புதன், 5 செப்டம்பர், 2018

சிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்?

மின்னம்பலம் மின்னிதழில் 27 ஆகஸ்ட் 2018 அன்று வௌியான கட்டுரை
- எஸ்கா
அனைவரும் சென்னையைப் பற்றிப் பெருமையாகப் பதிவிட்டுக் கொண்டிரும் அதே வேளையில் சென்னையைப் பற்றி எனக்கு ஒரு மாற்றுக்கருத்து இருக்கிறது. பிறந்த ஊரோ, புகுந்த ஊரோ, வந்த ஊரோ, வாழ்ந்த ஊரோ, எதுவாயினும் அது நாம் செய்யும் வேலை, நமது குடும்பம், தங்குமிடம், நமக்கு வாய்த்த உறவுகள், தினசரிப் பயணம் போன்ற பல சூழ்நிலைகளைப் பொறுத்தே நமக்குப் பிடிக்கும் என்பது என் கருத்து.
2007 முதல் 2010 வரை மூன்று வருடங்கள் சென்னையில் இருந்தேன். ஹிக்கின் பாதம்ஸ், கன்னிமாரா லைப்ரரி புத்தகங்கள், எப்போதாவது செல்லும் மெரினா, பெசன்ட் நகர் பீச்சுகள், சில சின்ன இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் கண்காட்சியில் கண்ணில் பட்ட சினிமாப் பிரபலங்கள், சத்யம் தியேட்டரில் அசரடிக்கும் த்ரீ டி.யில் அவதாரும், 2012 ருத்ரமும், நோவாவும், பலவித, பலரக ஹோட்டல்களில் ருசியான விதவித உணவுகள் ருசிக்கும் வாய்ப்புகள் என சின்னச்சின்ன சந்தோஷத்தருணங்கள் கிடைக்கவே செய்தன.
ஆனால், ஊர் முழுக்கக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலங்கள், அதனால் ஏற்பட்ட பெரும் டிராஃபிக், உஷ்ணமான மாலை பஸ் பயணத்தில் உடல் முழுதும் ஊறும் வியர்வை, பேச்சிலர் ரூம், வேலை விட்டு வந்ததும் அடுத்தவனுக்கு இருக்கிறதா என்று யோசிக்காமல் சட்டியைக் கழுவித்தின்னும் ஒருத்தன், உடல் நாற்றத்துடன் ஜட்டியோடு அமர்ந்து சோறு தின்றுகொண்டே டி.வி பார்க்கும் ஒருத்தன், காற்றே இல்லாத ஏரியாக்கள் (இத்தனைக்கும் நான் இருந்தது குரோம்பேட்டைக்கு உள்ளே ஒரு பகுதி) அறையில் மொய்க்கும் கொசுக்கள், காற்றில்லாமல் பிசுபிசுக்கும் உடலில் ஓடோமாஸ் தேய்க்கக்கூட முடியாத நிலை என ஒரு வாழ்க்கை.
சிறு தெருக்களில் ரோட்டிலேயே கொட்டப்படும் குப்பைகள், சின்ன விஷயத்துக்காக கன்னாபின்னாவென்று அடித்துக் கொள்ளும் கூட்டம், எங்கே போகவேண்டும் என்றாலும் இரண்டு மணிநேரப்பயணம், கடும் டிராஃபிக், அடுத்தவனை மதிக்கத் தெரியாத (அப்போதைய பீக்-கில் இருந்த) ஐ.டிக்காரர்கள் என பாதி ஊர் அப்படித்தான் இருக்கிறது. ஊரில் படம் பார்க்க 10 ரூபாய் டிக்கெட் என்றால் இங்கே ஒரு படம் பார்க்கக் குறைந்தது 80 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட், ஒரு பக்கம் அனைத்து வசதிகளுடன் அல்ட்ரா மாடர்ன் இளசுகள், ஒரு பக்கம் அவர்களை வெறித்து மட்டுமே பார்க்கும் கீழ்மட்ட இளசுகள், இரண்டிலும் சேரமுடியாத எம்மைப் போன்ற ஒரு கூட்டம், என சென்னை எனக்கு வேறு முகம் காட்டியது.
7000 மும் 10000 மும் சம்பளம் வாங்கும் எத்தனை பேரால் அடிக்கடி சத்யம் போக முடியும்? ஸ்பென்சரிலும், அல்சா மாலிலும் வெறுமனே சுற்றிப்பார்க்கத்தான் முடியும். பொருள் வாங்காமல் எத்தனை முறை சுற்றிப்பார்ப்பது? 14 மாடி எல்.ஐ.சி பில்டிங் சென்னையின் பெருமை தான். இருக்கட்டும். சரி அதனால் நமக்கு என்ன? நம் வாழ்க்கையில் அதன் விளைவு என்ன? ஒன்றுமில்லையே. கூட குடும்பமும் இல்லாமல், நண்பர்களும், கேர்ள் ஃபிரண்ட்டும் இல்லாத வெறுமை வாழ்க்கை, அம்மா இறந்ததால் லீவு நாட்களில் ஊருக்கும் போக முடியாமல் என்னடா இப்படி ஒரு வாழ்க்கை என வெறுத்து இருந்திருக்கிறேன்.
ஹிக்கின் பாதம்ஸ் போய்விட்டு எல்.ஐ.சிக்கு அருகில் உள்ள இரவு நேர சாலையோரக் கடையில் தின்னப்போனால் அங்கே உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள், சாப்பாட்டு வண்டிக்கு அருகிலேயே பொங்கி வழியும் சாக்கடை, கணிகையரிடம் ரேட் பேசி அங்கேயே இருட்டில் ஒதுங்கும் சிறுமக்கள் எனக் கிடைக்கும் புது வித அனுபவம். வேறு வேலை கிடைத்ததும் விட்டால் போதும் என்று சென்னையை விட்டு ஓடி வந்தேன். இது சென்னையை திட்டும் பதிவு அல்ல. சென்னையை லவ்வும் நண்பர்கள் பொங்க வேண்டாம். சென்னைக்கு பல முகங்கள் உண்டு (நம்மைப் போன்றவர்களுக்கு தெரியாத பெரும் பணக்கார உலகங்களும், போதை மாஃபியா உலகங்களும் சேர்த்தே உண்டு) என்பதையும் அதில் இதுவும் ஒன்று என்பதையும் பதிவு செய்ய விரும்பினேன்.
மேலும் இது வெறும் சென்னையைப் பற்றிய பதிவும் அல்ல. பெங்களூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து போதும் இதேபோன்று எண்ணங்கள் தான் என்னுள். மனைவியார் மும்பைக்காரர். அங்கேயே வேலை பார்த்து வாழலாம் என்ற அவரது அழைப்பையும் என்னால் ஏற்க முடியவில்லை. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி எனப்பல பெருநகரங்களுக்கும் இது போலப் பல முகங்கள் உண்டு. வாய்ப்புக்கிடைத்தவன் வாழ்கிறான். கிடைக்காமல் தடம் மாறுகிறவன் குற்றவாளியாகிறான். இரண்டிலும் சேராதவன் தன் வழியைத் தேடுகிறான். நாளைக்கு ஒரு நல்ல வாய்ப்புக்கிடைத்து மீண்டும் சென்னைக்குப் போக வாய்ப்புக்கிடைத்தால்? யாருக்குத் தெரியும்? மீண்டும் போகலாம்.
"படிச்சவனுக்கு ஐடி கம்பெனி, படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி" என ஆரம்பித்து சந்தானம் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" படத்தில் சென்னையின் பெருமைகளைச் சொல்வது போல, "வந்தாரை வாழவைக்கும் சென்னை" என்ற கூற்றுக்கு இணையாக சென்னை எப்படியும் உங்களை வாழ வைத்து விடும். சந்தேகமே இல்லை. ஏதோ ஒரு வேலையோ, சிறு வியாபாரமோ, பெரு வியாபாரமோ சென்னை எப்படியும் நீங்கள் வாழ ஒரு வழி தரும். சோற்றுக்குப்பிரச்சினை இல்லை. ஆனால் சோறு மட்டுமே வாழ்க்கை இல்லை. திரைக் கனவுகள், தொழிலதிபர் கனவுகளுடன் சென்னைக்குச் சென்று ஏழெட்டு ஆண்டுகள் போராடி சொந்த ஊருக்குத் திரும்பிப்போன பலரை எனக்குத் தெரியும்.
முகமூடிகளைக் கழற்றி உண்மை விளம்பும் மனசிடம் கேட்டால் அதன் பதில் பொட்டில் அறையும். பொங்கி வழிந்து பெருகி வெடிக்க காத்திருக்கும் ஒரு பெரும் மாநகரத்தில் பொருந்தி வாழ இயலாத ஒரு சாதாரண சிம்பிள் மனிதனின் வாழ்க்கைப் பதிவு இது.