ளோ பெரிய எக்ஸிபிஷனில் இந்தப் பெண் காண்பித்த இன்வென்ஷனை போட்டிக் கம்பெனிகள் யாரும் பாத்திருக்க மாட்டார்களா? அவர்கள் இந்தப் பெண்ணைத் தேடி புராஜெக்ட் கொடுக்க மாட்டார்களா? மேலும் பொதுவாக ஒரு நல்ல பிராஜக்ட் கிடைத்தால் அந்த ஆளை விலைக்கு வாங்கி தன் பொருளாக்குவது கார்ப்பரேட்டுகளின் வழக்கம். தாமஸ் ஆல்வா எடிசன் காலத்தில் இருந்து அதுதான் நடக்கிறது. (தார்மீக ரீதியாக அது சரியா, தவறா என்பது தனிப்பட்ட விவாதம்).

விஷூவலாகக் காட்ட வேண்டிய பல விஷயங்களை வெறும் வசனங்களிலேயே கடந்திருக்கிறார்கள். திடீரென ரோபா ஷங்கர் காணாமல் போகிறார். "அவனைக் காணம்பா" என்று மேலோட்டமாக ஒரு வசனம். "மதி திருடி இல்லைன்னு நிரூபிப்பேன்" என்கிறார் ஹீரோ. ஆனால் அதைக் கடைசி வரை செய்யவில்லை.

அர்ஜூன் நடத்தும் ஸ்கூல் யாருக்கும் தெரியாதாம். ஆனா பசங்களைப் பெற்றோர் வந்து விட்டுட்டுப் போவார்களாம். 20-30 பசங்களுக்கும் மேல இருந்தாலும், அந்தத் தகவல் வெளிய போகாதாம். அட்மிஷன் போது விசாரிக்காமல் பெற்றோர் சேர்ப்பாங்களா? கன்வின்ஸ் ஆகும் அவளு அது வித்தியாசமான பள்ளி என்று தெரிந்தால் வெளியே போய் பெருமைக்காகவாவது சொல்ல மாட்டார்களா? என்று ஒரே கேள்விகள்.

"ரிலீஸாகும் முதல் நாளே படம் பார்ப்பது" என்ற ஆசையை "கண்ணுக்குள் நிலவு" என்ற டாக்டர் காவியத்தைப் பார்த்த பின் குழிதோண்டிப் புதைத்திருந்தேன். கல்லூரி வயதில் இன்னும் சில காமா சோமா மொக்கைப் படங்களைப் பார்த்துவிட்டு "இனி தமிழ்ப்படங்களே வேணாம்டா" என்று சுமார் மூன்றாண்டுகள் வெறும் ஆங்கிலப்படங்கள் பார்த்துத் திரிந்தேன். ஆனால் கால மாற்றத்தில் பிற்பாடு வந்த எத்தனையோ நல்ல தமிழ்ப் படங்கள் மீண்டும், தமிழ்ப்படங்களுக்காக தியேட்டர் பக்கம் செல்ல வைத்தன. OTT platforms வந்து ஆயிரக்கணக்கான படங்கள் கைசொடுக்கில் கிட்டும் இந்தக் காலகட்டத்தில்.....

மீண்டும் அந்த ஆசைக்குக் குழி வெட்ட மண்வெட்டி எடுத்துத் தந்திருக்கிறார் மித்ரன். ஸோ ஸாரி பாஸ்..
.

விஜயகாந்த் - தின் "த்தூ".......

28.டிசம்பர்.2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

விஜயகாந்த்தின் "த்தூ" இஷ்யூ நினைவிருக்கிறதா?
-----------------------------------------------------------------------------------

டிஸ்கி 1 - நான் விஜயகாந்த் ஐ சப்போர்ட் செய்யவில்லை. அந்த வீடியோவைக் கூட நான் பார்க்கவில்லை. இளையராஜா மேட்டருக்கும் தான்.
.
டிஸ்கி 2 - நல்ல பத்திரிகையாளர்கள் நிறைய பேர் உண்டு. அவர்கள் என் பதிவுக்குக் கோபிக்க வேண்டாம்.
.
வேறு வேறு ஊர்களில் நடக்கும் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் விஷயங்களுக்காக பல முறை பிரஸ் மக்களை அழைக்க வேண்டி இருக்கும். பலர் பயங்கர மரியாதை எதிர்பார்ப்பார்கள், சரி அது கூடத் தவறில்லை.
.
மற்றவர்களின் உண்மை முகம் வேறு. 95 சதம் பேர் கவர் வாங்குபவர்கள் தான். 2 சதம் பேர் மேல தெரிஞ்சிடும் சார் என்று பயந்து வாங்காதவர்கள் மூன்றே சதம் பேர்கள் தான் கவர் வேண்டாம் என்று நேர்மையாக மறுப்பவர்கள்.
.
அந்த 95 சதத்தில், கவர்ல பணம் கம்மியா வச்சிருக்கீங்க என்பவர்கள், (யார் யாருக்குத் தர வேண்டும் என்று) குறிப்பு எழுதாமல் கவர் கொடுப்பது தெரிந்தால் எச்சைத் தனமாக, சுற்றி வந்து "நான் இன்னும் வாங்கலை" என்று முகத்தைத் திருப்பியபடி இரண்டாவது கவர் வாங்குபவர்கள், மீட் டுக்கே வராமல் போன் செய்து, கவரை நம்ம நண்பர் கிட்ட குடுத்தனுப்புங்க என்று வழிபவர்கள், பிரஸ் மீட்டுக்கு கார் அனுப்பினாத் தான் வருவேன் என்பவர்கள் (70 கிமீ அப் அண்ட் டவுன் டாக்ஸி வாடகை எவ்வளவு ஆகும்?), ஒரே பத்திரிகைக்கு "நான் தமிழ் எடிஷன் சார், இங்கிலீஷ் எடிஷன் நண்பருக்கு ஒரு கவர் கொடுங்க" என்று பச்சையாகப் பொய் சொல்லி வாங்கும் பிச்சைக்காரர்களைப் பல முறை பார்த்திருக்கிறேன்.
.
அது போக பல ஆண்டுகளுக்கு முன், நானும் ஒரு பிரஸ்ஸில், மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்டில் இருந்திருக்கிறேன். பல பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்களைப் பார்த்திருக்கிறேன். அவன் கவர் குடுத்தான்னா சப்ளிமெண்ட் ல ஒரு ஆர்ட்டிகிள் போட்டுடலாம் என்பவர்கள், கவருக்கும், பிரஸ் என்ற வெட்டி மரியாதைக்கும் ஆசைப்பட்டு யானைக்குத் தன் பலம் தெரியாது என்பது போல இன்னமும் ஏழாயிரம் சம்பளத்துக்கு ஏதாவது ஒரு பிரஸ்ஸில் ஒட்டிக் (ஓட்டிக்) கொண்டு இருப்பவர்கள், கவர் தரவில்லை என்பதற்காக நல்ல விஷயங்களை இருட்டடித்தவர்கள், ஜனாதிபதியே ஆனாலும் முஸ்லிம் என்பதற்காக அப்துல் கலாம் பெயரை முதல் பக்கத்தில் போடாதே என்றவர்கள் எனப் பலரையும் பார்த்திருக்கிறேன். "கோ" மற்றும் "தனி ஒருவன்" திரைப்படங்கள் சொல்லும் சேதியைப் போல மக்கள் கவனத்திற்கே வராமல் எத்தனையெத்தனையோ செய்திகளை மறைக்கும் ஊடகவியலாளர்கள் இங்கே அதிகம்.
.
பள்ளி, கல்லூரி காலம் தாண்டி வேலைக்கு வந்தபின், திடீரென ஒருவர் ரோட்டில் நம் கையைப் பிடித்து இழுத்தாலோ, முதுகை மைக்கால் தட்டித் திருப்பினாலோ சாமானியனான நமக்கே கோபம் வரும். வெள்ளப் பணிகளைப் பார்க்க வந்த ஒரு அமைச்சரை இழுக்காத குறையாக கையைப் பிடித்து விட்டு "கையைத் தட்டிவிட்டு ஓடுகிறார் வளர்மதி" என்று மாற்றிச் செய்தி போடுகின்ற, வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு அமைச்சரை முதுகில் மைக்கால் தட்டித் திருப்பி, திடீரென்று "லைவ் ஓடுது, பேசுங்க" என்றும் பதட்டப் படுத்தி சீன் கிரியேட் செய்யும் கோமான்கள் உள்ள இடம் இது.
.
இவர்களுக்கு இது போன்ற அவமானங்கள் அவ்வப்போது தேவை தான்.
.
டிஸ்கி - விஜயகாந்துக்கு எதிரான போராட்டத்தில் அந்த 3 சதம் நியாயவான்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
.

நட்புடன் எஸ்.கா - 2 (நல்லதைச் சொல்வோம்)

1 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் வருமானத்தில் 2% - இரண்டு சதவிகிதத்தை (இது உதாரணம் தான். நீங்கள் எவ்வளவு ஒதுக்குகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்) ஒதுக்கி கடவுளுக்குத் திருப்பிக் கொடுக்கலாம். ஒரு நன்றிக்கடனாக.

உதா - 20,000 சம்பளம் என்றால் மாதம் 400 ரூபாயைத் தனியாக எடுத்து வைத்து வருடம் 4800 ரூபாய்க்கு, உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு, பொதுவாக அவை சிறு தெய்வங்களாக இருக்கும், விளக்கு வாங்கித் தருவது, காண்டாமணி வாங்கித் தருவது, தளம் கட்டித்தருவது, பீரோ வாங்கித் தருவது என எது முடியுமோ, அதைச் செய்யலாம். திடீரென சாமி செலவுக்கு காசு எடுக்க முடியவில்லை என தடுமாறும் நண்பர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர் போன்றவர்களுக்கு இது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அந்தப் பணத்தைத் தர்மம் செய்யலாம். என்ன செய்வது? என்பவர்களுக்கு - முதலில் எடுத்து வையுங்கள். என்ன செய்வது என்பதற்கு வழி தானாகத் தெரியும். சாப்பாடு வாங்கிக் கொடுக்க நினைப்பவர்கள் அம்மா உணவகத்தில் டோக்கன் வாங்கிக் கூடத் தரலாம். ஏற்கனவே வேறு உதவிகள் செய்து வரும் நண்பர்களுடன் இணைந்து கொள்ளலாம். சாப்பாடு பொட்டலம் வாங்கிக் கொண்டு ஜி.ஹெச் பக்கம் போய்ப்பாருங்கள். தேவைப்படுபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனத் தெரியும்.

உங்கள் ஏரியாவில் குப்பை அள்ளும் தொழிலாளிகளைக் கவனியுங்கள். பெரும்பாலும் கையுறை இல்லாமல் தான் வருவார்கள். அவர்களுக்கு கையுறை வாங்கித் தரலாம். இதுதான் என்றில்லை. இதுபோல் எத்தனையோ.

இதை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். ஆனால் இன்று புத்தாண்டு என்பதால் இன்று கூடத் துவங்கலாம்.

நீங்கள் எதை அளிக்கிறீர்களோ, அதுவே உங்களிடம் திரும்பி வரும்.
.

நட்புடன் எஸ்.கா - 1 (ஐடியா டிப்போ)

1 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

உங்கள் வருமானத்தில் 1% - ஒரு சதவிகிதத்தை புத்தகம் வாங்க (வாங்கியே தீருவது) என்று ஒதுக்குங்கள். உதா - 20,000 சம்பளம் என்றால் 200 ரூபாய்க்கு. இதை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். ஆனால் இன்று புத்தாண்டு என்பதால் இன்று கூடத் துவங்கலாம்.

அது உங்கள் துறை சார்ந்த புத்தகமாக இருந்தால், புதிய கற்றலுக்கு உதவுவதோடு, தொழில் உயர்வுக்கும் உதவும். அல்லது, உங்களுக்குப் பிடித்த புத்தகமாகக் கூட இருக்கலாம். அதனால் நம் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அது கூட ஒரு மோட்டிவேஷன் தான்.

"செலவு சார், கஷ்டம் சார், அதனால என்ன ரிட்டன் சார்" என்பார்கள் சிலர். நேரடி ரிட்டன் இல்லையென்றாலும் புத்தகத்தினால் நீங்கள் பெறும் அறிவு எங்கோ ஓரிடத்தில் பிரதிபலித்து, அதனால் வேறொரு வகையில் பலன் கிடைக்கும்.

இன்னோரு ஆப்ஷன், கின்டில் அன்லிமிடெட் போன்ற "சந்தா திட்டங்களில்" சேர்ந்து கொள்வது. வருடக் கட்டணம் கட்டுவதால் எண்ணற்ற புத்தகங்களைப் படிக்க முடியும்.

ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து பாருங்கள்.
.

பொன்னியின் செல்வன் (Just fun, no harm)

3 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

இன்டஸ்ட்ரியில் இன்றைய ஹாட் டாபிக் "பொன்னியின் செல்வன்". மொத்தப் படத்தோட வசனத்தையும் பஸ் டிக்கெட் பின்பக்கத்திலேயே எழுதக்கூடிய மணி சார், ஏகப்பட்ட வசனங்கள் கொண்ட ஒரு சரித்திரப்படத்தை எப்படி எடுக்கப்போகிறார் என்று ஒரே பரபரப்பு. "பாகுபலி" மாதிரி இருக்குமா? இல்ல "அதுக்கும் மேல" யா? என்று இன்டஸ்ட்ரியே கலகலத்துப் போயிருக்க.......
அங்கே மணி சார் ஆபீஸில் டிஸ்கஷன் ஆரம்பிக்கிறது.

"நம்ம ஹீரோ பேரு "அருள்"
சார், அது "அருள்மொழிவர்மன்".
"அருள்" போதும்.


அஸிஸ்டெண்டுகள் ஷாக்காகி "ஓக்கே சார், அப்போ "ஆழ்வார்க்கடியான் நம்பி"?
"நம்பி" போதும்.
"சார், கேரிங்கா இருக்கு. அப்போ மத்த கேரக்டர்கள் பேரு?"
"வந்தி" (வந்தியத்தேவன் (எ) வல்லவரையன் என்று குன்ஸாகப் புரிந்து கொள்கிறார்கள்),
"குந்தி"
"சார், அது மகாபாரதத்துல வர்ற அம்மா, இது குந்தவைப்பிராட்டி. இளைய பிராட்டி"
"அப்போ சின்னம்மா"ன்னு வச்சிக்குவோம்"
"அப்டின்னா வானவன் மாதேவிக்கு "பெரியம்மாவா" சார்?"
"ஷ்ஷூ குறுக்கப்பேசாத. பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையருக்கு பெரியவர், சின்னவர் னு வச்சிக்கலாம். பேக்ரவுண்ட்ல டான் மியூசிக் குடுத்தா காட்ஃபாதர் எஃபெக்ட் வரும்"
"சார், என்ன சார் கதையையே மாத்துறீங்க?"
"சும்மாருப்பா, சுகாசினி சொன்னாங்க தப்பில்லன்னு. ராமாயணத்தை ராவணாயாணமா எடுக்கலையா?"
"அவுங்க சொன்னா, ஸாரி நீங்க சொன்னா சரி சார், அப்போ ஆதித்த கரிகாலன்?"
"கரி"ன்னு வச்சுக்குவோம்".
"நெனச்சேன் சார்"

இப்படியே டிஸ்கஷன் தொடர, கேமரா அவுட் ஆஃப் போகஸில் பின்னால் நகர்கிறது. ஃபேட் அவுட்டில் மணி சாரும், அஸிஸ்டெண்டுகளும் தூரத்தில் தெரிய கதவருகில் தன் 25 தலையணைகளையும் வைத்தபடி (அதாங்க "வெண்முரசு" செம்பதிப்பு வரிசை) "இந்தப்படத்துக்கு நான் எதுக்கு? என்னை விட்ருந்தா இன்னோரு தலகாணி தச்சிருப்பேனே" என்று யோசித்தபடியே வெறித்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

பின்னணியில் "ஜஜாங், ஜஜாங்" என்று கிடார் இசை ஒலிக்கிறது "இசை" ஏ.ஆர்.ரஹ்மான் என்ற எழுத்துக்களுடன்.
.

பரிசும் மகிழ்ச்சியும்

7 ஜனவரி 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

புத்தாண்டுப் பரிசாக (ஒரு வாரம் கழித்து வந்தாலும்) இன்றொரு அசத்தலான புகைப்படங்கள் உள்ள ஒரு டேபிள் காலண்டரும், லெதர் (தான் என்று நினைக்கிறேன்) டைரி ஒன்றும் கொரியர் மூலம் வந்தடைந்தன. ஆனந்த அதிர்ச்சி. அன்புக்கு நன்றி. அனுப்பிய அன்பர் யாரென்று தெரியவில்லை. (கண்டுபுடிக்கிறேன்) ஏனென்றும் புரியவில்லை. எப்போதேனும் வரும் இது போன்ற திடீர் பரிசுகள் வாழ்வை ஆச்சரிய அதிர்ச்சிகளால் நிரப்புகின்றன.

அவ்வப்போது நேரில் செல்லும் விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பல அன்பளிப்புகள் கிடைக்கும். அவை சகஜம். பெரும்பாலும் சால்வைகள், (20 க்கும் மேற்பட்டவை "என்ன செய்ய?" என்று தெரியாமல் அலமாரியின் அடுக்கை அலங்கரிக்கின்றன), புத்தங்கள் தான் கிடைக்கும். சில சமயம் பேசியதைப் பாராட்டி "தப்பா நினைச்சுக்காதீங்க, ஃபார்மாலிட்டி" என்று வற்புறுத்தி கவர் வைப்பார்கள், என்னைப்போல சிலர் தவிர்த்து விடுவதால் சில சமயம் தெரியாமல் புத்தகத்துள் வைத்திருப்பார்கள்.

எங்கேனும் சீஃப் கெஸ்ட் ஆகப் போனால், தம் நிறுவன விளம்பரங்கள் போட்ட விசிறிகள், ஃபைல்கள், நோட் பேடுகள், பேனா ஸ்டாண்டு, டைரி, போன்றவை கிட்டும். ஒருமுறை சின்ன, நல்ல குவாலிட்டி பிளாஸ்க் கூட கிடைத்திருக்கிறது. பள்ளி விழா ஒன்றில் பரிசு வாங்கிய மாணவர்களுக்கு வரிசையாக கவர் செய்யப்பட்ட எவர்சில்வர் தட்டு, கிண்ணிகளைக் கொடுத்து விட்டு, பாசமாக "சாருக்கு ஒன்னு கொடுங்க" என்று எனக்கு ஒரு "சின்ன எவர்சில்வர் குண்டா" கொடுத்தார்கள். இன்னும் வைத்திருக்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் படித்த போது (ஓவியம், கட்டுரை, க்விஸ்) போட்டிகளில் கலந்து கொண்டால் என்ன செய்வது என்று தெரியாவிடிலும், பெருமையாக ஃபீல் செய்ய வைக்கும் விதவிதமான ஷீல்டுகள் கிடைக்கும். ப்ளஸ் ஒன் படிக்கையில் ஒருமுறை ஹாட்பாக்ஸ் (அதுக்குப் பேரு கேஸரோல் என்றார் பெரீப்பா) கிடைத்தது. வழங்கியவர் அன்றைய அமைச்சர் வீரபாண்டியார். 20 வருடத்துக்கும் மேலாக அது இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறது.

பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த போது கேஷ் ப்ரைஸ்கள் தான் பெரும்பாலும் - மணியார்டரில் வரும். அன்றைக்கெல்லாம் ஏரியாவிலேயே கெத்தா சுத்துவோம். எவ்ளோ கார்த்தி, அம்பதா? நூறா? என்று யாராவது கேட்டு கெத்தை ஏத்தி விட்டுப்போவார்கள். அன்பளிப்புப் புத்தகங்கள் வரும். ரைட்டர் காப்பிகள். ஒரு முறை வசந்த் டி.வியில் இருந்து எவர்சில்வர் கேஸரோல் வந்தது. சில சமயம் பிளாஸ்டிக் தட்டு, டிராவல் பேக் என்று யோசித்தே பார்க்க முடியாத ரேண்டம் பரிசுகளெல்லாம் கிடைக்கும்.

முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் ஒருமுறை டார்கெட் போட்டியில் வென்று சோனி கேமரா ஒன்று கிடைத்தது. மற்றபடி பல நிறுவனங்களில் பெரும்பாலும் கேஷ் ப்ரைஸ் தான் (TDS பிடித்தம் போக). பல சமயங்களில், சிறப்பாக வேலை செய்ததற்காக அவார்டுகள், சர்டிபிகேட்டுகள் கிடைக்கும். Book Exchange scheme களில் கலந்து கொண்டால் முகம் தெரியா அன்பர்களிடம் இருந்து விதவிதமான புத்தகங்கள் வரும்.

சிறிதோ, பெரிதோ, எந்த வயதிலும் இதுபோல நிகழும் குட்டிக் குட்டிச் சம்பவங்கள் தான் வாழ்வை மிகவும் அழகாக்குகின்றன.

ஆனால், பணி புரிந்த நிறுவன லோகோ போட்ட மெர்ச்சாண்டைஸ்கள் (கீ செயின், காபி கப்ஸ், பால், கார் பொம்மை, வாட்ச், க்ளாக்) கணக்கில் எடுக்கப் படவில்லை, அவை எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக தரப்படுவதால். போலவே, உணவுகள், விருந்துகள், ட்ரீட்டுகள் கணக்கில் சேரா. இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு விஷயம் - இவற்றில் நான் சம்பந்தப்பட்டிருப்பேன். என் விருப்பத்துடன் நான் கலந்து கொண்டிருப்பேன். நான் விரும்பிச் சென்றிருப்பேன்.

ஆனால் எனக்கே தெரியாமல், இது போல அத்திப்பூத்தார்ப்போல, அனுப்பியவர் யாரென்றே தெரியாமல் வரும் பரிசுகள் மிகவும் அபூர்வம். இம்முறை, இதில் அனுப்பியவர் அலுவலக முகவரி உள்ளது. ஆனால் அவர் யாரெனத் தெரியவில்லை. யாரென்று தெரிந்தால் நன்றி பகர ஏதுவாக இருக்கும்.

"கடைசி காலத்துல காசு பணத்தை விட, அசைபோட, மெமரீஸ் தான் நமக்கு நிக்கும் பாஸ்" என்று வடகோடி கண்டியிலே காந்தி உப்பு சத்தியாகிரகம்னு சொன்னவுடனே, தென்கோடி தூத்துக்குடியில சட்டிப்பானைய எடுத்துகிட்டு சமுத்திரத்த நோக்கி நடந்தாரே ஒரு மகான், அவர் சொல்லியிருக்கார். அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்த அந்த நண்பருக்கு மீண்டும் ஓர் நன்றி.

பாஸ், வேற யாருக்கோ அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பலைல்ல? (இருக்காது. இருக்காது. தெளிவா Karthikeyan, yeskha ன்னு எழுதியிருக்காங்களே - #notetoself)

பி.கு - திரு. Rafeek Mohd தான் அந்த அன்பர் என்று தெரிந்தது. ஒரு ஸ்பெஷல் நன்றி மீண்டும்.