வியாழன், 14 மே, 2020

பாக்யா 'மக்கள் மனசு' கேள்வி....

14 மே 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 
திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்காக கேட்டிருந்த கேள்வி....
பெற்றோரைக் கவனித்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனால் பெற்றோர்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
என் பதில் -
எந்தப்புறம் தவறு என்று எந்த அளவுகோலை வைத்துக் கணிக்கும் அரசாங்கம்? "புதுப்பேட்டை குமாரு - அவன் தந்தை" மாதிரி, பிள்ளைகளுக்காக எதையும் செய்யாத (அல்லது மிகமிக அடிப்படையான சோறு மட்டும் போட்ட) ஆனால் அவன் நன்றாய் வளர்ந்த போது "நான் பெத்தேன், வளத்தேன்" என்று வந்து நிற்பது என்ன நியாயம்? சில கேஸ்களில் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் சரியாக அமையாத போது சிலராய் செய்ய இயலாது. வந்து நிற்பது, எதிர்பார்ப்பது கூடத் தவறில்லை. ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதோ, அரசாங்கத்தின் உதவியுடன் "6 மாத சிறைத்தண்டனை" என்றெல்லாம் மிரட்டுவது என்ன நியாயம்?
என் நண்பன் ஒருவனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும், வேலைக்கும் ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாத அவன் பெற்றோர் அவன் தம்பி தங்கைக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று நண்பன் மிக நல்ல நிலைமையில் இருக்கிறான். அவன் தம்பி, தங்கை மிக சாதாரணமான நிலைமையில் உள்ளனர். இவன் தம் பொது வீட்டு லோனைக்கூட கட்டி அவர்களிடமே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தும் விட்டான். பெற்றோருக்கு அவ்வப்போது உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறான்.
ஆனால் "அவன் நல்லா இருக்கான், எங்களைக் கண்டுக்கிறதே இல்ல" என்று பின்னால் பேசித் திரிகிறார்கள். இங்கே யார் மேல் தவறு? இப்படிப்பட்ட பெற்றோர்களைக் கணக்கில் கொள்ளாமல், சட்டங்கள் ஏற்பட்டால், பல பெண் வீட்டினரால், வரதட்சணைக் கொடுமைச் சட்டம் தவறாக உபயோகப் படுத்தப்படுவது போல அல்லவா ஆகிவிடும்?
.

ஞாயிறு, 10 மே, 2020

ஜெயா டி.வி

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை முன்னிட்டு ஃபேஸ்புக்கில் 11 மே 2015 அன்று போட்ட ஸ்டேட்டஸ்.
வைட் ஆங்கிள் லென்ஸ் போட்டு மொத்த கூட்டத்தையும் ஒரே ஃபிரேம்ல கவர் பண்ணிக்க....
நீ காலுக்கு தனியா ஒரு ஷாட் - ஜூம் வையி...
கதவு திறக்குறப்ப கால்ல இருந்து டாப் வரைக்கும் ஜூம் போகணும். டேய் ரிலே-வுல அந்த பேக்ரவுண்ட் மியூசிக் சேத்துக்க...
நீ ஓடிப்போய் ரைட் கார்னர்-ல குனிஞ்சாப்ல நின்னு கும்பல்ல எல்லாரோட தலையும் வெள்ளமாட்டம் தெரியுற மாதிரி ஃப்ரேம் வச்சு "அவங்க" மட்டும் முழுசா ஹைலைட்டா தெரியுற மாதிரி ஒரு பத்து போட்டோ எடுத்துக்க.
டேய், எப்படியும் எவனாவது ஃபைவ் தவுசண்ட் வாலா சரத்தை கொளுத்தி வைப்பான். அதை ஃபுல்லா எடுத்துக்க. முக்கியமா வெடிச்சு முடிச்சதும், ஃபுல் புகைக்கு மேல "அவங்க" தெரியுற மாதிரி, புகை அடங்கும் போது அவங்க முகம் அதுல பளிச்சுன்னு வெளிய வர்ற மாதிரி நாலு க்ளிப்பிங்கஸ் எடுத்துக்க. ஓடு....
லெஃப்ட் கார்னர் - ல இருந்து ஜிம்மி ஜிப் வச்சு, டாப் ஆங்கிள்-ல இருந்து ஃபுல் கூட்டத்தையும் அரை வட்டமா கவர் பண்ணி அப்படியே பால்கனியில "அவங்க" பின்னாடி வந்து ரெட்டை விரல் காமிக்கிற போஸ்ல ஃப்ரீஸ் பண்ணிக்க.
ஜெயா டி.வி கேமரா டீம்ல இப்படித்தான் பேசிக்கிட்டு இருக்காகளாம்.

The Avengers

11.May/2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

The Avengers
.
ஐ, அவெஞ்சர்ஸ்....


மூன்று கட்டங்களாக ப்ளான் செய்யப்பட்டு (Phase 1, 2 மற்றும் 3) வரிசையாக வெளியிடப் பட்டுக் கொண்டிருக்கும் "மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" படங்களில் முதல் Phase 2008 ஆம் ஆண்டு அயர்ன் மேன் இல் துவங்கியது. அங்கு துவங்கிய மார்வலின் ஆட்டம் 2012 ஆம் ஆண்டு வெளியான "The Avengers" மூலம் உச்ச ஜூரத்தில் எழுந்து அடங்கியது. இப்போது அவெஞ்சர்ஸ் படம் பற்றித் தெரியாத ஆங்கிலப் பட ரசிகர்கள் இருக்க முடியாது.
.
ஆனால் அதற்கு முன்பே The Avengers என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு ஒரு படம் வெளியாகியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? (அந்தக் கொடுமையை நான் தியேட்டரில் வேறு பார்த்தேன்).
.
ரேல்ஃப் ஃபியன்ஸ் (மூக்கு மேல, ஐ மீன் அவர் மூக்கு மேல கை வச்சுப் பாருங்க, வால்டிமோர்ட் தெரியுறாரா?) மற்றும் நம்ம "கில் பில்" புகழ் உமா துர்மன் நடித்து, விமர்சகர்களால் கன்னாபின்னாவென்று காறித்துப்பப் பட்ட அந்தப் படம், "பாக்ஸ் ஆபீஸ் பாம்ப்", "பாக்ஸ் ஆபீஸ் டிஸாஸ்டர்", "பாக்ஸ் ஆபீஸ் ஃப்ளாப்" லிஸ்டில் சேர்ந்தது. அதாகப் பட்டது, முதலுக்கே மோசம் லிஸ்ட். நல்ல படங்களுக்கான விருதுகள் போல, மோசமான படங்களுக்கான விருதுகள் பட்டியலில் பல பிரிவுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டது (ரெண்டு விருது வேற வாங்கிச்சுப்பா).
.
இதே பெயரில் இன்னும் இரண்டு பழைய படங்கள் வெளியாகியுள்ளன. அவை பற்றிப் பிறகு.
.
#சில_தகவல்கள் 

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்

"ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்" என்றொரு தொடரை எழுத்தாளர் Pa Raghavan அவரது டாட் காமில் எழுதி வருகிறார். தினம் ஒன்று எழுதுகிறார் போல - இன்று 7 வது அத்தியாயம். ஃபேஸ்புக் ஸ்கிரால் செய்கையில் அவர் பக்கத்தில் 6 வது பாகத்தின் லிங்க் பார்த்து உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து 6 வதை அடையும்போது 2 மணியைத் தாண்டியிருந்தது. தேதி பார்த்து "பேஜ் ரிஃப்ரெஷ்" செய்தால் நான் எதிர்பார்த்த மாதிரியே 7 வது அத்தியாயத்தை ஏற்றியிருந்தார். அதையும் படிச்சாச்சு.

அவரை ஒரு வாசகனாக கிழக்கு பதிப்பகம் மூலமும், அவரது புத்தகங்கள் மூலமும், கின்டில் புத்தகங்கள் மூலமும் தான் அறிவேன். அவ்வப்போது அவரது பக்கங்களிலும், கமெண்ட்களிலும் நண்பர் "Selva Murali" - யை மென்ஷன் செய்வார். அவர் வெறும் முரளி யாக இருந்த போதே தினமலரில் என்னுடன் பணி மூலம் பழக்கம். எனவே போனில் எப்போதாவது பேசும்போது பா.ரா பற்றியும் இரண்டொரு நிமிடங்கள் பேசுவோம்.

சரி. மெயின் மேட்டருக்கு வருவோம். சென்னை நகரத்துடனான தனது உறவைச் சொல்லி ஆரம்பிக்கும் இந்த "ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்" தொடரில் அப்படியே மெள்ள வேகமெடுத்து வேலிக்காத்தான் புதர்கள், குரோம்பேட்டை மண் சாலைகள் எனச் சென்னையின் அந்தக்கால (1980கள்) சித்திரத்தை வரைந்து கொண்டே சென்று, அக்காலத்தில் தான் கண்ட மனிதர்களை விவரித்து, சென்னையின் குரோம்பேட்டை, பர்மா பஜார், சைதாப்பேட்டை என சில ஏரியாக்களை தன் அனுபவத்தினூடே வர்ணித்து அலைந்து திரிந்து பத்திரிகைப் பணியில் சேர்ந்த அனுபவத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார். இடையில் எல்டாம்ஸ் சாலை பைங்கிளி அனுபவங்களும் சுவாரஸ்யக் கோவையுடன். பைங்கிளிப் புத்தகங்கள் என்பது இவர் வைத்த பெயரா? அல்லது முன்பே உள்ளதா என்பது தெரியவில்லை.

2007 முதல் 2010 வரை மூன்று வருடங்கள் சென்னையில் நானும் குப்பையை அங்கங்கு கொட்டினேன் என்ற வகையில் இத் தொடரில் எனக்கு சில பகுதிகள் நெருக்கமாகத் தோன்றின. அவரது பர்மா பஜார் அனுபவத்தைப் படித்தபோது, நான் சென்னையில் இருக்கையில் பர்மா பஜாரில் 15 ரூபாய் 20 ரூபாய் என்று எல்லா மொழிப் பட சி.டிக்களும் விற்ற காலத்தில் பல கடைகள் ஏறி இறங்கி பேரம் பேசி ஒரு சி.டி 12 ரூபாய் என்று மூட்டை கட்டி வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அதிலும் காசு மிச்சம் பண்ண வேண்டி ஒரே சிடியில் 2 ஹாலிவுட் படம், 4 படம் கலெக்ஷன் என்றெல்லாம் வாங்கிய அந்த மூட்டை இன்னும் அப்படியே கிடைக்கிறது. அமேசான்களும், நெட்பிளிக்ஸ்களும் கடை விரித்த பிறகு அந்த மூட்டை விரிக்கப்படவில்லை.

அதே போல சைதாப்பேட்டை பற்றிய வர்ணனையும். நான் சென்னையில் இருந்த போது சைதாப்பேட்டை தாண்டி தான் கிரீம்ஸ் ரோடில் இருந்த என் அலுவலகம் செல்ல வேண்டும். பல முறை பஸ் மாற வேண்டி சைதாப்பேட்டையில் இறங்கி வெகுநேரம் நின்று குரோம்பேட்டைக்கு அடுத்த பஸ் கிடைத்துப் போவேன். அவர் ஜாகையும் குரோம்பேட்டை என்று தெரியாது. ஒரு வேளை தெரிந்திருந்தால் போய்ப் பார்த்திருப்பேனோ, என்னவோ?

சைதாப்பேட்டை ஆறு, பன்றிகள் பகுதிகளில் அசிங்கம் என்று ஒருவர் தாண்டி வரும் பகுதிகளைக் கூட அருவருப்பில்லாமல் எழுதியிருக்கிறார். காரணம் அவரது மொழி ஆளுமை. அவருக்கென்று ஒரு தனிப் பாணி. அழகான பொருத்தமான சொற்களைப் புகுத்தி விடுகிறார்.

பேட்டையின் கல்விக் காவலர் ஜெகத் ரட்சகன் என்று அவர் பற்றி ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டதும் எனக்கு ஒரு விதத்தில் நெருக்கமே. அவரது பாரத் யுனிவர்சிடியில் ஆங்கில விரிவுரையாளராக சிலகாலம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அது ஒரு கொடுங்கனவு. அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

நல்ல, ரசிக்கும் படியான கட்டுரைகள். இத் தொகுப்பு ஒருநாள் கண்டிப்பாக நூலாக வரும், குறைந்த பட்சம் கின்டில் மின் நூலாகவேனும் வரும் என்று எதிர் பார்க்கிறேன். ஆனாலும் ஹோட்டலில் இருந்து பேக் செய்து பார்சல் வாங்கி வீட்டில் வந்து சாப்பிடும் பண்டத்தை விட மாஸ்டரின் கல்லுக்குப் பக்கத்திலேயே நின்று சுடச்சுட அப்படியே தட்டில் வாங்கிச் சாப்பிடும் பண்டத்திற்கு ருசியதிகம் அல்லவா? ஆகவே, feedburner மூலம் சந்தா ஆப்ஷனைக் க்ளிக்கி வைத்திருக்கிறேன். வரவரப் படித்து விட வேண்டும்.
.

வெள்ளி, 8 மே, 2020

கான்செப்ட் லேர்னிங்-ஆம்.

9 மே 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஒரு பள்ளி

கான்செப்ட் லேர்னிங்-ஆம். வித்தியாசமா யோசிச்சிருக்காங்களாம். பையன் பள்ளிக்குள் நுழைந்தால் பையன் ஆச்சரியப்படுவானாம். ஏனென்றால் பள்ளியே பையனின் சீருடைக்குத் தக்கவாறு நிறம் மாறுமாம்.

அதாவது திங்கட்கிழமை மஞ்சள், செவ்வாய் சிவப்பு, புதன் பச்சை என்பது போல செவ்வாய்க்கிழமை காலை பையன் உள்ளே போனால் டீச்சரின் சீருடை சிவப்பு, ஆயாம்மா உடை சிவப்பு, குடிநீர் லோட்டா, வட்டுகள் சிவப்பு.. சிவப்போ சிவப்பு, பெருமையின் நிறம் சிவப்பு. அவ்வளவு ஏன்? பெஞ்சுகள் சிவப்பு, சுவர்கள் சிவப்பாக மாறியிருக்குமாம்.

எப்படி? டெக்குனாலஜி.

அந்தச் சுவர்கள் ஏதோ வித்தியாசமான ஃபுளோரசன்ட் சுவர்கள். வித்தியாசமான, பிரதிபலிக்கும் வகையிலான பெயிண்டுகள் அவற்றிற்கு கீழே உறுத்தாத, வித்தியாசமான டிசைன்களில் நுணுக்கமாக பொதித்து வைக்கப் பட்ட லைட்டுகள் இருக்கும். எல்.இ.டி-யோ, குழல் விளக்கோ வேறெந்த வித்தியாசமான டெக்னாலஜியோ தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை ஆனால் சிவப்பு நிறத்தில் பள்ளியே ஒளிரும். புதன் கிழமை பச்சை...

எப்பூடி...? நல்லாக்குதுல்ல?

என்னது? ஃபீஸா? யார்ராவன் அசிங்கமா ஃபீஸைப் பத்திலாம் கேக்குறது?

என்ன களுத வாங்கிரப் போறாங்க... எல்லு கேஜிக்கு வெறும் ஒன்றரை இலட்சம் தான். அதற்கு மேல் அபியும் நானும் பிரகாஷ் ராஜே வந்தாலும் நீங்கள் ஒரு பைசா கூட கட்ட வேண்டாமாம்..

#சம்பவம்ஸ்

மேலே உள்ள சம்பவம்ஸ் என்ற ஹேஷ் டேக்-ஐ க்ளிக் செய்தால் அந்தத் தலைப்பில் எழுதப் பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் காணலாம்..