வியாழன், 14 மே, 2020

பாக்யா 'மக்கள் மனசு' கேள்வி....

14 மே 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 
திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் பாக்யா 'மக்கள் மனசு' பகுதிக்காக கேட்டிருந்த கேள்வி....
பெற்றோரைக் கவனித்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனால் பெற்றோர்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
என் பதில் -
எந்தப்புறம் தவறு என்று எந்த அளவுகோலை வைத்துக் கணிக்கும் அரசாங்கம்? "புதுப்பேட்டை குமாரு - அவன் தந்தை" மாதிரி, பிள்ளைகளுக்காக எதையும் செய்யாத (அல்லது மிகமிக அடிப்படையான சோறு மட்டும் போட்ட) ஆனால் அவன் நன்றாய் வளர்ந்த போது "நான் பெத்தேன், வளத்தேன்" என்று வந்து நிற்பது என்ன நியாயம்? சில கேஸ்களில் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் சரியாக அமையாத போது சிலராய் செய்ய இயலாது. வந்து நிற்பது, எதிர்பார்ப்பது கூடத் தவறில்லை. ஆனால் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதோ, அரசாங்கத்தின் உதவியுடன் "6 மாத சிறைத்தண்டனை" என்றெல்லாம் மிரட்டுவது என்ன நியாயம்?
என் நண்பன் ஒருவனின் படிப்புக்கும், வளர்ச்சிக்கும், வேலைக்கும் ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாத அவன் பெற்றோர் அவன் தம்பி தங்கைக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று நண்பன் மிக நல்ல நிலைமையில் இருக்கிறான். அவன் தம்பி, தங்கை மிக சாதாரணமான நிலைமையில் உள்ளனர். இவன் தம் பொது வீட்டு லோனைக்கூட கட்டி அவர்களிடமே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தும் விட்டான். பெற்றோருக்கு அவ்வப்போது உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறான்.
ஆனால் "அவன் நல்லா இருக்கான், எங்களைக் கண்டுக்கிறதே இல்ல" என்று பின்னால் பேசித் திரிகிறார்கள். இங்கே யார் மேல் தவறு? இப்படிப்பட்ட பெற்றோர்களைக் கணக்கில் கொள்ளாமல், சட்டங்கள் ஏற்பட்டால், பல பெண் வீட்டினரால், வரதட்சணைக் கொடுமைச் சட்டம் தவறாக உபயோகப் படுத்தப்படுவது போல அல்லவா ஆகிவிடும்?
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக