வெள்ளி, 29 ஜனவரி, 2021

முன்முடிவுகளுடன் அணுகக் கூடாது


29 ஜனவரி 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடன் முன்முடிவுகளுடன் அணுகக் கூடாது என்பது அனுபவ வாக்கு. ஒரு நிகழ்வை பார்த்த உடன் முடிவெடுப்பது பாமரர் பழக்கம்.

2012 ல் மாதவன், ஆர்யா நடித்து வெளிவந்த வேட்டை படத்தில் மாதவன் குண்டாக பொதபொதவென்று இருக்கிறார். சார்மிங் போச்சு என்று அப்போதைய விமர்சனத்தில் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆர்யாவுக்கு அண்ணனாக என்றதும் "அவ்ளோ தான், எந்த ஒரு பிரபல ஹீரோவும் மார்க்கெட் முடியும் நேரத்தில், அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்டில், அத்தி பூத்தார்ப் போல் கொடுக்கும் ஹிட் இந்த வேட்டை" என்றும் ஒருவர் எழுதியிருந்தார்.
ஆனால் அதை மீறி நான்கு ஹிட் படங்களை ஹிந்தியில், அதிலும் ஒன்றாக இந்தியாவின் டாப் டென் கலெக்ஷனில் இடம் பிடித்த "தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்" என்றொரு மகா மெகா ஹிட்டைக் கொடுத்தார் அவர்.
வேட்டை படத்தின் ரிலீஸ் தேதி 2012 ஜனவரி 14. "இறுதிச் சுற்று" இயக்குனர் 2011 செப்டம்பரிலேயே மாதவனுக்குக் கதை சொன்னதாக விகடன் விமர்சனம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக மாதவன் 3 ஆண்டுகளாகத் தயார் ஆனார் என்று மற்றொரு செய்தி சொல்கிறது. பாக்ஸிங் கோச்சுகள் இப்படித்தான் பல்க் ஆக இருப்பார்கள் என்று ஹோம்வொர்க் செய்து (பெசன்ட் நகர் ரவி நினைவிருக்கிறதா? சிங்கம் 1 படத்தில் சூர்யாவுடன் தியேட்டரில் மோதுவாரே) தயார் ஆனதாக மாதவன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இப்போது புரிகிறதா "வேட்டை" படத்தில் மாதவனின் பொதபொத உடம்பின் ரகசியம்?உஷார். வாட்ஸ் அப் புல மாட்டாதீங்க.

 29 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

பெங்களூருவில் உள்ள எனது நண்பருடைய நண்பருடைய நண்பருடைய நண்பருடைய நண்பர் ஒருவர் தனது நிறுவனம், தான் செய்யும் சேவை பற்றி நெகடிவ் ஆன இரண்டு செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவுவதை கண்டுபிடித்தார். அதனால் அவரது பிஸினஸ் பாதிக்கப்பட்டது. அதை அனுப்பியவன் யாரென்று உடனடியாகக் கண்டுபிடித்தாயிற்று. இது மூன்று மாதங்களுக்கு முந்தைய கதை. அதுவரை ஓகே. 

தற்போது ஒரு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயம். அரசு சைபர் கிரைமுக்கு அப்ளை செய்து, மேலும் ஒரு தனியார் டெக் நிறுவனத்துடன் சேர்ந்து, கொஞ்சம் பணமும், 45 நாட்களும் செலவு செய்து இதற்கு மூல காரணம் யார் என்று கண்டுபிடித்து விட்டார்கள். (அது அவரது பிஸினஸ் எதிரி) இதுவும் கூட ஓகே. 

அடுத்த பாயிண்ட் தான் மிக முக்கியம். கடந்த மூன்று மாதமாக யார் யார், எங்கெங்கே, யாருக்கு, எப்பெப்போ, எந்தெந்த குரூப்புக்கு அந்த மெஸேஜை ஷேர் செய்திருக்கிறார்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை (போன் பில் போல) ஒரு நம்பர் விடாமல் அத்தனை நம்பரும் இப்போது கிடைத்து விட்டனவாம். இப்போது அவர் நினைத்தால் அத்தனை பேர் மேலும் ஆக்ஷன் எடுக்க முடியும். சட்டப்படி தவறான செய்தியைப் பரப்பிய அனைவரும் குற்றவாளி. 

ஒரு சாதாரண நிறுவனத்தாலேயே இந்த அளவுக்கு முடியும் என்றால் டாட்டா, பிர்லா, கோலா, மேகி போன்ற பெரு நிறுவனங்களால் எந்த அளவுக்கு தோண்டித் துருவ முடியும்? வாட்ஸ் அப்பில் தேவையில்லாமல் எல்லாவற்றையும் ஷேர் செய்து நாளை பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஜாக்கிரதை. 

1. வாட்ஸ் அப்பில் வருபவை 95 சதவீதம் பொய்களே (உதா - அப்துல் கலாம் சொன்ன தத்துவம், தேசிய விளையாட்டு ஹாக்கி போன்றவை) 

2. வாட்ஸ் அப்பில் வருவதை நம்பி முடிவு எடுக்காதீர்கள் (உதா - தடுப்பூசி, அனிருத்) 

3. வாட்ஸ் அப்பில் வருவதை நம்பி ஷேர் செய்யாதீர்கள் (முக்கியமாக குரூப்புகளுக்கு) 

4. வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தால் நம்மை கண்டுபிடிக்க முடியாது என நினைக்காதீர்கள் (டெக்னாலஜி டைனோசர் வேகத்தில் வளர்ந்து விட்டது) 

5. ஒரு செய்தி தவறான செய்தியாக இருந்து அதை நீங்கள் ஷேர் செய்திருந்தால் நீங்களும் அதற்குப் பொறுப்பு (சட்டப்படி உங்கள் மேஸ் கேஸ் போடலாம்) 

6. ஆதாரம் இல்லாத எதையும் ஷேர் செய்யாதீர்கள். நீங்கள் ஷேர் செய்யும் செய்திக்கு யாரேனும் ஆதாரம் கேட்டால் நீங்கள் இன்னொருத்தரைக் கை காண்பிக்க முடியாது. 

உங்கள் நலன் கருதி.

டிஸ்கி - உண்மையான தமிழனாக இருந்தால் இதை ஷேர் செய்யவும்.


புதன், 20 ஜனவரி, 2021

தங்கமணி வந்தாச்

20 ஜனவரி 2013 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

முகநூல், டுவிட்டர், ப்ளாக் என்று எந்த இடத்திலும் சரளமாகப்புழங்கும் வார்த்தைகளில் ஒன்று "தங்கமணி", ஆன்லைனில் தினசரி சரளமாகப்புழங்கும் பத்தில் ஏழு பேருக்கு "தங்கமணி" என்ற வார்த்தைக்கு சட்-டென்று அர்த்தம் புரிந்து விடுகிறது. ஆனால் "தங்கமணி" என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாதவர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், இன்னும் கல்யாணம் ஆகாத கட்டிளம் காளைகளாகவோ, அல்லது ஆங்கில மீடியத்தில் படித்து அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களை மட்டும் பார்க்கும் என்.ஆர்.ஐ - களாகவோ, அல்லது தமிழ்ப்படங்களை ரெகுலராகப் பார்க்காதவர்களாகவோ, அல்லது பழைய படங்களை சீன் பை சீன் பார்த்திராத புதிய தலைமுறையாகவோ, முக்கியமாக ஜனகராஜைத்தெரியாதவர்களாகவோ இருக்கலாம்.

அவர்களுக்காகவே இந்த விளக்கம்.
மணிரத்னத்தின் "அக்னிநட்சத்திரம்" படம் நினைவிருக்கிறதா? மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம் அது.
படத்தில் தன் மனைவி தங்கமணி ஊருக்கு கிளம்பும்போது அவரது கையை பிடித்துக்கொண்டு தங்கமணி, தங்கமணி, என்று அழுவோ அழு அழுவதும் பஸ்கிளம்பிய பின் “எம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று பஸ் ஸ்டாண்டையே சுற்றிச் சுற்றி வந்து உற்சாக குரல் எழுப்புவதும், (ட்விஸ்ட் - பஸ் ஸ்டாண்டை முழுமையாகச் சுற்றி விட்டு தங்கமணியை பஸ் ஏற்றி விட்ட இடத்துக்கு வந்தால் கிளம்பிப் போன பஸ் நின்று கொண்டிருக்கும். தங்கமணி முறைத்தபடி நின்றிருப்பார், ஏன்னா, அவரது ஒரு பை தலைவர் கையில் மாட்டி தொங்கிக் கொண்டிருக்கும்) "நீ இன்னும் ஊருக்குப்போகல?" என்று முழிப்பதும், பின்னால் வரும் இன்னும் இரண்டு சீன்களில் "நோ தங்கமணி எஞ்சாய்" என்று ஆனந்தப் படுவதும் அட்டகாசமான ஜனகராஜ் ஸ்டைல்.
"தங்கச்சிய நாய் கடிச்சிட்சிப்பா.." என்று ரஜினியிடம் ஒரு படத்தில் புலம்புவாரே... அந்த கிளாஸிக் காமெடியை ஒத்த அடுத்த கிளாஸிக் இந்த தங்கமணி புலம்பல்ஸ்..
"தங்கமணி வந்தாச்" என்றால் எனக்குக்கல்யாணம் ஆகி அம்மணி வீட்டுக்கு வந்தாச்சு என்று அர்த்தம், புரிகிறதா டவுட்டு கேட்ட அன்பர்களே?
((((((((((((((((((( "அக்னிநட்சத்திரம்" - மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம். மனைவி ஊருக்கு கிளம்பும்போது அழுவதும் பின் “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று உற்சாக குரல் எழுப்புவதும் ” நோ தங்கமணி எஞ்சாய்” என்று ஆனந்தப் படுவதும் ஜனகராஜுக்கே அளவெடுத்த சட்டை.
இது நண்பன் "சேலம் தேவா" - வின் குறிப்பு..)))))))))))))))))))))))

ஒவ்வொரு பெண்ணும் வெற்றியடையாமல் பார்த்துக்கொள்ள ஒரு ஆண்

20 ஜனவரி 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

 Ilangovan Balakrishnan தன் முகநூல் சுவற்றில் பதிந்திருந்தார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------சமுதாயத்தில் ஏதேனும் ஒரு துறையில் சாதித்திருக்கும் சாதனைப் பெண்கள் சிலரை ஒவ்வொருவராக நினைத்துக் கொள்கிறேன்....
பெரும்பாலும் திருமணமாகாதவராய் இருக்கிறார்கள், கணவனை இழந்தவராக இருக்கிறார்கள் அல்லது கணவனை விட்டுப் பிரிந்தவராக இருக்கிறார்கள்.
நீங்களும் உங்களுக்குத் தெரிந்த சாதனைப் பெண்களை நடு நிலையோடு சொல்லிப்பாருங்கள். என்ன காரணமோ தெரியவில்லை 90% இப்படித்தான் அமைந்திருக்கிறது.
"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்" - என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் நாம் ஒவ்வொரு பெண்ணும் வெற்றியடையாமல் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் இருக்கிறான் என்ற ரீதியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் போலிருக்கிறதே....
எங்கேயோ...ஏதோ.... தவறு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் புலப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நானும் இதை பலமுறை யோசித்திருக்கிறேன். தன் குடும்ப ஆண்களை இழந்த அல்லது தன் குடும்ப ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வெறியோடு போராடி மிக நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
நல்லவனாய் வாழ்ந்து வீட்டுச்சுமைகளை ஏற்கும் ஒரு ஆணிடம் "வர்ற வருமானத்துக்குள் சிக்கனமா அட்ஜஸ்ட் பண்ணி குடும்பம் நடத்தும்மா" என்றே இந்தியப் பெண்கள் போதிக்கப்படுகிறார்கள்.
ஸோ, கொஞ்சம் குயுக்தியாய் யோசித்தால், நாம் நல்லவனாக இருந்து நம் வீட்டுப்பெண்களிடம் ஒளிந்து கிடக்கும் ஏதோ ஒரு திறமையை அழித்து விடுகிறோமோ?
பல வருடங்களுக்கு முன் என் நண்பன் ஒருவன் சொன்னான் "வர்ற சம்பளத்துக்குள்ள சிக்கனமா வாழ்க்கை நடத்தணும்னு சொல்றது நல்ல விஷயம் தாங்க, ஆனா தேவையான செலவைப் பண்ணிட்டு, அதற்கும் சேர்த்து அதிகமா சம்பாதிக்கணும்ங்க"
கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். திருமணத்திற்கு முன் வேலைக்குச் சென்று நன்றாகச் சம்பாதித்த அல்லது சம்பளம் குறைவாகவே இருந்தாலும் தன் திறமையை நிரூபித்த ஒரு பெண்ணை திருமணம் என்ற சடங்கின் மூலம் இந்தியாவில் என்ன நிலைக்கு ஆளாக்கி வைத்திருக்கிறோம்?
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளல், வீட்டைப் பார்த்துக்கொள்ளல் என்று ஆயிரம் தடைகள் அவளுக்கு. இந்தப்போக்கிலேயே செல்லும் ஒரு இந்தியக் குடும்பத்தின் ஆண் திடீரென இறந்து போனால் அந்தக் குடும்பம் அட் லீஸ்ட் அடுத்த தலைமுறை வரையாவது நாசமாய் போகிறது.
இந்தத் திடீர் சோகத்தின் பாரத்தோடும், குடும்பத்தைக் காப்பாற்றும் பாரத்தோடும் பல வருடங்கள் கழித்து ஒரு பெண் வேலைக்குப்போக ஆரம்பித்தால் அவளின் பழைய திறமை மங்கிப் போயிருக்காதா? ஏன்? நாம் இன்டர்வியூவுக்குப் போகும்போதே ப்ரொஃபைலில் ஒரு ஆறு மாதம் வேலைக்குப்போகாமல் கேப் விழுந்திருந்தால் ஹெச்.ஆர் ஆசாமிகள் என்னென்ன கேள்விகள் கேட்கிறார்கள்?

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சினிமா (சீர்காழியில் ஒரு பள்ளி)

16 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

சீர்காழியில் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். "க்ளாஸ் ரூம் அப்சர்வேஷன்" வேலை. மாலை பள்ளி முடிந்ததும், வேன் ஏறுவதற்காகக் காத்திருந்த ஒரு வரிசையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உற்சாகமாகப் பேசிக்கொண்டும், ஆடிக்கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் துவங்கி நான்கு நாட்கள் விடுமுறை உற்சாகம். அதில் ஒருவன், சத்தமாக "வரலாம் வா, வரலாம் வா, பைரவா" என்று துவங்கி மூன்று, நான்கு வரிகளை ஸ்பஷ்டமாகப் பாடினான். கூடவே இன்னும் நான்கு பேர் கோரஸ். "படம் பாத்துட்டியா?" (அன்றைக்குத் தான் ரிலீஸ், சும்மா) கேட்டேன். "ஓ, மூணு தடவை பார்த்துட்டேன்" என்றான். (பதறாதீர்கள், அவன் டிரெயிலரைச் சொன்னான்). ஆறு வயது இருக்கலாம். "என்ன படிக்கிறே?" என்றேன். "கிரேடு 1" என்றான். 

அன்று மதியம் அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் அமர்ந்திருந்தேன். அறிவியல் பாடம். "விலங்குகள் எப்படி நடந்து கொள்கின்றன?" என்பது போன்ற பாடம். ஒன்னொன்றாக டீச்சர் நடத்திக் கொண்டிருக்க, கொஞ்சம் போரடித்ததால், "குரங்கு எப்படி மரத்துக்கு மரம் தாவும்?" என்ற கேள்வியின் போது நான் உள்ளே நுழைந்து "ஜங்கிள் புக் யாரெல்லாம் பாத்தீங்க?" (மோக்லியை, குரங்குகள் தூக்கியபடி மரத்திற்கு மரம் எப்படி தாவின என்பது என் கேள்வி) என்றதும் "சார், சார், சார், சார்" என்று ஒரே சத்தம். 99.99 சதம் பேர் கை தூக்கினார்கள். 

அதற்கு இரு நாட்களுக்கு முன் மாயவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் "நீட்" எக்ஸாம் பற்றிய ஒரு அறிமுக வகுப்பில் பேச அழைத்திருந்தார்கள். மாணவர்கள், அவர்தம் பெற்றோர் என்று சுமார் 600 பேர். சுமார் ஒரு மணி நேரம். பேசிய பிறகு, பெற்றோர் உட்பட பலரும் நெருங்கி வந்து பேசிச் சென்றார்கள். நடுநடுவே கொஞ்சம் மோடிவேஷன் வகுப்பு, கொஞ்சம் டெக்னாலஜி என்றெல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்ததில் மாணவர்களும் நெருங்கி விட்டார்கள். அதில் ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் கூடவே சின்னச் சின்ன உதவிகள் செய்து கொண்டிருந்தான். கிளம்பும் போது "ஸ்மார்ட் போன் வச்சிருக்கியா?" என்றதற்கு "ம்" என்றவன், "சார், சல் மார் பாட்டு இருந்தா அனுப்புங்க சார்" என்றான். 

இவற்றில் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் புரிகின்றன?

யூபர்... You lost a customer.

18 ஜனவரி 2017 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

யூபர் (ஊபர்?) டாக்ஸியில் ஒரு சரியான இன்வாய்ஸ் பெறுவது பெரும் தலைவலியாக உள்ளது. PDF தான் சரியான ஃபார்மேட். ஆனால் இவர்கள் இன்வாய்ஸை ஜி மெயிலின் கன்டென்ட் பகுதியில் பொதிந்து அனுப்புகிறார்கள். அதுவும் சிங்கிள் jpg இல்லை. மேப் ஒரு பார்ட், அதன் கீழ் டெக்னிகலி வேறொரு பார்ட், அதன் கீழ் ஒரு பார்ட் என இருக்கிறது. jpg யாக இருந்தாலாவது ரைட் க்ளிக் செய்து சேவ் செய்யலாம் என்று பார்த்தால் மேப் பகுதி கூகிள் மேப்புக்கு செல்கிறது. கீழ்ப்பகுதி வெப் பேஜ்-ஐயே சேவ் செய்யச் சொல்கிறது.

அட்டாச் மெண்ட் ஆக இல்லாததால் அதை வேறு யாருக்கும் அனுப்ப முடியாது. அனுப்பினால் லோக்கல் டி.வியில் படத்தைச் சுற்றி விளம்பரம் வருவது போல இன்வாய்ஸைச்சுற்றி ஜிமெயிலின் தேவையற்ற துணுக்குகளுடன் உடைந்தவாறு போகிறது. அந்த எளவை பிரிண்ட் போட்டாலும் அதே கதை. சுற்றி இருக்கும் ஜிமெயில் துணுக்குகளுடன் தான் பிரிண்ட் ஆகிறது.
யூபர் ஆப் இல் கஸ்டமர் கேருக்கென மெயில் ஐ.டி யே இல்லை. அவர்களிடம் பேசவும் எண் இல்லை. கால் மணி நேரம் ஆப்பில் போராடி ட்ரிப் விபரங்களுக்குள் புகுந்து, பல ஆப்ஷன்களைக் கடந்து இன்வாய்ஸூக்கென உள்ள ஒரு ஆப்ஷனைக் கண்டுபிடித்து ரிக்வெஸ்ட் அனுப்பினால், வெறும் ப்ளெயின் பேப்பரில் டைப் செய்தது போல ஒரு PDF அனுப்புகிறார்கள். எந்த அப்ரூவல் மேனேஜர் அல்லது ஹெச் ஆர் வெள்ளைக் காகித இன்வாய்ஸை ஒத்துக் கொள்வான்? இது ஒரு ஃப்ரீலான்ஸ் வேலை வேறு. அது லெட்டர் பேட் ஃபார்மேட்டில் இல்லை, அட் லீஸ்ட் யூபர் லேகோ கூட இல்லை. அவர்களது வெப் சைட்டைக் கண்டுபிடித்து அதில் உள்ளே நுழைந்து தேடினாலும் இதே ப்ளெயின் PDF கதை.
இதில் "ஓலா கேப்" பர்ஃபெக்ட். "இன்வாய்ஸ் தேவை" என்றொரு ஆப்ஷன். ஜஸ்ட் டச். அதுவே மெயில் ஐ.டி யைக் காண்பித்து "அனுப்பவா?" என்கிறது "send" ஐ க்ளிக் செய்தால் அழகாக மெயிலில் PDF ஃபைல் வருகிறது. லோகோவுடன் கூடிய இன்வாய்ஸ் சரியான ஃபார்மேட்டில். சில விநாடிகளில் முடிகிறது வேலை.
எல்லாம் ஆட்டோமேடிக் ஆன சாஃப்ட்வேர் காலத்தில் ஏன் யூபருக்கு இதைச் செய்ய வலிக்கிறது? அவர்களது கேப் புக்கிங்கும் "ஓலா" வை கம்பேர் செய்கையில் கொஞ்சம் சுத்தல் முறைதான். (மேலும் யூபரில் கேப் புக் செய்ய பே டி எம் - மில் குறைந்தது 200 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இது வேறு தலைவலி) இதற்காக நான் டென்ஷனுடன் அரை மணி நேரம் செலவிட்டிருக்கிறேன். உன் டாக்ஸியில ஏறுனதுக்கு எனக்கு இது தேவையா?
எனக்கு 210 ரூபாய் நட்டம். மை டியர் யூபர்... You lost a customer.

இன்றைய அப்டேட் (18 ஜனவரி 2021) - கடந்த இரண்டு வருடங்களாக நான் உபயோகிப்பது ரெட் டாக்ஸி. அதிலேயே கோ டாக்ஸி என்றொரு வகையும் இருக்கிறது. கட்டணமும் சற்றே (சுமார் 2 அல்லது 3 சதம்) குறைவு. சர்வீஸூம் நன்று. ஆப் புக்கிங்கும் உண்டு. போன் கால் புக்கிங்கும் உண்டு. அதில் பலரும் அட்டாச்மெண்ட் டாக்ஸி ஓட்டுவதால், ஒருமுறை புக் செய்தவரை, திருப்தியாக இருந்தால் மறுபடி கூப்பிட்டுக் கொள்கிறேன் - ஆனால் மறுபடி புக்கிங் வேண்டும். பில் வேண்டும் என்று சொல்லி. பில் வரும் முறை அருமை. ட்ரிப் முடித்ததும் ஒரு லிங்க் வருகிறது. அதைத் தொட்டால் வெப் பேஜ் சென்று பி.டி.எஃப் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதே போலத் தான் ஆப் - பிலும். முன்பே கொடுத்து வைத்த ஈ.மெயில் ஐடிக்கு நமக்கு நாமே பில் அனுப்பிக் கொள்ளலாம். அழகான பி.டி.எஃப் சென்று விடுகிறது.

சீதக்காதி - உணர்ச்சிக் கலவை

18 ஜனவரி 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 


நல்லாருக்குல்ல. 

என்னய்யா இழுக்குது.

சூப்பர்ல.

செம காமெடி.
ஒரு மாதிரியா போகுதே.
இது விஜய் சேதுபதி படம் தானா?
அருமையா இருக்கு இந்த சீன்.
இதுக்கு எதுக்கு விஜய் சேதுபதி?
ரிப்பீட் ஆனாலும் ரீடேக் சீன் அருமை.
என்னய்யா சொல்ல வர்றீங்க?
நாடகக்கலைஞர்கள்-லாம் பாவம்ல.
"தனபால்" கேரக்டர் என்னமா நடிச்சிருக்கார்.
ஏன்யா இவ்ளோ இழுக்குறீங்க?
இது ஒரு வேள டாகுமெண்ட்ரியா இருக்குமோ?
படம் ரொம்ப பெருசோ? இன்னும் முடியலையே

என்று கலவையான உணர்ச்சிகளைக் கொடுத்திருக்கிறது "


சீதக்காதி".


#Amazon_Prime

புதன், 13 ஜனவரி, 2021

கும்பகோணம் அம்மா ஊர்.


கும்பகோணம் அம்மா ஊர். செல்லுமிடமெல்லாம், எனது சுயத்தை இழந்து "கங்கா பையன்" என்றே அழைக்கப்படுவேன். எல்லா இடங்களிலும், ஊர்களிலும் கிடைக்கும் சார், வாங்க, போங்க மரியாதைகள் கிடைக்காது.

"நீ என்ன பண்றே? எங்கே இருக்கே? சாப்பிட்டுட்டுப் போடா" வகையறாக் கேள்விகளும் உரையாடல்களும் தான். அவையும் மிகவும் பெருமிதமாகவே இருக்கும். "உங்க அம்மா என் ஃப்ரெண்டு தெரியுமா? உங்க அம்மா எங்க பக்கத்து வீடுதான், உங்க அம்மாதாண்டா எனக்கு மணப்பெண் தோழி" போன்றவற்றையும் எதிர்கொள்வேன். அம்மா எத்தனையோ பேருக்கு பல விதங்களில் சிறிதும், பெரிதுமாக உதவியிருக்கிறார். வாய் அதிகம் என்பதால் நிறைய நண்பர்கள்.
நான் என்ன வேலை செய்கிறேன் போன்ற விபரங்கள் தெரிந்ததும் அவர்களின் பெருமிதமும் கூடும். "பாரேன், கங்கா பையன் நல்லா இருக்கான்" என அந்தப் பெருமிதத்தின் கிரெடிட்டையும் "அம்மா"வுக்கே தருவார்கள்.
அந்தப் பெருமிதத்தில் கிடைக்கும் மனப் பூரிப்பே வருடத்திற்கு இரு முறையேனும் என்னை கும்பகோணம் செல்ல வைக்கும்.

வியாழன், 7 ஜனவரி, 2021

ஏமாற்றுவது மட்டுமே வேலை இந்த ஏர்டெல் காரனுக்கு.

2018 ஜனவரி 7 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஏமாற்றுவது மட்டுமே வேலை இந்த ஏர்டெல் காரனுக்கு.

சுமார் 20 அ 25 நாட்கள் முன்பு ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்தேன்
ப்ரீவியஸ் பில் ப்ளானில் பேலன்ஸ் இருந்த சுமார் 25 ஜி.பி டேட்டா, கேரி ஃபார்வேர்ட் ஆகி கரண்ட் ப்ளானுடன் சேர்த்து சுமார் 30 + 25 = 55 ஜி.பி என்று காண்பித்துக்கொண்டிருந்தது. இரண்டு, மூன்று நாட்கள் கழித்து திடீர் என்று ஒரு சுமார் 20 ஜி.பி காணோம். அது வெறும் 5 ஜி.பி ஆக மாறி 55க்கு பதிலாக 35 ஜி.பி என்று மாறி விட்டது.
அப்போதே கம்ப்ளெயிண்ட் செய்து எண் கம்ப்ளெயிண்ட் வாங்கினேன். அவ்வளவு டேட்டா தேவை இல்லாததாலும் வேலைப்பளு காரணமாகவும் ஃபாலோ செய்யவில்லை. கம்ப்ளெயிண்ட் எண் தேடியும் கிடைக்கவில்லை. இன்று போன் செய்து காணாமல் போன டேட்டா என்னாச்சு என்றால் "அதையெல்லாம் ட்ராக் செய்ய முடியாது" என்கிறான்.
சரி என் மொபைல் நம்பரை வைத்து நான் கொடுத்த கம்ப்ளெயிண்ட் நம்பரைக் கொடு, நான் ட்ராக் செய்து கொள்கிறேன் என்றால், ஒவ்வொரு நாளும் நிறைய கம்ப்ளெயிண்டுகள் வருவதால் அப்படி எல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்கிறான். அழுத்திக் கேட்டு எகிறினால் "அப்படி ஒரு கம்ப்ளெயிண்ட் டே நீ தரவில்லை" என்கிறான்.
2018 ல் வாழ்கிறோம். ஒரு ஸ்கூல் பையனுக்குக் கூடத்தெரியும். என் மொபைல் நம்பரை வைத்து என் ஹிஸ்டரியை எவ்வளவு எளிதாக ட்ராக் செய்ய முடியும் என்று. சும்மா காது குத்திக்கொண்டு திரிகிறான்கள். இருடா, எங்கியோ எழுதி வச்சேன். கண்டுபிடிச்சுட்டு வர்றேன் என்றிருக்கிறேன்.
காசும் டேட்டாவும் என்னுடையதாக இருந்தாலும் கன்ட்ரோல் அவனிடம் இருக்கிறதே...
பிற்சேர்க்கை - இந்த மார்க்கு இம்சை வேற. (ஆனா ஃப்ரீ ன்றதுனால இதையெல்லாம் பொறுத்துக்குறோம்). கோயமுத்தூர்ல உக்காந்து போஸ்ட் போட்டா, சென்னை - ன்னு காமிக்கிறான்.
.

திங்கள், 4 ஜனவரி, 2021

அவார்டு வாங்கலியோ அவார்டு....

2015 ஜனவரி 4 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

அவார்டு வாங்கலியோ அவார்டு....

 - மாரியப்பன் பாத்திரக் கடை (நல்லா தெளிவா பேரு தெரியுற மாதிரி அடி.....) 

ஒருமுறை நமது முன்னாள் கம்பேனி ஒன்றில் சில பல லோக்கல் பாலிடிக்ஸூகள் காரணமாக ஆண்டில் ஒருமுறை நடக்கும் விழாக்களில் நமக்கு ஏதும் விருதுகள் கிடைக்காதென்ற நிலை வந்த போது தானைத் தலைவன் கவுண்டமணி அவர்களின் வார்த்தைக்கிணங்க, "இவன் என்னடா நமக்கு கடன் குடுக்குறது, நாம பேங்க் ஆரம்பிப்போம், நாம எல்லாருக்கும் கடன் கொடுப்போம்" என்ற தத்ஸ் மண்டையில் உதித்தது. அது ஒரு ஜென் நிலையை போல இருந்தாலும், வாங்குகிற ஆளாய் இல்லாமல் கொடுக்கிற ஆளாய் இருப்பது சந்தோஷமாகவே இருந்ததது. 

ஆகவே இந்த வருடம், அதாவது போன வருடம் நம்மை மகிழ்வித்த பலருக்கும் விருது கொடுத்து கௌரவித்தால் என்ன என்று தோன்றியது. எல்லாரும் தர்றாங்களே, நீ என்ன ஸ்பெஷலா தர்றே? என்று கேட்பவர்களுக்கு, எல்லாரும் தர்றதை வாங்கிக்கோங்க, அப்டியே போற வழில இதையும் வாங்கிட்டுப் போங்க.... 

இதோ விருதுகள்... முதல் லிஸ்ட்... 

"லிங்கா, சங்கா" விருது 

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

"தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு" ஸ்பெஷல் விருது 

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

"அந்தப் பொம்மையே நீங்க தான் சார்" சிறப்பு ஜூரி விருது 

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கே.. 

"செல்ஃபி புள்ள" விருது

- ஹி, ஹி, அவுங்களுக்கே தான்

"முடிஞ்சா வாங்க, முடியாட்டி போங்க" விருது 

- கமல் ஹாசன் 

"கமலே பரவாயில்லப்பா" விருது 

- சாரு ஹாசன் 

"ஆவாஸ் அஞ்சான்" விருது

- லிங்கு சாமி 

"ரன் லோலா ரன்" விருது, (ஒரு வருடம் ஆனதற்காக) 

- இளைய தளபதி விஜய் 

"மாட்டுத் துணியை தூக்கிப்பாத்த ------------வி" விருது, (டேபிளுக்கடியில் குனிந்து பார்த்தற்கான சிறப்பு விருது)

- இளைய தளபதி விஜய்-க்கே 

- தொடரும்...

டிஸ்கி - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.