மொழிகள் அனைத்தும் ஆதியில் ஒன்றாக இருந்து, பிறகு பிரிந்தவையே என்பார்கள் சில ஆய்வாளர்கள். வெவ்வேறு மொழிகளில் உள்ள சில வார்த்தைகளைக் கேட்கும் போது அவை உண்மையே என்றும் தோன்றும்.
உதாரணமாக தமிழில் "வீடு" என்று சொல்கிறோம். அதை கன்னடத்தில் "மனே" என்பார்கள். "மனை" என்றால் தமிழிலும் ஆதியில் வீடு என்ற பொருள் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது நாம் "காலி நிலம்" - என்ற பொருளில் "மனை"யைப் பயன்படுத்துகிறோம். அதுவே தெலுங்கில் "இல்லு". கேட்கும் போது தமிழ் "இல்லம்" என்ற வார்த்தையின் மருவி போல இல்லை? தமிழில் "நிலம்" என்பதை தெலுங்கில் "பொலம் (அ) புலம்" என்கிறார்கள். சற்று யோசித்தால் தமிழிலேயே ஊர்ப்பக்கம் "நிலபுலம்" என்று சொல்வதை நினைவுகூரலாம்.
ஆக இவை அனைத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது புரிகிறதா?
தெலுங்கில் "வேலையில்லாம / சும்மா இருக்கியா?" என்பதை "காலிகா உன்னாவா?" என்கிறார்கள். தமிழில் "காலி" என்றால் "ஒன்றுமில்லாமல்" என்ற பொருள். அதை மனதில் வைத்து யோசித்தால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே போன்ற வார்த்தைகள் தானே.
பல மொழிகளைக் கற்கும் தேவை உள்ளவர்களுக்கு இது போன்ற "integrated learning - ஒருங்கிணைந்த கற்றல்" முறை உதவும். புதிய மொழியில் உள்ள சில வார்த்தைகளை புரியலையே என்று புலம்புவதற்குப் பதிலாக அதே வார்த்தை என் மொழியில் எந்த இடத்தில், எந்தப் பொருளில் வருகிறது அதன் link - தொடர்பு என்ன என யோசித்தால் விரைவாகக் கற்கவும், புதிய வார்த்தைகளை நினைவில் வைக்கவும் முடியும். தோன்றிய சில வார்த்தைகளைத் தந்திருக்கிறேன். நண்பர்கள் பங்களிக்கலாம்.
"வெறும் ஒரு ரூபாய்" - தமிழ் - "கேவல் ஏக் ரூப்யா" - ஹிந்தி
ரூப்யா - ரூபா - தமிழ்
கேவல் - கேவலம் (தெலுங்கு வார்த்தை) - வெறும் (தமிழ்)
ரூபாய் - (தமிழில் roobai என்ற உச்சரிப்பில்) ரூபாய - தெலுங்கில் சிறிய மாற்றத்துடன் roopai என்ற உச்சரிப்பில்.
ரெண்டு (தமிழ்) - ரண்டு (தெலுங்கு)
ஸமீன் (ஹிந்தி) - நிலம் (தமிழ்)
ஜமீன்தார் - "சமஸ்கிருதம்" என நினைக்கிறேன் ஆனால் தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் வெகுவாகப் புழங்கிய வார்த்தை - முத்து, லிங்கா படங்கள் வரை. "நிலச் சுவான்தார்" - தமிழ்
நிலம் - ஜமீன் - ஸமீன்
அஸ்பதால் - ஆஸ்பத்திரி - hospital - இவையெல்லாம் ஒரே பொருள் ஆனால் எவை எதிலிருந்து வந்தவை என்பதற்கு ஒரு பெரும் ஆராய்ச்சியே தேவை.
ஷக்கர் - ஹிந்தி (சக்கர - பேச்சு மொழியில்) சர்க்கரை (தமிழ்)
பாபா (papa) - ஹிந்தி - அப்பா - தமிழ்
மா (ஹிந்தி) - அம்மா (தமிழ்) - அம்மி (உருது) - மம்மி (ஆங்கிலம்) - மாமா (ஆங்கிலம்)
கிட்க்கி (ஹிந்தி) ஜன்னல் - கிட்க்கி தெலுங்கிலும் ஜன்னல்.
இதுபோக (கேரள நகரப்பகுதிகளில் பேசப்படும்) மலையாளம், கிட்டத்தட்ட பெரும்பாலும் தமிழ் வார்த்தைகளை ஒத்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். கன்னடத்திலும், தெலுங்கிலும் ஸ்கிரிப்டு ஒன்றுதான். ஏகப்பட்ட வார்த்தைகள் ஒரே போல இருக்கும்.
புரியாதவர்கள் வாட்ஸ் அப் விஞ்ஞானிகள் ஃபார்வர்டு செய்யும், சீமான் புகழ் "தமிழிலிருந்து தான் ஆங்கிலம் வந்தது (தாக்கு - அட்டாக்கு - attack போன்ற அரிய பொக்கிஷங்கள் நிறைந்த)" வீடியோவை பார்க்கக்கடவது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக