திங்கள், 15 மே, 2017

தாய் தந்த பிச்சையிலே..........

சிறு குழந்தைகளும் டீ, காபி குடிப்பதைப் பற்றிய மிக நீண்ண்ண்ண்ணட பதிவொன்றை எழுதி வைத்திருந்தேன். தேடினேன். கிடைக்கவில்லை. ஒன்றுமில்லை. ஜிம்பிள் மேட்டர். குழந்தைகள் அவற்றைக் குடித்துப் பழக நாமே காரணம் என்பதும், முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கலாம் என்பதுமே என் பாயிண்ட். எதிர்த்து வரும் பல எதிர்கேள்விகளுக்கு, 30 வருடங்கள் முன் நமது முன்னோர்கள் தினசரி டீயோ காபியோ குடித்தார்களா? 40 வருடங்கள் முன்? 50 வருடங்கள் முன்? வெறும் பால்? அதன் முன்? சாதம் ஊறிய நீச்ச தண்ணி? அதற்கும் முன் கேப்பை கூழ்? கம்பங்கூழ்? அதற்கும் முன்? பழைய சோறு? வயிறு நிறைய வெறும் நீர்? அதற்கும் முன்? என்று நூல் பிடித்துப் போனால், அது உணவுப் பழக்கவழக்கம், கலாச்சாரம், உலகமயமாக்கல் மூலம் உள்வந்த நிறுவனங்களின் வியாபாரம் என எந்தத்திசையில் வேண்டுமானால் போகக் கூடும். வேண்டாம்.

நான் சொல்ல வந்தது, நாம் பழக்கும் விதத்தில் தான் எல்லாமே என்று. என் ஜூனியரை இன்று வாரம் ஒருமுறை வீட்டிலேயே காலை உணவாகக் கம்மங்கூழ் குடிக்கப் பழக்கி இருக்கிறேன். எங்கள் அம்மா இருக்கையில், சோட்டா வயதிலேயே எனக்கும், பப்பிக்கும் (தங்கை) வெறும் பால் தான் தினமும் என்று கொடுத்துப் பழக்கியிருந்தார். அதுவும் டீயாறும், காப்பியாறும் தேனாக ஓடிய இந்த உழைப்பாளிகளின் தேசத்தில். நோ டீ, நோ காப்பி. காரணம், அவர் தனது சிறு வயதில் (சுமார் 9 வயதில் தந்தையை இழந்தவர் என்று சொல்லக் கேட்டதுண்டு) செய்ய வேண்டிருந்த அதீத உடலுழைப்பு சார்ந்த வேலைகளால் தொடர்ந்து டீ குடித்துக் குடித்து, தான் டீ - க்கு அடிமையானதை முன்னிட்டு, தம் பிள்ளைகளும் அப்படி ஆக வேண்டாமே என்று. (ஒருமுறை தாரமங்கலம் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பிய போது பஸ்ஸில் அவரது விரல்கள் நடுங்குவதைக் கண்டேன். ஒரு டீ வாங்கிக் கொடுத்ததும், போதை ஊசி போட்டது போல அந்த நடுக்கமும், உதறலும் நின்றதையும் கண்டேன்)

அப்போதிருந்தே நான் பாலுக்கு அடிமை. சிறுவயதில், எங்கேயாவது அக்கம் பக்கத்தில் பால் காய்ச்சும் நிகழ்வுகளுக்குப் போனால் கூட, எங்களைப் பார்த்து "இந்தப் பிள்ளைங்களுக்கு பால் கொடு" என்பார்கள். மற்றவர்கள், சிறியவர்கள் உட்பட எல்லாரும் "வெறும் பாலா?" என முகம் சுளித்து டீ கேட்க நாங்கள் இருவர் மட்டும் காய்ச்சிய பாலை வாங்கிக் குடிப்போம். அது என்னவோ தெரியவில்லை, எனக்கு வெறும் பால் மீது அவ்வளவு விருப்பம். இன்றும் கூட வீட்டில் ஆறிப்போன பால் இருந்தால் ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே குடித்து விடுவேன். பப்பி மெள்ள மெள்ள தன் புதிய குடும்பத்தினர் சார்ந்து, டீக்கு மாறி விட்டாலும், என்னவோ நான் இன்னும் பால் பக்கம் தான். பால், பால், பால். அவளது பிள்ளைகளோ, என் ஜூனியரோ டீ வேணும் என்று கேட்டுக் குடிக்கும் போது அவ்வப்போது என் தொட்டில் பழக்கத்தைப் பற்றி பெருமையாக இருக்கும்.

பள்ளி, காலேஜ் படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்குப் போன போதும் அப்படியே. பல ஊர்கள், பல நிறுவனங்கள் மாறியும் கூட இந்த டீ, காப்பிப் பழக்கம் என்னைத் தொற்றவில்லை. பால் மட்டுமே. எனக்காக டீக்கடைகளில் சொல்லி பால் வாங்கிக் கொடுத்த நண்பர்கள் உண்டு. அங்கங்கே வலுக்கட்டாயத்தால் டீ குடித்தாலும் ஒருமுறை, இருமுறை மீறி மீண்டும் பாலுக்குத் திரும்பிவிடுவேன். இன்றும் கூட தினம் காலையில் ஒரு டம்ளர் பால் தான். சூடாக இருந்தால் ஹார்லிக்ஸ் உடன். அல்லது வெறும் பாலே. என் மொத்த குடிப் பழக்கத்தில் டீயின் சதவீதம் 1 இருக்கலாம். வயது ஏறுவதாலும், வேலை, டென்ஷன் தலைவலியைக் குறைப்பதாலும் காப்பிக்கு என்ஓட்டு அவ்வப்போது. ஆனால் அதுவும் இன்னும் 5 சதம் கூடத் தாண்டியதில்லை. பழைய மாதிரி பால், பால் தான். கார்த்திக் ஒரு டீ டோட்லர் என்று டீம் ஆட்கள் யாரேனும் (பல பேர் நக்கலாக) சொல்கையில் பெருமையாகவே இருக்கும், அவன் டீ கூட குடிக்காத டீ டோட்லர் என்று ஒரு வரி சேர்ப்பார்கள். (அதற்காக கெட்ட பழக்கமே இல்லையா எனாதீர்கள். எனக்கும் பிடித்த விஷயத்தில் ஒரு போதை உண்டு)


சரி, இப்போது எதற்கு இந்தப் பால் புராணம் என்பவர்களுக்கு. இருக்கு. ஞாயிறன்று ஈரோட்டில் ஜே.சி.ஐ நடத்திய விழா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கே "போன் டென்சிடி" எனும் செக் அப் செய்தார்கள். உடன் வந்திருந்த உறவினர் பெண்மணிக்கு கால்ஷியம் குறைவால் போன் டென்சிடி "- 1" (மைனஸ் 1) வந்தது. ஆனால் அது நார்மல் என்றார்கள். நானும் உட்கார்ந்தேன். எனக்கு செக் அப் செய்த போது அட்டெண்டரின் முகம் மாறியது. "உங்களுது +0.38 சார்" என்றார் பிரைட்டாக. அதாவது - 1 ல் இருந்து "0" வந்தது மட்டுமின்றி மேலும் ஒரு "0.38" கள். "காலைல இருந்து யாருக்கும் இவ்வளவு வரலை சார்" என்று மேலும் நெய் ஊற்றினார். ரொம்பப் பெருமையாக இருந்தது. "பல்வாள் தேவன் சிலை நிறுவுகையில், பாகுபலி கோஷம் முழங்க எழுந்து நிற்கும் பாகுபலியின் பிரம்மாண்ட சிலை போன்று உணர்ந்தேன்". அந்தக் கணம் என் மனைவியிடம், "இதுக்கெல்லாம் காரணம் எங்க அம்மாதான் தெரியுமா?" என்றேன் பெருமையுடன். "இன்னிக்கு மதர்ஸ் டே (14 மே) தெரியுமா?" என்று பதிலிறுத்தார் அவர்.

ஊரே டாஸ்மாக்ல குடிக்குது என்பதற்காக நாமும் குடித்தே ஆக வேண்டும் என்றில்லை. வீட்ல எல்லாரும் டீ, காபி குடிக்கிறாங்க என்று நாமும் குடிக்க வேண்டியதில்லை. ஊரே கடன் வாங்கி ஏமாத்துது என்பதற்காக நாமும் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல் ஏமாற்ற வேண்டியதில்லை. நாம் தொடரும் நல்ல விஷயங்களை நாலு பேர் கிண்டலடிக்கிறார்கள் என்று நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டிதில்லை. "போடா ---------------------------" என்று மனதுக்குள் திட்டி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். உங்கள் நல்ல பழக்கத்திற்காக நீங்கள் பெருமைப்படும் ஒரு கணம் வந்தே தீரும்.

என்னைச்சுற்றியிருப்பவர்களெல்லாம் கண்ணாடி போட என் டாக்டர் "எல்லா டெஸ்டிலும் உங்க கண் பர்ஃபெக்ட், இன்னும் 20 வருஷம் ஆனாலும் கண்ணாடி போட வேண்டாம்" எனும்போதும், என் பேங்கர் "மற்றவர்கள் 750 க்கு முக்க உங்க சிபில் ஸ்கோர் 840 சார்" எனும் போதும், நன்றாய்ப் படித்தவர்களே "என்னது? நீங்க நாலு டிகிரியா?" எனும் போதும் அது போன்ற பெருமைக் கணங்கள் என் வாழ்வில் கிராஸ் ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன. வெறெந்த கெட்ட பழக்கமும் வேண்டாம். அந்த போதை ஒன்றே போதும்.
"என்னய்யா, பெருமை பீத்தல் பதிவா?" என்பவர்களுக்கு, குட்டியோடும், புட்டியோடும் இருக்கும் புகைப்படங்களையே பெருமையாக ஷேர் செய்யும் பனாதிகள் கூட்டத்தில் நான் பைத்தியக்காரனாகத் தெரிந்தால், தெரிந்து விட்டுப்போகிறேன். விட்டுடுங்க.